சில மாதங்களுக்கு முன்பு கும்பமேளாவில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஐவரின் காலடிகளை தண்ணீரால் கழுவியதை, அவர்களுக்கு செய்யும் மரியாதை என்று மோடி விளித்தார். ஆனால் இராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையின் போது பா.ஜ.க ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நீட்டி முழங்கினாரே தவிர கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து எதுவும் பேசவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளாக தங்களை நிரந்தர அரசு துப்புரவுப் பணியாளர்களாக்க கோரி போராடி வரும் கையால் மலமள்ளும் தொழிலாளர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்தது. அரிஜன் பஸ்டி (Harijan basti ) பகுதியின் கையால் மலமள்ளும் தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இராஜஸ்தான் நகராட்சியின் விதிகள் தெளிவாக இருப்பினும் 2012-ம் ஆண்டில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அரசு வேலைக்கு முன்னுரிமை கொடுக்குமாறு 2012-ம் ஆண்டில் அறிவிப்பு வெளிவந்தபோது தங்களது துன்பங்கள் எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்றே ரேகா போன்ற பெண்கள் நம்பினார்கள். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் நிராகரிக்கப்படுவோம் என்று அவர்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.

தங்களது உரிமைக்காக போராடுவதற்காக கையால் மலமள்ளும் தொழிலாளர்களான ரேகா, மாயா, மம்தா, சுமன், மீனா, மற்றும் மம்தா மேடர் என்ற ஆறு பெண்களும் இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். துப்புரவுப் பணியாளார்களைத் தேர்வு செய்யும்போது “சீரற்ற தேர்வு” முறையை கரோலி (Karauli) நகராட்சி பின்பற்றியதாக அப்பெண்கள் குற்றம் சாட்டினார்கள்.

வேலைக்குத் தேவையான தகுதிகளனைத்தும் இருந்தும் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், தகுதியில்லாத நபர்களே தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

படிக்க:
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !
♦ வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை

சம்மந்தப்பட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட நபர்கள் அடங்கிய தேர்வுக் குழு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி நாளாக 2012, செப்டம்பர் 5-ம் தேதி முடிவு செய்யப்பட்டது.

தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களும் கொடுத்துவிட்டனர். அவர்களது தகுதியை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு ஜுன் 10-ம் தேதி நேர்காணலுக்கு அழைத்தனர்.

இராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள ஆறு பெண்கள்.

“நேர்காணல் நல்லபடியாக முடிந்தது. நாங்களும் தேர்வு செய்யப்படுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் தேர்வு செய்யப்பட்டவர்களில் எங்களது பெயர்கள் இல்லை. அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்டும் இதுவரை பதில் இல்லை” என்று விண்ணப்பதாரர்களில் ஒருவரான ரேகாதேவி கூறினார்.

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், தங்களது வயிற்றுப்பாட்டிற்காக கையால் மலமள்ளும் வேலையையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கரோலியில் கையால் மலமள்ளும் இழிநிலையில் 18 பேர் ஈடுபடுவதாக அவர்களது மறுவாழ்விற்காக போராடி வரும் தங் விகாஸ் சன்ஸ்தான் (Dang Vikas Sansthan) என்ற குடிமை அமைப்பின் ஆய்வு கூறுகிறது. அதை சம்மந்தப்பட்ட அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர்களில் 2 பேருக்கு மட்டுமே துப்புரவுப் பணியாளர் வேலை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

“மாவட்டத்தில் கையால் மலமள்ளுபவர்களைப் பற்றி ஆய்வு செய்து தகவல் கொடுக்குமாறு அரசாங்கம் எங்களை பணிக்கு அமர்த்தியது. அவர்களுக்கான மறுவாழ்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பயிற்சி மட்டுமல்லாமல் மாத ஊக்கத் தொகையும் கொடுத்தோம். இது அனைத்தும் அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்தது. ஆயினும் மீதி 16 பேர் துப்புரவுப் பணியாளர்களாக தேர்வு செய்யப்படவில்லை என்று தங் விகாஸ் சன்ஸ்தன் அமைப்பை சேர்ந்த ராஜேஷ் சர்மா கூறினார்.

படிக்க:
குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !
♦ பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையிலும் சிக்கல் எழுப்பப்பட்டது. கரோலி நகராட்சி 53 பேரை தேர்வு செய்தது. ஆனால் உள்ளூர் செய்தித்தாளில் வெறுமனே 32 இடங்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுத்திருந்தது. ஆனால் இது குறித்த எந்த விளக்கமும் அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்றும் எண்ணிக்கையை உயர்த்தியது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் விண்ணப்பதாரர்கள் கூறினார்கள்.

எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (1) (d) மற்றும் 13 (2) பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றவியல் சதித்திட்டம் பிரிவு பிரிவு 120 (b) ஆகியவற்றின் கீழ் போட்டியாளர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக முன்னால் கரோலி நகராட்சி ஆணையர் ராகேஷ் குமார் கார்க் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கரோலி நகராட்சி ஆணையர் தீபக் சவுகானிடம் கேட்டபோது, இது பழைய சிக்கல். புதிதாக பணிக்கு வந்திருப்பதால் நீதிமன்றத்தின் ஆணைப்படி மட்டுமே தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார்.

இந்நிலையில் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதனால்தான் ஆள்சேர்ப்பில் கையால் மலமள்ளுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி இராஜஸ்தான் அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. ஆயினும் அதிகாரிகள் இந்த வழிமுறையை செயல்படுத்தாமல் கண்மூடித்தனமாக செயல்பட்டுள்ளனர்.

சாதிரீதியிலான களங்கத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதற்காக சொந்தமாக ஒரு தேர்தலறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முதன்முறையாக கையால் மலமள்ளும் தொழிலாளர்கள் வெளியிட்டிருந்தனர். மறுவாழ்வு, கல்வி, நலவாழ்வு, பாதுகாப்பு மற்றும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் முன்வைத்திருந்தனர்.

உயிர் வாழும் உரிமைக்கான சட்டப்பிரிவு 21-ன் கீழ் அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் கல்வி, நல்வாழ்வு, மற்றும் கண்ணியமான வாழ்வு ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்த ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். மேலும் 55 வயதுக்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 6,000 ரூபாய் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கட்டுரையாளர் : ஸ்ருதி ஜெயின்
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க