அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 02
தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேகச் சான்று தருகிறது. புராண இதிகாசகால மன்னர்கள் ரிஷிகளிடமும், முனிவர்களிடமும், பயபக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டனர்; தமது மணிமுடியையும் காணிக்கையாகத் தந்தனர்; அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம்.
சரித்திரகால மன்னர்களிடம் சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும் திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர்.சி. பி. ஐயர்தானே, பரோடாவிலே சர். T.V.கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப் செக்ரடிரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர் ஒரு S.V.இராமமூர்த்தி ஐயர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஓர் இராஜ கோபாலாச்சாரியார்தான்! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் ஒரு சர் அல்லாடி ஐயர்தான்! ஆபி டியூபா 1807-ல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக – அதுவல்ல பொருத்தமான வாசகம் – கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். இதுதான் பொருத்தமான உபமானம்!
அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!
திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் ”சக்தி”யை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேண்டினர் வேதியரை என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார். இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள் !
பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகாப் பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலையின் நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.
“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடனூர்ந்த மாவே!” – (ஐங்குறுநூறு)
”அம்மா, அவர் குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!”
”யாரடி வருவது?”
”பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரி மீதேறி வருகிறார்.”
”சரி அதிலென்ன வியப்புக் காண்கின்றாய்?”
”அந்தக் குதிரை தலையை அசைத்துக் கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!’
“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை.”
”குதிரை தலையை அசைக்கும் போது கொத்தாக, இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”
“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?”
“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப் போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”
“போடி குறும்புக்காரி!”
வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன் ! குதிரை தலையசைக்க அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும் கொண்ட கருத்தையும் தலைவிக்கு கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக் கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது. எடுத்துக்கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!
ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ , ஆரியரைப் போன்ற புத்திக் கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!
ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! “வேதம் ஸ்மிருதி என்பவற்றுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்புத் தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்!” என்று பேசினர், பூரித்தனர். ஆபி டியூபா போல், ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன் முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி மிகப்பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை.
படிக்க:
♦ நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
♦ தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும் உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறிய போதுதான், மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும், கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி, கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகுமுன்னம் திராவிடர் அறிவுத்துறையிலேயே ஆர்வங் கொண்டிருந்தார்களேயல்லாமல், கண்ணுக்குப் புலனாகாததும், எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்துவராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது.
ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்படவில்லை . சாதாரணக் கல்வியும் பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற் போய்விட்டது. ஆகவேதான், ஆரியம் அழிவைத் தருவது, திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை