விவசாயிகளின் வருவாயை 2022 – 23-க்குள் இரட்டிப்பாக மாற்றுவோம் என்று தனது தொடர்ச்சியான பொய் முழக்கத்தின் மூலம் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. தனது கடந்த ஆட்சியிலிருந்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்காமல் தனக்கு ஓய்வு இல்லை என்று மோடி முதல் பாரதிய ஜனதாக் கட்சி முழுவதும் ஒரு பொய்யுரையை, விவசாயத்தில் வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது போல பரப்பி வருகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாரதிய ஜனதாவின் ஆட்சியில் விவசாயத்தில் ஏற்பட்ட நலிவு, விவசாயிகளின் தற்கொலை, தாங்கொணாத் துயரம், விளைபொருட்களுக்கு   குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமை, விவசாயிகளின் கடன் சுமை , விளைபொருள் நாசம், விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவது என்று  பல துயரங்கள் விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுறச் செய்தன.

சென்ற வருடத்தில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள்,  நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சி மிகு பேரணி  போன்றவை தனது ஆட்சியின் போது பாரதிய ஜனதா அரசு விவசாயிகளையும் விவசாயத்தையும் எவ்வாறு வஞ்சித்து வந்தது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

தன்னுடைய அரசு விவசாயத்திற்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வந்திருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் விவசாயிகள் இரட்டிப்பு வருவாய் பெறுவதற்கான திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருப்பது போலவும் ஒரு தோற்றத்தை 2019 தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் மூலம்  உருவாக்குகியது பாரதிய ஜனதா.

பா.ஜ.க அரசு தனது கடந்த 2014 தேர்தல் அறிக்கையில் கூறிய விவசாய திட்டங்களில்  ஒன்று கூட விவசாயிகளுக்கு நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடியதாக இல்லை. அவர்களை தற்கொலைச் சாவுக்கு தள்ளக்கூடியதாகத் தான் இருந்தது.

விவசாயிகளுக்கு விளைபொருட்களின் விளைச்சலுக்கு ஆகும் செலவிலிருந்து 1.5 மடங்கு அதிகமாக வருவாய், விவசாய சந்தை சீரமைப்பு மாற்றங்கள், கொள்முதல் நிறுவனங்களை திறனுள்ளவையாக மாற்றுதல்,  உணவு உற்பத்தியை திறம்பட ஊக்குவித்தல் என்பவை போன்ற திட்டங்கள்  விவசாயிகள் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரப் போவதாக கூறி தன் ஐந்து வருட ஆட்சியில் மக்களை ஏமாற்றி விட்டு, விவசாயிகளின் வாழ்க்கையில் இரண்டாம்  கருப்பு அத்தியாயம் எழுத மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது பா.ஜ.க.

பாரதிய ஜனதா தனது 2014 தேர்தல் வாக்குறுதியாக பல விவசாய திட்டங்களை  மக்களுக்கு கூறியவைற்றையும், அத்திட்டங்களின் தற்போதையை நிலைமையையும் பார்போம். இந்த திட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த ஒரு பலனையும் தராமல்,  அவர்களை மேலும் அதிக சுமையில் விழச் செய்வதாகத்தான் இருந்தது.

பாஜக தேர்தல் அறிக்கை :

1. விவசாயம்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பொறி இயந்திரம் போன்றது. அதிகமான வேலைவாய்ப்பு தரும் விவசாயத்திற்கு பாரதிய ஜனதா அரசு, விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு, கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் தருகிறது.

தற்போதைய நிலைமை :

பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுதான், விவசாயிகளின் வருவாயை 2022 -23 க்குள்  இரட்டிப்பு ஆக்குவது. விவசாய மற்றும் கிராமப்புற தேசிய வங்கி இதை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதை 2016 -ல் வெளியிட்டது. நிதி ஆயோக் இதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. கடந்த பதினான்கு ஆண்டுகளில், 2018 கடைசி காலாண்டில்தான் (அக்டோபர் – டிசம்பர் 2018 -ல்)  விவசாய வருவாய் மிகவும் குறைவாக  வெறும் 2.04% தான் இருந்ததாக  இந்தியன் எக்ஸ்பிரஸ்  மார்ச் 2019 அறிக்கை கூறுகிறது.

பா.ஜ.க, பிரதான் மந்திரி கிசான் சம்மன் சித்கி என்ற திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாயை – மூன்று தவணையாக,   இரண்டு ஏக்கர் வரை பெற்றுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.  இது விவசாயத்தில் அரசு முதலீட்டை, பாரிய அளவு குறைத்து விட்டு, பி.எம். கிசான், பி.எம். கிசான் பென்சன் யோஜனா என்று முதலீடுகளை மடைமாற்றி நாட்டு மக்களை ஏமாற்றி வரும் அயோக்கித்தனமாகும்.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. விவசாயத்திலும் , கிராமப்புற மேம்பாட்டிலும் பொது முதலீடுகளை அதிகப்படுத்துதல் :

தற்போதைய நிலைமை:

அரசு முதலீடுகள் கடந்த 1980 – 81-ல் 43.2% இருந்தது. ஆனால் 2015 – 17-ல் 18.8%-ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. விவசாயத்தில் தனியார் முதலீடுகள் 2015 – 17-ல் 82%-ஆக இருக்கிறது

நன்றி : From plate to plough: Fielding the right incentives- March 18,2019 Indian Expres

விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011-12 ல் அதிகமாக 18.2% இருந்தது. இது 2015-17 காலத்தில் 13.8% க்கு சரிந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 % சரிந்துள்ளது.

இப்படி விவசாய உற்பத்தியும், அரசு முதலீடுகளும் நாளுக்கு நாள் குறைவாக இருக்கும்போது விவசாயிகளின் வருமானம் எவ்வாறு அதிகமாகும்?

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. உற்பத்தி செலவில் இருந்து கூடுதலாக 50% இலாபத்தை விவசாய விளைபொருட்களுக்கு பாரதிய ஜனதா உத்திரவாதப்படுத்தும். இதை குறைந்த விலையுள்ள விவசாய உள்ளீடுகள்  மற்றும் கடன் வழங்குதல், அதிக மகசூல் கொடுக்கும் விதைகளை வழங்குதல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தை இணைப்பதன் மூலம் விவசாயத்திற்கு மேற்கொள்ளும் வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையாகும்.

தற்போதைய நிலைமை:

கடந்த 2018-19 பட்ஜெட் தாக்கலின் போது விளைபொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையானது (Minimum support Price- MSP) விவசாய உற்பத்தி செலவிலிருந்து ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும்  என அருண்ஜெட்லி அறிவித்தார். ஆனால் மத்திய அரசு விளைபொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜீலை 2018-ல்தான் அறிவித்தது.

படிக்க:
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விவசாய செலவு மற்றும் விலைகள் ஆணையம்  மூன்று வெவ்வேறு வரையறைகளை விளைப் பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்காக வகுத்துள்ளது.

 1. விவசாய உற்பத்திக்கான செலவு (A2 )
 2. விவசாய உற்பத்திக்கான செலவு + குடும்ப உறுப்பினர்கள் உழைப்பு மதிப்பு (A2+FL)
 3. விரிவான செலவு (Comprehensive Cost -C2) நில வாடகை, விவசாயி தான் பெற்றுள்ள சொந்த நிலத்திற்கான வட்டி மற்றும் விவசாயத்திற்காக போடப்படும் மொத்த செலவிற்கான வட்டி.

சுருக்கமாக  C2 > A2+FL> A2 ஆகும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையானது சுவாமிநாதன் கமிசன்,  விவசாய உற்பத்திக்கான விரிவான செலவை (C2) உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பாரதிய ஜனதா  இதைப் பின்பற்றுவதில்லை. பா.ஜ.க அரசு விரிவான செலவை ஒதுக்கி விட்டு விளைப் பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலையை (A2 +FL) மட்டும் கொண்டு நிர்ணயிக்கிறது. இது விவசாயிகளை ஏமாற்றும் பித்தலாட்டம். இந்த அடிப்படையில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை எவ்வாறு விவசாயிகளுக்கு கிடைக்கும்?

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. குறைந்த நீர் நுகர்வு நீர்ப்பாசன நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் & ஊக்குவித்தல், நீர் வளங்களை சரியான பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல் :

தற்போதைய நிலைமை:

பிரதான் மந்திரி க்ரிசி சிஞ்சாயி யோஜனா என்ற திட்டம், கடந்த 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாசனப் பரப்புகளின் எண்ணிக்கையை, நீர் மேலாண்மையை பயன்படுத்தி அதிகரிப்பது  என்பதன் அடிப்படையில் மாநில அரசுகளோடு சேர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த  நிகர பாசன பரப்பளவு வெறும் ஐந்து மாநிலங்களில் இருந்து 78% பெறப்படுகிறது. அந்த மாநிலப் பாசனப் பரப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டுதான் பிரதான்  மந்திரி க்ரிசி சிஞ்சாயி யோஜனா திட்டம் தன்னுடைய இலக்கை 2015 முதல் அடைந்து வருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. மண்ணின் தரத்திற்கு ஏற்ப பயிர்களை அறிமுகப்படுத்துதல் & நகரும் மண் பரிசோதனை ஆய்வகங்களை அமைத்தல் (Mobile soil testing Lab)

தற்போதைய நிலைமை :

மண்வள அடையாள அட்டை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளின் நிலங்களின் மண்ணின் தரம் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகள் எந்த உரங்களை வாங்க வேண்டும், எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளின் மண் வள அடையாள அட்டைக் கொண்டு தெரிவிக்கப்படும்.

ஆனால் ஒரு அடையாள அட்டையானது சராசரியாக  2.5 ஹெக்டர் பாசனப் பரப்பளவிற்கும் 10 ஹெக்டர் பாசனமில்லாத பரப்பளவிற்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு விவசாயிகளும் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை பெற்றிருக்கிறார்கள். அதனால் இந்த மண் அடையாள அட்டை விவசாயிகளுக்கு ஏற்பதுடையதாக இல்லை. ஒவ்வொரு 2.5 ஹெக்டர் பாசனப் பரப்பளவிலும் வெவ்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதனால் மண்ணின் தரமும் மாறுபடுகிறது.

மேலும் உரங்களின் அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்போது அது பயிர் விளைச்சலை பாதிக்கும் என்பதால் இதை விவசாயிகள் ஏற்க மறுக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியான மண் பரிசோதனைகள் நடத்துவதற்கு மண் பரிசோதனைக் கூடங்கள் இல்லை.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. பூச்சி மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு திட்டங்களை மறுசீரமைத்தல் :

தற்போதைய நிலைமை :

கொடிய பூச்சி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்கும் போது சுவாசித்ததனால் 2017 -ல் மகாராட்டிராவில் பல பருத்தி விவசாயிகள் இறந்தனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்  போதே வர்மா கமிட்டி என்ற கமிட்டி பூச்சிக் கொல்லி மருந்துகளை ஆய்வு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டது.

வர்மா கமிட்டியின் விசாரணையில் 99 பூச்சிக்கொல்லிகளில் 66 பூச்சிகொல்லிகள் பிறநாடுகளில் தடைசெய்யப்பட்டவை என்று தெரிவித்தது. ஆனால் பா.ஜ.க அரசு, வர்மா கமிட்டியின் ஆலோசனைகளை மதிப்பிடுவதற்காக மார்ச் 2017-ல் வேறொரு கமிட்டியைப் பரித்துரைத்தது. இந்தக் கமிட்டியின் தலைவர் ஜீலை 2017-ல் தன் அறிக்கையை சமர்ப்பிக்காமல் ஓய்வுப் பெற்றதனால், வேறொரு புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தப் புதிய கமிட்டி வெறும் 18 பூச்சிக்கொல்லிகளை தடை செய்தது. இந்தத்  தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இறந்த விவசாயிகள்  பயன்படுத்தியது அல்ல.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை செயல்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதல் என்பது இதுநாள் வரை ஒரு வாய்ச்சவடாலாகத் தான் இருந்து வந்திருக்கிறது. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வளையங்களை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், வேலை வாய்ப்பும் உருவாக்கித் தரப்படும். இந்த தொழிற்சாலைகள் அதிக ஏற்றுமதி தரத்துடன் செயல்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமை :

விவசாய ஏற்றுமதிக் கொள்கையானது, உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்காக ஒரு புதிய கொள்கையை டிசம்பர் 2018-ல் விவாதித்தது. இது இன்று வரை வாய்ச்சவலாடாகத் தான் இருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. ஆர்கானிக் வேளாண்மைப் பண்ணைகள் & உர மையங்களை அமைத்தல் :

தற்போதைய நிலைமை :

இந்த ஆர்கானிக் பண்ணைகளின் விளைப்பொருட்களின் விலை  சராசரி இந்தியருக்கு எட்டாக்கனியாக உள்ளது. மேலும் சந்தைகளின் எண்ணிக்கை பரவலாக ஏற்படவே இல்லை. மேலும் உற்பத்திக்கான செலவும் அதிகமாக உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. எதிர்பாராத இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு ஒரு பண்ணை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்:

தற்போதைய நிலைமை :

பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா, ஏற்கனவே நிலவும் காப்பீட்டு திட்டங்களை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக வந்து  உட்கார்ந்தது.. தனியார் நிறுவனங்களை பயிர் காப்பீட்டு  சந்தையில் அனுமதித்ததுதான் இதன் சாதனை. பயிர் காப்பீட்டு சந்தையில் தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு தனியார் நிறுவனங்களை அனுமதித்து அந்நிறுவனங்களுக்குள் போட்டி இல்லாமல் பார்த்துக் கொள்கிறது பா.ஜ.க.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019
♦ மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. கிராமப்புற கடன் வசதிகளை விரிவுப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்:

தற்போதைய நிலைமை :

கிராமப்புறங்களில் அரசு வங்கி கிளைகளின் எண்ணிக்கை குறைந்து, கந்து வட்டிகாரர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது. வணிக வங்கிகள், பிராந்திய கிராம வங்கிகள் தன்னுடைய இலக்கை அடைய முடிந்த போதிலும், கூட்டுறவு வங்கிகள் 96.4% தான் அடைய முடிந்தது. கந்து வட்டி மாபியாக்கள் கையில் சிக்கி விவசாயிகளின் தற்கொலைகள்தான் அதிகரித்து வருகின்றன.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியை சீரமைத்தல்:

தற்போதைய நிலைமை :

விவசாய அமைச்சகம் APMC சட்டத்தை உருவாக்கியது. ஆனால் இது மாநிலங்களுக்கு இடையான வர்த்தகம் ஒரே சந்தை வரி என்று உருவாக்கப்பட்டது. ஆனால் மாநில அரசுகளால் தொடங்கப்படாமல் இருக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

 1. பிராந்திய விவசாய தொலைக்காட்சி சேனல்களை அமைத்தல்:

தற்போதைய நிலைமை :

பிராந்திய மொழிகளுக்கு என்று எந்த ஒரு விவசாய தொலைக்காட்சி சேனல்களும் இது வரை உருவாக்கப்படவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கை :

13. கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தல்:

தற்போதைய நிலைமை :

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை . ஊரக  வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஏற்படும் பற்றாக்குறை, மாநிலங்களின் தலையில் சுமத்தப்படுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கை :

14. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மண், மனிதர்கள், அதன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் ரீதியான பரிசோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்படும்:

தற்போதைய நிலைமை :

சுகாதார அமைச்சர்  ஜே.பி.நாட்டாவே மரபணு மாற்றப்பட்ட GM சோயாவும், GM கடுகு எண்னெயும் இறக்குமதி செய்யப்பட்டன என்று டிசம்பர் 2017 பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை :

15. ஒரே தேசிய விவசாய சந்தையை உருவாக்குதல் :

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு ஒரு விவசாய சந்தையை ஏப்ரல் 2016-ல் தொடங்கப்பட்டது. ஆனால் இதில் நாட்டிலுள்ள 22,000 சந்தைகளில் 585தான் இணைந்தன. மாநிலங்களுக்குள்ளான E-NAM என்பது ஜனவரி 2019-ல்தான் ஆரம்பமாயின.

விவசாய விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு  மாநிலங்களுக்குள் சேமிப்புக் கிடங்கு உருவாக்கப்படும் என்ற திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை  தக்காளி விவசாயிகளும், உருளை விவசாயிகளும், பால் விவசாயிகளும் தங்கள் விளைப் பொருட்களை வீதியில் கொட்டி பா.ஜ.க -விற்கு புரிய வைத்துள்ளனர்.

இப்படி பா.ஜ.க கொண்டுவந்த விவசாயத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்தரத்தக்க விதத்தில் இல்லை. மக்களை ‘கிலுகிலுப்பைக்காரன்’ போல ஏமாற்றி வருகிறது.

தனது 2019 தேர்தல் அறிக்கையில், சுமார் இருபத்து ஐந்து லட்சம் கோடி வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக முதலீடு செய்ய உறுதியளிப்பதாகக்  கூறுகிறது பா.ஜ.க. இதில் நைச்சியமாக அரசு முதலீடு என்ற பதத்தை தவிர்த்து இருக்கிறது. பித்தலாட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பா.ஜ.க விவசாய திட்டங்கள்  பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கு வழிவகுக்கும்  திட்டங்களாக இருக்கிறது. அது  விவசாயிகளுக்கு துயரங்களைத்தான் பயிர் செய்ய வழிவகுக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் போல இந்திய தேர்தலும் ஒரு பித்தலாட்டம் என்பதை எங்கள் விவசாய வர்க்கம், பா.ஜ.க ஏற்படுத்தும் விவசாய துயரத் திட்டங்கள் மூலம் புரிந்துக் கொள்ளும். அப்போது எமது வீரஞ்செறிந்த விவசாய வர்க்கம் பாராளுமன்ற வீதிகளில் நிற்காது! பாராளுமன்ற வாயிலில் நிற்கும்!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
BJP 2014 Manifesto check : Has the Modi government come good on its promises to farmers?
NDA 2.0’s Big Rural Challenge Will be Doubling Farmers’Income by 2022
‘5 states account for 78% of progress in micro-irrigation’
Fertiliser subsidy reform plan linked to soil health cards of farms – But it did not work
India finally bans 18 toxic pesticidies – but still leaves out several dangerous ones

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க