உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13-அ

ன்று இரவு அலெக்ஸேய் நிம்மதி இன்றி உறங்கினான். ஒரு தரம் வெண்பனிக் குவைகள் நிறைந்து கிடந்த விமானத்திடலும் பழக்கமற்ற அமைப்பு உள்ள “லா-5” ரக விமானமும் அவனுக்குக் கனவில் தோன்றின. இந்த விமானத்தின் இறங்கு சக்கரங்களுக்குப் பதில் பறவைக் கால்கள் அமைந்திருந்தன. விமானி அறைக்குள் ஏறி வந்தான் டெக்னீஷியன் யூரா. “அலெக்ஸேய் பறந்து தீர்த்துவிட்டான்” என்றும் இப்போது பறக்கும் முறை தன்னுடையது என்றும் ஏறி வந்ததுமே சொன்னான் அவன். மறுதரம் அலெக்ஸேயின் கனவில் தோன்றினார் மிஹாய்லா தாத்தா, வெள்ளைச் சட்டையும் ஈரக் கால் சட்டையும் அணிந்து, வைக்கோல் மேல் அலெக்ஸேய்க்கு வெந்நீர் ஸ்நானம் செய்வித்தவாறு, “கலியாணத்துக்கு முன் வெந்நீரில் குளிப்பது நல்லது” என்று கூறி இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

பிறகு, விடியும் தறுவாயில் கனவில் தென்பட்டாள் ஒல்கா. வெயிலில் பழுப்பேறிய வலிய கால்களை நீரில் தொங்கவிட்டபடி லாவகமுள்ள கொடி போன்ற மேனி முழுவதும் ஏதோ சுடர் வீச, கவிழ்ந்த படகின்மேல் அமர்ந்திருந்தாள். வெயில் படாதவாறு உள்ளங்கையால் மறைத்தவாறு சிரித்துக்கொண்டே அவள் அவனைத் தன்னருகே வரும்படி சைகையால் அழைப்பது போல இருந்தது. அவன் அவள் பக்கம் நீந்திச் சென்றான். ஆனால் விசையும் கொந்தளிப்பும் உள்ள நீரோட்டம் அவனைக் கரையிலிருந்து, அவளிடமிருந்து பின்னே இழுத்துப் போயிற்று. கைகளையும் கால்களையும் எல்லாத் தசைகளையும் தீவிரமாக அசைத்து அடித்து அவன் நீந்தி அவளை மேலும் மேலும் நெருங்கினான். காற்று அவளுடைய மயிர்க் கற்றைகளை அலையடிக்கச் செய்வதும் அவளுடைய பழுப்பேறிய கால் தோல் மீது பளிச்சிடுவதும் ஏற்கனவே அவனுக்குத் தென்படலாயின….

ஆனால் அந்தச் சமயத்தில் அவன் விழித்துக் கொண்டான். அவன் உள்ளம் களி பொங்கியது, ஒளி வீசியது. உறக்கம் கலைந்த பிறகும் படுத்தவாறு மறுபடி உறங்கவும் இந்த இன்பக் கனவைத் தொடர்ந்து காணவும் முயன்றான். ஆனால் பிள்ளைப் பருவத்தில்தான் இவ்வாறு செய்வது இயலும். கனவில் தோன்றிய ஒடிசலான, பழுப்பேறிய நங்கையின் உருவம் சட்டென எல்லாவற்றையும் ஒளிமயமாக்கியது. எண்ணி எண்ணி ஏங்காமல், சோர்வு அடையாமல், ஓல்காவை எதிர் கொண்டு நீந்திச் செல்ல வேண்டும், நீரோட்டத்துக்கு எதிராக நீந்த வேண்டும், நீந்தி முன்னேற வேண்டும், என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான். ஆனால் கடிதம்? கடிதம் தன்பாட்டில் போகட்டும். உண்மைக் காதலை இத்தகைய கடிதம் அச்சுறுத்திப் போக்கிவிடாது.

காலையில் கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்த்தான். பதபாகமாகக் கட்டிலிலிருந்து இறங்கினான். நின்றான். கால்களை அகற்றி வைத்து, சமனிலை வருவிப்பதற்காகக் கைகளை இரு புறமும் நீட்டியவாறு சற்று நின்றான். அப்புறம் கைகளால் சுவற்றைப் பிடித்துக் கொண்டு ஓர் அடி எடுத்து வைத்தான். பொய்க்கால் தோல் கறுமுறுத்தது. உடல் ஒருபக்கமாகச் சாய்ந்தது, ஆனால் அவன் கைவீச்சால் அதைச் சமப்படுத்திக் கொண்டான். சுவற்றிலிருந்து கையை அகற்றாமல் இன்னொரு அடி எடுத்து வைத்தான். நடப்பது இவ்வளவு கடினமானது என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. மூன்றாவது அடி வைப்பின்போது உடல் ஒருபுறம் சாய்ந்து கால் புரண்டு விடவே தொபுகடீர் என்று தரையில் குப்புற விழுந்துவிட்டான்.

படிக்க:
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !

வார்டுக்காரர்கள் சிகிச்சை அறைக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் நேரத்தை அவன் தன் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எவரையும் உதவிக்கு அழைக்காமல் சுவரோரமாய் ஊர்ந்துபோய், அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்று அடிபட்ட விலாவைத் தொட்டுப் பார்த்தான், முழங்கையில் கன்றியிருந்த தழும்பை நோக்கினான். இந்தத் தழும்பு சிவப்பாகத் தொடங்கியிருந்தது. சுவரிலிருந்து விலகி, பற்களை இறுகக் கடித்துக் கொண்டு மீண்டும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்தான். இப்போது அவன் இதன் மர்மத்தைப் புரிந்து கொண்டுவிட்டான் போலும். சாதாரணக் கால்களுக்கும் அவனுடைய செயற்கைக் கால்களுக்கும் இருந்த வேறுபாடு இவற்றில் மீள் விசை இல்லாதது தான். இவற்றின் இயல்பை அவன் அறியவில்லை. நடக்கும்போது கால்களின் நிலையை மாற்றிக் கொள்ளவும், அடி எடுத்து வைக்கையில் உடற் சுமையைக் குதிகாலிலிருந்து உள்ளங்காலுக்குக் கொண்டு வரவும் மறுபடி உடற்சுமையை அடுத்த குதிகால் மீது வைக்கவும் தேவையான பழக்கத்தை, தனிவகை மறுவினையை அவன் பயிற்சியால் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உள்ளங்கால்களை ஒருபோக்காக இன்றி, சிறிது சாய்வாக, நுனிகளை அகற்றி வைப்பதால் நடக்கையில் அதிக நிலையுறுதி ஏற்படும் என்பதையும் அவன் அறியவில்லை.

குழந்தை தனது தாயின் கண்காணிப்பில் குட்டையும் மென்மையுமான கால்களால் தத்தக்கபித்தக்கவென்று முதல் அடிகளை எடுத்துவைக்கும் பொழுது இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையாக வேரூன்றிவிடுகின்றன, இயற்கைத் தூண்டல் ஆகி விடுகின்றன. மனிதன் பொய்க்கால்கள் அணிந்து கொண்டு, அவனது உடலின் இயல்பான ஒப்புநிலைமைகள் மாறியதும் குழந்தைப் பிராயத்திலிருந்து பெறப்பட்ட இந்தத் தூண்டல் நடைக்கு உதவியாக இருப்பதற்குப் பதில் இடைஞ்சல் ஆகி விடுகிறது. புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்தத் தூண்டலை எப்போதும் அடக்கிவைத்திருப்பது அவசியம் ஆகிறது. கால்களை இழந்த சித்த வலிமை அற்ற பல மனிதர்கள், குழந்தைப் பருவத்தில் நமக்கு அவ்வளவு சுலபமாகக் கைவரும் நடைக்கலையை முதுமைவரையில் மீண்டும் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

மெரேஸ்யெவ் தன் குறிக்கோளை அடைய வல்லமை கொண்டிருந்தான். தன் தவறுகளைக் கருத்தில் கொண்டு அவன் மறுபடி சுவற்றிலிருந்து விலகி, செயற்கைக் கால் நுனியை ஒருபுறம் திருப்பி குதிங்காலை ஊன்றி நின்றான். பிறகு உடல் கனத்தை நுனிக்குக் கொண்டுவந்தான். பொய்க்கால் சினத்துடன் கிரீச்சிட்டது. கனம் நுனிமீது சார்ந்த கணத்தில் அலெக்ஸேய் மறுகாலைச் சட்டெனத் தரையிலிருந்து எடுத்து முன்னே வைத்தான். குதிகால் தொப்பென்று தரையில் அடித்தது. கைகளால் நிலையைச் சமப்படுத்தியவாறு இப்போது அவன் அறை நடுவே நின்றான். அடுத்த அடியை எடுத்து வைப்பது பற்றித் தயங்கியபடி ஓயாமல் சமனிலையை இழந்து தள்ளாடுவதும் கைகளால் நிலையைச் சமப்படுத்துவதுமாக நின்றான். மூக்குத் தண்டில் சில்லென்ற வியர்வை அரும்பியதை உணர்ந்தான்.

இந்தக் கோலத்தில்தான் வஸீலிய் வஸீலியெவிச் அவனைக் கண்டார். கதவருகே நின்று மெரேஸ்யெவைச் சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு அருகே வந்து கக்கத்துக்கு அடியில் கைகொடுத்துத் தாங்கிக் கொண்டார்.

“சபாஷ், ஊர்வான்! தாதியோ, மருத்துவ ஊழியனோ இல்லாமல் தனியாக ஏன் பாடுபடுகிறாய்? மனிதனுடைய ஆணவத்தைப் பார்… பரவாயில்லை. எந்தக் காரியத்திலும் முதல் அடி வைப்பதுதான் முக்கியமானது. எல்லாவற்றிற்கும் கடினமானதைச் செய்துவிட்டாய்” என்றார்.

“நீங்கள் எல்லோரும் போங்கள் உங்கள் காரியத்தைப் பார்த்துக்கொண்டு. இது சர்க்கஸ் அல்ல, வேடிக்கை பார்ப்பதற்கு. நான் இல்லாமலே வார்டுகளைச் சுற்றிப் பார்த்து முடியுங்கள்” என்று உடன் வந்தவர்களை அதட்டி அனுப்பி விட்டு, “எங்கே, மெரேஸ்யெவ், சேர்ந்து பயிலுவோம் வாருங்கள். வாருங்கள் தம்பீ, ஒன்று… என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள், இதில் என்ன கூச்சம்? பிடித்துக்கொள்ளுங்கள், நான் ஜெனரல், என் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டும் நீங்கள். ஊம், இரண்டு, அப்படித் தான். இப்போது வலது கால் சபாஷ். இடது. அருமை!” என்று மெரேஸ்யெவை உற்சாகப்படுத்தினார்.

மனிதனுக்கு நடக்கப் பயிற்சி அளித்ததன் மூலம் ஏதோ மகத்தான மருத்துவச் சோதனையை நிறைவேற்றிவிட்டவர் போல மகிழ்ச்சியுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார் அந்தப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி. ஆனால் அவரது சுபாவத்தின் தன்மையே அப்படி; எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை மறந்து ஒன்றிவிடுவார்; தமது ஆற்றல்மிக்க பெரிய உள்ளம் அனைத்தையும் அதில் ஈடுபடுத்திவிடுவார். வார்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை மெரேஸ்யெவை அவர் நடக்க வைத்தார். களைத்து சோர்ந்து போய் அவன் நாற்காலியில் சாய்ந்ததும் ஒரு நாற்காலியை அவனருகே இழுத்துத் தாமும் உட்கார்ந்து கொண்டார்.

“ஊம், விமானம் ஓட்டப் போகிறாய் அல்லவா? ஆம், ஆம். அப்பனே, இப்போதைய யுத்தம் அப்படிப்பட்டது. கை பிய்ந்து போனவர்கள் தாக்குதலுக்குத் தலைமை வகித்து படைப் பகுதியை நடத்திச் செல்கிறார்கள். மரணக் காயம்பட்டவர்கள் மெஷின்கன்களைத் தங்கள் மார்பினால் அடைக்கிறார்கள்…. ஆம், இறந்தவர்கள் மட்டுமே சண்டை செய்வதில்லை…” இவ்வாறு சொல்லுகையில் கிழவரின் முகத்தில் நிழல் படர்ந்தது, அவர் பெருமூச்செறிந்தார். “அவர்களுங்கூடத் தாம் போரிடுகிறார்கள், தங்கள் புகழினால். ஆம்… நல்லது, மறுபடி தொடங்குவோம், தம்பி” என்றார்.

இரண்டாவது முறை வார்டைச் சுற்றி வந்த பிறகு மெரேஸ்யெவ் இளைப்பாறுகையில் தலைமை மருத்துவர் க்யோஸ்தியேவின் கட்டிலைத் திடீரெனச் சுட்டிக் காட்டினார்.

“இந்த டாங்கி வீரன் எப்படி? சொஸ்தமாகி வெளியேறி விட்டானா?” என்று கேட்டார்.

அவன் குணமடைந்து வேறிடம் சென்று விட்டதாகவும் ஆனால் ஒரே சங்கடம் என்னவென்றால் அவனுடைய முகம், முக்கியமாகக் கீழ்ப்பகுதி தீப்பட்ட புண்ணினால் நேராக்க முடியாத படி விகாரமாகியிருப்பது தான் என்றும் மெரேஸ்யெவ் கூறினான்.

“அதற்குள் கடிதம் எழுதிவிட்டானா? அதற்குள் ஏமாற்றமா? பெண்கள் விரும்பவில்லையாமோ? மீசை தாடி வளர்க்கும் படி அவனுக்கு யோசனை சொல்லுங்கள். மெய்யாகவே, தோற்றம் சீர்படுவதுடன் அசாதரணமானவன் என்ற பெயரும் கிடைக்கும். பெண்களுக்கு இது மிகவும் உவப்பாயிருக்கக் கூடும்!” என்றார் மருத்துவர்.

அப்புறம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டவர் கதவருகே நின்று திரும்பிப் பார்த்து உற்சாகமாகக் கத்தினார்: “அவனுக்கு, அதுதான் உங்கள் நண்பனுக்கு, கட்டாயம் எழுதுங்கள்- நான் தாடி வளர்க்கச் சொன்னதாக, கை கண்ட மருந்து இது! பெண்களிடையே கோலாகலமான வெற்றி கிடைக்கும்!”

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

மாலையில் மருத்துவ நிலையத்தின் முதிய பணியாள் ஒருவர் மெரேஸ்யெவுக்கு ஒரு கைத்தடி கொண்டு வந்து கொடுத்தார். கருங்காலி மரத்தால் செய்த அருமையான பழங்காலக் கைத்தடி அது. வசதியான தந்தக் கைப்பிடி வைத்தது. ஏதோ கூட்டுக் கையெழுத்து முத்திரை அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

“தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் கொடுத்தனுப்பினார். அவருடைய சொந்தக் கைத்தடியை உங்களுக்காகப் பரிசளித்தார். இதை ஊன்றிக் கொண்டு நடக்கும்படி சொன்னார்” என்றார் அந்தப் பணியாள்.

அந்த கோடைக்கால மாலையில் மருத்துவமனையில் எல்லோருக்கும் சலிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே நாற்பத்து இரண்டாம் வார்டுக்கு ஆட்கள் வரலாயினார்கள். வலப்புறமும் இடப்புறமும் இருந்த பக்கத்து வார்டுகளிலிருந்தும், மாடியிலிருந்தும் கூட ஆட்கள் தலைமை மருத்துவரின் பரிசைப் பார்ப்பதற்கு வந்தார்கள். கைத்தடி உண்மையாகவே நன்றாயிருந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க