வியட்நாம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியென் பியென்பூ போர் ஒரு திருப்புமுனையான கட்டம். பிரெஞ்சுக்கு எதிரான விடுதலைப் போரில் 1945-ல் வியட்நாமின் பெரும் நிலப்பரப்பை வியட்நாமின் மக்கள் படை கைப்பற்றிவிட்டது. தென் வியட்நாமின் ஒரு சில பகுதிகளே எஞ்சியிருந்தன. ஆனால் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஹோசிமின் தலைமையிலான அரசை அங்கீகரிக்க மறுத்து வந்தது. தொடர்ந்து வியட்நாமை தன் காலனியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

1953-ம் ஆண்டு நவார்ரே திட்டம் என்ற இராணுவ நடிவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது. பதினெட்டே மாதங்களில் வியட்நாம் மக்கள் படையை அழித்து ஒழிப்பதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் இது. அதற்காக பெரும் எண்ணிக்கையில் தனது படைகளை தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்குப் பகுதியில் குவித்தது. இந்தத் திட்டத்தை ஹோசிமின்னும் அவரது ராணுவத்தளபதியுமான தளபதி கியாப்பும் எவ்வாறு முறியடித்தனர் என்பதை விவரிக்கும் நூல் இது. (பதிப்புரையிலிருந்து…)

இந்நூலாசிரியர், பிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட் ஐ.நா. வில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர். இவர் தனது அலுவலகப் பணி தொடர்பாக வியட்நாம் சென்றிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளிவந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறது, தமிழோசை பதிப்பகம்.

” … இது ஓர் அந்தரங்கக் குறிப்பு. இந்தோ சீனாவில் நான் தங்கியிருந்ததுடன் தொடர்பு உடையது. அப்போது ஏற்பட்ட நெருக்கமான ஓர் உறவு குறித்த நான் ஒரு சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.

சர்வதேச கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவின் ஓர் உறுப்பினனாக நான் இந்தோ சீனாவுக்குச் சென்றிருந்தேன். இது நான் கூறவரும் கதையின் ஒரு பகுதி.

இரண்டாயிரமாவது ஆண்டில் காலமான என் வாழ்க்கைத் துணைவியும் தோழரும் நண்பருமான ஜெர்த்ரு கிளெய்ர்மோனுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரது உயிர்ப்பு மிக்க தூண்டுதலும் ஆதரவும் இல்லாமல் இந்தோ சீனாவுக்கும், அதனைத் தொடர்ந்து சீனத்துக்கும் நான் சென்ற பயணம் முழுமை பெற்றிருக்க முடியாது.

தியென் பியென் பூ போர் முடிவுற்ற உடனே நான் வியட்நாமில் இருந்தாக வேண்டிய தேவையை அவர் எனக்கு உணர்த்தினார். நான் அங்கு கட்டாயம் இருந்தாக வேண்டியது இன்றியமையாதது என அவர் எண்ணினார்; நம்பினார். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவரது அவ்வெண்ணத்தை உறுதி செய்வனவாக இருந்தன. இந்தோ – சீன பயணம் என் வாழ்வில் மட்டுமின்றி என் துணைவியாரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது ஒரு துயரகரமான பிரிவு என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்திருந்தோம். அத்துடன் எங்களது பரந்துபட்ட அரசியல் பணிகளின் காரணமாக அப்பிரிவின் விளைவுகளையும் மதிப்பிட நாங்கள் தவறவில்லை.

ஜெர்த்ரூ ஒரு புள்ளிவிவர நிபுணர், சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தில் பணி. சிறப்புக் குணங்கள் கொண்ட ஒரு தனிவகையான போராளி. போராட்ட குணம் மிக்கவர். அவரது சிவில் சர்வீஸ் தகுதி, அவரது அரசியல் கொள்கை ஆகியவற்றின் காரணமாக தனித்தன்மைமிக்கதோர் போராளியாக அவர் இருந்தார். நம் எல்லோரையும் போலவே பிறப்பிலிருந்து ஒருவர் சந்திக்கும் வரலாற்றுச் சக்திகளாலும் அதன் தாக்கங்களாலும் உருவாக்கப்பட்டிருந்தார். இந்த வரலாற்றுச் சக்திகள் தற்செயலானவை என்று ஏற்றுக் கொள்பவரல்ல. அவரது கொள்கை முடிவுகள் ஏகாதிபத்தியப் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள், செத்துக் கொண்டிருக்கின்ற ஏகாதிபத்திய நோய், அதன் விளைவுகள் ஆகியன குறித்த சிந்தனா பூர்வமான வரலாற்றுப் புரிதல்களின் அடிப்படையில்தான் உருவானவை.

ஹோசி மின்.

அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரியாவிலிருந்து அரசியல் அகதியாக வந்தவர். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், எஃகு போன்ற இதயமுள்ளவராக அவரை உருவாக்கியிருந்தன. இது அவரிடம் இருந்த திறனாய்வு ஆற்றலை மேலும் கூடுதலாக்கியது என்று கூறலாம். அதன் காரணமாக அவர் முதலாளித்துவத்தின் மிக மோசமான வெளிப்பாடான பாசிசத்தை ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகப் பார்த்தார். இட்லரின் ஜெர்மனியை இக்கொடூர சக்தியின் மிகச் சிறந்த முன்னுதாரணமாக அவர் எண்ணினார். “நான் இட்லரை மதிக்கிறேன். அவர் என் ஆசானும் மாபெரும் ஆசானுமாவார். அதாவது எதிர்மறையான உதாரணம் என்ற வகையில்” என ஜெர்த்ரூ அடிக்கடி கூறுவதுண்டு.

உலகு குறித்த அவரது பார்வையில் அது திசைகாட்டியாக இருந்தது. ஏகாதிபத்தியத்தை அவர் ஒரு கொடூரமான சக்தியாகப் பார்த்தார். அதற்கு எதிராகப் போராடுவதில் சமரசம் செய்து கொள்ளாத போராளி. மூழ்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுகளான பிரான்சையும் வட அமெரிக்காவையும் அவர் ஒன்றாகக் கருத இதுவே காரணம். வியட்நாமும் அதன் விடுதலைப் போராட்டமும் அவரது அரசியல் இலக்குகளாவதற்கும் கூட இதுவே காரணம்.

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில் அவர் தடுமாற்றம் கொண்டதில்லை. அதன் பலமான ஆதரவாளராக இருந்தார். அது மட்டுமின்றி மிகத் தாராளமாயும் இடைவிடாதும் நிதியுதவி அளித்து வந்தார். அதை அவர் என்றும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அது குறித்து அவர் கூறுவதாவது: உலகில் எந்தவொரு தேசமும் மனித குலமும் சிந்தாத அளவு இரத்தம் சிந்தியவர்கள் வியட்நாமியர்கள். நாம் ஏதோ சில தங்கத் துகள்களைக் கொடுத்து அவற்றை ஈடுகட்டப் பார்க்கிறோம். இது ஒரு சமத்துவமில்லாத பண்டமாற்றம். ஆனால் ஒரு வேறுபாடு என்னவெனில், இந்த சமத்துவமில்லாத பண்டமாற்று என்பது இரு பெரும் நண்பர்களிடையே நடக்கிறது. பின் ஒரு கட்டத்தில் வெளிப்படையாக அவர் ஒத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்தது. அவ்வுதவியை அவர் தனது ”சிறிய இரகசியம்” என்றும் காலமெல்லாம் தான் அதைப் பாதுகாத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

நாங்கள் எதிர்பார்த்த நீண்ட பிரிவு இடையிலேயே – இந்தோ சீனாவில் நான் இருந்தபோது மகிழ்ச்சிகரமாக முறிந்தது. தற்செயலாக அது நடைபெற்றது.

லாவோசில் நான் இருந்த காலத்தில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். சிகிச்சைக்காக நான் ஹாங்காங் அனுப்பிவைக்கப்பட்டேன். அச்சமயத்தில் ஜெர்த்ரூவும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டுக்காக டோக்கியோவுக்கு வரவிருந்தார். வழியில் நாம் அங்கு – ஹாங்காங்கில் – சந்திக்கலாம் என்று எனக்குத் தகவல் தந்திருந்தார். மிகமிகக் குறுகிய நாட்கள் ஆனால் அவை உன்னதமான காலங்கள். அவர் என் அனுபவங்களை மிகக் கூர்ந்து கேட்டார். ஆனால், அவர் துருவித் துருவிக் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் விடையளிப்பதில் நான் எப்போதுமே முழுமையாக வெற்றிபெற்றதில்லை. பழுப்புத்தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த, நாள்தோறும் அந்நிமிடம் வரை நான் நேர்மையுடன் எழுதி வந்த எனது அந்தரங்கக் குறிப்பேட்டினை அவரிடம் காண்பித்தேன். சிறிய மிட்டாய் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அழும் குழந்தையைப் போல் அவர் வாய்விட்டு அழுதுவிட்டார். நான் மனநிறைவுற்றேன். இதுதான் அவர் எப்போதுமே விரும்பியதும் கவனித்துவந்ததும் ஹாங்காங்கின் மிகச்சிறந்த உணவைச் சாப்பிடுவதை விட மிகமிகச் சிறப்பானதாயிருந்தது. அவரது உதட்டிலிருந்த மலர்ந்த ஆனந்தப் புன்னகை.

படிக்க:
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !

விரைவில் குணமடையுங்கள். உங்கள் நோய்க்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள், மறந்து விடாதீர்கள்; அத்துடன் தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள். இது போன்ற குறிப்பேடுகளைத் தொடர்ந்து எழுதிவாருங்கள் என அவர் பிரியா விடையுடன் கூறிய சொற்கள் மிக சாதாரணமானதல்ல. அதைத்தான் நான் செய்தேன். அக்குறிப்பேட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையே நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.” (ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையிலிருந்து)

நூல் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
ஆசிரியர் : ஃபிரெடெரிக் ஃஎப். கிளெய்ர்மோன்ட்
தமிழில் : க. விசயகுமார்

வெளியீடு : தமிழோசை பதிப்பகம்,
1050, சத்திசாலை, காந்திபுரம், கோவை – 641 012.
தொலைபேசி எண் : 94865 86388.
மின்னஞ்சல் : tamilosai_vijayakumar@yahoo.co.in
பக்கங்கள்: 64
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | marina books

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க