பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் தொற்றிக்கொண்டது. இந்திய விமானப் படை பாகிஸ்தான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடங்களை தகர்த்ததாகவும் கூறியது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா சொல்லிக்கொண்டது. அதை பாகிஸ்தான் மறுத்தது. சர்வதேச ஊடகங்கள் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளை படம்பிடித்துக் காட்டியதோடு, எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ஆதாரத்தோடு கூறின.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் காரணங்களுக்காக மோடி அரசு இத்தகைய செய்திகளை உருவாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதுபோல, பாஜகவும் மோடியும் பிரச்சார மேடைகளில் தங்களுடைய தேசத்தை காக்கும் நடவடிக்கைகளை அடுக்கினார்கள். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களையும் பாகிஸ்தானில் பிடிபட்டு இந்தியா திரும்பிய விமானப் படை காமாண்டர் அபிநந்தனின் படங்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி பாஜக பயன்படுத்தியது.

படிக்க:
♦ விதிமீறல்களுடன் ஒளிபரப்பைத் தொடங்கிய நமோ டிவி : கண்டுங்காணாத தேர்தல் ஆணையம் !
♦ மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை !

பாகிஸ்தான் அரசும்கூட, தேர்தலையொட்டியே இந்தியா செய்யாத தாக்குதலுக்கு உரிமை கோரிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இந்த நிலையில், ஏப்ரல் மாத மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ‘நம்பகமான புலனாய்வு’ தகவலின்படி ஏப்ரல் 16 – 20க்கிடையே இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மக்மூத் குரேஷி.

ஆனால், அந்த தகவலுக்கான ஆதாரம் என்ன என்பதை விரிவாகக் கூற மறுத்த அவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுறுத்தலின் பேரிலேயே இதைச் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகச் சொல்லியிருந்தது.  இந்தியா மேற்கொண்டு எந்தவித நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்பதை எச்சரிப்பதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியா எந்தவித எதிர்வினையும் செய்யவில்லை.

ஐந்தாண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க மோடி அரசு கடைசி ஆயுதமாக ‘தேச பாதுகாப்பு’, ‘தேசப்பற்று’ ஆயுதங்களை கையில் எடுத்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கலாம். அல்லது, மக்களின் மோடி எதிர்ப்பு மனநிலையை யூகித்து தாக்குதலைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தும் திட்டமும் அரங்கேற்றப்படலாம்.


கலைமதி
நன்றி: ரஷ்யா டுடே