பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 16

வீட்டுக்காரர் சென்று விட்டதைக்கூடக் கவனிக்காதபடி அவ்வளவு தன்னுணர்வு அற்ற நிலையில் கிடந்தான் அலெக்ஸேய் மெராஸ்யேவ். அடுத்த நாள் முழுவதும் அவன் நினைவிழந்து கிடந்தான். மூன்றாம் நாள்தான் அவனுக்கு உணர்வு வந்தது. அப்போது சூரியன் வெகு உயரே கிளம்பிவிட்டிருந்தது. விட்டத்தில் இருந்த சாளரத்தின் வழியாகச் சூரிய கிரணங்களின் பெருந்தம்பம் நிலவறை முழுவதையும் கடந்து, பல படிவிகளாகக் குமைந்த நீலக்கணப்புப் புகையை ஊடுருவி, அலெக்ஸேயின் கால்கள் வரை நீண்டிருந்தது.

நிலவறை வெறுமையாக இருந்தது. மேலே கதவுப் புறமிருந்து கேட்டன இரு குரல்கள். ஒன்று வார்யாவினுடையது. மற்றொன்று ஒரு கிழவியின் குரல், அதுவும் அலெக்ஸேய்க்கு அறிமுகமானது. அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

“சாப்பிடமாட்டேன் என்கிறானா?”

“சாப்பிடுவது எங்கே?… சாயங்காலம் தோசை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டார். அவ்வளவு தான், அதையும் வாந்தி எடுத்துவிட்டார். இதுவும் ஒரு சாப்பாடு ஆகுமா? பால்தான் கொஞ்சம் போல் குடிக்கிறார்.”

“நான் சூப் கொண்டு வந்திருக்கிறேன் பார் … ஒரு வேளை சூப் அவனுக்கு ஏற்றுக் கொள்ளும்.”

“வஸிலீஸா மாமி!” என்று கத்தினாள் வார்யா. “நீங்கள் என்ன…”

“ஆமாம் கோழி சூப். என்ன திடுக்கிடுகிறாய்? சர்வ சாதாரணமான விஷயம் இது. அவனைத் தட்டி எழுப்பு. ஒரு வேளை சாப்பிடுவான்.”

அரை உணர்வில் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அலெக்ஸேய் கண்களைத் திறப்பதற்குள் வார்யா அவனை வலுவாக, கூச்சப்படாமல், சந்தோஷம் பொங்க ஆட்டி அசைத்தாள்.

“அலெக்ஸேய் பெத்ராவிச், விழித்துக்கொள்ளுங்கள்! … வஸிலீஸா மாமி கோழி சூப் கொண்டு வந்திருக்கிறாள்! எழுந்திருங்கள்!”

வாயில் அருகே சுவற்றில் செருகப்பட்டிருந்த சிறாய் விளக்கு சடசடத்து எரிந்தது. அதன் புகை மண்டிய ஒழுங்கற்ற வெளிச்சத்தில் சிறு கூடான, கூனற் கிழவியை அலெக்ஸேய் கண்டான். சுருக்கம் விழுந்த, நீண்ட மூக்குள்ள அவள் முகம் கடு கடு வென்றிருந்தது.

“இதோ கொண்டு வந்திருக்கிறேன். கூச்சப்படாதீர்கள். வயிறாரச் சாப்பிடுங்கள். ஆண்டவன் அருளால் இது நன்மை பண்ணலாம்..” என்றாள் கிழவி.

அவளுடைய குடும்பத்தினரின் துயரக் கதையும் கொரில்லாக் கோழி என்ற வேடிக்கை பெயர் கொண்ட கோழியின் கதையும் அலெக்ஸேய் நினைவுக்கு வந்தன. கிழவியும் வார்யாவும் மேஜை மேல் கமகமவென்று ஆவி விட்ட பாத்திரமும் எல்லாமே கண்ணீர் திரையின் மங்கலில் குழம்பின. கிழவியின் கண்டிப்புள்ள விழிகள் கடுமையுடன், அதே சமயம் அளவற்ற பரிவும் அனுதாபமும் பொங்க அவனை நோக்குவது கண்ணீருக்கிடையே அவனுக்குத் தெரிந்தது.

கிழவி வாயிலை நோக்கி நடக்கையில், “நன்றி, பாட்டி!“ என்று மட்டுமே சொல்ல அவனுக்கு இயன்றது.

அதற்குள் கிழவி கதவருகே போய்விட்டாள்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நன்றி சொல்வதற்கு அப்படி என்ன செய்துவிட்டேன் நான்? சொஸ்தமாகுங்கள்” என்று அங்கிருந்து கூறினாள்.

“பாட்டீ, பாட்டீ!” என்று கூவி அவளை நோக்கிப் பாய்ந்து செல்ல எழுந்தான் அலெக்ஸேய். ஆனால், வார்யாவின் கைகள் அவனைப் பிடித்துத் தடுத்து மெத்தை மேல் கிடத்தின.

“நீங்கள் படுத்திருங்கள், படுத்திருங்கள்! சூப் சாப்பிடுங்கள்” என்றாள் வார்யா.

“மிஹாய்லா தாத்தா எங்கே?

“அவர் போயிருக்கிறார் காரியமாக. நமது படை முகாமைத் தேடப் போயிருக்கிறார். வரத் தாமதமாகும். நீங்கள் சாப்பிடுங்கள். இதோ“

ஒரு கரண்டி சூப் சாப்பிட்டதுமே அலெக்ஸேய்க்கு வயிற்றில் வலியெடுக்கும்படி, இசிவு காணும் அளவுக்கு ஓநாய்ப் பசி எடுத்து விட்டது. எனினும் அவன் பத்துக் கரண்டிகள் சூப் மட்டுமே பருகிவிட்டு, வெண்மையும் மென்மையுமான கோழி இறைச்சியின் சில இழைகளை சாப்பிட்டதுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். வயிறு என்னவோ இன்னும் கொண்டா கொண்டா என்று நச்சரித்தது. ஆனால், தனது நிலைமையில் அளவுக்கு மேல் உணவு நஞ்சு ஆகிவிடக்கூடும் என்பதை அறிந்திருந்த அலெக்ஸேய் பாத்திரத்தை தீர்மானத்துடன் அப்பால் நகர்த்திவிட்டான்.

கிழவி கொணர்ந்த சூப் மந்திர சக்தி உள்ளதாக இருந்தது. சாப்பிட்டதுமே அலெக்ஸேய் உறங்கிவிட்டான் – உணர்வு இழக்கவில்லை, ஆரோக்கியமான நல்ல தூக்கத்தில் ஆழ்ந்தான். தூங்கி எழுந்ததும் மறுபடி சாப்பிட்டு விட்டு மீண்டும் உறங்கிப் போனான். கணப்புப்புகையோ, மாதர்களின் பேச்சோ, வார்யாவின் கரங்களின் ஸ்பரிசமோ, எதுவும் அவனை எழுப்பவில்லை. அவன் இறந்துவிட்டானோ என்ற அச்சத்தால் வார்யா அவன் இதயம் துடிக்கிறதா என்று உற்றுக் கேட்டாள். அப்படியும் அவன் தூக்கம் கலையவில்லை.

அவன் உயிரோடிருந்தான், ஒரு சீராக, ஆழ்ந்து மூச்சு விட்டான். எஞ்சிய பகல் பொழுதையும் இரவையும் அவன் உறக்கத்திலேயே கழித்தான். உலகத்தில் எந்தச் சக்தியும் அவனுடைய தூக்கத்தைக் கலைக்க முடியாது போலிருந்தது அவன் விடாது உறங்கிய விதம்.

அதிகாலையில் எங்கோ வெகுதொலைவில் கேட்டது ஒரு சத்தம். காட்டில் நிறைந்திருந்த மற்ற ஒலிகளிலிருந்து சற்று பிரித்தறிய முடியாத சத்தம். வெகு தொலைவில் கேட்டது, புறா கத்துவது போன்ற ஒரு சீரான ஒலி அது. அலெக்ஸேய் திடுக்குற்று விழித்துக் கொண்டான், காதைக் கூராக்கிக் கொண்டு தலையணையிலிருந்து சிரத்தை நிமிர்த்தினான். ஒரு சீராக கடகடப்பு காதில் பட்டது. “ஊ-ஊ” விமானத்தின் எஞ்சின் இரையும் சத்தமே அது என்று அலெக்ஸேய் புரிந்து கொண்டான். சத்தம் ஒரு சமயம் அருகே நெருங்கி மிகுந்து கொண்டு போயிற்று, மறு சமயம் மந்தமாகக் கேட்டது. எனினும் அப்பால் போய் விடவில்லை. அலெக்ஸேய்க்கு மூச்சு நின்று விடும் போல் ஆகி விட்டது. விமானம் எங்கோ அருகாமையில் இருக்கிறது, காட்டுக்கு மேலே வட்டமிடுகிறது, எதையோ ஆராய்ந்து பார்க்கிறது அல்லது இறங்குவதற்கு இடம் தேடுகிறது என்பது தெளிவாயிருந்தது.

அலெக்ஸேய் கடும் முயற்சி செய்து உட்கார்ந்து கொண்டான். விமானம் இடும் வட்டங்களை எண்ணினான். ஒன்று, இரண்டு, மூன்று வட்டங்களை எண்ணியவன் பதற்ற மிகுதியால் நிலை குலைந்து மெத்தையில் சாய்ந்து விட்டான். சர்வ வல்லமையுள்ள, நோய் தீர்க்கும் அதே உறக்கம் மீண்டும் அவனை ஆட்கொண்டு விட்டது.

இளமையும் உற்சாகமும் பொங்க அதிர்ந்தொலிந்த கட்டைக் குரலைக் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். வேறு எத்தனை குரல்களுக்கிடையேயும் இந்தக் குரலை அவன் இனங்கண்டு கொண்டிருப்பான். சண்டை விமான ரெஜிமெண்டில் இந்த மாதிரிக் குரல் ஸ்குவாட்ரன் கமாண்டர் அந்திரேய் தெக்தியாரென்கோ ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

அலெக்ஸேய் கண்களைத் திறந்தான். ஆனால், தான் தொடர்ந்து தூங்குவது போன்றும், நெற்றியில் சிவப்புத் தழும்பு உள்ள, நல்லியல்பு ததும்பும் நண்பனின் முகம் தனக்குக் கனவில் தெரிவது போன்றும் அவனுக்குத் தோன்றியது. நண்பனின் நீல விழிகள் புகை சூழ்ந்த அரை இருளில் விளங்காமையுடன் கூர்ந்து நோக்கின.

“எங்கே, தாத்தா, உங்கள் வெற்றிப் பரிசைக் காட்டுங்கள் பார்ப்போம்” என்று முழங்கினான் தெத்தியாரென்கோ.

காட்சி மறைந்து விடவில்லை. அவன் மெய்யாகவே தெத்தியாரென்கோதான். ஆனால், நடுக்காட்டில், நிலவறைக் கிராமத்தில் தன்னை நண்பனால் எப்படி தேடிக் காண முடிந்தது என்பது நம்ப முடியாததாகத் தோன்றியது அலெக்ஸேய்க்கு. பெரிய உடலும் அகன்ற தோட்களுமாக, வழக்கம் போல காலர் பொத்தான்களைக் கழற்றிய கோலத்தில் நின்றான் தெத்தியா ரென்கோ. ரேடியோ போன் கம்பிகளுடன் தலைக் காப்பும் வேறு ஏதோ பொட்டலங்களும் கைகளில் பிடித்திருந்தான்.

தெத்தியாரென்கோவின் முதுகுக்குப் பின்னால் மிஹாய்லா தாத்தாவின் வெளிறிய, ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்த முகம் தெரிந்தது. கிளர்ச்சிப் பெருக்கினால் அவருடைய கண்கள் பரக்க விழித்தன. அவருக்கு அருகே நின்றாள் மருத்துவத்தாதி லேனச்கா. செஞ்சிலுவைப்பொறித்த பருத்த கித்தான் பையை அவள் கக்கத்தில் இடுக்கியிருந்தாள். விசித்திரமான ஏதோ பூக்களை மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கரிந்து போனது போன்று கறுத்த தோலால் இழுத்து மூடப்பட்டிருந்த இந்த உயிருள்ள எலும்புக் கூட்டை விமானி தெத்தியாரென்கோ இன்னும் ஒரு கணம் நோட்டமிட்டான். தனது நண்பனின் குதூகலம் பொங்கும் முகம்தான் அது என ஒப்புக் கொள்ள அவன் முயன்றான்.

முழங்கைகளை ஊன்றி எழுதுவதற்கு முயன்றவாறு, “அந்திரெய்!” என்றான் அலெக்ஸேய்.

அந்திரெயோ, விளங்காமையையும் துலக்கமாகத் தெரிந்த திகிலும் தோன்ற அவனை நோக்கினான்.

“அந்திரெய், என்னை அடையாளம் தெரியவில்லையா?” என்று கிசுகிசுத்தான் அலெக்ஸேய். தன் உடம்பு முழுதும் நடுங்கத் தொடங்குவதை அவன் உணர்ந்தான்.

கரிந்து போனது போன்று கறுத்த தோலால் இழுத்து மூடப்பட்டிருந்த இந்த உயிருள்ள எலும்புக் கூட்டை விமானி தெத்தியாரென்கோ இன்னும் ஒரு கணம் நோட்டமிட்டான். தனது நண்பனின் குதூகலம் பொங்கும் முகம்தான் அது என ஒப்புக் கொள்ள அவன் முயன்றான். மிகப்பெரிய, அனேகமான வட்டமான விழிகளில் மட்டுமே அலெக்ஸேய்க்கு இயல்பானதும் தனக்குக் தெரிந்ததுமான, பிடிவாதமும் ஒளிவு மறைவின்மையும் உள்ள பாவம் அவனுக்குப் புலப்பட்டது.

அவன் கைகளை முன்னே நீட்டினான். தரையில் விழுந்தது தலைக்காப்பு, பொட்டலங்கள் சிதறின, ஆப்பிள்களும் , கிச்சிலிப் பழங்களும் பிஸ்கோத்துக்களும் உருண்டன.

“அலெக்ஸேய், நீ தானா?” – விமானியின் குரல் தழுதழுத்தது. நிறமற்ற நீண்ட இமை மயிர்கள் ஒட்டிக் கொண்டன. “அலெக்ஸேய், அலெக்ஸேய்!” என்று, நோயுற்ற, குழந்தையினது போன்ற லேசான அந்த உடலைக் கட்டிலிலிருந்து வாரி எடுத்துச் சிறுவன் போல அணைத்துக் கொண்டான். “அலெக்ஸேய், நண்பா, அலெக்ஸேய்!” என இடைவிடாது மொழிந்தான்.

அவனுடைய வலிய கரடிக் கையிலிருந்து குற்றுயிரான அந்த உடலை விடுவிக்க வார்யாவும் மருத்துவத்தாதி லேனச்காவும் முயன்றார்கள்.

விமானியோ, கறுத்து, கிழடுதட்டிப்போன இந்த எடையற்ற மனிதன் தனது படைத் தோழனும் நண்பனுமான அலெக்ஸேய் மெரேஸ்யேவ் தான், தானும் ரெஜிமெண்ட்காரர்கள் அனைவரும் எவனை வெகுநாட்களுக்கு முன்பே இறந்தவனாகக் கருதி அடக்கம் செய்துவிட்டார்களோ அவனேதான் என்று முடிவில் நம்பிக்கை அடைந்து தலையைப் பிடித்துக் கொண்டான். காட்டுத்தனமான வெற்றி முழக்கம் செய்தான், பின்பு அலெக்ஸேயின் தோட்களைப் பற்றி, வட்டமான கண் குழிகளின் ஆழத்திலிருந்து களியுடன் சுடர்ந்த அவனுடைய கரிய விழிகளை நிலைக்குத்திட்டு நோக்கியவாறு கர்சித்தான்:

“உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான், படுபாவிப் பயல்! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய்? எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது?”

ஆனால் மருத்துவத்தாதி – தூக்கிய மூக்கும் குட்டையான பருத்த உடலும் கொண்டவள் அவள். ரெஜிமெண்டில் எல்லோரும் அவளை லெப்டினண்டு என்பதைப் பொருட்படுத்தாமல் செல்லமாக லேனச்கா என்று அவளை அழைத்தார்கள் – அவள் எல்லைமீறிக் குதிபோட்ட விமானியைக் கண்டிப்பும் உறுதியுமாக அப்பால் விலக்கி விட்டாள்.

படிக்க:
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

“தோழர் காப்டன், நோயாளியிடமிருந்து விலகி நில்லுங்கள்!”

பூச்செண்டை மேஜை மீது எறிந்தாள். (இந்தப் பூச்செண்டுக்காக முந்தின நாள் தான் பிரதேசத் தலைநகருக்கு அவர்கள் விமானத்தில் சென்றார்கள். இப்போதோ அது சற்றும் தேவையற்றது ஆகிவிட்டது) செஞ்சிலுவை பொறித்த கித்தான் பையைத் திறந்து நோயாளியைப் பார்வையிடுவதில் காரியப் பாங்குடன் முனைந்தாள். லேனச்கா அவளுடைய குட்டை விரல்கள் அலெக்ஸேயின் கால்களை லாவகமாக வருடின.

“வலிக்கிறதா? இப்போது? இப்போது?” என்று கேட்ட வண்ணமாயிருந்தாள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்