பிற்பட்ட வகுப்பினருக்குக்கான கல்லூரி அரசு மாணவர் விடுதி. சென்னை கிண்டி பேருந்து நிலையத்தை ஒட்டி பாழடைந்த வளாகம். பராமரிப்பின்றி பேய் பங்களா போன்று காட்சியளித்தது. விடுதிக்குள் மிகவும் தயங்கித் தயங்கி சென்றோம். முட்செடிகளுக்கு மத்தியில் ஒரு ஒத்தையடிப் பாதைதான் அதற்கான வழி. காலை நேரம்.

ஒரு மாணவர் வராந்தாவில் குத்துக்காலிட்டு பல் துலக்கி கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப்பபடுத்திக் கொண்டோம். கேள்விகளைக் கேட்ட மாத்திரத்தில் “இருங்க இருங்க நீங்க கேட்ட கேள்வி எல்லாம் பதில் சொல்றவங்க அங்க, இருக்காங்க” என்று விடுதி அறைக்குள் அழைத்தார்.

அன்று விடுமுறை நாள் என்பதால் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பாதி சோம்பலிலும் பாதி அரட்டையிலும் காலை நேர வேலையில் முழ்கியிருந்தனர். அவர்களிடம் பேசினோம். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாணவர்களாகிய நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இங்கு, விடுதியில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? உங்கள் படிப்பு பிரச்சினைகள் என்ன? அவையெல்லாம் வரும் தேர்தலுக்கு பிறகாவது கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா என்று வினவினோம்.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

அவர்கள் நம்மை வித்தியாசமாகப் பார்த்தனர். சார் எங்கள, காலையிலலே வெறுப்பேற்றாதீர்கள் நாங்க கொலவெறியில் இருக்கிறோம். அப்படி பெரிய கனவு எல்லாம் எங்களுக்கு இல்லை! படுத்தா கொசுக்கடியில் தூக்கமே வரல! இதுல எங்களுக்கு எப்படி இப்படிப்பட்ட கனவெல்லாம் வரும். நாங்கள் தங்கி படிக்க இந்த விடுதியாவது எங்களுக்கு கிடைத்ததே அதுவே பெரிய பாக்கியம்.

அதோ, அங்கே வாங்கி மூடி வைத்து இருக்கிறோம் பாருங்க அதுதான் எங்க உணவு. எங்களுக்கு பேய் பசி எடுக்கும் போது தான் அதை சாப்பிட முடியும். சாதாரணமாக பசி எடுக்கும்போது அந்த சோறு எங்க தொண்டைக்குள் போகாது. ஏன்னா? அது அவ்வளவு ’ருசி’யா இருக்கும்! இத விட்டா எங்களுக்கு இங்க வேறு வழி கிடையாது. காலை ஏழு மணி, மாலை ஏழு மணிக்கு என்று இரண்டு வேளைக்கு மட்டும்தான், இந்த சோத்தை எங்களுக்கு போடுவாங்க அப்போ அதை வாங்கி வைத்தால் தான் அன்றைக்கு எங்களுக்கு சாப்பாடு. இல்லையென்றால் முழுக்க பட்டினிதான். மற்றபடி, கையில் காசு இருந்தா வெளியில் வாய்க்கு ருசியா சாப்பிடுவோம். காலையில் இருபது ரூபாய் இருந்தால் இட்லி சாம்பார். மதியம் 30 ரூபாய் இருந்தால் பொட்டலம் சோறு ருசியாக கிடைக்கும். தினமும் அதுக்கு நாங்க எங்க போறது ?

இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காலேஜ்ல படிக்கிறோம். ஒருத்தன் மயிலாப்பூர் விவேகானந்தா காலேஜ். இன்னொருத்தன் வடசென்னை அம்பேத்கார் காலேஜ். ஒருத்தன், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ். அவன், தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக். இதுக்கு போற பஸ் பாஸ் விலையும் கவர்மெண்ட் ஏத்திடிச்சி. போன வருஷம் (2018) மாசம் 130 ரூபாய்க்கு சென்னை முதல் திருவள்ளூர் வரைக்கும் பஸ் பாஸ் கொடுத்தாங்க. உதவியாக இருந்தது. இப்போ அதையும் புடுங்கிட்டாங்க. இப்போ அதே பஸ் பாஸ் 300 ரூபாய். விலை ஏத்திட்டாங்க. நாங்க எங்க ஊருக்கு போறது. தனியா டிக்கெட் வாங்கவேண்டி இருக்கு. இப்ப, சனி ஞாயிறு கூட ஊருக்கு போறது கிடையாது. யோசனை பண்ண வேண்டி இருக்கு. இந்த லட்சணத்துல  நாங்க பிஜேபிக்கு ஓட்டுப் போடனுமா?

படிக்க:
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

தமிழிசை அக்காவ  நாங்க சின்ன பசங்க ஏடாகூடமா சொல்லிட்டம்மா அது தப்பாய்டும். நீங்களே இவனுங்க கிட்ட கேளுங்க என்று மற்ற மாணவர்களைப் பார்த்து, சொல்லுங்கடா என்றார்கள். மாணவர்கள் கோரசாக ‘’ஐயோ நாங்க பி.ஜே.பி.க்கு ஓட்டு போட மாட்டோம், போட மாட்டோம்’’ என்று ஒரு  பாட்டாகப் பாடினார்கள். சார், எங்க காலேஜ் பசங்க மோடிக்கு மீம்ஸ் போட்டு தாக்குனானுங்களே பாக்கலையா? மோடி ஊர் சுத்தும் போது கலர்கலரா ஜிப்பா கவுன் போடுற மாதிரி, அரசாங்கத்துலேயும் அதே மாதிரி கலர்கலரா ரூபா நோட்டும் அச்சடிச்சாங்களே அத நாங்க மீம்ஸ்-சா போட்டு ஓட்டுனோமே அதை நீங்க பாக்கலையா? என்று கலாய்த்தனர்.

பக்கத்தில் இருந்த இன்னொரு மாணவர், “பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க, மோடி  ஆளுங்க. இதெல்லாம் தமிழ்நாட்டுக்காரணுங்க மறந்துவிடுவானு நினைக்கிறாங்களா?” என்றார்.

ஏதோ அவசர வேலையை மறந்தவர்கள் மாதிரி, “நாங்க வெளியே போகணும் ஆள விடுங்க” என்று பேச்சை நிறுத்தினர்.

ஏனென்று கேட்ட போது”நாங்க கேட்டரிங் வேலைக்கு போகணும் சனி ஞாயிறு இந்த லீவுலதான் எங்க செலவுக்கான வருமானத்தை பார்க்க முடியும். இப்போ, இந்த 10 பேரும் கல்யாண மண்டபத்துல சப்ளையராக போய் வேலை செய்யப் போறோம்  அதுல கெடைக்கிற பணத்துல தான் காலேஜ் பீஸ் கட்டுவோம் எங்க டெய்லி செலவுக்கு வச்சுக்கோம். வீட்டுக்கு அதுல கொஞ்சம் மிச்சம் பிடித்து அனுப்புவோம். அந்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையானதை ஏதாவது வாங்கி அதை எங்ககிட்ட சந்தோசமா சொல்லுவாங்க. வாரக்கடைசியில வேல இல்லன்னா காலேஜ் நாள்லயே மாலை 6 to 10  வரைக்கும் வேலைக்குப் போவோம், அதுக்கு 200 ரூபா கெடைக்கும்.

நாங்க தறிக்காரர்கள் குடும்பம் சார். ஏழைங்க! இப்ப தறி தொழிலும் நொடிஞ்சிபோச்சு. குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த லட்சணத்துல நாங்கள் எலக்சனுக்கு பிஜேபிக்குனு எப்படி சார் ஓட்டு போடுவோம்? இதெல்லாம் பிஜேபி கட்சி நடத்துற முதலாளிங்களுக்கு தெரியாது,  நாங்க வர்றோம்… சார்”,என்று சிரித்துக் கொண்டே விடைபெற்றனர்.

  • நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

1 மறுமொழி

  1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாணவர் விடுதியிலத்தான் கொசுக்கடி, தரமில்லாத சாப்பாடுனு மாணவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், நூத்துக்கு தொண்ணூத்தெட்டு மார்க் எடுத்து நம்பர் ஒன் காலேஜ் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கற மாணவர்களின் நிலைமை அத விட மோசமா இருக்கே?

    நல்ல படிஞ்சா நெம்பர் ஒன் காலேஜ், படிச்சப்புறம் நல்ல வேலை இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காகது என்பதை காட்டுது கட்டுரை.

    ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களாவது, கேட்டரிங் வேலைக்கி போயி, தன்னுடைய வறுமைய சமாளிக்க கத்துக்கிட்டாங்க. அண்ணா யுனிவர்சிட்டில படிச்சிட்டு எந்த கூலி வேலைக்கு போக முடியும். நினைக்க அதிர்ச்சியா இருக்கு.

    அரசியல் தெரிஞ்சவங்களவிட, அரசியலே தெரியாதுன்னு நெனச்சிக்கினு இருக்கற மாணவர்கள் கோப பேச்சே தீர்க்கமான அரசியலாதான் இருக்கு. இது தான் பிஜேபிய பயமுறுத்துது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க