‘தேசபக்தர்’ மோடியின் மெகா ஊழலான ரபேல் போர் விமான ஊழல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்த நிலையிலும் ‘எதிரி’களை போர் முனையில் சந்திக்கத் தயாராக உள்ளதாக பீற்றிக்கொள்ளும் ‘தேசபக்தர்’ பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஈடுபட்ட ரபேல் முறைகேட்டை மீண்டும் விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்சோரி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அது நீதிமன்றம் தலைமையில் விசாரிக்கப்பட உத்தரவிட வேண்டியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவின் மீது தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே. கவுல், கே. எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, கொள்கை முடிவெடுக்கும் போதோ, விலை நிர்ணயம், அனில் அம்பானி நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக்கொண்டது உள்ளிட்ட வழிமுறைகளிலோ எந்தவித முறைகேடும் நடந்ததற்கான சாத்தியக்கூறு இல்லை என கூறியது. மத்திய அரசு வழங்கிய சீலிடப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை அளிப்பதாகச் சொன்னது இந்த அமர்வு.

இந்த நிலையில் டிசம்பர் 14-ம் தேதி வழங்கிய இந்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யும் படி மீண்டும் அதே மனுதாரர்கள் மனுதாக்கள் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் பிரான்சு –  இந்தியாவிடையே ஒப்பந்தமான ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்த ஒப்பந்தத்துக்காக பல விதிகளில் மோடி அரசு மாற்றம் செய்திருப்பது அந்த ஆவணங்களின் வழி தெரியவந்தது.  முக்கியமாக, பாதுகாப்பு அமைச்சக குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, பிரதமர் அலுவலகம் குறுக்கே புகுந்து டஸால்ட் நிறுவனத்துடன் பேரம் பேசியது ஆவணத்துடன் வெளியானது. பாதுகாப்பு அமைச்சக அலுவலர்களின் முறையீட்டை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கண்டுகொள்ளாமல் விட்டதும், அதிகாரம் இல்லாத பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவல் பேரத்தில் ஈடுபட்டதும்கூட ஆதாரங்களுடன் வெளியானது.

படிக்க:
ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

பிரதமர் மோடி நேரடியான கண்காணிப்பில் இந்த பேரங்கள் நடந்ததும் மூழ்கிப்போகும் நிலையில் இருக்கும் அனில் அம்பானியை காப்பாற்றுவதற்காக நாட்டின் பல்லாயிரம் கோடியை தாரை வார்த்திருப்பதும் தெரியவந்தது.

நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மோடியின் அமைச்சர்கள் சொன்ன பொய்கள் அம்பலமாகின. காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்ட விலையை விட மிகக் குறைவாக அதாவது 20% குறைவான விலையில் விமானங்கள் வாங்கப்படுவதாக சொன்னார் நிர்மலா.  மத்திய அரசின் தணிக்கை குழு அறிக்கை முந்தைய ஆட்சியை விட விமானங்களின் வில்லை வெறும் 2.86% மட்டுமே குறைவு என சொன்னது. இப்படி மோடி ஊழலின் பல பொய்கள் அம்பலமாகின.

modi-ambani-rafale-jet-scamமுன்னதாக வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில், ரபேல் விமானங்களின் விலை விவரங்கள் மத்திய தணிக்கை குழுவுடனும் பொது கணக்கு குழுவுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்ததாக சொல்லப்பட்டிருந்தது. பொது கணக்கு குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதை மறுத்தார். அப்படியொரு அறிக்கையை தான் பார்க்கவே இல்லை என அவர் சொன்னார்.

தீர்ப்பு வெளியாகி சர்ச்சையான பின், ‘நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்பட்ட விவரங்களை நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டதாக’ சொன்னது.  இப்படி எல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.


கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க