பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மதுரையில் எதிர்வரும் பிப்ரவரி 08, 2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்த கண்டனக் கூட்டம், மதுரை மாநகர், கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் …

  • பீமா கோரேகன் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்! வழக்கை ரத்து செய்!
  • ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்யாதே!
  • பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!
  • அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!

கண்டனக் கூட்டம்

இடம் : கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை.
நேரம் : பிப்ரவரி 08, 2019, வெள்ளிக் கிழமை , மாலை 05.00 மணி

நிகழ்ச்சி நிரல்

தலைமை  : பேராசிரியர் முரளி
வரவேற்புரை : பேரா.கிருஷ்ணசாமி

உரை :

எழுத்தாளர் லிபி ஆரண்யா
வழக்கறிஞர்.நாகை.திருவள்ளுவன்
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்

நன்றியுரை: பேரா.சீனிவாசன்

*****

நண்பர்களே,

பீமா கொரேகான் வழக்கில், பிப். 2, 2019 அன்று அதிகாலையில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டு, தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்.12-க்குப் பின் மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரும் பீமா கொரேகான் வழக்கில், ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பீமா கொரேகான் நிகழ்வு : 1818, ஜனவரி 1 அன்று மகாராட்டிர மாநிலம் பீமா கொரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர் 31, 2017 அன்று நூற்றுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்களை உள்ளடங்கிய எல்கர் பரிசத்(Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. பி. சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான தலித் மக்களும் – முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கொரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக, சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் ஜன 1, 2018 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர் எஸ் எஸ் – பாஜக-வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.

இந்தக் கைதுகள் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. பீமா கொரேகான் போன்ற பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பேராசிரியர் சாய்பாபா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வழக்கு, கைதின் வதை குறித்து பேரா. ஆனந்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்…

“என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும்.  பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்து கொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.

படிக்க:
♦ இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன்.  என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு எளிதாகவே கிடைத்திருக்கும்.

இருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் மட்டும் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.

எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.

இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.

இப்போது பீமா கோரேகன் வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. இது போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை.

நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைச்  சொல்லும்.

எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் …  உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மேற்கண்டவாறு ஓர் உருக்கமான, எதார்த்தமான கடிதத்தை நாட்டு மக்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளார். அறிவுத்துறை சார்ந்த உரிமை செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்து அச்சமின்றி ஓர் அடி முன் வைப்போம். வாருங்கள் நண்பர்களே !

இவண்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), தொடர்புக்கு : 94438 52788
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்(PRPC), தொடர்புக்கு : 73393 26807

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க