மிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் பின்புறம், கடந்த 24.08.2019 முதல் 27.08.2019 வரையிலான மூன்று நாட்கள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

  1. நாளொன்றுக்கு ரூபாய் 380 தினக் கூலியாக வழங்கு.
  2. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்து!
  3. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

    – ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினர்.

தொழிலாளர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு-வின் காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சிவா 24.08.2019 அன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

TNEB Workersஅவர் பேசுகையில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த இடங்களில் நிரப்பாமல் இருக்கக் காரணம் தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் என தனது பேச்சில் அம்பலப்படுத்தினார். அத்துடன் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி பேசுகையில் “கடந்த 1996-ம் ஆண்டுமுதல் தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் கடும் உழைப்பில் ஈடுபடக்கூடியவர்கள்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் உங்கள் வீட்டருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது பணிமனைக்கு சென்று கேளுங்கள். அங்கு நிரந்தர தொழிலாளர்களைவிட ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

படிக்க:
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
♦ கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

இவ்வாறு மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் அதில் பல ஆண்டுகளாக வாரியத்துக்காக உழைத்த எங்களை பணியமர்த்துவதில்லை. அது மட்டுமில்லை எங்களுக்கான கூலியைக் கூட முறையாக கொடுப்பது இல்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சமயத்தில் முழுவதுமாக பணியாற்றியது நாங்கள்தான்.

கடந்த ஆண்டு கஜா புயலின் போதும் சரி அதற்கு முன்பான வர்தா புயல் சமயங்களில், அப்பகுதியின் நிலைமைகளை சீராக்கியது எங்கள் உழைப்புதான். அதுபோன்ற நேரங்களில் எங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட முழுமையாகக் கிடைக்காது. ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது திருமண மண்டபத்தில் தங்க வைப்பார்கள். ஆனால் அவற்றை அந்த நேரத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதியதில்லை. ஆனால் தற்போது போலீசார் எங்கள் போராட்ட இடத்தை சுற்றியுள்ள தெருவிளக்குகளை மாலையில் அணைத்து விடுகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து மூன்றுநாட்களாக போராட்டம் நடந்துவந்த நிலையில் 27.08.2019 அன்று மாலை மின்சாரத்துறை அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

வாக்குறுதி கொடுத்ததைப் போல, நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், மீண்டும் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இறுதி வரையில் போராட்டங்கள் மட்டுமே தீர்வைத் தரும் என்பதுதான் வரலாறு !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க