அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 17

ரண்டாம் நூற்றாண்டிலே (கி.பி. 114) சேர நன்னாட்டில் ஆண்ட சேரன் செங்குட்டுவன், வடநாட்டில் கனகன், விசயன் என்ற அரசரிருவர் விருந்திடைப் புகன்ற பொருந்தாமொழி கேட்டு, கண்ணகிக்குக் கற்சிலை எடுக்க எண்ணியதுடன், ஆரியர்க்கும் தம் வலிமை காட்டக் கருதி, வடநாடு சென்று வாகை சூடி வட இமயத்தில் கற்கொண்டு கனக விசயர் தலைமீது ஏற்றி கங்கை கடந்து கான் நடந்து, மலை பல கடந்து, தென்னாடு கொண்டு வந்த செய்தி, ஏன் வரலாற்றில் இடம் பெறவில்லை? வரலாற்றுக் காலத்தில் நடைபெற்ற செங்குட்டுவனின் உடன் பிறந்த இளவல் ‘இளங்கோ’ சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பிய காலத்தில் இட்டுத் தந்த உண்மை நிகழ்ச்சியன்றோ அஃது?

தமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா? திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்? என்ற வருத்தமும் உண்டு.

இராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படையெடுப்பும் கங்கை கொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள்! பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள்! ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம் பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும் – ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.

போர் முனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வன்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.

இனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு. இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பனுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றிச் சிறப்புக் காணப்படும் ஒரு புறம். பல யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல் மற்றொருபுறம். இன்னும் பற்பல காட்சிகள் உண்டு. அவற்றிலே பூஞ்சாற்றூர்க் கௌணியன் என்னும் பார்ப்பான் வேள்வியைச் சிறப்பிக்கும் காட்சியுமுண்டு. இவையன்றி வடநாடு வென்ற செங்குட்டுவனும், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன் சொல்லினை ஏற்று வேள்வி செய்துள்ளான் என்று சிலப்பதிகாரத்தில் (காதை 28) நடுகற்காதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி ஆரியர்க்குரியதென்பதும், அவர்கள் வாழ்வுக்குத் துணையென்பதும் உணருங்கால், ஆரியரை ஆரிய நாட்டில் வென்று, திராவிடத்தில் ஆரியத்துக்கு அடிமையாய் வாழ்ந்தான் சேரன் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது? ஆரிய ஆட்சி ஆட்டம் கொடுத்ததுதான் எதனால்?

திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந் நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பல பகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.

திராவிடத்தில் தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் 2 -ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு , சாதவாகனர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக் கொள்ள ஆரியத்திடை, அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்தமூலர் கி.பி. 200 – 218 வரை ஆண்ட போது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்துத் தானங்கள் பல புரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக்களமாக மாற்றினார். (P.44 Early Dynasties of Andra Desa By B.V. Krishna Row M.A., B.L.)

“His regin was responsible for a greatwave of a immigration particularly of Brahmana settlers in Andhra desa from the north and north west. The immigrants came in all probability, at the invitation of the Emperer Santamula who after a lapse of more than a century revived the Vedic sacrifices and particularly the celebrated Vajabeya and Aswamedhe… Thus new villages were founded and Brahmana settlements established.”

மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை  நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.

படிக்க:
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

“The Ikshavahu king who was till then a follower of vedic Brahmanism and a worshipper of Siva in the form of linga renounced faith and became a true convert to Buddhism. (P.58)

In this panel there is a representation of monarch crushing with his right heel, a stone linga, which is encircled by many headed serpant. The linga and the serpent apparently symbolise Brahmanism and worship of Maheswara. The Brahamanism is denounced by the king in the presence of his ministers and hig diginitaries of State…

It is probable that “Sri Virapurushadatha” attempted to crush the tide of Brahmanism which received great impetus and revival under the aegis of his llustrious father Santhamula the great, only, two decades ago” (pages 59-60)

ஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-ல்தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க