சார்லஸ் டார்வின் (1809-1882) வாழ்ந்த காலம் ஐரோப்பாவில் அறிவியல் கிளர்ச்சியும் வணிக முதலாளிய வளர்ச்சியும் கைகோர்த்து எழுந்த காலம். தொன்று தொட்டு நம்பிப்பழக்கப்பட்டுப்போன மையங்கள் அறிவியல் ஆய்வுகளால் கலைக்கப்பட்ட காலம் அது. கலிலியோ, கோபர்நிகஸ் போல டார்வின் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து கடவுளையும் பைபிளையும் வரலாற்றின் எச்சங்களாக்கினார். மையங்களைத் தொடர்ந்து அழித்த ஐரோப்பிய அறிவியல் மரபும் தத்துவமரபும் கார்ல் மார்க்ஸ், நீட்ஷே, சிக்மண்ட் பிராய்ட், சார்த்தர், பின் நவீனத்துவவாதிகள்… என்று தொடர்ந்து வந்தன. இனக்குழு சார்ந்த மையங்கள் அழிந்து அவற்றினிடங்களில் அணு ஆயுத வல்லரசுகள், பன்னாட்டு வர்த்தகம், காட்சி ஊடகம், விளம்பரம், கணிணி கலாச்சாரம், தீவிரவாதம், டாலர்… என்ற மற்றொரு ரகமான மனித இனத்து மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. சார்லஸ் டார்வின் இப்போது இருநூறு ஆண்டுகளுக்குப்பின் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் இந்த மாற்றங்களைத் தமது இயற்கை தேர்வுக் கோட்பாட்டின் மூலாக விளக்கிக் கொண்டிருப்பார். நவீனத்துவ மனிதர்களை இயற்கையின் தேர்வில் உருவாகிய புதிய மனித உயிரினமாக (human species) கண்டிருப்பார்.

எப்படியானாலும், நவீன மாந்தரின் சிந்தனையைப் பாதித்துப் பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் டார்வின் குறிப்பிடத்தக்கவர். மனிதர்கள் கடவுள்கள் அல்லர்; ஏனெனில் கடவுள்கள் எப்போதும் இருந்ததில்லை – மனிதரின் சிந்தனைக்கு வெளியே. இயற்கையை மனிதர்கள் தங்களது தாற்காலிக வல்லாண்மைக்காக அழிக்கப் போராடிக் கொண்டிருக்கிற இன்றைக்கு, மனிதர்கள் இன்னும் இயற்கையின் பகுதிகளே என்பதை டார்வின் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். உயிரினங்களின் உறுப்புக்கள் பயன்படாமையின் காரணமாக எச்சமாவதாக டார்வின் கூறுகிறார். மனிதரின் எண்ணங்களில் வாழ்க்கை நோக்கங்களில் பயன்படாமை தொடருகிறபோது மனிதரும் இந்தப் புவியும்கூட எச்சங்களாகி மறைந்து போகச் சாத்தியம் உள்ளது என்பதை எதிர்பார்க்கலாம். இயற்கைப் பொருட்களை அழகியல், தத்துவ இயல், சமய இயல் வழிபாட்டுப் பொருட்களாக டார்வின் நோக்கவில்லை. இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.

நானூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பக்கங்களை உடைய டார்வினுடைய ஆங்கில நூலை வரிக்குவரி தமிழில் மொழிபெயர்க்கவில்லை. அது முடியாதது மட்டுமல்ல வேண்டாததுமாகும். டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல இடங்களில் மொழிபெயர்ப்பின் அந்நியத்தனம் தெரியத்தான் செய்யும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில உரைநடை ஆங்கிலேயர் அமைத்த தண்டவாளங்களைப் போல (rails) நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். டார்வின் நூல் ஓர் அறிவியல் ஆய்வாக அமைந்திருப்பதால் எளிதாகத் தமிழில் தருவது பெரும் கடினமாக உள்ளது. (மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)

உயினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளரான சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில், ஸ்ரூஸ்பரி (Shrewsbury)யில் பிறந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகம் கிறிஸ்து கல்லூரி, கேம்பிரிட்ஜ், ஸ்ரூஸ்பரி கிராமர் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். 1831-ம் ஆண்டில் பட்டம் பெற்று, அதே ஆண்டில் ‘ஹெச்.எம்.எஸ் பீகிள்’ (HMS Beagle) கப்பலில் ஓர் இயற்கை விஞ்ஞானியாக ஐந்தாண்டுகளாகக் கடற்பயணம் மேற்கொண்டார்.

இதன் நோக்கம் : படகோனியா (Patagonia), டியரா டெல் பூகோ (Tierra del Fuego) கடற்கரைகளை ஆராய்வது; உலகம் முழுவதும் சுற்றி ஒரு தொடர்ச்சியான க்ஷேத்திர வரலாற்று வாசிப்பை (Chronometric reading) செய்வது. இங்கிலாந்து திரும்பியதும் முன்னணி விஞ்ஞானிகளின் வரிசையில் இடம் பெற்றார். 1838-ம் ஆண்டில் இங்கிலாந்தின் புவியியல் கழகத்தின் (Geographical Society) செயலாளரானார். 1839-ம் ஆண்டில் ராயல் காலேஜ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1859-ம் ஆண்டில் ஜான் மர்ரே, டார்வினுடைய ‘இயற்கையின் தேர்வின் வாயிலாக உயிரினத்தின் தோற்றம்’ (The Origin of Species by means of Natural Selection) என்ற நூலை வெளியிட்டார். வெளிவந்தவுடனே அந்நூலுக்கு எதிர்மறையான – பகைபாராட்டும் விமர்சனங்கள் எழுந்தன.

… அண்மைக்காலம் வரை பெரும்பாலான இயற்கை விஞ்ஞானிகள் பலரும் உயிரினங்கள் (species) எவ்வித மாற்றமும் பெறாத சந்ததிகள், அவை தனித்தனியான, மாறாத படைப்புக்கள் என்றே கருதிவந்தார்கள். ஒருசில விஞ்ஞானிகள் இதற்கு மாறாக உயிரினங்கள் மாறுதல்களை அடைகின்றன; தற்போது காணும் உயிரினங்கள் யாவும் இருக்கின்ற உயிர்வடிவங்களுக்கு முந்தைய தலைமுறையின் வாரிசுகள் என்று நம்பினார்கள். நவீன காலத்தில் இக்கருத்தினை அறிவியல் பாங்கில் விளக்க முயன்ற முதல் அறிவியலாளர் பூபோன் (Buffron). செவ்வியல் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் தமது “Physical Auscultationes’ உரையாடலில் மழை எதற்காகப் பெய்கிறது என்பது பற்றிக் கூறும்போது ‘பற்கள்’ தேவை காரணமாகவே வளர்கின்றன. முன்னம்பற்கள் கூரானவை, பிளப்பதற்காகத் தக அமைந்தவை. கடைவாய்ப் பற்கள் தட்டையானவை; உணவை அறைக்கத் தக அமைந்தவை. இவை இந்த வேலைகளுக்காக உண்டாக்கப்பட வில்லையாதலால் இவை எதிர்பாராமல் நடந்த நிகழ்வின் விளைவாகும். இதேபோல் உடலின் மற்ற பாகங்களும் வேறு ஒன்றிற்காகத் தக அமைந்தவை போலத் தெரிகிறது. எது எப்படியானாலும் எல்லாப் பகுதிகளும் ஒட்டுமொத்தத்தில் ஏதோ ஒன்றிற்காக உண்டாக்கப்பட்ட தாகத் தோணுகிறது. இவை பேணப்பட்டு உள்ளுக்குள் இருக்கும் தன்னியல்பான ஒன்றால் பொருத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது, இவ்வாறு கட்டமைக்கப்படவில்லையென்றால் அவை அழிந்துவிடும்” என்று கூறியது வித்தியாசமானது… (நூலிலிருந்து பக்.5-6)

வளர்ச்சியின் கூட்டு உறவு (கூட்டு இசைவு)

சார்லஸ் டார்வின்.

ஓர் உயிரியின் வளர்ச்சியில், உருவாக்கத்தில் இலேசான மாறுபாடுகளும் அவை இயற்கையின் தேர்வால் பாதுகாக்கப்படுதலும் முக்கியமான விசயங்களாகும். இதனை யாரும் இன்னும் சரிவர அறியவில்லை. இளம்குட்டி அல்லது லார்வா (புழுப்பருவம்) பருவத்தின் நலனுக்காகச் சேமிக்கப்பட்ட மாற்றங்கள் அதன் முதிர்ந்த (adult) பருவத்தின் அமைப்பைப் பாதிக்கின்றன. இதேபோன்று, கருவளரும் பருவத்தில் ஏற்படுகிற பொருத்தமற்ற பாகங்களின் உருவாக்கமானது (malconformation) அதன் முதிர்ந்த பருவத்தின் மொத்த அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கிறது. உடலின் பல அங்கங்கள் சம விகிதாச்சார அளவு பொருத்தம் உடையவை. கருவளர்ச்சிக் கட்டத்தில் இவை ஒன்றாக உள்ளன. போகப்போக இவை ஒன்றுக்கொன்று உறவுடைய விதத்தில் வேறுபடக் கூடியவையாக உள்ளன. உடலின் வலது இடது பக்கங்கள் ஒரே மாதிரிதான் வேறுபடுகின்றன. கீழ்த்தாடை கை – கால்களோடு சம அளவில் பொருத்தமுடையதாக உள்ளது. இத்தகைய போக்குகள் இயற்கையின் தேர்வால் நன்கு அறியப்பட்டிருக்கும். உடலின் அங்கங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையவை. ஒன்று மற்றதைப் பாதிக்கும். பறவைகளில் காணக்கூடிய இடுப்பெலும்பின் அளவுக்குத் தக்கவாறு அவற்றின் சிறுநீரகங்களின் வடிவம் வேறுபட்டுள்ளது. குழந்தையின் தலையின் அளவை மனிதத் தாயின் இடுப்பெலும்பின் வடிவம் தீர்மானிக்கிறது. உறுப்புக்களுக்கு இடையிலுள்ள இந்தக் கூட்டு இசைவான உறவும் பந்தமும் புதிராக உள்ளது.

பொருத்தமில்லாத சில பாகங்களுக்கு இடையிலுள்ள உறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பூனையின் நீல விழிகளுக்கும் செவிட்டுத்தன்மைக்கும் உறவு உள்ளது. ஆமையின் பெண் பாலுக்கும் அதன் ஓட்டின் வண்ணத்துக்கும் சம்பந்தம் உள்ளது. புறாவின் கால் விரல்களுக்கு இடையிலுள்ள சவ்வுக்கும், இறகுகளுடைய பாதங்களுக்கும் உறவுண்டு. துருக்கிய நாயின் மயிருக்கும் பற்களுக்கும் இசைவு உண்டு. இவ்வாறு உடல் அங்கங்களுக்கு இடையே உறவு இருந்தாலும், இவ்வுறுப்புக்கள் எந்த வகையில் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமுடையன என்பது தெரியவில்லை. இந்த உறவும் இசைவும் விபத்தாக நேர்ந்தவையாகும்.

படிக்க:
கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !
” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

எந்த ஓர் உயிரினத்திலும் ஒரு பகுதி அசாதாரணமான அளவுக்கு வளர்ச்சி பெற்றால் அது பெரிய அளவில் மாறுதலுக்கு உள்ளாகும் போக்கில் உள்ளது என்பதை அறியலாம். தனித்த (individual) உயிரினங்கள் (உறுப்பு, அதன் தோற்றம் ஆகியவற்றால் வேறுபட்டு) செயல்பாட்டில் (function) மட்டும் ஒப்புமை கொண்ட உறுப்புக்களின் (analo gous) மாறுதல்களைப் புலப்படுத்தும். ஓர் உயிரினத்தின் ஒரு ரகம் உறவுடைய மற்றொரு உயிரினத்தின் சில பண்புகளை அடிக்கடி ஏற்றுக்கொள்ளும் அல்லது ஒரு மூதாதையின் சில பண்புகளை நோக்கிப் பின் செல்லும். இதனை வீட்டு வளர்ப்பு இனங்களில் காணலாம். மிகவும் குறிப்பிடத்தக்க புறா வகை, துணை – வகைகளின் பண்புகளை ஏற்கிறது. தலையிலும், பாதங்களிலும் இருக்கவேண்டிய இறகுகள் மாறி இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்குப் பின், முன்னர் இருந்த பண்புகள் ஓர் உயிரினத்தில் மீண்டும் தோன்றுவது வியப்பாக உள்ளது. (நூலிலிருந்து பக்.58-59)

மேலும் படிக்க : டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

நூல் : உயிரினங்களின் தோற்றம்
ஆசிரியர் : சார்லஸ் டார்வின்
தமிழ்ச் சுருக்கம் : ராஜ்கௌதமன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
88, இந்திரா கார்டன் 4-வது வீதி, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோவை – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576772
மின்னஞ்சல் : vidiyalpathippagam@gmail.com

பக்கங்கள்: 136
விலை: ரூ 65.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க