சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 12


காட்சி : 17

இடம் : வீதி
உறுப்பினர்கள் : சிட்னீஸ், பட்டர்கள்.

சிட்னீஸ் : வாருங்கள், வாருங்கள் போன காரியம் ஜெயந்தானே! (பட்டர்கள் கடிதம் கொடுக்கக் கண்டு ) என்ன இது! வர முடியாது என்று எழுதியிருக்கிறாரே.

கேசவப்பட்டர் : நாங்கள் என்ன செய்வது?

சிட்னீஸ் : மூன்று பேர் சென்றீர்களே?

கேசவப்பட்டர் : நயமாக வினயமாக, பவ்யமாக விஷயத்தை எடுத்துச் சொன்னோம்.

சிட்னீஸ் : சொன்னதின் பலனா இது?

கேசவப்பட்டர் : அவர் வயிறு குலங்கச் குலுங்கச் சிரிக்கிறார்.

சிட்னீஸ் : மக்களின் மனநிலை, மண்டலத்தின் மனநிலை.

கேசவப்பட்டர் : எல்லாம் சொன்னோம். சிவாஜியின் வீர தீரத்தைப் பற்றிச் சொன்னோம். அவர் கோதண்டத்தில் ஒரு ஸ்லோகம் சொல்லி எங்களைத் திணற அடித்துவிட்டார்.

சிட்னீஸ் : ம்.. சரி.. சரி… என் புத்திப் பிசகு. உங்களை அனுப்பினேன். சதிகாரர்களே போங்கள்.

கேசவப்பட்டர் : ஆத்திரம் கூடாதென்று ஆகமம் அலறுகிறது; வேதம் முழங்குகிறது.

சிட்னீஸ் : எங்காவது ஆற்றோரத்தில் போய்ப் பேசிக்கொண்டிருங்கள் இதுபோல. இப்படி அடுத்துக் கெடுக்காதீர்கள். (போகிறார்கள்)

நிச்சயமாக இவர்கள் சதிதான் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்த காகப்பட்டரின் குலமாயிற்றே என்று அனுப்பினேன். குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்.

♦ ♦ ♦

காட்சி : 18
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதி , வீரர்கள், மோகன்.

தளபதி-1 : மகராஜ் புதிய மாளிகை கட்டியதும் அதற்கு என்ன பெயரிட உத்தேசம்?

சிவாஜி : நீயே சொல்லு, என்ன பெயரிடலாம்?

தளபதி-1 : சலவைக் கல்லால் கட்டப் போவதால் வெள்ளை மாளிகை என்று பெயரிடலாமே?

தளபதி-2 : அப்படி பார்த்தால் மாளிகையின் கொலு மண்டபத்திலே தங்கத் தகடு போடப்படுவதால் சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?

தளபதி-1 : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?

சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்களெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
(மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)

ஏன், என்ன செய்தி எதிரிப் படைகளா?

மோகன் : எதிரிகளிடம் படையில்லை , மகராஜ் … தடை விதித்திருக்கிறார்கள்

சிவாஜி : தடையா? என்ன? யார்?

வீரன் : மகராஜ் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.

சிவாஜி : சொன்னவன் யார்?

மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.

சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?

மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ்! அவர்களுக்கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால் …

சிவாஜி : ஆனால்! என்ன அது ஆனால் ?

வீரன் : முகூர்த்தம் குறிக்கும்படி புரோகிதரைக் கேட்டோம்.

சிவாஜி : நாள் சரியில்லை. நட்சத்திரம் சரியில்லை என்று கூறியிருப்பார்.

வீரன் : இல்லை மகராஜ்… விபரீதமாகப் பேசுகிறார்கள்.

சிவாஜி : விபரீதமாகப் பேசுகிறார்களா? என்ன உளறுகிறீர்கள்?

மோகன் : அப்படிக் கேட்டிருக்க வேண்டும். அந்த உலுத்தர்களை வாயை மூடிக் கொண்டு வந்து விட்டீர்கள் வகையற்று..

சிவாஜி : சந்தர்.

மோகன் : மகராஜ் மன்னிக்க வேண்டும்.

வீரன் : புரோகிதர் பட்டாபிஷேகம் கூடாதென்று …

தளபதி-4 : கூடாதென்று..?

வீரன் : கூறிவிட்டனர்.

தளபதி-4 : ஏன்? என்ன காரணம்?

வீரன் : நமது தலைவர் சூத்திரராம் சூத்திரருக்கு ராஜ்யாபிஷேக உரிமை கிடையாதாம். அது சாஸ்திர விரோதமாம்.

(சிவாஜி ‘ஆஹா’ என்று வாளை உருவ, மற்றவர்களும் வாளை உருவுகின்றனர். பாலச்சந்திரப்பட்டர். கேசவப்பட்டர் வருகின்றனர்)

கேசவப்பட்டர் : எங்களைக் கொல்ல இத்தனை ஆட்களும் வாட்களும் தேவையா? வீரர்களே! உங்களுடைய கோபப் பார்வையாலேயே எங்களைச் சுட்டுச் சாம்பலாக்கி விடலாமே. பொறுங்கள் பொறுங்கள்! பொறுத்தார் பூமியாள்வார்.

பாலச்சந்திரப்பட்டர் : பொங்கினவர் காடாள்வார்.

சிவாஜி : சரி! இவர்களை அழைத்துக் கொண்டு நந்தவனம் சென்று. என்ன சேதி என்று விசாரித்துத் தகவலை பிறகு வந்து கூறுங்கள் என்னிடம். என் முன் நிறுத்த வேண்டாம். இவர்களைக் கொண்டு போங்கள்.

(தளபதி பட்டர்களை அழைத்துப் போக , மோகனும் போகிறான்.)

சிவாஜி : சந்தர்! வா இங்கே நீ போகாதே இங்கேயே இரு.
(சிறிது மெளனமாய் இருந்துவிட்டு)…

நான் எப்போதும் இப்படித் திகைத்ததில்லை. எதிரியின் படைகள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்ட போதும் எனக்கு ஏற்பட்டதில்லை இந்தக் கலக்கம். நான் நாடாளத் தகுதியற்றவன்.. சிவாஜி சூத்திரன். சூத்திரன் நாடாளக் கூடாது? இது சாஸ்திரம்.

மோகன் : சாஸ்திரமல்ல மகராஜ்! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம்.

சிவாஜி : உண்மைதான். எதிரியின் வாளுக்கும், வேலுக்கும் என் மார்பு அஞ்சியதில்லை. இந்த அஸ்திரம் …

மோகன் : மகராஜ் என்னால் தாங்க முடியவில்லை பொறுக்க முடியாது. ஒரு வார்த்தை சொல்லுங்கள், தங்களைத் தடை செய்யத் துணிந்தவர்களை …

சிவாஜி : கண்ட துண்டமாக்குவாய். பயன் என்ன? வாள் கொண்டு அவர்களைச் சிதைக்க விரும்புவாய். அவர்கள் வாள் எடுக்காமலே என்னைச் சித்திரவதை செய்துவிட்டார்களே. முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்வி பெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப் படையினால் என் சித்தத்தைக் குறைக்க முடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக் காடான போது என் மனம் குலையவில்லை. உற்றார் உறவினரும், ஆருயிர்த் தோழர்களும், களத்திலே பிணமான போதும் என் உறுதி குலையவில்லை. போர் போர் போர் என்றே கர்ஜித்தேன். இதோ, என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம் ஆள!

மோகன் : சூதான வார்த்தை அது.

சிவாஜி : ராஜ்யம்! யார் சிருஷ்டித்த ராஜ்யம்? எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சிருஷ்டித்த ராஜ்யம்? சந்தர்! எத்தனைத் தாய்மார்கள், தங்கள் குமாரர்களை இதற்கு அர்ப்பணம் செய்தனர். எத்தனை காதலிகள் தங்கள் காதலர்களை இதற்குக் காணிக்கை செலுத்தினர். ராஜ்யம் ஆள சிவாஜிக்கு உரிமையில்லையாம். சூத்திரன் ராஜ்யம் அமைக்கலாம். ரணகளத்திலே உழைக்கலாம். ஆனால் அவன் ஆளக் கூடாது. இது சாஸ்திரம் சந்தர்! இந்த சாஸ்திரம்?

மோகன் : சாம்பலாகட்டும் மகராஜ் சுட்டுச் சாம்பலாக்குவோம். புறப்படுங்கள்.

சிவாஜி : சந்தர்! என் மனம் குழம்பிவிட்டது.

மோகன் : மகராஜ் மகராஜ்!

சிவாஜி : மோகன் விலகிநில் ! விசாரம் நிறைந்த என்னை விட்டு விலகும். அப்பா சந்தர்! அஞ்சாநெஞ்சன், அசகாய – சூரன், ஆற்றல்மிக்கோன் என்றெல்லாம் மராட்டிய மண்டலம் புகழ்ந்ததோ அந்த மாவீரனுடைய நிலையைப் பார். மகாராஷ்டிரம் மயக்கத்திலே சிக்கி விட்டது. உன்னையும் அந்த நோய் பிடிக்கா முன்பு விலகிச் செல்.

படிக்க:
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ
குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

மோகன் : மகராஜ் ! வீணான மனக் கலக்கம் கூடாது! உமது ஆத்திரத்தை மீறும் ஆற்றல் கொண்ட ஆண்மகன் எவனும் இங்கே இருக்க முடியாது. என் கையில் வாள் இருக்கும் வரை, தங்கள் தாள் பணிகிறேன். ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

சிவாஜி : நாளைக்கு வா! இன்று என்னை இம்சிக்காதே! வேதனை வெள்ளம் போலாகிவிட்டது. நான் அதைத் தாண்டி கரை ஏறுவேனோ அல்லது அதிலேயே அமிழ்ந்து போவேனோ யார் கண்டார்கள்? மகாராஷ்டிர மண்டலமே! உன் கதி என்னவோ…

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க