அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 31

லோவும் இருபதாம் நூற்றாண்டும்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்

லோவின் திட்டத்திலிருந்த மோசமான அத்துமீறல்கள் இனி எந்தக் காலத்திலும் மறுபடியும் ஏற்பட முடியாது என்று அவருடைய சமகாலத்தவர்கள் எண்ணினார்கள். அவர்கள் நினைத்தது தவறாகும். லோவின் திட்டம் முடிவைக் குறிக்கவில்லை, தொடக்கத்தையே குறித்தது அல்லது வரப்போகின்ற யுகத்துக்குக் கட்டியங் கூறியது. அவர் ஆரம்பித்த துணிவான முயற்சிகளைக் கண்டு அவர் காலத்து மக்கள் திகைத்து நின்றார்கள். ஆனால் 19, 20-ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் ஏற்படுத்தியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவை குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளைப் போலத் தோன்றுகின்றன.

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நுண்ணறிவுடைய பெரெய்ரா சகோதரர்களின் “கிரெடிட் மொபிலியே” என்ற பாரிஸ் நகரக் கூட்டுப் பங்கு வங்கியின் மூலம் லோவின் திட்டங்களான ஜெனரல் வங்கிக்கும் மிஸிஸிப்பி கம்பெனிக்கும் புத்துயிர் கொடுக்கப்பட்டதென்று சொல்லலாம்.

லோ தொடங்கிய நிறுவனங்களுக்கு, பொறுப்பு அரசரான ஃபிலீப் எப்படி புரவலராகவும் சுரண்டுபவராகவும் இருந்தாரோ அதைப் போலவே இந்த ஊக வாணிக அரக்கனின் திட்டங்களுக்கு மூன்றாம் நெப்போலியன் இருந்தார். இந்த வங்கி தன்னுடைய நடவடிக்கைகளைப் பன்மடங்காக்கி பிரான்சின் தொழில் துறை வளர்ச்சி முழுவதையுமே பங்குச் சந்தையின் சூதாட்டத்துக்கு உட்படுத்துவதற்கு என்ன சாதனங்களைப் பயன்படுத்தியது என்ற கேள்வியைக் கேட்டுப், பின்வரும் பதிலைத் தருகிறார் மார்க்ஸ்: “லோ உபயோகித்த அதே சாதனங்கள் தான்”(1)  என்று சொல்லிய பிறகு இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமையை விரிவான முறையில் விளக்குகிறார்.

கிரெடிட் மொபிலியே பிரெஞ்சு – பிரஷ்ய யுத்தத்துக்குச் சற்று முன்பு முறிந்தது; ஆனால் அது ஓரளவுக்கு முக்கியமான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தது. தொழில் துறையோடு நெருக்கமாக இணைந்துள்ள ஊகவணிக வங்கிகளை ஏற்படுத்தியதன் மூலம் வங்கித் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்துக்கு அடிக்கல் நாட்டியது. தொழில் துறையின் முழுக் கிளைகளிலும் கேந்திரமான உச்சிகளைக் கைப்பற்றிய பெரிய அளவிலுள்ள கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வளர்ச்சியிலிருந்து, 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரம்மாண்டமான வங்கிகள் தொழில் துறை ஏகபோகங்களோடு இணைந்து நிதி மூலதனம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இதை “ஆக்கபூர்வமான” வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதன் அத்து மீறல்கள் அப்படிப்பட்டனவா? மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போவதாக லோ சொன்னதை, ஒரு வணிகர்கள் குழு பனாமா கால்வாய் கட்டப் போகிறோம் என்று சொல்லி 8,00,000 பங்குதாரர்களிடம் பணத்தை வசூலித்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன மோசடியோடு ஒப்பிடலாமா? “பனாமா” (மாபெரும் மோசடி) என்ற சொல்லோ காலத்தில் ”மிஸிஸிப்பி” என்ற சொல்லைப் போல சாதாரணமாகக் கையாளப்பட்டது .

Crowd_outside_nyse-1929-crash
1929 நியூயார்க் வீழ்ச்சியினைத் தொடர்ந்து வால்வீதியில் குவிந்திருக்கும் மக்கள்.

லோ உருவாக்கிய திட்டத்தின் வீழ்ச்சியை 1929-ம் வருடத்தில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததோடு ஒப்பிடலாமா? அல்லது லோவினால் ஏற்பட்ட பணவீக்கத்தை, இருபதாம் நூற்றாண்டில் (இருபதுக்களில் ஜெர்மனியிலும் நாற்பதுக்களில் கிரீசிலும்) பணம் பல மில்லியன் தடவைகள் தன் மதிப்பை இழந்த மிக அதிகமான பண வீக்கத்தோடு ஒப்பிடலாமா? பண வீக்கப் பிரச்சினை நவீன முதலாளித்துவத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சிறிதும் மிகைப்படுத்தத் தேவையில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பண வீக்கம் என்பது கட்டளை விதியாக, நிரந்தரமான கூறு என்பதாகிவிட்டது. அது பொருளாதாரக் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது, சமூகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறது, பண நெருக்கடியை ஊக்குவிக்கிறது. நவீன காலத்தில் பணவீக்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.

நவீன காலத்தில் பணவீக்கம் என்பது காகிதப் பணத்தை மிகவும் அதிகமாக அச்சிடுவதோடு சம்பந்தப்பட்ட பொதுவான பொருளாதார நிகழ்வுப் போக்காகும்; ஆனால் சில சமயங்களில் அது இல்லாத பொழுதும் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பண வீக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான காரணம் “பணவியல்” அம்சத்தோடு நேரடியாக இணைக்கப்படாமல் ஆனால் வேறு ஏதாவது காரணங்களின் மூலமாக ஏகபோகக் கொள்கை, பொருள்கள் பற்றாக்குறை அல்லது அந்நிய வர்த்தக நிலைமை முதலியவற்றினால் ஏற்படுகின்ற விலைகளின் அதிகரிப்பாகும்.

ஆனால் இப்படி “முட்டுக் கொடுக்கின்ற” பணத்தின் அளவின் அதிகரிப்பு அதிகரித்திருக்கும் விலைகளின் மட்டத்தை உறுதிப்படுத்தியதோடு பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம்; அவ்வாறு செய்கிறது. இன்றைய நவீன நிலைமைகளில் பணத்தின் அளவும் விலைகளின் மட்டமும் ஒரே வழியாக மட்டுமே இருக்கும் நெகிழ்ச்சியைப் பெற்றிருக்கின்றன, அதாவது அவை மேலே உயர்கின்றனவே தவிர, கீழே இறங்குவதில்லை. இந்த விதியின் கரு ஏற்கெனவே லோவின் முறையில் இடம் பெற்றிருந்தது.

படிக்க:
நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

லோ வளமான கற்பனையும், வாய்ப்பும் தீவிரமான வேகமும் கொண்ட பண மோசடிக்காரராக இருந்தார்; அவருக்குப் பின்னர் அவரைப் போன்றவர்கள் வரலாற்றில் தோன்றினர்; அவருடைய ஆளுமையை வரலாறு பல தடவைகளில் மறுபடியும் உருவாக்கியது. அப்படிப்பட்ட மனிதர்கள் முதலாளித்துவத்துக்குத் தேவை; அவர்களை அது பெற்றெடுக்கிறது. அவர்கள் சில சமயங்களில் இஸாக் பெரெய்ரா அல்லது ஜான் பிர்பான்ட் மார்கன் ஆகியவர்களைப் போன்று உண்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். அல்லது எமிலி ஜோலாவின் L’argent என்ற நாவலின் முக்கிய பாத்திரமான பங்கு மார்க்கெட் முதலாளி சாக்கார் அல்லது டிராய்ஸரின் படைப்பாகிய அசுர பலமும் அடக்கமும் கொண்ட பண மோசடிக்காரரான கௌபெர்வுட் போல கற்பனைப் பாத்திரங்களாக இருக்கிறார்கள்……

லோவின் நிதித் துறைச் செய்முறைகளும் கருத்துக்களும் அரசியல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் முக்கியமான பங்கு வகித்தன. இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு நேரடியான சீடர்கள் ஏற்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கு அவர் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது உண்மையே. மறுபக்கத்தில், 18-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அரசியல் பொருளாதாரத்தின் மிகச் சிறப்பான வளர்ச்சி பெருமளவுக்கு லோவின் கருத்துக்களின் மூலமாகவே ஏற்பட்டன என்றபோதிலும், அந்தக் கருத்துக்கள் அபாயகரமான, பெருங்கேடு ஏற்படுத்தக் கூடிய முரண் கோட்பாடுகள் என்ற வகையில் அவற்றை நிராகரித்ததன் மூலமாக வளர்ச்சி அடைந்தன.

Political-Economy-Adam_Smith-David_Ricardo
ஆடம் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ

லோவின் முரண்கோட்பாடுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் கெனே, டியுர்கோ, ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோருடைய கருத்துக்களை உருவாக்குவதில் கணிசமான பங்கு வகித்தது. பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்ந்த பொழுது மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிஸியோ கிராட்டுகளின் தோற்றம் கொல்பேர்வாதத்தை எதிர்த்ததோடும் குறிப்பாக ஜான் லோவின் அமைப்பைப் பற்றி ஏற்பட்ட கலவரத்தோடும் இணைப்புக் கொண்டிருந்தது.”(2) மூலச்சிறப்புடைய பொருளியலாளர்கள் லோவைக் குறை கூறியது முற்போக்கான தன்மை கொண்டிருந்தது, சரியான திசையில் செலுத்தப்பட்டிருந்தது. வாணிப ஊக்கக் கொள்கையோடு லோ பல பொது அம்சங்களை அதிகமாகக் கொண்டிருந்த படியால் அந்தக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் அது ஒரு பகுதியாக இருந்தது. எல்லாவிதமான பொருளாதாரப் பிரச்சினைகளையுமே பணம், வர்த்தகச் சமநிலை முதலியவை பற்றிய விவகாரங்களாகவே வகைப்படுத்திய பூர்வீக வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து அவர் அதிகமாக வேறுபட்டிருந்தார் என்பது உண்மையே.

பணம் என்பது பிரதானமாக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்துகின்ற கருவி என்றே அவர் கருதினார். ஆனால் அவர் மேலெழுந்த வாரியாகவுள்ள செலாவணி உலகத்தைத் தாண்டி முன்னேறவில்லை; முதலாளித்துவ உற்பத்தியின் சிக்கல் நிறைந்த அமைப்பியலையும் உட்கூறுகளையும் புரிந்து கொள்வதற்குக் கூட எந்த முயற்சியும் செய்யவில்லை. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச்சிறப்புடைய ஆசிரியர்கள் இதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.

லோ பணவியல் காரணிகளைச் சார்ந்திருந்தபடியால் இயல்பாகவே தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் அரசுடன் இணைத்துக் கொண்டார். அவர் ஆரம்பத்திலிருந்தே அரசு வங்கி ஏற்படுவதை விரும்பினார்; அப்பொழுது ஏற்பட்ட தற்காலிகமான சிரமங்களே முதலில் தனியார் வங்கியை ஏற்படுத்துவதற்கு அவரை இணங்கவைத்தன. அவருடைய வர்த்தக ஏகபோகம் என்பது பிரத்தியேகமான வகையில் அரசின் ஒட்டுப்பகுதியாக இருந்தது.

லோ தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் முரண்பாடுகளோடு நடந்து கொண்டார். அரசின் ஒழுங்கு முறை உத்தரவுகளில் சில பொருளாதாரத்துக்குக் குந்தகமாக இருந்தபடியால் அவர் அவற்றை ரத்துச் செய்தார், உடனே வேறு நடவடிக்கைகளைக் கொண்டுவந்தார். நிலப்பிரபுத்துவ அதிகாரவர்க்க அரசின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது; ஆனால் பொருளாதாரத்தில் அரசின் இத்தகைய முரட்டுத்தனமான, சுமை மிகுந்த தலையீட்டை எதிர்த்து பிஸியோ கிராட்டுகளும் ஆடம் ஸ்மித்தும் போராடினார்கள். இந்த அம்சத்திலும் கூட, லோவைக் காட்டிலும் புவாகில் பேர் அவர்களுக்கு அதிகம் நெருக்கமானவர்.

படிக்க:
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

கடன் வசதி மூலதனத்தைப் படைக்கும் என்ற கருதுகோளை லோ முன்வைத்ததோடு அதை அமுல் செய்வதற்கும் முயற்சி செய்தார். மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தினர் இந்தக் கருதுகோளை நிராகரிக்கும் பொழுது உற்பத்தியை வளர்ப்பதில் கடன் வசதி வகிக்கின்ற முக்கியமான பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டார்கள், இங்கே ஒரு ஆங்கிலப் பழமொழியை உபயோகிக்கலாமென்றால், அவர்கள் குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரை மட்டும் வெளியே கொட்டவில்லை, குழந்தையையும் சேர்த்தே கொட்டினார்கள்.

கடன்வசதியைப் பற்றி லோ கொண்டிருந்த கருத்துக்கள் குறைந்தபட்சம் ரிக்கார்டோவின் கருத்துக்களைக் காட்டிலும் அதிக சுவாரசியமானவை; எனினும் மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை விளக்கியவர்களில் மிகவும் முக்கியமானவரோடு மொத்தத்தில் அவரை ஒப்பிட முடியாது.

“இயற்கையான அமைப்பின்” முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒத்திசைவில், சுதந்திரமான உற்பத்திக் கொள்கையின் பேராற்றலில் லோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதிலும் கூட அவர் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்கிறார் என்பது வெளிப்படுகிறது. இந்த முரண்பாடுகள் தீவிரமடைந்தது முதலாளித்துவ விஞ்ஞானம் லோவைப் பற்றிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்ப்பந்தித்தது. லுயீ பிளாங், இஸாக் பெரெய்ரா ஆகியோர் காலத்தின் போது அவருடைய பழைய பெருமை மீட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவே கடைசி அல்ல. இன்னொரு புது வகையான மீட்டுக் கொடுத்தலை (வேறு வகையான கருத்து நிலையிலிருந்து என்பது தெளிவு) அரசு ஏகபோக முதலாளித்துவச் சித்தாந்திகள், கெய்ன்சின் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.

Political-economy-Cash-inflationகடன் வசதி, நிதித்துறை ஆகியவற்றின் மூலமாகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது, அரசு பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாத்திரத்தை வகிப்பது ஆகியவை லோவின் முக்கியமான இரண்டு கருத்துக்களாகும். இவை இங்கே நன்கு பொருந்துகின்றன. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் லோ, கெய்ன்ஸ் ஆகிய இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ஒரு நவீன எழுத்தாளருடைய கருத்துக்களை மேற்கோளாகக் காட்டினோம். இது மட்டும் தான் புதிரான கருத்து என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக பிரான்சில் ஜான் லோவும் டிரிஜிஸ்மின் தோற்றமும் என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. டிரிஜிஸ்ம் என்பது அரசு பொருளாதாரத் திட்டமிடுதலின் பிரெஞ்சுப் பதிப்பாகும்.

அமெரிக்காவில் முதலாளித்துவக் கம்பெனிகள், தனிநபர்கள் மீது விதிக்கப்படுகின்ற வரி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்குக் காங்கிரசின் அனுமதி இல்லாமல் முடியாது. இது நிர்வாகத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற பழைய முதலாளித்துவ ஜனநாயக நடவடிக்கையாகும். இன்று அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த நிலைமையைப் பற்றி அதிகமாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்; வரிகளைக் கையாளுவது தான் நவீன பொருளாதாரக் கொள்கையின் ஒரு முக்கியமான ஆயுதம்; எனவே அதைத் தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு அவர்கள் விரும்புவார்கள். அந்தக் காலத்தில் பிரான்சில் முடிவுகள் எவ்வளவு சீக்கிரமாக எடுக்கப்பட்டன என்பதைப் பற்றி லோ மகிழ்ச்சியடைந்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. “இது அதிர்ஷ்டமான நாடு; இங்கே ஒரு நடவடிக்கையைப் பற்றி ஆராய்வதற்கும் முடிவு செய்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இருபத்து நான்கு மணி நேரம் போதும்; இங்கிலாந்தில் அதற்கு இருபத்து நான்கு வருடங்கள் தேவைப்படும்.” பிரான்சில் மிக வேகமாக முடிவுகள் எடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அங்கே சர்வாதிகார முடியாட்சி நடைபெற்றது தான்; இதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

படிக்க:
ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு
♦ ஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி !

அதிகமான பணச் செலாவணி, பண வீக்கம் ஆகியவற்றின் சாதகமான விளைவுகளைப் பற்றி லோ கூறியிருக்கும் கருத்துக்கள் முதலாளித்துவப் பொருளியலாளர்களின் புத்தகங்களில் திரும்பத் திரும்பப் புத்துயிர் அடைகின்றன. பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு “அளவான பண வீக்கம்” என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனினும் இந்தக் கொள்கையைப் பின்பற்றும் பொழுது, அதற்குரிய தீவிரமான பிரச்சினைகளையும் மோதல்களையும் அது ஏற்படுத்துகிறது. மேற்கு நாடுகளில் பொருளாதார நிபுணர் என்ற தொழில் முதலாளித்துவம் என்ற நோயாளியின் படுக்கையின் அருகே உட்கார்ந்திருக்கும் மருத்துவர் தொழிலைப் போன்றதாகும். நோயினால் ஏற்படும் துன்பங்களை இடையிடையே குறைப்பது தான் இந்த மருத்துவர்கள் செய்யக் கூடிய மாபெரும் சேவையாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, F. Engels, Werke, Bd. XII, Berlin, 1969, S. 32.

(2)  K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 59.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க