Personality என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் ‘ஆளுமை’ என்ற சொல்லை தற்போது சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சொல் அவ்வளவு எளிதில் உருவாகிடவில்லை. இந்தச் சொல் உருவானதன் பின்னால், பெரும் உழைப்பு இருக்கிறது, ஒரு வரலாறு இருக்கிறது.

***

1940-களின் பிற்பகுதியில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவுக்கு இணையாக தமிழில் ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. இந்தியா அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த நிலையில், அது ஒரு இமாலய முயற்சியாக அமைந்தது.

இதன் முதுகெலும்பாக தி.சு. அவினாசிலிங்கமும் பெ. தூரனும் இருந்தனர். இந்தக் கலைக்களஞ்சியத்தின் அனைத்துத் தொகுதிகளும் வெளியாகி முடிக்க, 20 ஆண்டுகள் ஆயின.

1200 -க்கும் மேற்பட்டவர்கள் இதற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில் 10 தொகுதிகளாக 7,500 பக்கங்களுடன் இந்த கலைக்களஞ்சியம் வெளியானது.

இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி உருவானது என்பது ஒரு மிகவும் சுவாரஸ்யமான வரலாறு. இந்தியாவின் பதிப்பு வரலாற்றாசிரியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி இதனை மிகச் சுருக்கமாக, விறுவிறுப்பான நடையில் ஒரு சிறு நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் கிரவுன் சைஸில் வெறும் 86 பக்கங்கள்தான். ஆனால், இதற்கே 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் சலபதி.

பதிப்பு வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் மொழி வளர்ச்சியின் மீது ஆர்வமுடையவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் இதில் நிறைய உள்ளன. கண்டிப்பாக படியுங்கள்.

இந்நூல் இணையத்தில் கிடைக்குமிடங்கள் :

காமன் ஃபோக்ஸ் (Common Folks)
பனுவல் வெளியீட்டகம்
நூல் உலகம்

விலை : ரூ. 75/- காலச்சுவடு வெளியீடு.

மீண்டும் முதல் பத்திக்கு வருவோம். தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாக கிடைக்கவில்லை. புதிய சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர் குழு, ஒரு நாள் முழுவதும் விவாதித்து, எதுவும் தோன்றாமல் கலைந்து சென்றிருக்கிறார்கள். அதற்கு அடுத்த கூட்டத்தில், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், Personality-க்கு இணையாக, ஆளுமை என்ற சொல்லை முன்வைத்திருக்கிறார். என்சைக்கிளோபீடியா என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லான கலைக்களஞ்சியம் என்ற சொல்லும் இந்தக் குழுவினர் உருவாக்கியதே!!

இந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்காக தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…