உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-ஆ

“ஆமாம், எதற்காக, எதற்காக நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு கொடிய வேதனை இருக்கும் போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா? உங்களுக்கு வலிக்கிறது என்பதை நினைக்கையில் என் நெஞ்சு சுரீர் என்றது. தனி வார்டில் இருக்க ஏன் மறுத்துவிட்டீர்கள்?”

இவ்வாறு கூறியவள், அழகிய தோற்றமும் இதமான இனிமையும் வாய்ந்த வார்டுத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அல்ல போலவும் யாரோ அசரீரி போலவும் அலெக்ஸேக்குத் தோன்றியது. மன எழுச்சி பொங்க எதிர்ப்பு தெரிவித்த அந்த மாது பேசினாள். அவளுடைய குரலில் துயரம், ஒருவேளை இன்னும் சோக உணர்ச்சி, ஒலித்தது. மெரேஸ்யெவ் கண்களைத் திறந்தான். சாந்தமும் அன்பும் சுடர்ந்த விழிகள் கொண்ட கமிஸாரின் வெளிறி ஊதிய முகமும், மருத்துவத்தாதியின் மென்மையான பெண்மைப் பாங்குள்ள பக்கத் தோற்றமும் மப்ளரால் மறைக்கப்பட்டிருந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவனுக்குத் தென்பட்டன. பின்புறத்திலிருந்து பட்ட வெளிச்சத்தில் தாதியின் செழித்து வளர்ந்த பொன் கூந்தல் மின்னி ஒளிர்ந்தது. தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்ததும் அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

“அடா-டா-டா, ஸிஸ்டர்…. கண்ணீ ர் விடுகிறீர்களே இப்படி! ப்ரோமைட் அருந்தலாமா? ஊம்?” என்று சிறுமியிடம் சொல்வது போல அவளிடம் சொன்னார் கமிஸார்.

“மறுபடியும் கேலி செய்கிறீர்கள். என்ன மனிதர் நீங்கள்! இது விகிருதம், தெரிகிறதா, அழ வேண்டிய சமயத்தில் சிரிப்பதும், தானே துண்டுதுண்டாகப் பிய்ந்து கொண்டிருக்கும் போது மற்றவர்களை தேற்றுவதும் நல்ல ஆள்தாம்! சொந்த விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளத் துணியாதீர்கள், உங்களுக்கு அந்த உரிமை கிடையாது….”

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவள் நெடுநேரம் சத்தமின்றி அழுதாள். மேலங்கிகள் நடுங்கிய அவளுடைய மெல்லிய தோட்களை ஏக்கமும் பரிவும் ததும்ப நோக்கினார் கமிஸார்.

“நேரம் கடந்துவிட்டது, அருமைப் பெண்ணே. சொந்தக் காரியங்களில் இப்போது நான் எப்போதுமே தவறாகவே தாமதம் செய்தேன், நேரமே இல்லாதிருந்தது. இப்போதோ, முற்றிலும் நேரம் கடந்து விட்டது என்று தோன்றுகிறது.”

கமிஸார் பெருமூச்சு விட்டார். மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். அவர் முறுவலித்தார், மறுபடி பெரு மூச்சுவிட்டார், பின்பு தமக்கு வழக்கமான நல்லியல்பும் ஓரளவு கிண்டலும் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.

படிக்க :
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !

“கேளுங்கள் ஒரு கதையை, சமர்த்துப் பெண்ணே. எனக்குச் சட்டென்று நினைவு வந்தது. இது நடந்தது வெகு காலத்துக்கு முன்பு, உள்நாட்டுப் போர் நாட்களில், துர்கிஸ்தானில். ஆம்… ஒரு குதிரைப் படைப் பிரிவு பஸ்மாச்சிகளை விரட்டிக் கொண்டு போயிற்று. ஒரு பாலைவனத்தை அடைந்தது. குதிரைகளோ, ருஷ்யப் பரிகள், மணலுக்குப் பழக்கப்படாதவை, எனவே விழத் தொடங்கின. திடீரென்று நாங்கள் காலாட்கள் ஆகிவிட்டோம். அப்போது கமாண்டர் முடிவு செய்தார் – சுமைகளை எறிந்து விட்டு துப்பாக்கிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கால்நடையாக பெரிய நகரத்துக்குப் போவது என்று. நகரமோ நூற்று அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்கள் வெற்று மணலில் நடக்க வேண்டியதாயிற்று.

புரிகிறதா உங்களுக்கு? ஒரு நாள் நடந்தோம், இரண்டாம் நாள், மூன்றாம் நாள். வெயில் அனலாய் பொசுக்கிற்று. குடிக்க நீர் இல்லை. வாயில் தோல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. கால் கொதிக்கும் மணல். கால்களுக்கு அடியில் மணல் சரசரத்தது. பற்களுக்கிடையே கரகரத்தது, கண்களில் படிந்தது, தொண்டைக் குழியை நிறைத்தது. எங்களுக்குத் தாவு தீர்ந்து போய் விட்டது. ஒருவன் மணல் அலை மேல் விழுவான், தரையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அப்படியே கிடந்துவிடுவான். எங்கள் கமிஸாராக இருந்தவர் வலோதின் யாக்கோவ் பாவ்லவிச். பார்வைக்கு ஒடிந்து விழுந்து விடுவது போல இருப்பார். படிப்பாளி. வரலாற்று நிபுணர் அவர். ஆனால் உறுதிமிக்க போல்ஷெவிக். பார்க்கப் போனால் அவர்தாம் முதலில் தொய்ந்து விழுந்திருக்க வேண்டும். அவரோ, விடாது நடந்தார், ‘நகரம் இதோ வந்துவிடும், பக்கத்தில் தான் இருக்கிறது’ என்று எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். விழுந்து கிடந்தவர்களை ரிவால்வரைக் காட்டி, ‘எழுந்திரு, இல்லா விட்டால் சுட்டுவிடுவேன்’ என்று பயமுறுத்தினார்..,

“நாலாம் நாள். நகரம் இன்னும் பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, எல்லோருமே செத்துச் சாவடைந்து போனோம். கால்கள் பின்னின. குடிவெறி கொண்டவர்கள் போலத் தள்ளாடினோம். எங்கள் பின்னே காலடித்தடங்கள் காயமடைந்த விலங்கினது போன்று கோணல் மாணலாக இருந்தன. திடீரென்று கமிஸார் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினார். அவருடைய குரல் மகா மோசம், பலவீனமானது. அவர் பாடத் தொடங்கியதும் பாடாவதியான, பழைய வீரர் பாட்டு. ஆனாலும் அந்தப் பாட்டை எல்லோரும் பாடினோம்! ‘அணிவகுங்கள்!’ என்று நான் கட்டளை இட்டேன், அடி வைப்பை ‘இடம், வலம்’ என்று கணக்கிட்டேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் – இப்படி நடப்பது எளிதாக இருந்தது.”

“இந்தப் பாட்டுக்குப் பின் இன்னொரு பாட்டும் அப்புறம் மூன்றாவது பாட்டும் பாடப்பட்டது. வறண்டு வெடிப்புக் கண்ட வாய்கள், கொளுத்தும் வெயில் – அந்த நிலைமையிலும் ஆட்கள் பாடினார்கள்! புரிகிறதா? தெரிந்த பாட்டுக்களை எல்லாம் வழி நெடுக மறுபடி மறுபடி பாடிக் கொண்டு போனோம். ஒரு ஆளைக் கூட மணலில் விட்டுவிடாமல் நகரை அடைந்தே தீர்ந்தோம்…… பார்த்தீர்களா, எப்பேர்பட்ட விஷயம் என்று?”

“கமிஸார் என்ன ஆனார்?” என வினவினாள் கிளாவ்தியா மிஹாய்லவ்னா.

“கமிஸாருக்கு என்ன? இப்போதும் உயிரோடு சௌக்கியமாக இருக்கிறார். அவர் பேராசிரியர், தொல்பொருள் இயல் அறிஞர். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட குடியிருப்புகளை தரைக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். அந்த நடைப் பயணத்துக்கு பிறகு அவர் தொண்டை போய்விட்டது. கம்மிய குரலில் பேசுகிறார். அவருக்குக் குரல் எதற்காம்.? நல்லது.. போதும் அரட்டை.. நீங்கள் போங்கள், அருமை சகோதரி. இன்று இனி சாகமாட்டேன் என்று குதிரைப் படை வீரன் என்ற முறையில் வாக்குறுதி அளிக்கிறேன்.”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க