மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்கான போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தினந்தோறும் போராட்டம் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. பல்லாவரத்தில் போராட்டம்.. மாதவரத்தில் போராட்டம், வண்ணாரப்பேட்டையில்  போராட்டம்… எங்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 08.05.2019  புதன்கிழமை அன்று சென்னை வண்ணாரப்பேட்டை 4-வது மண்டலத்தில் உள்ள பார்த்த சாரதி நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியல் செய்திருக்கின்றனர்.

அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அவர்கள் சொல்வது நம்மை உலுக்குகிறது. “உண்மையில் இப்படி ஒரு பஞ்சத்தை  எதிர் கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை” என்கிறார்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருந்த அப்பகுதி பெண்கள்.

படிக்க:
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

தண்ணிர் லாரி வந்ததும் கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஓடியவாறு வரிசையில் நின்று குடங்களை அதனருகே வைத்தவாறு பரபரப்பாகினர். தண்ணீரை முறையாக எல்லோர் வீட்டுக்கும் கொடுக்க ஒரு மேஸ்திரி நியமித்து இருந்தார்கள். ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்த பிறகு அவர் தண்ணீரை திறந்து விடுகிறார்.

வந்த தண்ணீர் லாரியின் கொள்ளளவு 9,000 லிட்டர். ஆனால், காத்திருந்த குடங்களோ அதிகம். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஒருவர் மட்டும் “பாத்தியா இந்த ரெண்டு கொடத்துக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன்” என்று இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் குடங்களை தாங்கி கொண்டு மூச்சு முட்ட சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.

மற்றவர்கள் தண்ணீர் கிடைக்காத கோபத்தில் பொறுமிக் கொண்டே போக……  அசதியாக உட்கார்ந்த மேஸ்திரி கோமளாவிடம்…  இந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை எப்படி இருக்கு என்றதும்….

“நா… என்ன சொல்ல… அதான் நீங்களே பார்த்திங்களே எங்க நெலமைய.  இதோ.. இந்த லாரிகாருக்கு வசூல் பண்ண காசு 250 ரூபாயில 220 ரூபா அவருக்கு கொடுக்கனும். மீதி இருக்கிறது 30 ரூபா தான்” என்று சில்லறையை எடுத்துக் காட்டினார்.

லாரி ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு மூச்சிறைக்க சொன்னார்… “எப்பா சாமி… உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.  தண்ணி மட்டும் கொண்டு வராம இருந்துடாத… நீ கேக்குற காசகூட கொடுத்துடுறோம். இந்த தண்ணிக்காக நாங்க படாதபாடு படுறோம்.  எப்ப தண்ணி வருமோன்னு வேலைக்கும் போகாம வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம் தயவு செஞ்சி வந்துருப்பா… ப்ளீஸ்”  என்றார்.

“சரிக்கா”.. என்று சொல்லிவிட்டு அந்த லாரி ஓட்டுநர் கிளம்பியதும் சொன்னார். “இந்த பார்த்தசாரதி தெருவில் மொத்தம் 9 சந்து வரை இருக்கு. பாக்கதான் சின்னதா இருக்கும். ஒவ்வொரு சந்துக்கும் 100-லருந்து 150 குடும்ப வரைக்கும் இருக்கும். மொத்தமா ஆயிரம் குடும்பங்களுக்கு மேல இங்க இருக்காங்க.

பெரும்பாலும் பிட்டர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக், டூவீலர் மெக்கானிக் சுத்தி இருக்க சின்ன சின்ன பட்டறைகளில் தான் வேலை செய்து வருகிறார்கள். இதுதான் இங்கு வாழக்கூடிய மக்களின் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற  நிலைமையில் இருக்கும்  எங்களுக்கு குடிக்க தண்ணிகூட கிடைக்கிறதில்ல.

கடந்த 20 நாளா சரியா தண்ணி வரது இல்ல… ஒண்ணு விட்டு ஒருநாள் தண்ணி வரும். அதுவும் இப்ப வர்ரது இல்ல.  நாங்க தினம் தினம் ஓடிப்போய் அதிகாரிங்ககிட்ட எழுதி கொடுத்துட்டு வருவோம். ’எங்க தெருவுக்கு தண்ணி வேணும்’ன்னு சொல்றதுக்கு காலையில் 6 மணிக்கு அந்த ஆபிசுக்கு போய் விடுவோம். அங்க போயிட்டு சொன்ன 2 மணிக்கு அனுப்புறோம்னு சொல்லுவாங்க. நாம நம்பி வந்துடக் கூடாது அங்கேயே நின்னாதான் தண்ணி அனுப்புவாங்க. 2 மணிக்கு நீங்க போய் சொன்னிங்கன்னா 6 மணிக்குதான் வருவாங்க. வேலைக்கு போற யாராவது ஒருத்தவங்க வேலைக்கு லீவு போட்டுட்டு அந்த அலுவலகத்துக்கு நடையா நடக்கணும். அப்படி நடந்தா தான் நாங்க தண்ணி குடிக்க முடியும்.

லாரி வந்ததும் ஒரு வீட்டுக்கு ஐந்து குடம் தண்ணீர் புடிக்கிறதுக்கு அனுமதி உண்டு.  அஞ்சி கொடம் தண்ணியத்தான் இரண்டு நாள் வரைக்கும் வச்சிக்கனும். துணி துவைக்கிறதோ, குளிப்பதோ அல்லது கக்கூஸ் போறது எதுவா இருந்தாலும் இந்த அஞ்சு குடம் தண்ணீரிலேயே எல்லா வேலையும் முடிச்சிக்கனும்.

தண்ணி இருந்தப்ப டெய்லி குளிச்சோம். இப்ப அப்படி இல்லை. குளிக்கிறதுக்கு நாலு நாளாவது, அழுக்கு துணிகளை தான் வேலைக்கு போட்டுட்டு போறோம். துணி மொத்தமா சேர்த்து ஒருநாள் புடிக்கிற தண்ணியில துவைச்சிக்கிறோம்.

இந்த ஏரியாவுல ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 7 லிருந்து 8 பேர் வரை இருக்காங்க. இதுபோக குழந்தை குட்டி என்று ஏராளமா இருக்குதுங்க. இந்த குழந்தைங்க தண்ணில விளையாடுதுங்க. அவங்ககிட்ட போயிட்டு எதையும் எடுத்துச் சொல்ல முடியல. சொன்னா புரிஞ்சிக்கிற வயசுமில்ல. இதுவே எங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.

இந்த தண்ணீர் குடிக்கிறதுக்கு நாங்க ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டயும் திட்டுவாங்கறதா இருக்கு. இப்ப எங்க தெருவுக்கு ஒரு லாரி வருது அப்படின்னா எங்களால தண்ணி புடிக்க முடியல. அப்புறம் நாங்க பக்கத்து தெருவுக்கு வர லாரில தண்ணி புடிக்க கொடத்த தூக்கிட்டு ஓடுவோம். அங்க இருக்கறவங்க  “ உங்க ஏரியாவுல தான் தண்ணி வருதே….. இங்க எதுக்கு நீ வர” அப்படின்னு நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு. தண்ணி இல்லன்னா உயிர் வாழ முடியுமா யோசிச்சு பாருங்க? லாரி வரும்போது வீட்ல ஆள் இல்லாதவங்க, இல்லனா தண்ணி கெடக்காதவங்க என்ன பண்ணுவாங்கன்னா நைட்டு ரெண்டு, மூனு மணிக்கு குடிநீர் வாரிய ஆபிசுக்கு போயிட்டு தண்ணீர் கொண்டு வருவாங்க. ஆட்டோ, பைக்குன்னு எடுத்துட்டு போயிடுவாங்க. அந்த நேரத்துக்கு போனாதான் நெரிசல் இல்லாம இருக்கும். இல்லனா அங்கயும் கூட்டம்தான்.

இதுக்கு முன்னாடி எங்களுக்கு தண்ணி பஞ்சம் வந்தது இல்லை. கார்ப்பரேஷன் வாட்டர் தான். டெய்லியும் குழாய்ல தண்ணி வந்துரும். ஆனா இப்ப லாரி தண்ணீரை நம்பி தான் இருக்கிறோம்.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

தண்ணி வேணும்னு அதிகாரிங்கள கேட்டா, எந்த பதிலும் சொல்ல மாட்றாங்க. கொஞ்சம் கோவமா கேட்டா “எவ்வளவு பேருக்கு தான் நாங்களும் தண்ணி அனுப்ப முடியும். உங்கள மாதிரி நாங்களும் மனுஷங்கதானே” அப்படின்னு நம்மளையே திருப்பிக் கேட்கிறாங்க. பரிதாபமா பேசுறாங்க.

ஏற்கனவே வீட்ல நாங்க 60 அடி போர் போட்டு இருக்கிறோம். அதுல தண்ணி ஏறவில்லை. 19 அடியில கிணறு வெட்டியிருக்கோம். அதுலயும் தண்ணி இல்ல. இப்ப என்ன பண்ண முடியும்? அதிகாரிங்களத்தானே கேக்க முடியும்.

கேன் வாட்டர் வாங்கலாம்னா அதுவும் விலை கூடிடுச்சு. அதுவும் சொல்ற நேரத்துக்கு வருவதில்லை. இந்த லாரிக்காரன் மாதிரியே கேன் வாட்டர்காரங்களும் ஏமாத்துறாங்க. அப்படியே வந்தாலும் வழியிலேயே இருக்கிறவங்க மடக்கிக்கிறாங்க. கடைசியில இருக்கிறவங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது பெரும்பாடாக இருக்கு. அதே மாதிரி இங்க டேங்க் இருக்குது. தெருவுக்கு தெரு வச்சிருக்காங்க. ஆனால் அது எதுக்கும் பயன்படாம இருக்குதுங்க.

எனக்கு தெரிஞ்சு பத்து பதினைந்து வருஷம் ஆகுது அதுல தண்ணி புடிச்சி. அதை சரி பண்ணுங்க அப்படின்னு சொன்னா, இதோ வறேம்மா…. நாளைக்கு வறேம்மா’னு” அதிகாரிகள் சொல்லிட்டு போயிடுறாங்க. அதுக்கப்புறம் திரும்பி வருவதே இல்லை.

எங்க ஜனங்க ரொம்ப கடுப்பாகி இனிமே இந்த அதிகாரிங்களை நம்புனா வேலைக்கு ஆகாது. நாமளே காசு போட்டு இந்த டேங்கை சரி பண்ணிடலாம். இந்த டேங்குல தண்ணீர் நிரப்பிடட்டும். வேலைக்கு போனவங்ககூட வந்து புடிச்சிக்குவாங்க அப்படின்னு சொல்லி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு “எவ்வளவு காசு கேட்டாலும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறோம்….. ஆனால், தண்ணி தான் கிடைப்பதில்லை” என்கிறார் கோமளா.

ஒரே ஒரு குடம் மட்டும் பிடித்த சுல்தானா என்பவர் கையிலிருந்த குடத்தை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்.  “நாங்க நாயா அலஞ்சாலும் எங்களுக்கு தண்ணி கெடச்ச பாடில்லை. முஸ்லீம்கள் இப்ப எங்களுக்கு நோன்பு இருக்கும் நேரம். சரியா தண்ணீர் கிடைக்கிறது இல்லை. அதற்கு முக்கியமான காரணம் லாரில வர தண்ணி எல்லாத்தையும் வீட்டு ஓனருங்க சம்புல போட்டு அடைச்சு வச்சிக்குறாங்க. எங்கள மாதிரி வாடகைக்கு இருக்கவங்களால சமாளிக்க முடியல.

சுல்தானா.

கீழ இருக்கவங்களுக்கு சிரமம் இல்லாம தண்ணி புடிச்சி வச்சிக்குறாங்க. நாங்க மேல இருந்து கீழ வரதுக்குள்ள தண்ணியும் காலியாகிடுது. லாரியும் காணாம போயிடுது. குளிக்கவும் தண்ணி இல்ல. குடிக்கவும் தண்ணி இல்ல.

தினமும் சமைக்க மட்டும் ஒரு கேன் வாட்டர் வாங்கிக்குவோம். அதற்கு முப்பது ரூபா. சமைச்சது போக குடிக்கிறதுக்கு மட்டும் வச்சிக்குவோம். ஒண்ணுவிட்டு ஒருநாள்தான் தண்ணி வரும். அதுவரைக்கும் பத்திரமா பாத்துக்கனும்” என்கிறார் சுல்தானா.

அப்பகுதியில் செயல்பட்டு வரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் நகர செயலாளர் தினேஷ் அவர்களை கேட்டபோது சொன்னார். ”குறிப்பாக 3 மற்றும் 4வது சந்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும். இந்த சந்திற்கு மட்டும் மெட்ரோ பைப் லைன் மூலமாக தண்ணீர் கொடுத்ததால் லாரி தண்ணீர் வீடுகளில் கட்டி வைத்திருந்த தண்ணீர் தேக்க தொட்டிக்கு (சம்ப்)  சென்று விடுவதால் பல வீடுகளுக்கு தண்ணீர் போவதில்லை. இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக லாரி தண்ணீர் வருவதையும் நிறுத்தி விட்டார்கள்.

மேலும் மெயின் தெருவில் பல மாதங்களாகவே சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க மெட்ரோ வாட்டர் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தால் அதற்கும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

சொந்தமாக போர் போட்டு தண்ணீர் பிடித்துக் கொள்வதற்கான வசதியும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. காரணம் 60 அடி 70 அடி மட்டத்திற்கு தண்ணீர் இல்லை. அப்படியே 150 அடிக்கு போட்டால் உப்பு தண்ணீர் தான் வருகிறது என்பதால் இந்த லாரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்” என்கிறார்.

“தண்ணீர் பஞ்சம்” – “பூமியில் தண்ணியில்லை” – “மழை பெய்யவில்லை” வேறு என்ன செய்ய முடியும்? என்று பொதுவான பிரச்சனையாக கருதி புறந்தள்ளும்படியாக இல்லை. நாம் எதிர்பாராத வகையில் மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு வகை மாதிரிதான் இது!

படிக்க:
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !
பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

சென்னை நகரம் முழுவதும் இதுதான் நிலை. வசதி உள்ளவர்கள் தமது அடுக்ககங்களில் பாதாள அறைகளில் லாரித் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைக்கு விற்கிறார்கள். தண்ணீர் வசதி இல்லாத வீடுகளிலிருந்து குடித்தனக்காரர்கள் காலி செய்கிறார்கள். தண்ணீர் வசதி உள்ள வீடுகளின் வாடகை திடீரென உயர்ந்திருக்கிறது. கேன் வாட்டர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மாநகராட்சி தண்ணீர் வருவதே இல்லை. சில வி.ஐ.பி பகுதிகளில் மட்டும்தான் வருகிறது.

தண்ணீருக்காக அன்றாடம் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இருக்க, நடுத்தர வர்க்கமோ தனது துண்டு விழும் பட்ஜெட்டில் மேலும் செலவை தண்ணீருக்காக போட வேண்டிய நிலையில் இருக்கிறது. பிரச்சினையை தீர்க்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. ஊடகங்களோ தேர்தல் பரபரப்பில் காலந்தள்ளுகின்றன.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். அன்றாடம் அரசுக்கும் மாநகராட்சிக்கும் எதிராக போராடும் சிந்தனை உள்ள மக்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்பது தற்போதைய சேதி! இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது.

– வினவு களச் செய்தியாளர்.