சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 7


காட்சி : 10

இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

(பாலாஜி ஒலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)

பாலாஜி : பகதூர் பாடத்தைப் படிடா

பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப் போல வளர்ந்திருக்க… ஏன்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?

பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதே.

பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை.

பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?

பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு . டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா!

(பகதூர் சிரிக்க) அப்படியில்லேடா இப்படி – (புன்சிரிப்பு)

பகதூர் : வரலியே பாலாஜி!… புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்.. முடியலியே.

பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா? (பகதூர் சிரிக்க) ம்… அதேதான். அதோன் புன்சிரிப்பு…

பகதூர் : இதா புன்சிரிப்பு…?

பாலாஜி : பாடத்தைச் சொல்லு.

பகதூர் : முக்கனியே! சக்கரையோ தேனே! பாலே!

பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?

பகதூர் : திரை இருக்கே.

பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?

(திரையை எடுத்ததும்)

பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பாலாஜி : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு ‘மரம் போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிட வேணாமா?

பகதூர் : எங்கே ?

பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.

பகதூர் : சரி!

பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இது போலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?

பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்…

பாலாஜி : எதுடா?

பகதூர் : உயிர் போறது.

பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா.

பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!

பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும்.

பகதூர் : சுத்தணுமா!

எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

பாலாஜி : சரி! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.

பகதூர் : சரி! பாலாஜி என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?

பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.

பாலாஜி : பெண்கள் அப்படித்தான் கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.

பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே !

பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன்.

பகதூர் : சாமி கதைப் படிச்சா ?

பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?

பகதூர் : படி பாலாஜி

பாலாஜி : ஒ.. மாதர் திலகமே.

பகதூர் : யாரைக் கூப்பிட்டே?

பாலாஜி : டே படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?

பகதூர் : ஒ கேக்கறேனே.

பாலாஜி : என்ன சொன்னான்

பகதூர் : அவன் சொல்றான்

பாலாஜி : என்னடா சொல்றான்?

பகதூர் : என்ன சொல்றான்?

பாலாஜி : இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா ஈரேழு லோகத்தையும்…

பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன் என்ன வந்து கேக்கறியே!

பாலாஜி : சும்மா புளுகுடா காதல் கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!

பகதூர் : படி பாலாஜி !

பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்பு போல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே!

(படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்)

♦ ♦ ♦

காட்சி : 11
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், சிட்னீஸ்.

(கேசவப்பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)

சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே!

(காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்) ஒய், கேசவப்பட்டரே..

(கேசவப்பட்டர் திரும்புகிறார்)

கேசவப்பட்டர் : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.

சிட்னீஸ் : பரவாயில்லை. பாட்டாச்சாரிஸ்வாமி, உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?

கேசவப்பட்டர் : கேலி செய்றேளா?

சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?

கேசவப்பட்டர் : யார் சொன்னது உம்மை அப்படி ….

சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.

கேசவப்பட்டர் : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம்.

சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும். விஷயம் உமக்குத் தெரிந்ததுதான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கெடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?

கேசவப்பட்டர் : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம் சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.

கேசவப்பட்டர் : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.

சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே ! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. இலட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி எது வேணுமானாலும் தருகிறேன்.

கேசவப்பட்டர் : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சீட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாவ காரியம்ணு தெரியுது. ஆனா , எங்களைவிட சிரேஷ்டமானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட….

கேசவப்பட்டர் : நான் சாமான்யனப்பா சிட்னீஸ். என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசி க்ஷேத்திரத்திலே (காகப்பட்டர்) ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?

கேசவப்பட்டர் : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.

சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?

கேசவப்பட்டர் : நிச்சயமா சந்தேகமா அதற்கு.

சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.

கேசவப்பட்டர் : நானா?

சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.

கேசவப்பட்டர் : ஆமாம் சிட்னீஸ்

கேசவப்பட்டர் :  ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப் பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.

கேசவப்பட்டர் : சரி போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?

சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்து கொண்டு தயாராய் இருங்கள் புறப்பட. நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன்.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க