பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 17

லெக்ஸேய் தனது விமான நிலையத்தை அடைந்தபோது அங்கே விமானப் பறப்பு மும்முரமாக நடந்து கொண்டுருந்தது. அந்தப் போர்க்கால வசந்தத்தின் எல்லா நாட்களையும் போலவே அன்றும் அங்கே வேலை அளவுக்கு மேல் நெரிந்தது.

விமான எஞ்சின்களின் இரைச்சல் ஒரு நிமிடங்கூட ஓயவில்லை. பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்காகத் தரை இறங்கிய ஒரு விமான அணியின் இடத்தில் மற்றொரு அணியும் பிறதொரு அணியும் வானில் கிளம்பின. விமானிகளும் பெட்ரோல் ஓட்டிகளும் பெட்ரோல் போடும் பண்டக சாலைக்காரர்களும் எல்லோருமே அன்று ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து போனார்கள்.

எங்கும் ஒரே வேலை மும்முரமும் கெடுபிடிமாக இருந்ததாயினும் அலெக்ஸேய் மெரேஸ்யேவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விமானிகள் தங்கள் விமானங்களைக் காப்பிடத்துக்கு ஓட்டிச் செல்வதற்கு முன்னே, “இன்னும் கொண்டு வரவில்லையா?” என்று எஞ்சின்களின் இரைச்சலுக்கு இடையே மெக்கானிக்குகளிடம் வினாவினார்கள்.

பெட்ரோல் மோட்டார்கள் தரையில் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல் தொட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நெருங்குகையில் “அவனைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையா?” என்று வினவினார்கள் ‘பெட்ரோல் மன்னர்கள்’.

அறிமுகமான ரெஜிமெண்ட் மருத்துவ விமானம் காட்டுக்கு மேலே எங்காவது கடகடக்கிறதா என்று எல்லோரும் உற்றுக் கேட்டார்கள்….

மீள்விசையுடன் அசைந்த ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் உணர்வுக்கு வந்ததும், தெரிந்த முகங்கள் தன்னை நெருக்கமாகச் சூழ்ந்திருக்கக் கண்டான். விழிகளை அகலத் திறந்தான். கூட்டம் களிப்புடன் ஆராவாரித்தது. ரெஜிமெண்ட் கமாண்டரான மேஜரின் இளமுகம் அடக்கமாகப் புன்னகைத்தவாறு ஸ்டிரெச்சரின் மிக அருகில் தென்பட்டது. அவருக்குப் பக்கத்தில் படைக் காரியாலயத் தலைவரின் அகன்று பருத்த, வேர்வை வழியும் செந்நிற வதனம் காணப்பட்டது. விமான நிலைய சேவைப் பட்டாளத்தின் கமாண்டரது கொழுத்த வெண்ணிற முகங்கூடத் தெரிந்தது. எத்தனை பரிச்சயமான முகங்கள்! நெட்டையன் யூரா ஸ்டிரெச்சரை முன்னால் தூக்கிக் கொண்டு நடந்தான். பின்னே திரும்பி அலெக்ஸேயைப் பார்ப்பதற்கு அவன் ஓயாது முயன்றான். அந்தக் காரணத்தினாலேயே ஒவ்வோர் அடியிலும் தடுமாறினான். பக்கத்தில் தத்தி நடந்தான் விமானி குக்கூஷ்கின். இவன் சிறுகூடான மேனியன், இனிமையற்ற, சிடுசிடுத்த முகத்தினன். சச்சரவிடும் சுபாவம் காரணமாக இவனை விமானப்படையினருக்கும் பிடிக்காது. அவனும் புன்னகைத்தான். யூராவின் நீண்ட அடிவைப்புகளுக்கு ஒத்தாற்போல் நடக்க முயன்றான்.

தனக்கு இத்தனை நண்பர்கள் இருப்பதாக அலெக்ஸேய் நினைத்ததே இல்லை. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் தானே ஆட்களின் உண்மை இயல்பு வெளிப்படுகிறது!

வெறுமையாக்கப்பட்ட பிர்ச் மரச் சோலை ஓரத்தில் உரு மறைக்கப்பட்டிருந்த வெள்ளி வண்ண மருத்துவ விமானத்துக்கு அலெக்ஸேய் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டான். விமானத்தின் குளிர்ந்து போன எஞ்சினைத் தொழில்நுட்ப நிபுணர்கள் இறக்குவது தெரிந்தது.

அபாய அறிவிப்பு சங்கு ஏக்கத்துடன் ஊளையிட்டது. எல்லோருடைய முகங்களிலும் செயல் துடிப்பும் கவலையும் உடனே தென்படலாயின. மேஜர் சில சுருக்கமான உத்தரவுகள் இட்டார். ஆட்கள் எறும்பு போல் நாற்புறமும் விரைந்து ஓடினார்கள். சிலர் காட்டோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானங்களை நோக்கியும், சிலர் மைதானத்தின் விளிம்பில் குன்று போலத் துருத்தியிருந்த தலைமை இடக்காப்பரணுக்கும், சிலர் சோலையில் மறைவில் இருந்த மோட்டார்களை நோக்கியும் விரைந்தார்கள். பல வால்கள் கொண்ட ராக்கெட்டின் மெதுவாகப் பரவிய சாம்பல் நிறத்தடம் புகையால் தெளிவாக வானில் கோடிடப்பட்டதை அலெக்ஸேய் கண்டான். “விமானத்தாக்கு!”  என்று புரிந்து கொண்டான்.

லேனச்கா, மெக்கானிக் யூரா, இருவருமாக ஸ்டிரெச்சரைத் தூக்கிக்கொண்டு, ஓட்டமாகச் சென்று, பக்கத்திலிருந்த காட்டோரத்துக்கு அதைக் கொண்டு சேர்த்தார்கள்.

அலெக்ஸேயுடன் ஸ்டிரைச்சரைக் குறுகிய காப்பகமுக்குள் புகுத்த முடியவில்லை. அக்கறையுள்ள யூராவும் லேனச்காவும் அலெக்ஸேயைக் கைத்தாங்கலாகக் காப்பகமுக்குள் கொண்டு போக விரும்பினார்கள். அவனோ இதற்கு மறுத்து விட்டான். ஸ்டிரைச்சரைக் காட்டோரத்தில் இருந்த பருத்த பிர்ச் மர நிழலில் வைக்குமாறு கூறினான். அடுத்து வந்த நிமிடங்களில் சொப்பனத்தில் போல விரைவாக நடந்த நிகழ்ச்சிகளை மர நிழலில் படுத்தபடியே கண்கூடாகக் கண்டான் அலெக்ஸேய். விமானச் சண்டையைத் தரையிலிருந்து பார்வையிடும் வாய்ப்பு விமானிகளுக்கு அரிதாகவே வாய்க்கும். போரின் முதல் நாளிலிருந்தே சண்டை விமான அணிகளில் பறந்த அலெக்ஸேய்க்கு விமானச் சண்டையைத் தரையிலிருந்து காணும் வாய்ப்பு ஒரு தரம் கூட கிடைக்கவில்லை. வானில் போரிடுகையில் மின்வேகப் பாய்ச்சலுக்கு பழக்கப்பட்டவன் அவன். கீழேயிருந்து பார்க்கையில் விமானச் சண்டை விரைவாகவோ பயங்கரமாகவோ அற்றதாகத் தென்பட்டது. பழைய மொண்ணை மூக்குச் சண்டை விமானங்கள் மிக மெதுவாக இயங்குவது போலத் தோன்றியது. அவற்றின் மெஷின்களின் முழக்கம் மேலிருந்து தீங்கற்றதாக ஒலித்தது. தையல் இயந்திரத்தின் கடகடப்பு அல்லது காலிக்கோத் துணி மெதுவாகக் கிழிக்கப்படும் ஓசை போன்ற வீட்டு ஒலியை அது ஒத்திருத்திருந்தது. இவை எல்லாம் அலெக்ஸேய்க்கு வியப்பூட்டின..

படிக்க:
சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

விரைவில் எல்லாச் சந்தடியும் அடங்கி விட்டது. சண்டை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கலாயின. வழக்கம் போல வானில் வட்டமிடாமல் நேராகத் தரையில் இறங்கி ஓடுகையில் காட்டோரத்துக்குத் திருப்பித் தங்கள் காப்பிடத்தை அடைந்தனர். விமான நிலையம் வெறுமையாகிவிட்டது. காட்டில் விமான எஞ்சின்களின் முழக்கம் அடங்கிவிட்டது. ஆனால், தலைமை இடத்தில் இன்னமும் ஆட்கள் நின்றுகொண்டு, கண்களில் வெயில் படாமல் அங்கைகளால் மறைத்தவாறு வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

” ‘ஒன்பதாவது’ இன்னும் வரவில்லை! குக்கூஷ்கின் மாட்டிக்கொண்டுவிட்டான்!” என்று அறிவித்தான் யூரா.

எப்போதும் கடுகடுவென்றிருக்கும் குக்கூஷ்கினின் சிடு சிடுத்த சிறு முகத்தை அலெக்ஸேய் நினைவுபடுத்திக் கொண்டான். இதே குக்கூஷ்கின் இன்று எவ்வளவு அக்கறையுடன் ஸ்டிரெச்சரைத் தாங்கிக்கொண்டு நடந்தான் என்பதையும் எண்ணிப் பார்த்தான். ஒரு வேளை? மும்முரத்தில் இருக்கும் போது விமானிகளுக்குப் பெரிதும் பழகிப்போன இந்த எண்ணம், விமான நிலைய வாழ்க்கையின் தொடர்பு விட்டுப் போன இந்தச் சமயத்தில் அலெக்ஸேய்க்கு நடுக்கம் உண்டாயிற்று.

அப்போது வானில் எஞ்சின் ஓசை ஒலித்தது.

யூரா மகிழ்ச்சியுடன் துள்ளினான்:

“அவன்தான்!”

தலைமை இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ நடந்துவிட்டது. “ஒன்பதாவது” தரையில் இறங்காமல் விமான நிலையத்துக்கு மேலே அகன்ற வட்டம் இட்டது. அது அலெக்ஸேயின் தலைக்கு உயரே வந்த பொது அதன் இறக்கையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருந்தது, தெரிந்தது. எல்லாவற்றையும் விட பயங்கரம்! – அதன் அடிச்சட்டத்திலிருந்து ஒரு “கால்”. அதாவது சக்கரம் – மட்டுமே தென்பட்டது. சிவப்பு வானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காற்றில் சீறிப் பாய்ந்தன. குக்கூஷ்கின் மறுபடி தலைகளுக்கு மேலாகப் பறந்து சென்றான். சிதைந்த கூட்டுக்கு மேலே பறந்தவாறு, எங்கே உட்கார்வது எனத் தெரியாமல் திகைக்கும் பறவை போலிருந்தது அவனுடைய விமானம். இது மூன்றாம் தடவை வட்டம் இட்டது.

விமானத்தை இறக்குவது அசாத்தியம் ஆகிவிடும் இம் மாதிரிச் சந்தர்ப்பங்களில் உயரத்தில் கிளம்பி, பாராசூட்டின் உதவியால் விமானத்திலிருந்து குதித்துவிட விமானிகள் அனுமதிக்கப்படுவது உண்டு. “ஒன்பதாவது” இத்தகைய கட்டளையைத் தரையிலிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆயினும் அது பிடிவாதமாகத் தொடர்ந்து வட்டம் இட்டது.

வாலில் “ஒன்று” என்ற இலக்கம் பொறித்த சண்டை விமானம் நிலையத்திலிருந்து வழுகிச் சென்று வானில் கிளம்பியது. மேலே சென்றதும் அது அடிபட்ட “ஒன்பதாவதை” முதல் வட்டத்திலேயே மிகத் திறமையுடன் நெருங்கிவிட்டது. அந்த விமானத்தை பறப்பதில் பதற்றமற்ற தேர்ச்சி கொண்ட ஒரு ரெஜிமெண்ட் காமாண்டரே ஓட்டுகிறார் என்று அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். குக்கூஷ்கினுடைய ரேடியோ பழுதடைந்திருக்கும் அல்லது அவனே நிதானம் இழந்திருப்பான் என்று தீர்மானித்து அவர் விமானத்தில் அவன் அருகே போய் இறக்கைகளை அசைத்து, “நான் செய்வது போலச் செய்” என்று சைகை காட்டிவிட்டு, ஒரு புறம் விலகி மேலும் உயரே எழும்பலானார். ஒரு பக்கமாக விலகி விமானத்திலிருந்து குதிக்கும் படி அவர் குக்கூஷ்கினுக்குக் கட்டளை இட்டார். ஆனால், அதே சமயத்தில் குக்கூஷ்கின் வேகத்தைக் குறைத்துத் தரையை நோக்கி இறங்கினான். இறக்கை உடைந்து சிதைந்த அவனது விமானம் விரைவாகத் தரையை நெருக்கியவாறு அலெக்ஸேயின் தலைக்கு நேர் மேலாகப் பாய்ந்து சென்றது. தரையின் கோட்டுக்கு வெகு அருகில் அது சட்டென்று ஒரேயடியாக இடப்புறம் சாய்ந்து நல்ல “காலை” தரையில் ஊன்றி ஒற்றைச் சக்கரத்தில் சிறிது தூரம் ஓடிய பின் வேகத்தைக் குறைத்து வலப்புறம் விழுந்து, வெண்பனி படலங்களைக் கிளப்பியவாறு தனது அச்சைச் சுற்றிச் சுழன்றது.

கடைசிக் கணத்தில் விமானம் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. வெண்பனிப் புழுதி அடங்கியதும், அடிபட்டு விலாப்புறம் சாய்ந்திருந்த விமானத்திலிருந்து சற்றுத் தொலைவில் வெண்பனிமேல் ஏதோ கறுப்பாகத் தெரிந்தது. அந்தக் கரும்புள்ளியை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். மருத்துவ மோட்டார் சங்கு ஊதியவாறு முழு விரைவுடன் அதன் பக்கம் பாய்ந்தது.

“காப்பாற்றி விட்டான், காப்பாற்றி விட்டான் விமானத்தை! சபாஷ் குக்கூஷ்கின்!” என்று ஸ்டிரெச்சரில் படுத்தபடியே எண்ணமிட்டான் அலெக்ஸேய். நண்பன்மேல் அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று.

ஒருவராலும் நேசிக்கப்படாத இந்தச் சிறு மனிதன், இத்தகைய உளத் திண்மையும் சிறந்த தேர்ச்சியும் வாய்ந்தவனாகத் தன்னை திடீரென நிரூபித்துக் கொண்ட அந்த மனிதன் வெண்பனி மீது கிடந்த இடத்திற்குப் பாய்ந்து ஓட அலெக்ஸேய்க்கு ஆசை உண்டாயிற்று. ஆனால், அவன் துணிகளால் சுற்றிப் போர்த்தப்பட்ட ஸ்டிரெச்சர் கித்தானுடன் அழுத்தப்பட்டுக் கிடந்தான். பெருத்த வலி அவனை நசுக்கிக் கொண்டிருந்தது. நரம்பு இயக்கம் சற்று தளர்ந்ததுமே இந்த வலி முழு சக்தியுடன் அவனைத் தாக்கத் தொடங்கியிருந்தது…..

அலெக்ஸேயின் ஸ்டிரெச்சர் மருத்துவ விமானத்தின் தனிப்பட்ட கூடுகளில் பொருத்தப்பட்டது. பக்கத்து கதவு திறந்தது. இராணுவ மேல் கோட்டுக்கு மேலே வெள்ளை நீள அங்கி அணிந்த அறிமுகமற்ற ஒரு மருத்துவர் அதன் வழியாகவே உள்ளே வந்தார்.

“ஒரு நோயாளி ஏற்கனவே இங்கே இருக்கிறானா?” என்று அலெக்ஸேயைக் கண்டதும் கேட்டுவிட்டு, “மிகவும் நல்லது! மற்றவனையும் எடுத்து வாருங்கள், இதோ பறப்போம்” என்றார்.

விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை …

யூராவின் உதவியுடன் ஒரு ஸ்டிரெச்சரைப் பிடித்து விமானத்துக்குள் ஏற்றினார் மருத்துவர். ஸ்டிரெச்சரில் கிடந்தவன் நீட்டி முனகினான். அது கூட்டில் வைக்கப்படும் போது துப்பட்டி விலகி நழுவியது. குக்கூஷ்கினின் வேதனையால் சுளித்த முகத்தை ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் கண்டான்.

மருத்துவர் மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கெண்டு விமான அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், அலெக்ஸேயின் வயிற்றில் லேசாகத் தட்டினார்.

“ரொம்ப நல்லது, இளைஞரே, இதோ உமக்குத் துணையாள், பறக்கும்போது சலிப்பு ஏற்படாமல் இருக்க.. ஊம்? இப்போது வெளியாட்கள் எல்லோரும் இறங்கிவிடுங்கள்.”

இப்படிச் சொல்லிக் கொண்டே, அங்கே தயங்கி நின்ற யூராவை வெளியே தள்ளினார். கதவுகள் சாத்தப்பட்டன. விமானம் அதிர்ந்து, புறப்பட்டது, துள்ளி எழுந்தது, பின்பு எஞ்சினின் ஒரு சீரான கடகடப்புடன் குலுங்கல் இன்றிக் காற்றில் மிதந்து சென்றது. மருத்துவர் சுவரைப் பிடித்தவாறு அலெக்ஸேயின் அருகே வந்தார்.

“உடம்பு எப்படி இருக்கிறது? எங்கே, நாடியைப் பார்ப்போம்.” – இவ்வாறு கூறி அலெக்ஸேயை ஆவலுடன் நோட்டமிட்டுத் தலையை ஆட்டினார். “ம் ம். நிரம்ப மன வலிமை உள்ள ஆள் நீர்! உமது சாகசச் செயலைப் பற்றி நண்பர்கள் ஏதோ நம்பவே முடியாத, ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற ஒரு கதையைச் சொல்லுகிறார்கள்.”

அவர் தமது இருக்கையில் அமர்ந்து செளகரியமாக உட்கார்வதற்காகச் சற்று நேரம் இப்படியும் அப்படியும் அலை பாய்ந்தார், பின்பு உடலைத் தளரவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டவாறு அக்கணமே உறங்கிவிட்டார். இளமை கடந்து விட்ட அந்த வெளிறிய மனிதர் எப்படி ஒரேயடியாகக் களைத்துப் போயிருக்கிறார் என்பது துலக்கமாகத் தெரிந்தது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

“ஏதோ ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற கதை!” என்று நினைத்துக் கொண்டான் அலெக்ஸேய். பிள்ளைப் பருவத்தில் படித்த கதை அவனுக்கு நினைவு வந்தது. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் எழுதிய அந்தக் கதை கடுங்குளிர் தாக்கியதால் மரத்துப்போன கால்களுடன் பாலைவனத்தின் வழியே, நோயுற்று, பசித்திருந்த விலங்கால் பின்தொடரப்பட்டுச் சென்ற ஒரு மனிதனைப் பற்றியது. விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை, மாஸ்கோவுக்குத் தன்னை ஏற்றிச் செல்லும் விமானமும் இல்லை, இவை எல்லாமே பிள்ளைப் பருவத்தில் தொலைதூரக் கமீஷின் நகரத்தில், தான் படித்த அற்புதக் கதையில் வரும் வருணனைகள் தாம் என்பதே உறங்கத் தொடங்கிய அலெக்ஸேயின் மனதில் கடைசியாக எழுந்த எண்ணம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க