அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 21

னி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியவர், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை . எனவே “Hospitality”தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா ? ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா?’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன? ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு’’ என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.

காதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது . Warm Reception என்று ஆங்கிலர் சொன்னால், நாம் Cool Reception என்றுதான் கூற வேண்டும்.

பல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு தனிச் சிறப்பு – தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல்லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.

நிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக் குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன்? பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா? எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா?

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

எனவே, ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத்தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.

ஆனால் ஒருவன், மக்கள் தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே, “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரை யாம் கண்டதில்” (குறள்) என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும், “தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்” என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்டுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.

தமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.

மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

சரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூட மதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்! மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்! விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்துப் பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல், ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது.

ஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா? தமிழ் இன வீரர்களே! தன்மானத் தீரர்களே! வலிவில்லாதவன் வலிமையுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர்! இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்!

ஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே. ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல!

இணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன் வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ? சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம்! ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒரு புறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு! வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு”

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!

முற்றும்.

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

2 மறுமொழிகள்

  1. அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி , சந்திரோதயம் போன்ற நாடகங்களையும் தொடராக வெளியிடுங்கள் தோழர்களே

  2. இதே அண்ணாவை கடுமையா விமர்சிச்சு பதிவிட்ட வினவின் மாற்றத்திற்கு காரணம் என்னவோ?இரநூறு ஓவாயா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க