அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 32

அத்தியாயம் ஆறு ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம்

அ.அனிக்கின்

பெட்டி முதல் ஆடம் ஸ்மித் வரை, ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பொருளாதார விஞ்ஞானம் வெகுதூரம் முன்னேறியது; மூலச் சிறப்புடைய மரபினரின் ஆரம்ப நிலையிலிருந்து ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்றது; தனித் தனியாக – சில சமயங்களில் அங்கொன்றும் இங்கொன்றாக வெளிவந்த பிரசுரங்களிலிருந்து நாடுகளின் செல்வம் என்று வரையறுத்துக்கூறும் விளக்க நூல் வரை முன்னேறியது. இந்த நூலின் உள்ளடக்கமும் உருவமும் அடுத்த நூற்றாண்டிலும் – அதற்குப் பின்னரும் கூட பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்களின் இயல்பை நிர்ணயித்தன.

மார்க்ஸ் எழுதியது போல, “அந்தக் காலகட்டத்தில்”(1)  தற்சிந்தனை மிக்க சிந்தனையாளர்கள் அதிகமாக இருந்தனர்; எனவே “அரசியல் பொருளாதாரத்தின் படிப்படியான தோற்றத்தை”(2)  ஆராய்வதற்கு அது முக்கியமானதாகும். இங்கிலாந்தில் மூலச் சிறப்புடையை அரசியல் பொருளாதாரத்தின் மாளிகையை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கட்டிய சிறப்புமிக்க அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரில் சிலரைப் பற்றி மட்டுமே நாம் இங்கே எடுத்துக் கூறுவது சாத்தியம். நவீனப் பிரச்சினைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுதும் அவர்களுடைய கருத்துக்களில் சில சுவாரசியமிக்கவையாக இருக்கின்றன.

18-ம் நூற்றாண்டு

ன்றைய புதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம். நில உடைமையாளர்களான பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த வர்க்க சமரசம் இந்தக் கால கட்டத்தில் உறுதியாயிற்று. இரண்டு சுரண்டும் வர்க்கங்களின் நலன்களும் இணைந்து நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தன. பிரபுக்கள் முதலாளிகளானார்கள்; முதலாளிகள் நில உடைமையாளர்களானார்கள்.

Political_economy_Map_of_England
18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் வரைபடம்.

அன்று உருவாகி வளர்ச்சியடைந்த அரசியல் அமைப்பு அடிப்படையான அம்சங்களில் இன்றைய தினத்திலும் கூட நீடிக்கிறது; இரண்டு நூற்றாண்டுகளுக்கு அது முதலாளித்துவ ஜனநாயக இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது நாடாளுமன்றத்துக்கு அடங்கிய முடியாட்சியைக் கொண்டிருக்கிறது; அங்கே அரசர் ஆள்கிறாரே தவிர ஆட்சி செய்வதில்லை. அங்கே இரண்டு கட்சிகள் இருக்கின்றன; அவ்வப்பொழுது ஒன்றுக்குப் பதில் மற்றொன்று ஆட்சிக்கு வரும். அந்தக் கால ஐரோப்பாவில் முன் எப்போதும் இருந்திராத அளவுக்குத் தனி நபர் சுதந்திரமும், பத்திரிகைச் சுதந்திரமும், பேச்சுரிமையும் அங்கே உண்டு; ஆனால் சமூகத்தில் வசதி மிக்கவர்களும் பணக்காரர்களும் மட்டுமே இந்த உரிமைகளை உண்மையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிலவுடைமையாளர்களின் பழமைவாதக் கட்சியான டோரிக் கட்சியும் அதிகமான கல்வி கற்ற பிரபுக்கள், நகர்ப்புற முதலாளிகளின் மிதவாதக் கட்சியான விக் கட்சியும் தமது முடிவற்ற நாடாளுமன்ற, தேர்தல் யுத்தங்களை நடத்துவதற்குத் தொடங்கியிருந்தன. “கீழ்வர்க்கங்களின்” கவனத்தை வர்க்கப் போராட்டத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திருப்புவது இந்த யுத்தங்களின் முக்கியமான வேலையாகும்.

படிக்க:
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !

அரசியல் போராட்டம் இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் கொண்டிருந்த மதப் பூச்சைப் பெரிய அளவுக்கு இழந்து விட்டது. அதிகாரபூர்வமான ஆங்கிலத் திருச்சபைக்கு அருகிலேயே முந்திய பரிசுத்தவாதத்தின் ஏராளமான பிரிவுகளும் ஏற்பட்டன; இங்கிலாந்து “நூறு மதங்களைக் கொண்ட தீவாக” மாறியது. ஆனால் இது முதலாளித்துவ தேசிய இனத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யவில்லை. ஆங்கில வரலாற்றாசிரியரான ஜி.எம். டிரெவெல்யன் பின்வருமாறு எழுதுகிறார்: “மதம் தேசத்தைப் பிரித்தது, ஆனால் வர்த்தகம் தேசத்தை ஒன்றுபடுத்தியது; ஒப்பு நோக்கில் வர்த்தகத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. பைபிள் நூலுக்குப் போட்டியாகக் கணக்குப் பேரேடு வந்து விட்டது.”(3)  

Political-Economy-GM_Trevelyan
ஜி.எம். டிரெவெல்யன்

பேரரசு வேகமாக வளர்ச்சியடைந்தது. வட அமெரிக்காவில் மக்கள் குடியேறினர்; மேற்கிந்தியத் தீவுகளில் கரும்பு, புகையிலைத் தோட்டங்கள் தழைத்துப் பெருகின; இந்தியாவும் கனடாவும் வெற்றி கொள்ளப்பட்டன; உலகத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கிலாந்து நடத்திய யுத்தங்கள் பிரதானமாக வெற்றியடைந்தன. அது சந்தேகமில்லாத படி உலகத்தின் மிகப் பெரிய கடல் அரசியாக, வர்த்தக வல்லரசாக மாறியது. குறிப்பாக, அடிமை வர்த்தகத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு அநேகமாக ஏகபோகம் இருந்து வந்தது; அவர்கள் ஆயிரக்கணக்கான நீக்ரோக்களை ஆண்டு தோறும் அமெரிக்காவுக்குப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

இப்படிப்பட்ட எல்லாவிதமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையாக இருந்தன என்பது உண்மையாகும். முதலாவதாகவும் முதன்மையாகவும், நாட்டுப்புறம் மாற்றமடைந்திருந்தது. அந்த நூற்றாண்டின் மத்தியில் கூட, தொழில்துறையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது ஆங்கில முறை விவசாயம், நிலங்களை வளைத்துப் போட்டு வேலி அடைப்பது அந்தக் காலத்தில் மிகவும் பரவலாக இருந்தது. சிறு அளவு நிலவுடைமைகளும் பொது நிலமும் படிப்படியாக மறைந்து பெரிய நிலப்பண்ணைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன; இவை சிறு அளவு நிலங்களாகப் பணக்கார விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டன. இது விவசாயம், தொழில் துறை ஆகிய இரண்டிலுமே முதலாளித்துவத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது.

கூலித் தொழிலாளர் வர்க்கம் வேகமாக வளர்ச்சி அடைந்தது; இவர்களிடம் நிலமும் இல்லை, சொத்தும் இல்லை; தங்களுடைய சொந்தக் கைகளைத் தவிர அவர்களிடம் வேறு உடைமைகள் இல்லை. இந்த வர்க்கம் நிலத்தை இழந்த அல்லது பழங்காலத்திலிருந்து வருகின்ற உரிமையான அரை நிலப்பிரபுத்துவக் குத்தகையை இழந்த விவசாயிகளைக் கொண்டும் போட்டியினால் அழிந்து போன குடிசைத் தொழி லாளர்கள், கைவினைஞர்களைக் கொண்டும் ஏற்பட்டிருந்தது.

ஆனால் உண்மையான தொழிற்சாலைப் பாட்டாளி வர்க்கம் இன்னும் “கீழ் வர்க்கங்களில்” முக்கியத்துவமற்ற பகுதியாகவே இருந்தது. முதலாளித்துவச் சுரண்டலிலும் “அந்த நன்மை மிகு பழங்காலத்தின்” எச்சங்கள், தந்தை வழிக் கூறுகள் பல இருந்தன. தொழிற்சாலை அடிமைத்தனத்தின் கோரங்கள் இனி மேல் தான் ஏற்பட வேண்டியிருந்தன.

படிக்க:
♦ வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

மறுமுனையில் தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கம் வளர்ந்து கொண்டிருந்தது. இவர்களோடு பணக்கார மேலாண்மைக் கைவினைஞர்களும் வியாபாரிகளும் காலனி நாட்டுத் தோட்ட முதலாளிகளும் சேர்ந்து கொண்டார்கள். கடைசியாகச் சொல்லப்பட்ட இரு ரகங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் திரட்டிய செல்வத்தை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்கள். உற்பத்தி மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டது பல அடுக்கான நிகழ்வாகும்; முதலில் குடிசைத் தொழில்களுக்கு மூலப் பொருள்களைக் கொடுப்பவர்களாகவும் உற்பத்தி விளைவுகளை வாங்கிக் கொள்பவர்களாகவுமே முதலாளிகள் ஊடுருவி நுழைந்தார்கள்; பிறகு கைத்தொழில் பொருட்களின் உற்பத்தி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தினார்கள்.

Political-Economy-industrial revolution in englandஇது பட்டறைத் தொழில், அதாவது உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு கைகளால் செய்யப்படும் உற்பத்தி யுகத்தின் இறுதிக்கட்டம். முன்னர் பயன்படுத்திய பூர்வீகமான கருவிகளையே உபயோகித்த போதிலும் உழைப்புப் பிரிவினையும் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு உதவி செய்தன. இயந்திரத் தொழில் அப்பொழுதுதான் பிறந்து கொண்டிருந்தது. மாபெரும் கண்டு பிடிப்புகளின் யுகம் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது . 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களில் நூற்புத் தொழில் மற்றும் நெசவுத் தொழிலை இயந்திரமயமாக்குகின்ற முதல் முயற்சிகள் செய்யப்பட்டுவந்தன; நிலக்கரியைச் சுட்டுத் தேனிரும்பு தயாரிக்கின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டது. அறுபதுகளில் ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

தொழிலதிபர்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும் வணிகர்கள் அந்நிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் அரசாங்கம் காலனி யுத்தங்களை நடத்துவதற்கும் கடன் வசதி தேவையாக இருந்தது. இதன் விளைவாகப் பண மூலதனத்தைத் திரட்டிய வங்கிகளும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளும் தோன்றி வேகமாக வளர்ச்சியடைந்தன. தேசியக் கடன் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. அரசாங்கப் பத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. பங்கு மார்க்கெட் ஏற்பட்டது. லாபத்தை வருமானத்தின் முக்கியமான வடிவமாகக் கொண்ட தொழில்துறை மற்றும் வர்த்தக முதலாளிகளுக்குப் பக்கத்திலேயே பண வசதியுள்ள முதலாளியின் ஆற்றல் மிக்க உருவம் தோன்றியது. அவர் மற்றவர்களுக்குக் கடன் கொடுத்தார். அந்தக் கடனுக்கு வட்டி என்ற வடிவத்தில் உபரி மதிப்பில் அவருக்குப் பங்கு கிடைத்தது.

பண்ட-பண உறவுகள் தேசத்தின் மொத்த வாழ்க்கையிலும் முன்பே நிறைந்திருந்தன. வர்த்தகம் மட்டுமல்லாமல் உற்பத்தியும் பெரும் அளவுக்கு முதலாளித்துவத் தன்மைகளைக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான வர்க்கங்கள் அதிகமான தனித்தன்மையோடு வெளிப்பட்டன. சமூக நிகழ்வுகள் பெருந்திரளான அளவில் திரும்பத் திரும்ப நடைபெற்றதன் விளைவாக மூலதனம், லாபம், வட்டி, நிலவாரம், கூலி போன்ற புறவய இனங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்பொழுது கவனமான பார்வைக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் உரிய பொருள்களாக முடிந்தது.

மறுபக்கத்தில், சமூகத்தில் மிக அதிக முற்போக்கான வர்க்கமாக இன்னும் முதலாளி வர்க்கம் இருந்தது. அது தன்னுடைய பிரதான எதிரியாக வளர்ச்சியடைந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த இரு வர்க்கங்களுக்கிடையே வர்க்கப் போராட்டம் இன்னும் கரு வடிவத்தில்தான் இருந்தது. ஆகவே இங்கிலாந்தில் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குரிய நிலைமைகள் இவ்விதத்தில் உருவாயின.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  மார்க்ஸ் 1691 முதல் 1752 முடிய உள்ள காலகட்டத்தை, பெட்டியின் கருத்துக்களை வளர்த்துச் செல்லும் வகையில் லாக், நோர்த் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, ஆடம் ஸ்மித்தின் முன்னோடியான ஹியூமின் முக்கியமான பொருளாதார புத்தகங்கள் வெளியிடப்படுவது வரை உள்ள கால கட்டத்தைக் குறிப்பிடுகிறார்.

(2)  பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 409 பார்க்க.

(2)  G. Trevelyan, English Social History, London, 1944, p. 295.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க