மூக நீதி தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்கவே முடியாத சொல் இது. குறிப்பாக, பா.ஜ.க.வை எதிர்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுக்கட்சிகளுக்கு இந்தச் சொல்தான் பிரம்மாஸ்திரம். மண்டல் கமிசன் அமலாக்கத்திற்குப் பிறகு, கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக அரசியல் அரங்கில் இந்தச் சொல் வெகுவாகப் புழங்கி வந்தாலும், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பில் சமூக நீதி அரசியல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம் என்ன?

சமூக நீதி அரசியல், சாதி ஒழிப்புப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயும், அப்பிரிவுகளுக்குள் உள்ள உட்சாதிகளுக்கு இடையேயும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என நமக்கு உபதேசிக்கப்பட்டது. தேனொழுகக் கூறப்பட்ட இந்த அனுமானம் தோற்றுப்போய் விட்டதற்குத் தமிழகமே பெரும் சாட்சியமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கும் தீண்டாமைக் குற்றங்கள், தமிழகமும் வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகச் சமூக அநீதி கோலோச்சும் மாநிலம்தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

ஆதிக்கச் சாதிவெறியும் தீண்டாமை என்ற அருவருக்கத்தக்க உணர்வும் பிள்ளைப் பருவத்தைத் தாண்டாத சிறுவர்களிடமும் வேர் விட்டிருப்பதை எடுத்துக்காட்டிய சம்பவம் இசக்கி சங்கர் படுகொலை. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியரான இவரும், அதே பகுதியில் வசித்துவரும் “பிற்படுத்தப்பட்ட” சாதியைச் சேர்ந்த சத்யபாமா என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் திருமணத்திற்குப் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இசக்கி சங்கர் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தாமிரவருணி ஆற்றுக் கரையோரத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த மறுநாளே சத்யபாமாவும் இறந்து போனார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

honor killing in tamil nadu
சிறுவர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இசக்கி சங்கர். (கோப்புப் படம்)

இசக்கி சங்கர் படுகொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையையடுத்து சத்யபாமாவின் தம்பி ஐயப்பனும் அவனது ஐந்து நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். ஐயப்பனும், அவனது நண்பர்களும் பத்தாவது படித்துவரும் பதின்வயதைத் தாண்டாத பள்ளி மாணவர்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விடயம்.

இசக்கி சங்கர் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பினும், சத்யபாமாவின் அகால மரணத்திற்கு யாரும் குற்றவாளியாக்கப்படவில்லை. உண்மையில் அது தற்கொலைதானா? அப்படியே இருந்தாலும், சத்யபாமாவின் சாவு ஆணவப் படுகொலையின் இன்னொரு வடிவமல்லவா?

இசக்கி சங்கர் ஆணவப் படுகொலையைவிட அதிர்ச்சியூட்டக்கூடியது கனகராஜ் ஆணவப் படுகொலை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுமை தூக்கும் தொழிலாளியான கனகராஜை ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்தது, வேறு யாரோ அல்ல. அவரது சொந்த அண்ணன் வினோத்குமார்.

கனகராஜ், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணைக் காதலித்து வந்ததோடு, வினோத்குமாரின் எச்சரிக்கை, அச்சுறுத்தலையும் மீறி அப்பெண்ணோடு சேர்ந்த வாழத் தொடங்கியதுதான் இந்த ஆணவப் படுகொலைக்குப் பின்னுள்ள காரணம். வினோத்குமாரால் வெட்டப்பட்ட கனகராஜ் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்துவிட, துர்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்றாலும், சாதி அடுக்கில் தாழ்த்தப்பட்டவர். ஐயப்பனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இசக்கி சங்கரை வெட்டிப் படுகொலை செய்ய, அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

honor killing in tamil nadu
வர்க்க நிலையில் வேறுபாடு இல்லாத கனகராஜ்-துர்கா தம்பதியினர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதற்கு சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அமைந்தது.

கனகராஜ் குடும்பத்திற்கும் துர்கா குடும்பத்திற்கும் வர்க்க நிலையில் எந்த வேறுபாடும் கிடையாது. சாதி அடுக்குதான் அக்குடும்பங்களை மேலே, கீழே எனப் பிரித்து வைத்திருக்கிறது. இந்த வேறுபாடைக் கடந்து வரமுடியாத அல்லது கடந்து வர விரும்பாத வினோத்குமார் தனது தம்பியையும் அவரது காதல் மனைவியையும் வெட்டிக் கொல்கிறார். சாதி இந்து மனோபாவம் என்பது வர்க்கத்தைக் காட்டிலும் சாதியையே முதன்மைப்படுத்திப் பார்க்கிறது என்பதை இப்படுகொலைகள் நிரூபிக்கின்றன.

கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்துள்ள கனகராஜ், துர்கா படுகொலைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்துள்ள “ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை 187- தொடுகிறது. ஆணவப் படுகொலைக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்கத் தனியாகச் சட்டமியற்ற வேண்டும்” எனச் சில ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், சமூக நீதிப் பேசப்படும் மாநிலமான தமிழகத்தில் இதுவரையிலும் அதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்படவில்லை. மேலும், வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போலத் “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளே நடப்பதில்லை” என்ற கேடுகெட்ட பொய்யைச் சட்டமன்றத்திலேயே துணிந்து சொன்னார், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., கவுண்டர், தேவர் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளின் கூடாரம் என்பதால், ஆணவப் படுகொலைகளை மறுக்கும் ஓ.பி.எஸ்.-இன் திமிர் வாதம் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல. மேலும், அக்கட்சியும், அ.தி.மு.க. அரசும் வெளிப்படையாகவே தீண்டாமை பாராட்டும் பிற்போக்குத்தனம் கொண்டவை என்பதை மதுரை எஸ்.வலையப்பட்டியில் நடந்த சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

அக்கிராமத்திலுள்ள சத்துணவுக் கூடத்தில் சமையல் செய்வதற்கும், சமையலுக்கு உதவுவதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டவுடனேயே, உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுத்தனர். சட்டப்படிப் பார்த்தால், இத்தீண்டாமைக் குற்றத்திற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக, அப்பெற்றோர்களை அழைத்து எச்சரித்திருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அரசோ அவ்விரு ஊழியர்களையும் பக்கத்து கிராமங்களுக்கு இடமாற்றம் செய்து, ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணத்தை ஈடேற்றிக் கொடுத்தது.

Anganwadi-workers-Anna-Lakshmi---Jothy-Lakshmi
வலையப்பட்டி கிராம சத்துணவுக் கூடத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி (இடது) மற்றும் ஜோதிலெட்சுமி.

வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இந்து மதவெறிக் கும்பல் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

  • “தீண்டத்தகாதவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு ஆதிக்க சாதியினரைத் தீண்டிவிட்டது” என்ற அற்பமான காரணத்திற்காக, திருநெல்வேலி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
  • திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் குரும்பபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் சுதாகரன், சுபாஷ். இவர்கள் இருவரும் திண்டுக்கல்- நத்தம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆதிக்க சாதியினர் ஓட்டிவந்த மற்றொரு இரு சக்கர வண்டியை முந்திச் சென்றார்கள் என்பதற்காக ஆதிக்க சாதிவெறிக் கும்பலால் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.
  • நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச் செல்வம், பிரதீப் இருவரும் ஊர்ப் பொதுக்குளத்தில் குளித்துவிட்டு, குளத்துக்கு அருகே நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் முகம் பா ர்த்துத் தலை சீவியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் பொதுக் குளத்தில் குளித்ததோடு மட்டுமின்றி, ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான வண்டியின் கண்ணாடியில் முகம் பார்த்துத் தலை சீவிய குற்றத்திற்காக” அவ்விருவரும் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டனர்.
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் பொது மைதானத்தில் கைப்பந்து விளையாடியதை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தடுத்ததையடுத்து, இரு சாதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் குச்சிப்பாளயம் தாழ்த்தப்பட்டோர் காலனிக்குள் புகுந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

*****

த்தீண்டாமைக் குற்றங்களுள் இசக்கி சங்கர் படுகொலை தவிர்த்து, மற்றவையெல்லாம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடந்தவை. இவற்றுக்குத் தமிழக மக்களின் எதிர்வினை என்ன? ஈழப் பிரச்சினை, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணுக்கழிவு மையம், ஹைட்ரோ கார்பன் அகழாய்வுத் திட்டங்கள் போன்ற தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கருதும் தமிழக மக்கள், தீண்டாமைக் குற்றங்களைப் பெரும்பாலும் மௌனமாகவே கடந்து சென்றுவிடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்டவன் ஏற்றிவந்த புல்லுக்கட்டு தம் மீது உரசிவிட்டது என்பதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அசோக்.

பா.ஜ.க.- கும்பல் நாடு தழுவிய அளவில் தமது அரசியல் செல்வாக்கையும், அமைப்புப் பலத்தையும் அதிகரித்துவரும் வேளையில், தமிழக மக்கள் ஆதிக்க சாதிவெறித் -தீண்டாமை குறித்து மௌனம் காப்பது அபாயகரமானது.

சமூக நீதி பேசும் திராவிடக் கட்சிகள்கூட இச்சம்பவங்களைக் கண்டித்து அறிக்கைவிடுவதற்கு அப்பால், எந்தத் துரும்பையும் கிள்ளிப்போடுவது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதற்கு அப்பால் சென்றால், சாதி இந்துக்களின் ஓட்டுக்களை இழந்துவிடுவோம் என்ற அச்சம் மட்டுமல்ல, திராவிடக் கட்சிகளின் தலைமை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிடியில் இருப்பதால், அக்கட்சிகள் தமது இயல்பிலேயே தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்துக் காத்திரமான எதிர்வினையாற்றுவதை விரும்புவதில்லை.

அதேசமயம், தமிழகத்தில் இயங்கிவரும் ஆதிக்க சாதி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வெடிக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சாதி மோதலாக மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் முயலுகின்றன. தனிநபர் பிரச்சினைகளைக்கூட தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிவெறியைத் தூண்டிவிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகின்றன. குறிப்பாக, பா.ம.க. இராமதாசு எவ்வித ஒளிவுமறைவுமின்றித் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிடும் வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார்.

படிக்க:
தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !
♦ பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்த ராதிகா என்ற இளம்பெண்ணின் புகைப்படத்தை பிரேம்குமார் என்ற இளைஞன் ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். பிரேம்குமார் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பா.ம.க. இராமதாசோ, பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன், ராதிகா வன்னிய சாதியைச் சேர்ந்த பெண் என்ற முகாந்திரத்தை வைத்துக்கொண்டு, இத்தனிநபர் பிரச்சினையை வன்னிய,- தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையேயான பிரச்சினையாக மாற்றும் தீயநோக்கில் அறிக்கை வெளியிட்டார்.

caste
ஆதிக்க சாதியினர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற காரணத்திற்காகத் தாக்கப்பட்ட சுதாகரன் மற்றும் சுபாஷ்.

நெய்வேலி விவகாரத்தைவிடக் கேடுகெட்ட, வக்கிரமான பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் சாதியை இராமதாசோ, வேறு சாதி அமைப்புகளோ ஆராயவில்லை. காரணம், குற்றவாளிகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தனிநபர் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் குற்றமிழைத்தவர் தாழ்த்தப்பட்டவராக இருந்துவிட்டால், அதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்மமாகவும் சாதி மோதலாகவும் ஊதிப் பெருக்குவதற்கு இராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கட்சி மற்றும் சங்கத் தலைவர்கள் முயலுவதை இளவரசன் திவ்யா, சுவாதி விவகாரங்களில் தொடங்கித் தொடர்ச்சியாகத் தமிழகம் கண்டுவருகிறது.

*****

ந்து மதவெறி அமைப்புகள் தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற முடியாது எனப் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அதேசமயம், தமிழகத்தில் ஊருக்கு ஊர் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் காலூன்றி வருவதை மௌனமாகப் பார்த்துக்கொண்டு கடந்து போகிறோம். இந்து மதவெறி அமைப்புகளும் சாதிச் சங்கங்களும் வெளித் தோற்றத்தில்தான் வெவ்வேறானவை. ஆனால், சாதி சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பது என்ற இழை அவை இரண்டையும், ஈருடல் ஓர் உயிர் என்றவாறு பிணைத்தே வைத்திருக்கிறது.

சாதி சமூகக் கட்டமைப்பு இல்லாமல் இந்து மதம் இல்லை என்பதால், இந்து மதவெறியும் ஆதிக்கச் சாதிவெறியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைகின்றன. ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்பதை உ.பி. மாநிலத்தில் நடந்த முசாஃபர் நகர் கலவரத்தில் கண்டோம்.

அங்கே ஜாட் சாதியினர் மத்தியில் முசுலீம்களுக்கு எதிராக இந்து மதவெறியைத் தூண்டிவிட, ஜாட் சாதி பெண்களைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ். முசுலீம் இளைஞர்கள் ஜாட் சாதிப் பெண்களைக் காதலிப்பது போல நடித்து, அவர்களை மதம் மாற்றுவதாகவும்; ஜாட் சாதியினர் தமது கௌவரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முசுலீம்களின் இந்த “லவ் ஜிகாத்” பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் எனப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்து முசாஃபர் நகர் கலவரத்தை நடத்தியது பா.ஜ.க.

பா.ம.க. இராமதாசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்னிய சாதிவெறியைத் தூண்டிவிட நாடகக் காதல் என்ற அவதூறைக் கட்டமைத்து வருகிறாரே, அதனின் இன்னொரு வடிவம்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் லவ் ஜிகாத்.

honor killing in tamil nadu
தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே காணப்படும் சாதி உணர்வை, ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டியது ஜோதி – சோலைராஜா தம்பதியினர் ஆணவப் படுகொலை.

பசுக் குண்டர்கள் முசுலீம்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களையும் தமது இலக்காக வைத்துத் தாக்கியதை குஜராத் மாநிலம் -உனா நகரில் கண்டோம். தமிழகத்தின் பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பா.ம.க. நடத்திய கலவரத்தில் இந்து முன்னணியும் பங்கெடுத்தது. இவையெல்லாம் இந்து மதவெறிக்கும் ஆதிக்க சாதிவெறிக்கும் இடையேயான பிணைப்பு ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் காலக் கூட்டணி போல் அல்லாமல், வலுவான இயற்கையான கூட்டணியாகும் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த இயற்கையான கூட்டணி ஒருபுறமிருக்க, கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல்வேறு தாழ்த்தப்பட்ட கட்சிகள், சங்கங்களின் தலைவர்கள் பிழைப்புவாத நோக்கில் ஆர்.எஸ்.எஸ். காலடியில் வீழ்ந்துகிடக்கும் அரசியல் அசிங்கங்களும் காணக் கிடைக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியதை அளவுகோலாகக் கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க. ஒருக்காலும் காலூன்ற முடியாது என முடிவுரை எழுதிவிட முடியாது. இன்றில்லாவிட்டால் நாளை பா.ஜ.க. தமிழகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான வாய்ப்பைச் சாதிக் கட்டமைப்பும், சுயசாதி உணர்வும் வழங்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்

தமிழகத்தின் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகளில் இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட பா.ஜ.க.- கூட்டணி, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததற்கு, வி.சி.க.வேட்பாளர் திருமாவளவனுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்கள் முனைவாக்கம் செய்யப்பட்டதுதான் காரணமாகும். மேலும், சுயசாதி உணர்வும், பெருமையும் தாழ்த்தப்பட்டவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதை சோலைராஜா- இணையர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எடுத்துக் காட்டுகிறது.

Thirumavalavan
வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததற்குக் காரணம் , அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட சாதி முனைவாக்கம்.

தமிழகத்தில் இன்று நிலவும் பா.ஜ.க. மீதான வெறுப்பும் எதிர்ப்பும் பார்ப்பன எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எதிர்ப்பு என்ற அடிப்படைகளைக் கொண்டுதான் எழுந்து நிற்கிறது. அதேபொழுதில் மோடி அரசின் இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளான மாட்டுக் கறித் தடை, பசுக் குண்டர்கள் முசுலீம்கள் -தாழ்த்தப்பட்டோர் மீது நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். உயிர் நாடியான சாதிக் கட்டமைப்புக்கு எதிராகவும் தமிழக மக்கள் மத்தியில் காத்திரமான பிரச்சாரமோ அணி திரட்டலோ நடைபெறவில்லை.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று எனச் செங்குத்தான அடுக்குகளைக் கொண்டதுதான் சாதிக் கட்டமைப்பு என்பதால், சாதிகளுக்குள் சமத்துவத்தையோ நல்லிணக்கத்தையோ ஒருக்காலும் உருவாக்க முடியாது. மேலும், சமூக நீதி அரசியல் பா.ஜ.க.விடம் தோற்றுப் போய்விட்டதை நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டிவிட்டன.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, விதவிதமான சாதிக் கூட்டணிகளை அமைத்தே சமூக நீதிக் கட்சிகளைத் தோற்கடித்துவிட்டது, பா.ஜ.க.
எனவே, ஆர்.எஸ்.எஸ். அதன் தொங்குதசைகளான சாதி அமைப்புகள், கட்சிகளையும் வீழ்த்த வேண்டுமென்றால் வர்க்க அரசியலை முன்னெடுப்பதுதான் ஒரே மாற்று.

தமிழகத்தை நாசமாக்கக்கூடிய பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராகவும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டும் அதே சமயம், சுயசாதி உணர்வு, ஆதிக்க சாதிப் பெருமை, தீண்டாமை, மதவெறி-குறிப்பாக இந்து மதவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்களை அரசியல்ரீதியில் அணிதிரட்ட வேண்டும்.

இத்தகைய போராட்டங்களின் வழியாக சாதி, மதவெறிக்கு எதிரான ஜனநாயக உணர்வைத் தமிழக மக்களிடம் நாம் வளர்த்தெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தமிழகமும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் வேட்டைக்காடாக மாறிவிடும்.

– செல்வம்

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart