அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 18

லக்கியங்களிலே பற்பல மூட நம்பிக்கைகள் புகுந்து பொய்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன? தொல்காப்பியத்தில் சில இடைச் செருகல்; வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தைத் தழுவியவை. இவற்றின் உரைகளோ ஒப்பியல் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி வட மொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தவை. ஆனால் பிற்கால இலக்கணங்களில், ”ஐந்தெழுத்தால் ஒரு பாடையுண்டென அறையவும் நாணுவரே மக்கள்’’ என்று இலக்கணக் கொத்துச் சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் இழிந்தது எதனால், வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தைப் புறக்கணித்ததாலன்றோ?

இலக்கியத்துக்குக் கற்பனை துணையென்றாலும் இலக்கணத்துக்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ? வெண்பாப் பாட்டியல் (வச்சணந்தி மாலை) என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் ஆழ்ந்ததாகவும் கருத்திற் கொவ்வாததாகவும் அமைந் திருக்கிறது என்பதைப் புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். ஏன் இந்த அறியாமை உருவெடுத்து  வந்த பட்டியல் ஏடு, பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? படிப்பதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்று ஆரியரைப் பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகைச் சாதியா? உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன் பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ் கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி வழங்கிடத் துணைபுரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும், ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.

பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திர என்ற சாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார். ‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?

ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால் இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.

பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப்பனருக்கு, பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா, வைசியருக்கு – வகை பல குறைந்த கலி. சூத்திரர் என்ற திராவிடருக்கு – ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா? இன்றும் கலம்பகத்தில் (பாக்களைக் கலந்து பாடும் முறை) தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 96-ம், அரசருக்கு 90-ம் அமைச்சருக்கு 70-ம், வணிகருக்கு 50-ம் மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டும் மென்பது பாட்டியல் விதிகளாம். ஆண்டவனின் அவதாரம் அரசன் என்று எண்ணியிருந்த நாட்டிலேயே, அரசனைவிடப் புரோகிதப் பார்ப்பான் உயர்வென்று கருதி அதிகமான செய்யுள் செய்வது முறை என்று எழுதிய நயவஞ்சகர், பிற மக்களை இழிவுபடுத்தும் முறையில் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ கூறியிருப்பது ஆச்சரியமன்று. ஆனால் இவற்றைப் புலவர்கள் தாங்கி நிற்பதுதான் நமக்கு வருத்தத்தைத் தருகின்றது.

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

மனுநீதியை விடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது? இது மக்கள் முன்னிலையில் பொசுக்கப்பட்டாலொழிய, திராவிட இன உணர்ச்சியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கருத்தும் மறுபடியும் நிலவிட முடியுமா? ஆரியக் கொள்கைகள் நூல் வடிவில் இருப்பினும், ஆரியர் கையாண்ட தீ வளர்க்கும் வேள்வி முறைக்கே இரையாகப் பலியிடும் நாளே நம்மை நாம் உணர்ந்த நாளாகும். இன்னும் பாட்டியல் வழங்கிடும் பொருத்தங்களையெல்லாம் பார்த்துத் தமிழ்ப்பா இயற்றுவதென்பது, பயனில்லாத செயலாகும்.

மங்கலப் பொருத்தம், முதற்சொல், எழுத்துத் தகனம், பால் உணர், வருணம், நாள், கதி, கணம் ஆகிய எல்லாப் பொருத்தங்களும், தமிழ் மொழியில் உள்ள எல்லா விழுமிய சொற்களையும் பயன்படுத்தி, அழகிய கருத்து நிறைந்த கவிகளை இயற்றும் இயற்கை முறையில் மட்டுப்படுத்தும் மாற்றுவகையில் அமைந்துள்ளது. இன்னும் பல சொற்களையும் பயன்படுத்த முடியாது இப்பொருத்தங்கள் தடை செய்வதனால், பல வடமொழிச் சொற்களையும் (பிறமொழி எனப் பாராது) புலவர்கள் கையாளும் நிலைமையை ஏற்படுத்தியது. தனித்தமிழ், உயர் தனிச் செம்மொழி , தன் இயல்பினை இழக்கவோ அன்றி இழந்த நிலையைக் காட்டவோ பாட்டியல் பயன்பட முடியுமேயன்றி, எந்த முறையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றதல்ல; பொருத்தமானதுமன்று என்பது எவரும் மறுக்க முடியாததாகும். ஆரியம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் இன்றியமையாதது. தன்னுணர்வு வளரத் தமிழ்க் கழனி திருத்தப்படுதல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும் இலக்கண விளை நிலமானாலும் ஆரியக் கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின், அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனைத் தீ வைத்தேனும் ஒழித்திடத்தயங்கார். ஆகவே தோழர்களே! மாணவர்களாகிய நாம் நமது கடமையை உணர்ந்து, ஒல்லும் வகையெல்லாம் திராவிடர் இனம் எழுச்சி பெறவும், வாகை சூடவும் முயல்வோமாக.

”ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைப் பற்றி A.K. Saunders C.S.I. I. C. S . என்கிற ஓர் ஆராய்ச்சிக்காரர் சுமார் 20 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் மதம் என்னும் ஆராய்ச்சி நூலில் எழுதியிருப்பதாவது:

சுமார் 5000 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் சீதோஷ்ண நிலை, இப்போது இருப்பதை விடச் சற்றுக் குறைந்த குணம் உள்ளதாக இருந்தது. இந்தியாவில் மக்கள் அநேகமாக எல்லோரும் திராவிடர்களாகவே இருந்தார்கள் என்றாலும், அவர்கள் பல பிரிவுகளாகவே ஆங்காங்கு இருந்து வந்தார்கள். அவர்கள் கறுப்பு நிறமுடையவர்கள்; சற்று உயரம் குறைந்தவர்கள். இப்போதைப்போலவே நல்ல கஷ்டப்படக் கூடியவர்களாகவும், நல்ல சுபாவமுள்ளவர்களாகவும், கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆரியர்கள் படையெடுப்பினால் நிலைகுலைந்தார்கள். ஆரியரின் ஆதிக்கத்தினால், அடிமை ஜாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள். ஆரியர்கள் தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததாலும் மங்கோலியர் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டு பிடிப்பதற்கென்றே சிறு சிறு கூட்டமாக வந்தார்கள்.

அவர்கள் வந்த சமயத்தில் இந்தியாவில் திராவிடர்கள் பல பிரிவுகளாக, ஆங்காங்கு தனித்தனியே சிறுசிறு பாகத்துக்கு அதிகாரிகளாக இருந்து ஆட்சி செலுத்தி வந்தனர். அதனால் அவர்களில் ஒருவருக்கொருவர் கலகம், சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அப்போது இங்குப் பிழைக்க வந்த ஆரியர்கள், உள்நாட்டுக் கலகத்தில் கலந்து கொண்டு, தாங்கள் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கலகங்களையும் போர்களையும் பெருக்கி ஒருவரையொருவர் தாக்கி மடியும் படியும் இளைக்கும்படியும் செய்தனர்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க