அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 04

இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்றொரு நூல்; ஹாவல் (Havell) என்பவர் எழுதியுள்ளார். அதிலே,

”மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ, அற்ப விஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்”

ஹாவல் (Havell).

என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டுவாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரச்சாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ”மந்திரம்” என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ஆரிய மாயையிலே சிக்கி நம்மவர் மீது ‘துவஜம்’ தொடுக்கும் தமிழர்கள் இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதா? “வேதகாலம் முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம் பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும் ஒரு கருவியாக உபயோகப்பட்டது”  என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவை பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ”தாசர்கள்’ இந்த ஆராய்ச்சிக்காரரின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடாதா?

‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன் வருவார்களா? என்று கேட்கிறேன்!

“கருத்து சுருண்டு அங்குமிங்கும் அலைந்து உன் மனதிலே அலைமோதிடச் செய்யும். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்திரிக் கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்க மூட்டுகிறது!

‘வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து , காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!

ஹாவல் (Havell) எழுதிய ”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்ற நூலின் முகப்பு அட்டை.

அந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய். அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்; அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய். உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை , நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! – என்று வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக் கொண்டு, வஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக் கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!

”அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவனிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்!” என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா நீ என்னடா கண்டாய்? அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறுமுன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படி பிறக்கும்?” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்படுகிறான்! அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான். அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.

படிக்க:
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து , பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலை கொண்டு, ‘கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ! நான் என்ன செய்வேன்? கட்டு மாத்திரையால் முடியாது. கத்தியே இனித்துணை’ என்று கூறும்போதுதான், காமுகன் கலங்கி நடுங்கி, கைகூப்பிக் கதறி, ‘கத்தியா” என்று கேட்டுக் கூவி ‘கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான் கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே!’ என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.

தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும்… விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.

அது போலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, நாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சு.ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம்! இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே!’ என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்.

தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும்  ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க