மீப காலமாக கருப்பு சட்டைகளைக் கண்டு கிலிபிடித்துப் போய் உள்ளது மோடி அரசு. தமிழகம் – கேரளாவுக்கு வந்த மோடியை கருப்பு கொடி காட்டி “மோடியே திரும்பிப் போ” என ஒட்டுமொத்த மக்களும் குரல் எழுப்பினார்கள். அதுபோல வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.

மோடி அரசு கொண்டுவந்த குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராடி வருகிறார்கள் மக்கள். மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த பலவித ஒடுக்குமுறைகளை அமலாக்கி வருகின்றன வடகிழக்கு மாநிலங்களை ஆளும் அரசுகள். குறிப்பாக, அசாமை ஆளும் பாஜக அரசு, பொது நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிய தடை விதித்துள்ளது.

குழந்தையை அழவைத்து, கருப்பு உடையை கழற்ற வைத்திருக்கிறது போலீசு.

அசாம் பாஜக முதலமைச்சர் சர்பானந்த சொனாவால் பேச இருந்த கூட்டத்தை பார்க்க தன்னுடைய மூன்று வயது குழந்தையுடன் வந்திருக்கிறார் ஒரு பெண். அந்தக் குழந்தை அணிந்திருந்த கருப்பு மேல் உடையை கழற்றச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறது அசாம் போலீசு. போராட்டம் நடத்த வரவில்லை; வேடிக்கை பார்க்க வந்ததாகக் கூறியும் அந்தக் குழந்தையை அழவைத்து, கருப்பு உடையை கழற்ற வைத்திருக்கிறது போலீசு.

இது வீடியோவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அசாம் மாநில தொலைக்காட்சிகளும் இந்த வீடியோவை ஒளிபரப்பின. “குளிரிலிருந்து தப்பிக்க போட்டிருந்த ஜாக்கெட்டை கழற்றச் சொல்வதன் மூலம் போலீசு தனக்கு கருப்பு மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது” என அசாம் போலிசின் நடவடிக்கை கடுமையாக சாடியிருக்கிறார்கள் மக்கள்.

கடந்த சில வாரங்களாக பாஜக முதலமைச்சர், அவருடைய அமைச்சரவை சகாக்கள், பாஜக-வினர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் கருப்புக் கொடி காட்டுவதை போராட்டக்காரர்கள் செய்துவந்தனர். அது ஏற்படுத்திய கிலியால் பொது நிகழ்வுகளில் கருப்பு சட்டை அணிவது தடை செய்யப்பட்டது.

தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு, மூன்று வயதுக் குழந்தையின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!

படிக்க :
♦ நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !
♦ உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ?

வாயிலில் நின்றுகொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் குளிருக்காக அணிந்திருந்த கருப்பு ஜாக்கெட், ஸ்வெட்டர்களை கழற்றச் சொல்லி போலீசு வலியுறுத்தியுள்ளது.  இதில் உச்சமாக மூன்று வயது குழந்தையின் சட்டையை கழற்ற வைத்து, குளிரில் நடுங்க வைத்திருக்கிறது மனிதாபிமானம் அற்ற போலீசு என சமூக ஊடகங்களில் பலர் கொந்தளித்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகு கண் துடைப்புக்காக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் மாநில முதல்வர்.

கடந்த குடியரசு தினத்தன்று மாநில முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் கருப்பு கைக்குட்டை வைத்திருக்கிறீர்களா என போலீசு விசாரித்ததாக சொல்கிறது ‘தி வயர்’ இணையதளம்.

மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கே இத்தனை எதிர்ப்பு வருகிறநிலையில், மோடி-அமித் ஷா கும்பல் தேர்தல் பிரச்சாரம் செய்ய போகும்போது கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவோம் என்கிறார்கள் போராட்டக்காரர்கள். வடகிழக்கு மாநிலங்களில் காவிக் கொடியை உயர பறக்கவிட்டதாக பீற்றிக்கொண்ட காவிக் கும்பலுக்கு பலத்த அடி காத்திருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு கணிக்க முடிகிறது.


கலைமதி
நன்றி:  த வயர்