டந்த புதன்கிழமை பிரதமர் மோடி நேரலையில் தோன்றி வான்வெளியில் செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமை பெற்ற எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்ந்துள்ளதாக பெருமிதத்தோடு அறிவித்தார். ‘மிஷன் சக்தி’யை ‘ஒப்பிடமுடியாத சாதனை’ என அவர் வர்ணித்தார்.

பத்து நிமிடங்கள் நீண்ட உரைக்குப் பிறகு, மோடி தனது ட்விட்டரில், ‘செயற்கைகோள்களை அழிக்கும் ஏவுகணை தொழிற்நுட்பத்தை வைத்துள்ள நான்காவது நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. வான்வெளி ஆற்றலுடன் உயர்ந்து நிற்கிறது’ என தெரிவித்தார்.

இந்திய ஊடகங்கள் மோடியின் பெருமிதத்தில் கலந்து கொண்டிருக்க, சர்வதேச ஊடகங்களை இந்தச் செய்தியை சாதாரணமாகவே அணுகின.  இந்த செய்தி மேலும் விரிவடைந்து கொண்டிருக்கையில், சில ஊடகங்கள் இதுபோன்று கடந்த காலங்களில் நடந்த சில ஏவுகணை சோதனை நிகழ்வுகள், வான்வெளியை ஆயுதமாக்குதலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தின என்பது குறித்து கவலைப்பட்டன.

பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள், ஏவுகணை தாக்குதல் ஏப்ரல் – மே மாதத்தில் வரவிருக்கிற தேர்தலை ஒட்டி நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதாக செய்தி வெளியிட்டன.

பிபிசி இணையதளம் புதன்கிழமை நண்பகலில் ஒரு செய்தியை பதிப்பித்திருந்தது. பிபிசி இணையதள முகப்பில், “இந்திய தேர்தல் 2019 : மோடி சொல்கிறார் இந்தியா இப்போது ஒரு ‘வான்வெளி சக்தி’ ” என்ற செய்தியை வெளியிட்டிருந்தது. அதோடு தேர்தல் கண்காணிப்பின் போது பிடிபட்ட பொருட்கள் குறித்தும் இந்தியாவின் வேளாண் பிரச்சினைகள் குறித்து அந்த இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.

நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தின் உலக பிரிவில் மோடியின் அறிவிப்பு குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு மோடியின் புகழ் சரிவடைந்துவிட்டதாக அந்த செய்தி தெரிவித்தது.

‘நாம் இதுவரை கண்டுபிடிக்காத / சந்தேகப்படாத மோடியின் தேர்தல் நேர அவநம்பிக்கையை இது காட்டுகிறது’ என பத்திரிகையாளர் சேகர் குப்தா ட்விட்டரில் மோடியின் நேரலை அறிவிப்பு குறித்து சொன்ன கருத்தை பிபிசி-யும் நியூயார்க் டைம்சும் தங்களுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளன.

படிக்க:
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?
நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !

இங்கிலாந்தின் ‘இண்டிபெண்டண்ட்’ இணையதளத்தில் வெளியான செய்தி என்டீடிவி-யின் அறிவியல் பிரிவு ஆசிரியர் பல்லவ் பாக்லா , இந்தியாவிடம் ஏற்கனவே இத்தகைய திறன் இருப்பதாக கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.  மோடியின் பாஜக வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

“தனது தொலைக்காட்சி அறிவிப்பின் முடிவில் மோடி, பாதுகாப்பு தொடர்பான தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார். இது அரசியல் அறிக்கை போலவே உள்ளது” என அந்த செய்தியில் எழுதப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ‘டான்(Dawn)’ செய்தி இணையதளம் பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. அளித்த செய்தியை அப்படியே எந்தவித மாற்றமும் செய்யாமல் பதிப்பித்திருந்தது.

அதனுடைய தலைப்பு : ‘செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியதாகவும் வான்வெளி சக்திமிக்க நாடுகளில் பட்டியலில் இணைந்துள்ளதாகவும் இந்தியா சொல்லிக்கொள்கிறது’. நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க நினைக்கிறார் மோடி என செய்தியில் கூறப்பட்டிருந்தது.

வாஷிங்டன் போஸ்டின் உலக செய்திப் பிரிவில் நிஹா மாசியின் செய்தியும் மோடியின் உரையை விட்டுவைக்கவில்லை. பாகிஸ்தானின் பாலகோட்டில் பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா நடத்திய தாக்குதலால் டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே பதற்றம் நிலவியதாக இந்த செய்தி சொன்னது. மேலும், இந்தியாவிடம் உள்ள காலாவதியான இராணுவ உபகரணங்கள் குறித்தும் இந்தச் செய்தி பேசியது.

“நவீன போர்க்களத்துக்கு தேவையான ஆயுதங்கள் குறித்து எல்லையில் இந்தியாவின் ஆயுதப் படைகளின் தயார்நிலையைப் பற்றிய பரந்த கவலை இருக்கும் நேரத்தில் இந்த வெற்றிகரமான சோதனை நடந்துள்ளது. தனது எதிரியிடம் உள்ளதைக் காட்டிலும் பழைய விமானத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானுடன் சமீபத்தில் வான்வெளி தாக்குதலை நடத்தியது” என அந்த செய்தி கட்டுரையில் எழுதியிருந்தார் அவர்.

அதோடு, நாடாளுமன்றத்தில் மார்ச் 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் 68% பழையவை எனவும் இந்த நிலையில் இந்தியாவுக்கு விண்வெளியில் உள்ள ஆர்வம் குறித்தும் 2022- செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கும் மார்ச் மிஷன் மங்கல்யான் திட்டம் குறித்தும் கட்டுரை விவாதித்தது.

இறுதி பத்தியில், நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்தும் செய்தி சொன்னது.

பிரெஞ்சு பத்திரிகையான ‘லீ மாண்டெ’ செயற்கைகோள்களை அழிக்கும் தொழில்நுட்பத்தால் விண்வெளியில் குப்பைக்கிடங்கு உருவாகி வருவதை விவாதித்தது. இந்த செய்தியில் விண்வெளி குப்பைகள் குறித்த வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

சீனாவின் ‘சின்ஹுவா’ செய்தி முகமை இந்தியாவின் சாதனையை பொருட்டாக கருதவில்லை. மோடியின் அறிவிப்பை ஒரு வாக்கிய செய்தியாக தெரிவித்தது.

உலகின் பெரும்பான்மையான முதன்மை செய்தி ஊடகங்கள் மோடியின் நேரலை அறிவிப்பை, ஏதுவும் நடக்காதது போலவே செய்தியாக எழுதின.

நியூயார்க் டைம்ஸ், “வெற்றிகரமான ஏவுகணை சோதனை என சொல்லப்பட்டது நிரூபிக்கப்படாதது” என்றே எழுதியது. தி டான் (The Dawn) செய்தியும் ‘இந்தியா சொல்லிக்கொள்கிறது’ என்றே சொன்னது.

படிக்க:
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

மோடியின் அறிவிப்பை இந்தியர்கள் சந்தேகித்ததை சுட்டிக்காட்டிய நியூயார்க் டைம்ஸ், “மோடியின் அரிதான தொலைக்காட்சி அறிவிப்பை பல இந்தியர்கள் உடனடியாக சந்தேகித்தனர். அவருடைய முதன்மையான நோக்கம், தொழில்நுட்பம் என்பதைக் காட்டிலும் அரசியலுக்கானதாகவே இருந்தது” என எழுதியது.

இப்படியாக மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை உலக ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.


அனிதா
நன்றி: Scroll

1 மறுமொழி

  1. அப்படியே உங்கள் நாட்டின் GlobalTimes.cn பத்திரிகையில் இந்தியாவின் சோதனை வெற்றி அடைந்ததை பார்த்து பொறாமைப்பட்டு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்களே அதை ஏன் விட்டுவிட்டிர்கள்.

    //China carried out an anti-satellite missile test in 2007, which were strongly criticized by the US and other Western countries. India conducted the same test, but instead of condemning the country, the West viewed it from the China-India competition perspective. Only a US official warned nations of space debris caused by the test, without any moral accusations.//

    ஐயோ பாவம் உங்கள் சீனா நாடு இந்தளவுக்கு தரம் தாழ்ந்து பொறாமைப்பட்டு இருக்க வேண்டியது இல்லை. கம்யூனிஸ்ட்கள் பொறாமையால் வயிறு எரிவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது 🙂 வாழ்க பாரதம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க