பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியைக் கேட்டு தமிழகமே அண்மையில் அதிர்ந்து போனது. தமிழக அரசு எந்த தீவிரமும் காட்டாத நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். சமூக பிரச்சனைகளுக்கு மக்கள் எதிர்வினையாற்றுகிறார்கள் என்ற விதத்தில் இதனை ஒரு ஆரோக்கியமான சூழலாகப் பார்க்கலாம்.

ஆனால், மக்களின் கருத்துக்களை சற்று உள்ளூர ஆராய்ந்தோமேயானால் இதில் இருக்கும் ஆபத்து புரியும். இச்சம்பவத்தையொட்டி மக்களால் அதிகமாகப் பகிரப்பட்ட கருத்துகளை இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று, பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட வேண்டும் அல்லது சட்டப்படி மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள். இரண்டாவதாக, பெண்கள் ஆண்களோடு பழகும் போது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற அறிவுரை.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரி, உடுமலை ஜிவிஜி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம்.

முதலாவது வேண்டுகோளின் மூலம் மக்களின் கோபம், இயலாமை, வெறி ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது வகை பெண்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும், இறுக்கமாக்கும் தன்மையுடையது. என்னை பொருத்தவரை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பார்வைகளுமே எந்த விதத்திலும் பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்க உதவி புரியாது. உண்மையில் நாம் பெண்கள் நலனில் அக்கறை கொண்டிருப்போமேயானால் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை தனி நபர் சார்ந்த பிரச்சனையாக மட்டும் அணுகுவதை விடுத்து அதனை சமூக அரசியல் தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாய் கருத வேண்டும்.

முதலில், பாலியல் வன்முறைக்கு அதிகப்படியாக பெண்கள் இரையாகிறார்கள் எனக்கூறி அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கத் துடிக்கும் போக்கினால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வோம். என்ன உடை அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எப்பொழுது உடலுறவு கொள்ள வேண்டும், எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து இறுதி வரை பெண்கள் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இக்கட்டுப்பாடுகள் குறித்து எதிர்வினையாற்றும் போது இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதிடப்படும். ஒரு பெண்ணை தனியாக அனுப்ப ஏன் அவளது தந்தை தயங்குகிறார் அல்லது பயப்படுகிறார்? தனது மகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்ற காரணத்தினாலா அல்லது அவளின் மீதான அளவுக்கதிகமான பாசமா? இவை இரண்டுமே ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இக்காரணங்களையும் மீறி தந்தையின் பயத்திற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

நம் சமூகத்தில் பெண்ணின் உடல் சார்ந்தே புனிதம், தூய்மை போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானால் அப்பெண்ணின் புனிதம் கெட்டு விடும், அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும், குடும்ப கௌரவம் சீர்குலைந்து விடும் என்பன போன்ற தப்பெண்ணங்கள் கட்டமைக்கப்பட்டு அப்பெண் மேலும் மனரீதியாக துன்புறுத்துப்படுவாள். பாலியல் வன்முறையை விட அவள் குடும்பம், சுற்றத்தார் உருவாக்கும் நெருக்கடி ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை யாராவது அன்பு என்று கூற முடியுமா? பாலியல் வன்புணர்வு செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா? அப்படியென்றால், அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் அவளின் குடும்பத்தினரை என்னவென்று சொல்வது?

இம்மாதிரியாக பெண் உடல் மீது கருத்தியல் ரீதியாக கட்டுப்பாடுகளை உருவாக்குவதால் அவளுக்கு ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் குறித்து புரிந்து கொள்ள ஒரு வரலாற்று நிகழ்வை இங்கே நினைவுகூர்கிறேன். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் வரலாறு காணாத அளவில் இடப்பெயர்ச்சி நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் எல்லைகளைக் கடந்து பயணம் செய்தார்கள். கற்பனைக்கெட்டாத அளவிற்கு வன்முறையும் அரங்கேற்றப்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாரபட்சம் பாராமல் அனைவரும் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக பெண்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்துப் பெண்களை முஸ்லீம் ஆண்களும், முஸ்லீம் பெண்களை இந்து ஆண்களும் கடத்திச் சென்றார்கள்.

இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய இந்திய மற்றும் பாகிஸ்தானிய அரசாங்கங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, கடத்திச் செல்லப்பட்ட இந்துப் பெண்களை இந்தியாவிற்கு பாகிஸ்தான் அனுப்பிவிட வேண்டும். அதே போல் இந்தியாவும் முஸ்லீம் பெண்களை பாகிஸ்தானிற்கு அனுப்பிவிட வேண்டும். இந்திய அரசின் நோக்கம் என்னவாக இருந்தது? பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவலா? இந்தியாவின் நடவடிக்கையை உற்றுக் கவனித்த அரசியல் விமர்சகர்கள் இந்த ஒப்பந்தம் நல்ல நோக்கத்தோடு கையெழுத்தாகவில்லை எனக் கருதினார்கள்.

படிக்க:
நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

அக்கருத்தின்படி இந்திய தலைவர்கள் இந்துப் பெண்களை மட்டும் காப்பாற்ற எண்ணினார்கள். அவர்கள் இந்து மத அடையாளத்துக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என உறுதியாக இருந்தார்கள். அரசின் நிலைப்பாடுதான் இவ்வாறாக இருந்ததென்றால், பாதிக்கப்பட்ட இந்துப் பெண்களின் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்த பெண்களை ஏற்றுக் கொள்ளாமல் அப்பெண்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதே சிறந்தது என குடும்பத்தினர் கூறினர். ஒருபுறம் அரசு இந்து மத பெண்களின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்று முனைப்பு காட்டியது. மறுபுறம் பெண்களின் குடும்பத்தினர் தங்களின் கௌரவம் கேள்விக்குறியாகி விட்டது என எண்ணினர்.

இரு தரப்பும் ஒரு சாதாரண பெண்ணின் உணர்வுகளை, வலியை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். சதை, இரத்தம், உணர்வு என அனைத்தும் கலந்து உயிர்ப்புடன் இருக்கும் பெண்ணின் உடலை அரசியல் அமைப்போ குடும்ப அமைப்போ புரிந்து கொள்ளாமல் பெண் உடல் மீது கட்டப்பட்டுள்ள அடையாளங்களைக் காப்பாற்ற ஆர்வம் கொள்கின்றன.

பொதுவாக குடும்ப அமைப்பு பெண்களுக்கு நிபந்தனையற்ற அன்பையும், பாதுகாப்பையும் தர வல்லது என பரவலாக நம்பப்படுகிறது. இத்தருணத்தில் குடும்ப அமைப்பின் அடித்தளத்தில் மறைந்து செயல்படும் அரசியலை வெளி கொண்டு வருவது அவசியம். அந்த அமைப்பின் அடிப்படையான ஆண் – பெண் உறவு அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது என கூறப்படுகிறது. சமூகம், அரசியல் சார்ந்த பொதுப்படையான பிரச்சனைகள் ஆண் – பெண் உறவை பாதிக்காது என்பதும் பரவலான கருத்தாகும். குறிப்பாக, பாலியல் உறவு முறை கூட தன்னிச்சையாக செயல்படும் ஆற்றல் கொண்டதுதான் என நவீன உளவியல் ஆராய்ச்சி வாதிடுகிறது.

இதிலிருந்து விலகி, டேவிட் ஹால்பிரின் என்ற எழுத்தாளர் செக்ஸ் தன்னிச்சையான ஒரு வெளியில் செயல்படுவதில்லை என ஆணித்தரமாக கூறுகிறார். இக்கருத்தை விரிவாக புரிய வைக்க ஏதன்ஸ் நகரில் பாலியல் உறவு பண்டைய காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த விதத்தை பின்வருமாறு விளக்குகிறார். ஏதன்ஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களில் பாலியல் உறவை ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் சமரச உணர்வு நிறைந்த ஒன்றாக சித்தரிக்கவில்லை. மாறாக, ஏதன்ஸ் மக்களைப் பொருத்தவரை, செக்ஸ் என்பது சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் விளிம்பு நிலை மக்களின் மீது நடத்தப்படும் செயல்.

ஒரு ஏதினியனின் பாலியல் உறவு அவனது சமூக அந்தஸ்தைப் பொருத்து நிர்ணயமாகிறது. வாலிப பருவம் எய்திய ஆணே அதிகாரம் பெற்றவனாகிறான். அவன் தன்னை விட சமூகத்தில் தாழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் (வயது வரம்பில்லை), விடலைப் பருவ பையன்கள், வெளிநாட்டினர் மற்றும் அடிமைகள் ஆகிய அனைவரிடமும் பாலியல் உறவு கொள்ளலாம். பண்டைய கால ஏதன்ஸில் பொது வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தும் கொள்கைகளே செக்ஸ் வாழ்க்கையையும் நெறிப்படுத்தியது. ஏதன்ஸ் நகரில் பல நூற்றாண்டுக்கு முன் வழக்கில் இருந்த நடைமுறை என்று இதனை விலக்கி பார்க்க வேண்டாம்.

படிக்க:
மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

அந்த நகரில் எவ்வாறு ஏணிப்படி சமூக அமைப்பு பாலியல் உறவுகளை பாதித்ததோ அதே போல் நம் சமூகத்தில் தற்கால குடும்ப அமைப்பில் பண்பாடு மற்றும் அரசியல் சார்ந்த கருத்தாக்கங்கள் பிரதிபலிக்கின்றன. இல்லறம் அமைத்தல் பெண்ணின் கடமை என்று வகுக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளின் அம்மாக்கள் அவர்களுக்கு கோலம் போடுவது, வீட்டை சுத்தப்படுத்துவது, சமைப்பது என அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெண் தனது கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். கணவனின் பாலியல் இச்சையை திருப்திபடுத்த வேண்டும், குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களை பராமரிக்க வேண்டும் என அனைத்துப் பொறுப்புகளும் பெண்ணுக்கு வழங்கப்படும். குழந்தை பெற்று கொடுக்க இயலாத பெண்ணை என்னென்ன இழி சொற்கள் மூலம் பலவீனப்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதோடு விட்டுவிடுகிறார்களா என்ன? அந்தப் பெண்ணின் உடல் மீது மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அனைத்து அத்துமீறல்களும், வன்முறைகளும் நடத்தப்படுகிறது. பாலியல் வன்புணர்வை விட இது எந்த விதத்தில் குறைவு?

கேலிச்சித்திரம் : முகிலன்.

ஒரு சிலர் இந்த சூழல் மாறிவிட்டதாகவும் பெண்கள் கல்வி பெற்று முன்னேறி விட்டதாகவும் வாதிடுவார்கள். இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மையே. இருந்தாலும் கல்வியறிவோ, வேலைவாய்ப்போ பெண்களை முற்றிலும் விடுவிக்கவில்லை. இன்றும் கூட இல்லறம் அமைத்தல் அவள் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்வி அவர்களது குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கும் சற்று பொருளாதார வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் பெற்ற கல்வி பெரும்பாலும் அவர்களது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக அமைவதில்லை. மேலும், அவர்களை சமூக மற்றும் குடும்ப அமைப்புகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட வழிவகை செய்வதில்லை. அனைத்து விதத்திலும் நிறைவான இல்லறத்தை ஒரு பெண் அமைத்தாலும் அச்செயலுக்கு சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து தரப்படுவதில்லை. இச்சூழலில் இன்பமான குடும்ப அமைப்பை எவ்வாறு உருவாக்குவது? ஆண் -பெண் உறவு சமூகத்தில் ஊறிப்போன ஏற்றத்தாழ்வுகள், பிரிவினைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது.

மேலே விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளோடு சாதி அமைப்பும் சேரும் போது, இந்திய சமூகத்தில் பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத கொடுமைகளை அனுபவிக்க நேரிடுகிறது. சாதி அமைப்புக்கும் பெண்பாற் பண்பிற்கும் கண்டிப்பாக ஒர் இணைப்பு உண்டு. சாதி இந்துக்கள் அதிகார வர்க்கத்தினராக உருவெடுக்க ஆரம்பித்த காலம் முதல் சாதிக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றன. அவர்களின் சாதி அடையாளங்களை காத்துக் கொள்ளவும், அதிகாரத்தை நிலைநிறுத்தவும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை வலுப்படுத்தியுள்ளார்கள். இதன் விளைவாக, பெண்கள் புனிதமான குடும்ப அமைப்பின் மையம் என்று நம்பப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் இந்த அணுகுமுறை பரவலாக தென்படுகிறது.

அதீத அன்பு காட்டி சமூக இயல்பை முற்றிலும் மறைத்து பெண்களை வளர்த்து பின் அதே சாதி ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். திருமணம் மூலம் அவர்களின் சாதித் தூய்மையும், முக்கியமாக, அதிகாரமும் நிலை நாட்டப்படுவதாக எண்ணுகிறார்கள். நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் தலித் மக்கள் பொருளாதாரத்தில் சற்று நல்ல நிலையில் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களின் ஆடை அணியும் விதம் மாறியுள்ளது, அவர்களுக்கான வெளி விரிவடைந்துள்ளது மற்றும் ஆதிக்க சாதிப் பெண்களிடம் பழகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !

அதனால், ஒரு தலித் வாலிப ஆண், ஆதிக்க சாதி பெண்ணை காதலிப்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால், ஆதிக்க சாதியினர் அவ்வாறு இயல்பாக எடுத்துக்கொள்வதில்லை. ஆண் – பெண் காதல் உறவை சாதிக் கண்ணாடி மூலம் பார்த்து அதனை தலித் மக்களின் திட்டமிட்ட சதி என்று ஆதிக்க சாதியினர் வாதிடுகின்றனர். இவை அனைத்தையும் மீறி ஒரு ஆதிக்க சாதிப் பெண் ஒரு தலித் வாலிபனை திருமணம் செய்தால் யாராவது ஒருவரை கொலை செய்து விடுவர். இதில் எங்கே இருக்கிறது பெண்ணின் பாதுகாப்பு? தலித் பெண்ணின் நிலை இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அவளுக்கு எந்த வித புனிதமும் கிடையாது.

ஆதிக்க சாதி ஆண்கள் தலித் பெண்களிடம் தண்ணீர் குடிக்கத் தயங்கலாம், அவர்கள் கொடுக்கும் உணவை உண்ண மறுக்கலாம்; பொது வெளியில் அவள் உடலை தொட தயங்கலாம்; ஆனால், அவளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவது எந்தவிதத்திலும் அவனின் சாதித் தூய்மையை களங்கப்படுத்தாது என்ற எண்ணம் மனதில் பதிந்துள்ளது. ஆதிக்க வர்க்கத்தினர் / சாதியினர் தலித் பெண்கள் மீது நடத்திய கொடுமைகளின் சாட்சியாகத் தான் மக்கள் பெண் தெய்வங்கள் நிற்கிறார்கள். பெண் தெய்வ வழிபாட்டை பெண் வழி சமூகத்தின் நீட்சியாக பார்ப்பதை விடுத்து சாதி இழிவின் சின்னமாகக் கருத வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய சமூகத்தில் ஒரு பெண் அவளுக்கென்று கல்வி, வேலை, துணை போன்ற அடிப்படையானவற்றை கூட தன்னிச்சையாக தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. இதற்கு காரணமான நம் சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்திய பண்பாட்டின் சிறப்பம்சமாக சித்தரிக்கப்படும் குடும்ப அமைப்பு என்ற சட்டகத்திற்குள் பெண்களை வரையறுப்பதை முதலில் கைவிட வேண்டும். இதை விடுத்து, ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது சிறு துளி அளவிலும் பெண்கள் விடுதலை பெற பங்களிக்காது என்பது உறுதி.

விஜய் அமந்தா.


இதையும் பாருங்க …