இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் !

ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19.

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 19

முதல் முதல் ஆரியர்களுக்குச் சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து திராவிடர்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித் தனிக் கூட்டங்களாக வந்து தனித் தனியாகப் போரிட்டும் தனித்தனியே வெற்றி கொண்டார்கள். ஆதியில் இவர்கள் வந்த விதம் சொல்லவேண்டுமானால், வேவுக்காரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கமும் தேடிக் கொண்டார்கள்.

சில மேன்மையான இடங்களையும், சகல சவுகரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும் திராவிடர்களைக் கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்து கொண்டார்கள்.

இவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைத்ததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்கவழக்கங்களைத் தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும் வேதம் ஆகியவற்றாலும் அவர்களது தன்மை , மதம், பாஷை ஆகியவற்றாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.

அவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக் காரியமாகும். அவர்களுடைய கடவுளாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவையும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்.)

இன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று, தென்னாட்டிலும் இலங்கையிலும் ஆரியர் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள்.

‘’ஆரியர்கள் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக, யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பயனில்லாமல் போய்விட்டன என்றும், புத்த மதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான  மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள் என்றும்; ஜாதி பேதமில்லாத மதத்தையும், மூடநம்பிக்கை இல்லாத வணக்கம், கடவுள் முதலியவற்றையும் ஏற்படுத்திய கிறிஸ்து, முகம்மது, இராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் முயற்சிகளையும், கொள்கைகளையும் ஒழித்து அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவு படுத்தி வெறுக்கச் செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள்; அவர்களே எஜமானர்கள், குருமார்கள், புரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி மற்ற சமுதாயம் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள்.

சென்னையில் 1939 ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குத் தென்னிந்திய பிரம்ம சமாஜத்தின் ஆதரவில் சென்னை அண்ணாப் பிள்ளைத் தெருவிலுள்ள பிரமசமாஜக் கட்டிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அறிஞர் S. சோமசுந்தர பாரதியார் MABL தலைமை வகித்துப் “பழந்தமிழர் மணமுறை” என்ற பொருள் பற்றிச் சுமார் 1 மணி நேரம் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:

”தமிழ்ச் சகோதரிகளே! சகோதரர்களே! சாதிமத வேறுபாடு கருதாது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லோரையுமே தமிழர்கள் என்றேன். நான் சென்னைக்கு வந்தபோது இங்குப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை. திடீரென பேச வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.

பழந்தமிழர் காலம் எது? அதாவது ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்த முடியாத காலம் கி.பி. 2, 3-ம் நூற்றாண்டு, அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம், ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்து விட்டது.

எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்புள்ள பழந்தமிழர்களின் மணமுறையைப் பற்றியே ஈண்டு பேசப்படுகிறது. ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது. பொதுக் குடும்ப முறை ஆரியருக்கு அவசியமானது ஏன்? ஆரியர் அந்நிய நாட்டார். இங்கு வந்து குடியேறினர். குடியேறிய இடம் அவர்கள் பழக்கவழக்கங்கட்கு முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டிற்கு வந்தாலும் அந்நாட்டவர்களோடு ஒத்து வாழ்ந்து, தங்களைத் தனிப்பட்ட ஒரு தெய்வப் பிறப்பாகவே கருதுவது ஆரியர் வழக்கம். உதாரணம் பார்த்தால், ஜெர்மனியிலுள்ள ஆரியர்கள் யூதர்களை வெறுத்துத் தாங்கள் ஆரியரெனும் செருக்கால் விரட்டுகின்றனர். இந்த அகம்பாவம் எல்லோருக்கும் உரியது.

ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது.

இந்தச் செருக்கினாலே, பிறரால் ஆரியர்களும் வெறுக்கப்பட்டு வந்தனர் – வருகின்றனர். அவ்வாரியர் ஆதியில் வட நாட்டில் குடியேறிய காலத்து அங்கிருந்த வட நாட்டாரையும் தாழ்வாகக் கருத ஆரம்பித்தனர். வட நாட்டிலிருந்தவர்களும் அறிவிலா கீழ்மக்களாயிருந்ததால், தங்களை இழிவாகக் கருதிய ஆரியர்களை உதைக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கட்குத் தற்காப்பு அவசியமாயிற்று. இராமாயணத்தில் பல இடங்களில் அசுரர்கள் உதைத்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே.

அதன் பொருள் என்ன? இவ்வாரியர்கள் தங்கள் செருக்கால் பிறரைக் கேவலமாகக் கருதவே அவர்கள் (அசுரர்கள்) இவர்களைச் சரியாக உதைத்தனர். இதுதான் உண்மை . இது நான் கூறுவதல்ல; சரித்திரம் கூறுகின்றது. இவ்வாரியர்கள் இரவு பகலாகக் கண்விழித்துத் தற்காப்புச் செய்து கொண்டனர்; எதிரிகளுடன் ஓயாமற் சண்டை பிடிக்க வேண்டி அதிக செல்வாக்கும் தற்காப்பும் இவர்கட்கு வேண்டியிருந்தது. இதனாலேயே இவர்கள் தங்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறப்பதை அதிகமாக விரும்பினர். பெண் பிள்ளைகள் பிறப்பதைப் பாவமெனவும் கருதினர். எனவே தற்காப்புக் கருதியேதான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக வாழ வேண்டி வந்தது.

படிக்க:
நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

நிற்க, தமிழர்கள் வடமேற்குக் கணவாய், வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர். அது தவறு. உலகம் தோன்றிய காலந்தொட்டே தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். ஏன்? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள்! தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் அந்நிய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன்? இயற்கையிலே முப்புறம் கடலும் ஒருபுறம் மலையும் தமிழர்கட்கு அரணாக இருந்தன. இதனால்தான் தற்காப்பு வேண்டாது தனித்து வாழும் சிறப்பையே வேண்டினான் தமிழன்.

ஆதி முதல் தனிக்குடித்தனம் நடத்துவதே தமிழன் வழக்கம். தந்தை சொத்தை விரும்பினால் தாயும் மனைவியும் வெறுப்பர். தமிழன் திரை கடலோடித் திரவியம் தேடினான். ”உன் முயற்சியால் பொருள் தேடினாயா? தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன்” என்பாள் மனைவி. காதலரிருவர் கருத்தொருமித்த பிறகு மணம் செய்து கொள்வதற்கு முன் பொருள் தேடச் செல்வதே தமிழன் வழக்கு.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

1 மறுமொழி

  1. அண்ணாவின்‌ இது போன்ற குப்பை ‌‌கருத்துக்கள்என்றைக்கோ தவறு என மக்கள் புரிந்து கொண்டனர்….
    இராமன் , கிருஷ்ணன் ஆரியர்கள் என்றால்
    புத்தனும் மகாவீரரும் தமிழனா……….?
    ஆரியர்கள் புரோகிதம் தொழிலை செய்தார்கள் என்று சொல்லி விட்டு , அவர்கள் வீரம் சொறிந்து தமிழனை எப்படி அடித்து விரட்டி கொடுமை படுத்தினார்கள் ?…..என்று அபத்தமான பொய்களை எழுதுவதனால் தான் உங்களை‌யாரும் நம்புவதில்லை………….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க