ட ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகியவை முன்னோடி முதலாளித்துவ நாடுகளாக முதலாளித்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்படுபவை. முதலாளித்துவம் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடையும்போது இந்த எதிர்காலத்தை ஒட்டு மொத்த உலகமும் அடைந்து விடும் என்று பசப்புவதற்கான அடிப்படைகள்.

இந்த நாடுகளில் முதலாளிகள் மீது அதிகபட்ச வரி விதிப்பு, வலுவான தொழிற்சங்கம், பணியிட உரிமைகள், உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம், வேலை இழப்பு நிவாரணம் என முதலாளித்துவம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, சோசலிச ரசியாவின் அண்டை நாடுகளான இவற்றில் தொழிலாளர் வர்க்க இயக்கமும் சோசலிச கட்சிகளும் வலுவாக இருந்தது ஆகும்.

இந்த ‘முதலாளித்துவ கனவுலகத்தில்’ ஒரு முக்கியமான நாடான ஸ்வீடன். இந்த நாடுதான் இந்தியாவுக்கு போஃபர்ஸ் பீரங்கிகளை விற்ற நாடு என்பது நினைவிருக்கும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் பின்னால் மறைந்திருக்கும் நம் போன்ற நாடுகள் சுரண்டப்படுவதன் ஒரு வெளிப்பாடு அது.

கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்ட நவ தாராளவாத அரசியலின் கீழ் மக்கள் நல அரசு கைவிடப்பட்டு ஸ்வீடனின் நிலைமை என்னவாகிக் கொண்டிருக்கிறது? சமீபத்தில் நடந்து முடிந்த அந்நாட்டு தேர்தல் முடிவுகள் பற்றி மைக்கேல் ராபர்ட்ஸ் எழுதிய பதிவை படியுங்கள். 

அந்தப் பதிவில் ஸ்டீபன் ஹின்டனர் என்பவர் எழுதிய பின்னூட்டம் ஸ்வீடனில் நிலவிய பொருளாதார அமைப்பு பற்றிய சித்திரத்தைத் தருகிறது.

ஸ்டீபன் ஹின்டனர்

“நான் 1980-களில் ஸ்வீடனில் வசித்தேன். அப்போது சில அரசு நிறுவனங்களுடனும் அரசியல்வாதிகளுடனும் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் “கௌரவமான வேலை வாய்ப்பு” என்பதை உண்மையிலேயே ஆதரித்தார்கள்.

இந்தியாவுக்கு ஸ்வீடன் சப்ளை செய்த போஃபர்ஸ் பீரங்கி

அந்தக் காலத்தில் தொழிலாளர்கள் தொடர்பான முத்தரப்பு அணுகுமுறை இருந்தது. அதன்படி தொழிலாளர் அமைச்சகம், கம்பெனிகளின் கூட்டமைப்பு, தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட்டனர்.

இந்த அணுகுமுறையின் நோக்கம் ஸ்வீடிஷ் பொருட்களை வாங்குவதற்கு போதுமான அளவு தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு கல்வியும், மருத்துவ வசதியும், பொதுப் போக்குவரத்தும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திறமையாக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.

இந்த முத்தரப்பு அணுகுமுறை மிக முற்போக்கான பணியிடச் சூழலை உருவாக்கியது. வேலை போனாலும் வாழ்வுக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற சமூக ரீதியான பாதுகாப்பு இருந்ததால் தொழிலாளர்கள் பணியிடத்தில் தமது படைப்புத் திறனை வெளிப்படுத்தவும், தவறு என்று பட்டதை வெளிப்படையாகவும் பேசவும் தயங்கவில்லை. இது ஸ்வீடனின் உற்பத்தித் திறனையும், உற்பத்தி தரத்தையும் மேம்படுத்தியது.

நல்ல சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் தரமான பொருட்களை கோரியதால் உள்நாட்டுச் சந்தையில் தரமான பொருட்களை விற்க வேண்டியிருந்தது. எனவே ஸ்வீடனின் பொருட்கள் உயர்தரமானவையாக இருந்தன. அவை கௌரவமான பணிச் சூழலில், சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்பட்டன.

கௌரவமான வேலை வாய்ப்புகளை வழங்கவும், திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நிதி திரட்டும் வகையிலும் அதே நேரம் முதலீடு செய்வதற்கு போதுமான உபரி மிஞ்சும் வகையிலும் முதலாளிகள் மீது வரி விதிக்கப்பட்டது.

ஸ்வீடனில் தொழிலாளர் கொள்கை தொழில்துறை கொள்கையின் பகுதியாக இருந்தது, சமூக கொள்கையின் பகுதியாக இல்லை. வேலை வாய்ப்பு பெறாதவர்களை பயிற்றுவித்து புதிய தேவைகளுக்கு ஏற்ப கற்பித்து வேலையில் அமர்த்துவது தொழில்துறையின் பொறுப்பாக பார்க்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் எந்திர மயமாதலைக் கண்டு பயப்படவில்லை, ஏனென்றால், “எந்திரங்கள் கார் வாங்கப் போவதில்லை. [தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தால்தான் கார் விற்கும்]” என்று தொழிலாளர் நலனை பாதுகாப்பதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார அணுகுமுறையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

“கௌரவமான வேலை வாய்ப்பு” சமத்துவத்தை உருவாக்குகிறது. சமூக ஜனநாயகத்தை ஆதரிக்கும் பெண்கள் தாங்கள் வேலைக்குப் போனால் ஆண்களுக்கு நிகராக தம்மை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நம்பினார்கள்.
இது ஸ்வீடனின் மூன்றாவது பாதை என்று அழைக்கப்பட்டது.

இது எல்லாம் அந்தக் காலம். பின்னர் என்ன நடந்தது? உலகமயமாக்கம் அமல்படுத்தப்பட்டது. முதலாளிகளின் கூட்டமைப்பு முத்தரப்பு அணுகுமுறையை உடைத்து, ஸ்வீடனின் ‘மூன்றாவது பாதை’க்கு முடிவு கட்டியது. உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மலிவாக இருந்ததால் முதலாளிகள் தொழிற்சாலைகளை அங்கு இடம் பெயர்த்தனர். அதனால் ஸ்வீடனின் தொழிலாளர்கள் வருமானம் இழந்து, பொருட்களை வாங்கும் சக்தியை இழந்தது பற்றி முதலாளிகள் கவலைப்படவில்லை.

1994 – 95ல் ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது கீழ் நோக்கிய சரிவை மேலும் துரிதப்படுத்தியது. மக்கள் நல அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் வலது சாரி அரசியல் களம் இறங்கியது. முதலாளித்துவ சமூகத்துக்கு நல்ல படித்த, நல்ல சம்பளம் வாங்கும், ஆரோக்கியமான தொழிலாளர்கள் தேவை இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். அதையேதான் கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் சாதித்திருக்கின்றனர். இன்று உளவியல் நோய்களுக்கான செலவினம் உடல்நல நோய்களுக்கான செலவுகளை விட அதிகரித்திருக்கிறது.

இந்தப் போக்குக்கு ஒரு உதாரணமாக அச்சுத் தொழிலை எடுத்துக் கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகள் ஒன்றியத்தின் நிதிஉதவியின் கீழ் தமது நாட்டில் அச்சகங்களை அமைத்தன. அங்கு நிலவிய குறைந்த கூலி, குறைந்த தொழிலாளர் நல செலவுகள் காரணமாக வேலை வாய்ப்புகள் அங்கு இடம் பெயர்ந்தன. ஸ்வீடனிலிருந்து வேலை வாய்ப்புகள் பறி போயின. அது கீழ் நோக்கிய வீழ்ச்சியை துரிதப்படுத்தியது.

அடுத்தடுத்த இடது, வலதுசாரி அரசுகளின் கீழ் உணவு பொருட்கள் இறக்குமதி அதிகரித்தது. அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஸ்வீடனில் சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, அவை குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் மலிவான உணவுப் பொருட்கள் குவிகின்றன. ஸ்வீடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறி போகிறது. இது எல்லாம் சேர்ந்து அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக போனது, ஆச்சரியமில்லை.

ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட கட்டாயப்படுத்தப்பட்டன. அதை சாதிப்பதற்காக ரயில்வே மும்முரமான போக்குவரத்து வழித்தடங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விட்டது [தனியார் – பொதுத்துறை கூட்டு PPP என்ற பெயரில் நம் நாட்டிலும் இது அமல்படுத்தப்படுகிறது] . இதன் விளைவாக ரயில்வேயின் லாப வீதம் இன்னும் மோசமானது.

வலதுசாரி கட்சிகள், இனவாதிகளகவே இருந்தாலும், அவர்கள் இனவாத முழக்கங்களை முக்கியமாகமுன் வைப்பதில்லை.

ஸ்வீடனில் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலந்து விடுவது வெளிநாட்டவருக்கு உண்மையில் கஷ்டமான ஒன்று. அவ்வாறு ஒன்று கலக்காவிட்டால் உங்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். எனவே, கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு ஸ்வீடனுக்கு வந்து சேரும் புலம்பெயர் அகதிகள் ஸ்வீடனில் அன்னியர்களாகவே வாழ்கின்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் அத்தகைய அகதிகள் சிலரை தெரியும், அவர்களுக்கு நான் உதவ முயற்சித்திருக்கிறேன். இது இனவாதத்துக்கு உரம் போடுகிறது.

சமூக சேவைகளுக்கும் புலம் பெயர்ந்தவர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் குறைந்த நிதி ஒதுக்கி விட்டு, பெருமளவு வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் மக்கள் ஸ்வீடிஷ் கலாச்சாரத்தில் கலந்து விடுவார்கள் என்று சமூக ஜனநாயகக் கட்சி எதிர்பார்ப்பது தவறு என்பதைத்தான் அதீத வலதுசாரி அரசியலின் வளர்ச்சி காட்டுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சியின் “நீ எனக்கு சொரிந்து விடு, நான் உனக்கு சொரிகிறேன்” என்ற முதலாளித்துவத்துக்கு சோப்பு போடும் கொள்கை தோற்றுப்போயிருக்கிறது. ஆனால் ஸ்வீடன் மக்கள் அதைத்தான் விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது. “எங்கள் மக்களுக்கு பொருட்களை விற்க வேண்டுமானால், எங்கள் மக்களை தொழிலாளர்களாக பயன்படுத்துங்கள். அதற்கான விதிகள் இவை” என்று சமூக ஜனநாயகக் கட்சி முதலாளிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று கோருகிறார்கள். அதாவது அரசியல்வாதிகள் மூலதனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கோருகிறார்கள் (அது சாத்தியமானால்)

‘முதலாளித்துவத்தை சீர்திருத்தி கட்டுக்குள் வைத்து விடலாம்’ என்ற சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கையின்  [இது இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளேயே சீர்திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களை விடுவித்து விடலாம் என்ற கொள்கையுடைய அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்] விளைவே தீவிர வலதுசாரி அரசியல். அதாவது முதலாளித்துவத்தின் அவலநிலையின் வெளிப்பாடே வலதுசாரி அரசியல்.

முட்டுச் சந்தில் நிற்கும் ஸ்வீடன் – மைக்கேல் ராபர்ட்ஸ் 

முதலாளித்துவத்தை மக்கள் நல அமைப்பாக பராமரிப்பதற்கான முன்னுதாரணமாக தூக்கிப் பிடிக்கப்பட்டு, நீண்ட காலமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது, ஸ்வீடன். ‘கலப்புப் பொருளாதாரத்தின்’ மூலம் சமூக ஜனநாயக அரசு பெரும்பான்மை மக்களுக்கு கௌரவமான வேலைச் சூழலையும் வாழ்வையும் அமைத்துக் கொடுப்பதுதான் ஸ்வீடன் முதலான வடக்கு ஐரோப்பிய நாடுகளின் (நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து) சிறப்பு. ஸ்வீடனில் நடந்த 2018 பொதுத் தேர்தல் முதலாளித்துவம் பற்றிய இந்த தேவதைக் கதைக்கு முடிவு கட்டியிருக்கிறது.

செப்டம்பர் 9-ம் தேதி நடந்த தேர்தலில், ‘கலப்புப் பொருளாதாரத்தைத்’ தூக்கிப் பிடிப்பவர்களான சமூக ஜனநாயகவாதக் கட்சி 28%-க்கு சிறிது அதிக அளவு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், இது 1908-க்குப் பிறகு இந்தக் கட்சி தேர்தலில் பெற்ற மிகக் குறைவான வாக்கு சதவீதம் ஆகும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான முக்கியமான கட்சி “மிதவாதக் கட்சி” என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சியும் வாக்குகளை இழந்து 19.7% பங்கை மட்டும் பெற்றிருக்கிறது.

பல பத்தாண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகளை பிரித்துச் சென்றது ஸ்வீடன் ஜனநாயகவாதி கட்சி என்ற குடிபெயர்வோருக்கு எதிரான, நவீன நாஜியிசத்தை தனது கோட்பாடாகக் கொண்ட கட்சி. அதற்கு 17.7% வாக்குகள் கிடைத்தன. இந்தக் கட்சியின் பெயரில் இருப்பது ஜனநாயகம், நடைமுறையில் அது கடைப்பிடிப்பது நாஜியிசம்! [ஹிட்லரின் கட்சியின் பெயரும் தேசிய சோசலிசம் என்பதுதான்]

கார்ப்பரேட் லாப வீத வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்த அதிகரிப்பும்

வலதுசாரி சாய்வுடைய சிறிய கட்சிகளும், இடதுசாரி சாய்வுடைய சிறிய கட்சிகளும் கூட வலுப்பெற்றிருக்கின்றன. இடது சாரி கட்சியின் வாக்கு சதவீதம் 8%-க்கு உயர்ந்தது. இரண்டு பக்கமும் இல்லாமல் நடுவாந்திரமாக நிற்கும் பசுமைக் கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பிடிப்பதற்குத் தேவையான 4% வாக்குகளைக் கூட பெற முடியாத நிலைக்கு வந்து விட்டது.

தொகுத்துப் பார்க்கும்போது, இடது சாரி சமூக ஜனநாயகக் கூட்டணியும், வலது சாரி கார்ப்பரேட் ஆதரவு கூட்டணியும் கிட்டத்தட்ட சம வாக்கு சதவீதம் பெற்று (தலா 40% வாக்குகள்) சம பலத்தில் உள்ளன. இதன் விளைவாக தீவிர வலதுசாரி ஸ்வீடன் ஜனநாயகவாத கட்சி (நவீன நாஜிகள்) நாடாளுமன்றத்தின் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கின்றது. இதுதான் இப்போது ஸ்வீடனின் முற்போக்கு முதலாளித்துவம் சிக்கியிருக்கும் முட்டுச் சந்து.

கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்துக்கும், சர்வாதிகாரரீதியிலான திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்துக்கும் நடுவில் ஒரு ‘மூன்றாவது வழியை’ ஸ்வீடன், பிரதிநிதித்துவப்படுத்துகிறது எப்போதுமே ஒரு மாயையாகத்தான் இருந்தது. இப்போதோ, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பதில் ஸ்வீடிஷ் உழைப்பாளர் இயக்கம் ஈட்டிய மகத்தான வெற்றிகள் ஒவ்வொன்றாக படிப்படியாக கைவிடப்பட்டு விட்டன.

உலகப் போருக்குப் பின் ஒரு சில குடும்பங்களுக்குச் சொந்தமான ஸ்வீடனின் எஞ்சினியரிங் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தின் மீது உயர் வரி விதிப்பு செய்யப்பட்டு வந்தது. அது பொதுச் சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை இப்போது கைவிடப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது, பிற முதலாளித்துவ நாடுகளைப் போலவே ஸ்வீடனிலும் 1990-களிலிருந்து புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சுதந்திரச் சந்தைகளை மீட்டெடுத்தல், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிக் குறைப்பு, மக்கள்நலத் திட்டங்கள் வெட்டு, தொழிலாளர்களுக்கான நிஜக் கூலி குறைப்பு, அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வு ஆகியவை இந்தக் கொள்கைகளின் தாக்கமும், விளைவும் ஆகும்.

அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகள்

ஸ்வீடனில் ஏன் புதிய தாராளவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன? இது ஒட்டு மொத்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி தோற்றுவித்த மாற்றம். பிற முதலாளித்துவ நாடுகளைப் போலவே, ஸ்வீடனிலும் மூலதனத்துக்கான லாபவீதம் 1960-களிலிருந்தே வீழ்ச்சியடைந்து வந்தது (ஸ்வீடனைப் பொறுத்தவரையில் அது 1990-கள் வரை தொடர்ந்தது). கடன் குமிழ் ஒன்று வெடித்ததையும், ஒரு பெரிய வங்கி நெருக்கடியையும் தொடர்ந்து ஸ்வீடனின் புகழ்பெற்ற உற்பத்தித் துறை ஒரு பெரும் சரிவை அடைந்தது. அதிலிருந்துதான், ஸ்வீடனின் பெரிய கட்சிகளான சமூக ஜனநாயகவாத கட்சியும், மிதவாதிகள் கட்சியும் மூலதனத்தின் லாபத்தை அதிகரிப்பதற்கான கொள்கைகளை உறுதியாக ஏற்றுக் கொண்டு அமல்படுத்த ஆரம்பித்தன. இது மக்கள் நல அரசையும், பொதுச் சேவைகளையும் பாதித்தது.

அமெரிக்காவையும், ஐக்கிய அரசையும் (பிரிட்டனும் வட அயர்லாந்தும் இணைந்த UK) ஒப்பிடும் போது ஸ்வீடனில் வருமான, சொத்து ஏற்றத் தாழ்வு குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுவே கணிசமான ஏற்றத் தாழ்வை கொண்டுள்ளது. 1990-களுக்குப் பிறகு அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விட ஸ்வீடனில் ஏற்றத் தாழ்வு வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

2012-ல் மேல்மட்ட 10% பணக்காரர்களின் சராசரி வருமானம் கீழ்மட்ட 10% பேரின் சராசரி வருமானத்தை விட 6.3 மடங்காக இருந்தது. இது 2007-ல் 5.75 ஆகவும், 1990-களில் 4 ஆகவும் இருந்தது. ஸ்வீடனின் மொத்த தேசிய வருவாயில் பணக்கார 1%-ன் பங்கு 1980-ல் 4%-லிருந்து 2012-ல் 7% ஆக உயர்ந்தது. முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பையும் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரிவினரின் பங்கு 9% ஆக இருந்தது.

பணக்காரர்களுக்கு வருமான வரி குறைப்பு

1979-ல் 87% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் 2013-ல் 57% ஆகக் குறைக்கப்பட்டது [இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி 30% ஆக உள்ளது, 25% ஆகக் குறைக்கப் போவதாக அருண் ஜெட்லி வாக்களித்திருக்கிறார்]. பெரும்பாலான பிற வட ஐரோப்பிய நாடுகளைப் போலவே (ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து) ஸ்வீடனிலும் 1990-களில் செய்யப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் பணக்கார குடும்பங்களின் வரிச் சுமையை குறைத்தன. மூலதனத்தின் மீதான வரியை குறைப்பது அல்லது சொத்து வரியை கைவிடுவது மூலம் இது செய்யப்பட்டது. அத நேரத்தில் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் மக்கள்நல வசதிகள் வெட்டப்பட்டன.

ஸ்வீடன் பொதுச்சேவைகளை அரசு வழங்குவதற்கான முன் மாதிரி நாடாக ஸ்வீடன் இனிமேலும் இல்லை. அரசு பணம் கொடுத்து தனியார்துறை சேவை வழங்கும் முறைக்கு முன்னோடியாக ஸ்வீடன் மாறியிருக்கிறது.

சராசரி உண்மை வளர்ச்சி வீதம்

ஸ்வீடனின் உயர்நிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு “சுயேச்சையான பள்ளிகள்” என்று அழைக்கப்படுபவை. அவற்றில் பெரும்பாலானவை லாப நோக்கமுடைய கம்பெனிகளால் நடத்தப்படுகின்றன. ஆரம்ப மருத்துவ வசதிகள் வழங்கும் 40% நிறுவனங்கள் தனியாருக்கு சொந்தமானவை. பொதுச் சேவைகளை அயலகப் பணி முறையில் வழங்குவது தரத்தை பாதித்திருக்கிறது. ஸ்வீடனின் பள்ளிகள் சர்வதேச வரிசைப்படுத்தல்களில் உலகின் மிகச்சிறந்த பள்ளிகள் என்ற இடத்திலிருந்து, “மிகவும் மோசமான பள்ளிகளில் ஒன்றாக” வீழ்ந்திருக்கின்றன.

ஸ்வீடனில் ஸ்வீடன் ஜனநாயகவாதிகளின் (நவ நாஜிகள்) வளர்ச்சி ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அத்தகைய கட்சிகளின் வளர்ச்சி ஐக்கிய அரசுகளில் பிரெக்சிட், அமெரிக்காவில் டிரம்ப் வடிவில் தோன்றியுள்ள பாப்புலிசம் போனவற்றின் வகையைச் சேர்ந்தது. [இந்தியாவில் பா.ஜ.கவின் வளர்ச்சி, துருக்கியில் எர்டோகனின் ஆதிக்கம் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்]

1960-களில் முதலாளித்துவத்தின் “பொற்காலம்” முடிவுக்கு வந்த பிறகு முதலாளித்துவ அரசுகள் பின்பற்றிய புதிய தாராளவாத கொள்கைகள் மக்களுக்கு நலவாழ்வை உறுதிப்படுத்த தவறியது உழைக்கும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கோபத்தின் விளைவாக வலது சாரி அரசியல் வளர்ச்சி அடைகிறது. குறிப்பாக, 2008-ல் ஏற்பட்ட உலகளாவிய நிதித் துறை வீழ்ச்சி, அதைத் தொடர்ந்த பெரும் தேக்கம், பின்னர் ஏற்பட்ட நீண்ட மந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு வலதுசாரிகளின் பலம் மேலும் அதிகரித்திருக்கிறது.

புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை

2008-க்குப் பிறகு ஸ்வீடனின் முதலாளித்துவம், பிற முதலாளித்துவ நாடுகளை விட சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில், குறிப்பாக 2008-க்குப் பிறகு ஸ்வீடனிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் குன்றியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஸ்வீடனில் வேலையின்மை குறைவாக இருக்கலாம், ஆனால் அரசு வேலைத் திட்டங்களில் வைக்கப்பட்டிருப்பவர்களையும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களையும் இந்த வேலையில்லாதவர்கள் கணக்கில் அரசு சேர்ப்பதில்லை. பல வேலைகள் இப்போது “பணி பாதுகாப்பற்ற” குறை கூலி வேலைகளாக உள்ளன. குறிப்பாக சிறு நகரங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீட்டு வசதி, ஓய்வூதியம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் புலம் பெயர்ந்த உழைக்கும் மக்களின் பிரச்சனை ஊதிப் பெருக்கப்படுகிறது. சிரியா/ஈராக் பேரழிவுக்குப் பிறகு மத்திய கிழக்கிலிருந்து சுமார் 6 லட்சம் பேர் ஸ்வீடனுக்குள் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர். அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் பலர் திருமணமாகாத இளைஞர்கள். அவர்கள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களும் அரசுத் துறைகளும் குறைந்த திறன் கோரும் வேலைகளுக்கு நிலவிய ஆள் பற்றாக்குறையை சமாளித்துக் கொண்டன. ஆனால், மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது ஸ்வீடனில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட அதிகமாக உள்ளது. இது ஏற்கனவே புதிய தாராளவாத நடவடிக்கைகளால் சீர்குலைவை எதிர்கொண்டிருக்கும் பொதுச் சேவைகள் மீது கூடுதல் சுமையை ஏற்றுகிறது.

வாடகை வீடுகளுக்கான காத்திருப்போர் எண்ணிக்கை

குறைந்த வட்டி வீத கடன்கள் மூலம் தூண்டப்பட்ட பெரும் வீட்டுக் குமிழி நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு ஆதாயம் அளித்தது. ஆனால் உழைக்கும் வர்க்கமும், புலம் பெயர் தொழிலாளர்களும் முறையான வீட்டு வசதியை பெறுவது போராட்டமாக உள்ளது (வரைபடம் : ஸ்டாக்ஹோமில் வாடகை வீட்டுக்கு காத்திருப்போர் பட்டியல்).

ஸ்வீடன் பிற ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருவது உண்மைதான், ஆனால் அது உலக வர்த்தகத்தின் வளர்ச்சியையும், ஐரோப்பாவில் பொருளாதார நடவடிக்கைகளின் வலிமையையும் சார்ந்துள்ளது. இந்த வலிமையான வளர்ச்சியும் 1980-களைப் போல கடனை அடிப்படையாகக் கொண்ட நுகர்வு குமிழியால் தூண்டப்பட்டது. புலம் பெயர் உழைப்பாளர்கள் சேர்க்கும் கூடுதல் மதிப்பு இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது.

ஒருபுறம் வங்கித் துறை ஊதிப் பெருகி வரும் அதே நேரம், மறுபுறம் ஸ்டாக்ஹோம் உலகிலேயே இரண்டாவது அதிகம் ஊதிப் பெருக்கப்பட்ட வீட்டு சந்தையை கொண்டுள்ளது. ஸ்வீடனின் வங்கிகள் தற்போது வழங்கியிருக்கும் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 4 மடங்காக உள்ளது. இது ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 1980-கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

நிஜ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 3%-க்கும் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், புலம் பெயர் தொழிலாளர்களின் கூடுதல் தாக்கத்தை நீக்கி விட்டால் ஒரு நபருக்கான நிஜ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதை விட மிகக் குறைவாகவே உள்ளது (2017-ல் 1%-க்கும் குறைவு). ஒரு நபருக்கான வளர்ச்சி 2026-ல் முடிவடையும் 10 ஆண்டுகளில் சராசரியாக 1% அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் சிறு நகரங்கள் குறை கூலி, மோசமான சேவைகள் ஆகியவற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில்தான் புதிய புலம் பெயர் தொழிலாளர்களின் படையெடுப்பு ஆரம்பித்தது. இது ஸ்வீடன் ஜனநாயகவாதிகளின் இனவாத, தேசியவாத முழக்கமான “ஸ்வீடன் ஸ்வீடர்களுக்கே” என்ற முழக்கத்தை வளர்ப்பதற்கான அடிப்படையாக இருந்தது. [தமிழ்நாட்டின் ‘வந்தேறி’ அரசியல், ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க-வின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றுக்கு இணையான முழக்கம் இது]

ஸ்வீடனின் சமூக ஜனநாயகக் கட்சி முதலாளித்துவத்துக்கும், புதிய தாராளவாத கொள்கைக்கும் தாம் அளித்த ஆதரவுக்கான விலையை கடந்த 20 ஆண்டுகளாக கொடுத்து வருகிறது. [நமது நாட்டிலும் 1990-களுக்குப் பிறகு மாற்றி மாற்றி புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவு வலதுசாரி பா.ஜ.கவின் வளர்ச்சி. இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள் வலதுசாரி அரசியலை எதிர்ப்பதற்கான தீர்வு இல்லை என்பது முகத்தில் அறையும் உண்மை]

முகப்புப் படம்: ஸ்வீடன் ஜனநாயகவாதி கட்சியினரின் கொண்டாட்டம் (கோப்புப் படம்)
மூலக்கட்டுரை  : Sweden in deadlock
நன்றி : new-democrats

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க