பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 12

னால் தவழ்வது முற்றிலும் கடினமாக இருந்தது. கைகள் நடுங்கின, உடலின் சுமையைத் தாங்க மாட்டாமல் துவண்டு மயங்கின. இளகிய வெண்பனியில் சில தடவை அவன் முகம் புதைய விழுந்தான். புவியின் ஈர்ப்புச் சக்தி பல மடங்கு அதிகமாகி விட்டதும் போல அவனுக்குத் தோன்றியது. அதை எதிர்த்து வெல்வது அசாத்தியமாக இருந்தது. சற்று நேரமாவது, ஒரு அரை மணி நேரமாவது படுத்து இளைப்பாற வேண்டும் என்ற ஆசை அடக்க முடியாத படி எழுந்தது. எனினும் இன்று மிக வலிய கவர்ச்சி அலெக்ஸேயை முன்னே இழுத்தது.

உடலைப் பிணித்த அயர்வை மதியாமல், அவன் மேலே மேலே தவழ்ந்து முன்னேறினான், விழுந்தான். பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை. உள்ளங்கைகள் தாங்க வலுவற்றுப் போனதும் அவன் முழங்கைகளை ஊன்றித் தவழ முயன்றான். இது மிகவும் அசௌகரியமாக இருந்தது. அப்போது அவன் நீண்டுப் படுத்து, முழங்கைகளால் வெண்பனியை அழுத்திப் புரண்டு முன் செல்ல முயற்சி செய்தான். இதில் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. இவ்வாறு புரண்டு உருண்டு முன்னே செல்வது அதிகச் சுளுவாயிருந்தது. அதற்குப் பெரும் பிரயாசைத் தேவைப்படவில்லை. தலை மட்டுந்தான் மிகவும் கிறுகிறுத்தது. ஒவ்வொரு நிமிடமும் தன்னுணர்வு தப்பியது. புரள்வதை அடிக்கடி நிறுத்தி, வெண்பனியில் உட்கார்ந்து, தரையும் காடும் வானும் சுழல்வது நிற்கும் வரை காத்திருக்க நேர்ந்தது.

பசியையோ, அவன் உணரவில்லை. எதையும் அவன் காணவில்லை. பீரங்கிக் குண்டு வீச்சையும் துப்பாக்கி வெடிகளையும் தவிர வேறு எந்த ஒலியும் அவன் காதில் படவில்லை.

தன்னவர்களிடம் போய்ச் சேர வாய்க்குமா என்பது பற்றி இப்போது அலெக்ஸேய் எண்ணவே இல்லை. உடம்பு இயங்கும் நிலைமையில் இருக்கும் வரை தவழ்ந்தும் புரண்டும் முன்னேறிக் கொண்டிருப்போம் என்பதை அவன் அறிந்திருந்தான். பலங்குன்றிய எல்லாத் தசைகளதும் அந்தப் பயங்கர உழைப்பின் விளைவாக அவனுக்குக் கணப்பொழுது நினைவு தப்புகையிலும் அவனுடைய கைகளும் உடல் முழுவதும் முன்போன்றே சிக்கலான இயக்கங்களைத் தொடர்ந்து செய்துகொண்டும் போயின, அவன் பீரங்கிக் குண்டு வீச்சு நடந்த திசையை, கிழக்கை நோக்கி வெண்பனியில் புரண்டு சென்ற வண்ணமாயிருந்தான்.

அந்த இரவை அவன் எப்படிக் கழித்தான், மறு நாள் காலையில் எவ்வளவு நேரம் புரண்டுச் சென்றான் என்பது அலெக்ஸேய்க்குத் நினைவில்லை. துன்புறுத்தும் அரை மறதியில் எல்லாம் அமிழ்ந்து விட்டது. தனது இயக்கப் பாதையில் கிடந்த தடைகள் மட்டுமே அவனுக்கு நினைவிருந்தன: வெட்டப்பட்ட பொன்னிறப் பைன் அடிமரம், அதிலிருந்து கசிந்த அம்பர் நிறக் கீல், வெட்டுக் கட்டைகளின் அடுக்கு, சுற்றிலும் சிதறியிருந்த மரத்தூளும் சிறாய்களும், வெட்டுப் பகுதியில் துலக்கமாகத் தெரிந்த ஆண்டு வரைப்படிவுகள் கொண்ட ஏதோ அடிக்கட்டை ஆகியன இவை…

வெளிச் சத்தம் ஒன்று அலெக்ஸேயை அரை மறதியிலிருந்து சுய நினைவுக்குக் கொணர்ந்தது. அவன் உட்கார்ந்து சுற்று முற்றும் கண்ணோட்டினான். மரங்கள் வெட்டப்பட்ட பெரிய வெளியின் நடுவே தான் இருப்பதை அவன் கண்டான். வெயிலொளி அதை முழுக்காட்டிக் கொண்டிருந்தது. ரம்பத்தால் அறுக்கப்பட்ட இன்னும் துண்டுப் போடப்படாத மரங்களும் கட்டைகளும் அடுக்குகளாக வைக்கப்பட்ட விறகுக் கட்டைகளும் எங்கும் காணப்பட்டன.

திட்டமாக விளங்காத அபாய உணர்வுக்கு உள்ளான அலெக்ஸேய் சுற்றிலும் நோக்கினான். மரங்கள் அண்மையில்தான் அறுக்கப்பட்டிருந்தன. எனவே, இங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வேளை ஹிட்லர் படையினர் காப்பகங்களும் அரண்களும் அமைப்பதற்காக இங்கே காட்டைத் திருத்துகிறார்களோ? அப்படியானால் விரைவில் இங்கிருந்து அப்பால் போய்விட வேண்டும். மரம் வெட்டிகள் எந்தக் கணத்திலும் வந்து விடக்கூடுமே. ஆனால், வலி என்னும் விலங்கால் மாட்டப்பட்டிருந்த உடல் கல்லாகச் சமைந்து விட்டது போலிருந்தது. அசையத் திராணி இல்லை.

தொடர்ந்து தவழ்ந்து செல்வதா? இதை அவன் முடிவு செய்வதற்குள், காட்டு வாழ்க்கை நடத்திய நாட்களில் அவனுக்குள் செவ்வைப்பட்டிருந்த இயல்பூக்கம் அவனை எச்சரிக்கை கொள்ளச் செய்தது. தன்னை யாரோ கவனமாக, வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்ப்பதை அவன் காணவில்லை. ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்தான். ஆனாலும் தான் பின் தொடரப்படுவதை அலெக்ஸேய் புலன்கள் அனைத்தாலும் உணர்ந்தான்.

கிளை மடமடத்தது. அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். நீலச்சாம்பல் நிறப் பைன் மரத்தின் அடர்ந்த சுருட்டை முடிகள் காற்றுப் போக்குக்கு இசையச் சார்ந்திருந்தன. ஆனால், சில கிளைகள் பொது இயக்கத்துக்கு ஏற்ப இசையாமல் தமக்கே உரிய தனி வகையில் நடுங்கியதை அலெக்ஸேய் கண்ணுற்றான். கிளர்ச்சிப் பெருக்குள்ள தணிந்த கிசுகிசுப்பு, மனித கிசுகிசுப்பு அங்கிருந்து வருவது போன்று அவனுக்குத் தோன்றியது.

படிக்க:
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

அலெக்ஸேய் மார்புப் பையிலிருந்து துருப்பிடித்த ரிவால்வரை எடுத்தான். அதன் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டு வர இரண்டு கைகளாலும் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது. குதிரை கிளிக்கிட்டதும் பைன் மரக்கிளைகளிடையே யாரோ திடுக்கிட்டுப் பின்னே நகர்ந்தது போலப்பட்டது. சில மர முடிகள் யாரோ அவற்றில் இடித்துக் கொண்டது போல பின்னுக்குச் சாய்ந்தன. அப்புறம் சந்தடி எல்லாம் அடங்கிப் போயிற்று.

“என்ன அது? விலங்கா, மனிதனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். புதர்களுக்குள் யாரோ கேள்விக் குறிப்புடன் “மனிதனா?” என்று கேட்பது போல அவனுக்குத் தோன்றியது. அப்படிப் தோன்றியதோ அல்லது மெய்யாகவே புதருக்குள் யாரேனும் ருஷ்ய மொழியில் பேசினார்களோ? ஆமாம், ருஷ்ய மொழியில். ருஷ்ய மொழி பேசப்பட்டதால் அவனுக்கு ஆனந்த வெறி திடீரென்று தலைக்கேறி விட்டது. அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான், குரல் வந்த பக்கம் பாய்ந்தான், அக்கணமே ரிவால்வாரை வெண்பனியில் நழுவ விட்டுவிட்டு முனகலுடன் வெட்டுண்ட மரம் போல் விழுந்துவிட்டான்….

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க