அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 13

வாணிப ஊக்கக் கொள்கையும் நம் காலமும்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்
 பொருளாதாரத் தத்துவத்தில் ஒரு போக்கு என்ற வகையில் வாணிப ஊக்கக் கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காட்சியிலிருந்தே மறைந்து விட்டது. தொழில் துறைப் புரட்சி மற்றும் ஆலை உற்பத்தியின் நிலைமைகளுக்கு மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் அதிகம் பொருந்தக் கூடியனவாக இருந்தன. அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்சிலும் இந்தக் கோட்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கியிருந்தன. பொருளாதாரத்திலும் வெளிநாட்டு வர்த்தகத்திலும் அரசின் நேரடியான தலையீடு பலவீனமடைந்தது பொருளாதாரக் கொள்கையில் இதனுடைய பிரதிபலிப்பே.

எனினும் பிற்காலத்தில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மேற்கொண்ட நாடுகளில் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள் முழுமையாக வேரூன்ற முடியவில்லை. பொருளாதாரத்தில் எல்லாவற்றையுமே சக்திகளின் சுதந்திரமான இயக்கத்துக்கு விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை இந்த நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சுதந்திரமான ஆட்டத்தில் ஆங்கில, பிரெஞ்சு முதலாளிகளே வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக் கொண்டவர்கள் என்று அவர்கள் நினைத்தது தவறானதல்ல. எனவே வாணிப ஊக்கக் கொள்கையில் சில ஸ்தூலமான கருத்துக்கள் ஒருபோதும் மறையவில்லை. பொருளாதாரத்தை அரசு நிர்வாகம் செய்தல், காப்புவரிவாதம், நாட்டுக்குள் அதிகமான பணத்தைக் கொண்டு வருதல் போன்ற வாணிப ஊக்கக் கொள்கையின் முக்கியமான கருத்துக்களை அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பமானது; தொழில் துறை வளர்ச்சி மிக்க முதலாளித்துவ நாடுகளில் அரசு-ஏகபோக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. இந்த நிலைமைகளோடு பொருந்திய பொருளாதாரக் கருத்துக்களை, பொருளாதாரத்தின் மீது அரசு தாக்கம் செலுத்த வேண்டிய கடமையை, முப்பதுக்களில் ஆங்கிலத் தத்துவாசிரியரான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் மிக முழுமையாக எடுத்துக் கூறினார். சமீப காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரச் சிந்தனை அதிகமான அளவுக்கு அவருடைய கருத்துக்களின் தாக்கத்தில் வளர்ச்சியடைந்தது. இன்று ஏகபோகங்களும் அரசும் பின்பற்றுகின்ற நவீன முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளை அவருடைய கருத்துக்கள் பல அம்சங்களில் நிர்ணயிக்கின்றன.

படிக்க:
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
♦ கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

முதலாளித்துவம் சுயஒழுங்குபடுத்தலின் மூலம் ஒருபோதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் வாதாடினார். பொருளாதாரத்தைத் திட்டமிடுகின்ற கடமையை அரசு மேற்கொள்ள வேண்டும். பணத்தினால் நிறுவப்படும் தேவை எப்பொழுதுமே உற்பத்தியிலிருந்து மோசமான அளவுக்குப் பின் தங்குவதால் அதற்கு உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இது அவசியமானது. எனவே வேலையில்லாமையையும் தொழிற்சாலைகள் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதையும் எதிர்ப்பது அவசியம். தனிப்பட்ட முதலாளிகளிடம் முதலீடு செய்யுமாறு, அதாவது புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துங்கள், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று எப்பொழுதும் வற்புறுத்த வேண்டும் என்றார்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், அரசு பொருளாதாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒன்றரை நூற்றாண்டுக் காலம் பறைசாற்றியது; இது போலியான, ஆபத்தான கருத்து. முதலாவதாகவும் முதன்மையாகவும் நாட்டில் ஏராளமான பணம் இருப்பதையும் அது ”மலிவாகக்” கிடைப்பதையும், அதாவது குறைவான வட்டிக்குக் கடன் கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய நிலைமை ஏற்பட்டால் முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வதிலும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு தவறான எண்ணம். முழு வேலை வாய்ப்புக் கொடுப்பதற்கு அது அவசியமென்றால், அந்நியப் பொருள்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதும் அனுமதிக்கப்படக் கூடியதே; அது போலவே வெளி நாட்டில் பொருள்களைக் குவிப்பதும் (சந்தையைக் கைப்பற்றுவதற்காக குறைந்த விலைக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வது) நாணய மதிப்பைக் குறைப்பதும் அனுமதிக்கக் கூடியதே.

இவருடைய ஆலோசனைகள் வாணிப ஊக்கக் கொள்கையினரது கருத்துக்களை விசித்திரமான வகையில் நமக்கு நினைவூட்டுகின்றன; ஆனால் மேற்கு ஐரோப்பாவில் 250-300 வருடங்களுக்கு முன்பு இருந்த பொருளாதார அமைப்புக்கும் இன்றுள்ள நவீன முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு நாம் இடமளிப்பதும் தேவையே.

Eli_Heckscher
ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணர் எலி ஹெக்‌ஷெர்

வாணிப ஊக்கக் கொள்கையில் புலமை மிக்கவரென்று சொல்லப்படும் ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணரான எலி ஹெக்‌ஷெர் (1879-1952) பின் வருமாறு எழுதுகிறார்: “…..கெய்ன்சின் சமூகத் தத்துவம் வேறு விதமானது என்ற போதிலும் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய அவருடைய கருத்து வாணிப ஊக்கக் கொள்கையினருடைய கருத்துக்களோடு குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கிறது…” (1) அவருடைய சமூகத் தத்துவம் வேறுவிதமானது தான். கெய்ன்ஸ் நவீன அரசு – ஏகபோக முதலாளித்துவத்தின் தத்துவாசிரியர்; வாணிப ஊக்கக் கொள்கையினர் முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த வளரும் வர்த்தக மற்றும் தொழில்துறை முதலாளிகளின் நலன்களை வெளியிட்டவர்கள்.

கெய்ன்ஸ் எதையும் மழுப்பவில்லை. அவர் ”மூலச் சிறப்புடைய கோட்பாடுகளை” (இதன் மூலம் அவர் சுய ஒழுங்குபடுத்தல், அரசு பொருளாதாரத்தில் தலையிடக் கூடாது என்ற கருதுகோள்களைக் குறிப்பிட்டார்) அம்பலப்படுத்துவதைத் தன்னுடைய கடமையாக வரித்துக் கொண்டார். இதைத் தமது புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே அறிவித்தார். வாணிப ஊக்கக் கொள்கையினர் தனது முன்னோடிகள் என்பதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். கெய்ன்ஸ் ஓரளவுக்குத் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை 17, 18-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் என்று துணிச்சலாகக் கூறினார்; மேலும் அவர்களின் கருத்துக்களை மிக விசித்திரமான வகையில் தனக்குச் சாதகமாகப் பொருள் விளக்கம் கொடுத்தார் என்று சில விமரிசகர்கள் – குறிப்பாக ஹெக்‌ஷெர் – கூறுவது உண்மையே. எனினும் கெய்ன்சுக்கும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் இருக்கின்ற உறவு குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு இணைக்கின்ற நான்கு கருத்துக்களைக் கெய்ன்ஸ் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக, வாணிப ஊக்கக் கொள்கையினர் கடன்களுக்கு வட்டியைக் குறைத்தும் முதலீட்டை ஊக்குவித்தும் நாட்டிலுள்ள பணத்தின் அளவை அதிகரிக்க முயற்சி செய்தனர் என்பது அவருடைய கருத்து. இது கெய்ன்சின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று என்பதை சற்று முன்பு பார்த்தோம். இரண்டாவதாக, அவர்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சமடையவில்லை; அதிகமான விலைகள் வர்த்தகத்தையும் உற்பத்தியையும் விரிவுபடுத்த உதவுவதாகக் கருதினார்கள். பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் ”நிதானமான பணவீக்கத்தை ஏற்படுத்துகின்ற நவீன சிந்தனையை நிறுவியவர்களில் கெய்ன்சும் ஒருவர்.

மூன்றாவதாக, ”வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணங்களில் பணப் பஞ்சமும் ஒன்று…. என்பதை முதலில் கூறியவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினர்” (2) வங்கிகள் கொடுக்கும் கடன் வசதிகளைப் பெருக்குவதன் மூலமும் அரசின் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களின் மூலமும் பணத்தின் அளவை அதிகப்படுத்துவது வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆயுதமாகப் பயன்படும் என்றார்.

நான்காவதாக, “தங்களுடைய கொள்கைகளின் தேசியத்தன்மை பற்றியும் அவை காரணமாக யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதைப் பற்றியும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கு எத்தகைய மயக்கங்களும் இருக்கவில்லை.” (3) ஒரு குறிப்பிட்ட நாட்டில் முழு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காப்புவரிவாதம் உதவி செய்யுமென்று கெய்ன்ஸ் நம்பினார்; பொருளாதார தேசியவாதத்தை அவர் ஆதரித்தார்.

படிக்க:
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்று கெய்ன்ஸ் விட்டு விட்ட ஒரு கருத்தை ஐந்தாவது கருத்தாகச் சேர்த்துக் கொள்ளலாம். பொருளாதாரத்தில் அரசு வகிக்க வேண்டிய முக்கியமான பாத்திரத்தைப் பற்றி அவர் சிறப்பான அழுத்தம் கொடுத்தார் என்பது அந்த ஐந்தாவது கருத்தாகும்.

முன்பு குறிப்பிட்டது போல், பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதியில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மூலச்சிறப்புள்ள மரபினருடைய உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தையும் மற்ற தத்துவ அடிப்படைகளையும் நிராகரித்தது. இன்று அது மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதார நிபுணர்களின் தத்துவங்களிலிருந்து ஏற்படும் பொருளாதாரக் கொள்கையையும் கைவிட்டுவிட்டது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தீவிரமடைந்திருப்பது தான் இதற்குக் காரணம். அரசின் தலையீட்டை அதிகப்படுத்தி இந்த முரண்பாடுகளின் கடுமையைக் குறைப்பதற்கு முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் முயற்சி செய்கிறார்கள். அரசு பொருளாதாரத்தில் சர்வ வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சென்ற காலத்தில் மிகவும் முழுமையாகச் சொன்னவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினரே. அதனால் தான் இந்த உறவு ஏற்படுகிறது.

நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் முழுவதுமே கெய்ன்சின் பாதையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மொத்தமாக நிராகரிக்கின்ற மரபுகளும் இருக்கின்றன. இவர்கள் கெய்ன்ஸ்வாதிகள் பண வீக்கத்தை உற்சாகமாக ஆதரிப்பதை எதிர்த்து “தனிப் பட்ட தொழில் முயற்சிகளின் சுதந்திரத்தை” ஆதரிக்கின்றனர். இவர்கள் பொருளாதாரம், உற்பத்தி, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மீது அரசின் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்கின்ற முயற்சிகளைக் குறிக்க ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதுண்டு; அந்தச் சொல்லையும் அவர்கள் அவமதிக்கும் நோக்கத்தில் உபயோகப்படுத்துவதுண்டு.

அந்த வகையில் அரசின் தாக்கம் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் என்பதால் அது ”மேற்கு நாடுகளின் இலட்சியங்களுக்குப் பொருந்துவதல்ல என்பது அவர்களுடைய கருத்து.” புதிய வாணிப ஊக்கக் கொள்கையின் விமரிசகர்கள் கெய்ன்ஸ்வாதிகள் தங்களுடைய கொள்கைகளின் மூலம் எதை வெளியிடுகிறார்கள் (ஒருவேளை சுய உணர்வு இல்லாமலும் கூட) என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். பொருளாதாரத்தில் நவீன முதலாளித்துவ அரசின் பாத்திரம் அதிகரிப்பது ஒரு புறவயமான விதி என்பதையே அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் தான் உருவாக்கிய சக்திகளையே முதலாளித்துவத்தால் இனி மேல் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

ஜான் மேனார்ட் கெயின்ஸ்

மறு பக்கத்தில் ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடர் வளர்முக அரசுகளின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் அரசுத் துறை, பொருளாதாரத் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் ஆகியவை புதிய வாணிப ஊக்கக் கொள்கை என்று சொல்லப்படுகின்றன. சுங்க வரிவிதிப்பின் மூலமாகவும் வேறு நடவடிக்கைகளின் மூலமாகவும் சொந்த நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாப்பது புதிய வாணிப ஊக்கக் கொள்கை. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில் துறைப் பெருக்கத்துக்கு அரசு கடனுதவி செய்தல், விலைகளை ஒழுங்குபடுத்துவது, ஏகபோகங்களின் லாபங்களைக் கட்டுப்படுத்துவது புதிய வாணிப ஊக்கக் கொள்கை.

அப்படியானால் இந்த நாடுகள் வளர்ச்சியடைவது எப்படி? சுதந்திரமான வர்த்தகம், அதாவது அந்நிய ஏகபோகங்களைச் சுதந்திரமாக உள்ளே நுழைய விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக அரசு தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமா? அப்படிச் செய்தால் அது புதிய வாணிப ஊக்கக் கொள்கையாக இருக்காது போலும். ஆனால் அங்கே சுதந்திரமான பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. ஏனென்றால் இந்த நிலைமைகளினால் தான் ஒரு நாட்டில் பின் தங்கிய நிலையும் சார்பு நிலையும் நீடிக்கின்றன!

வளர்முக நாடுகள் பலவற்றிலும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற கருவியாகக் காப்புவரிவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளைப் பொறுத்த வரையிலும் இது முற்போக்கான கொள்கை; நன்கு வளர்ச்சியடைந்த பெரிய நாடுகள் சந்தைகளைக் கைப்பற்றுவதற்காக நடத்துகின்ற ஏகாதிபத்தியப் போராட்டத்தில் பின்பற்றுகின்ற ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட காப்புவரி வாதத்திலிருந்து இது மிகவும் வேறானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) E. Heckscher, Mercantilism, N.-Y., 1955, Vol. 2, p. 340.
(2) J. Keynes, The General Theory of Employment, Interest and Money, London, 1946, p. 346.
(3) Ibid., p. 348.

  • கேள்விகள்:
  • பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகள் வளர்ச்சியடைய என்ன காரணம்?
  • வாணிப ஊக்கக் கொள்கை என்றால் என்ன?
  • ஏகபோக முதலாளித்துவம் – சிறு குறிப்பு வரைக!
  • பொருளாதாரத்தில் அரசு தாக்கம் செலுத்த வேண்டும் என்று கெய்ன்ஸ் கூறியதற்கு காரணம் என்ன?
  • முதலாளித்துவம் சுய ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒரு போதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் கூறியதற்கு என்ன காரணம்?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க