உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05

ஸ்தாலின் கிராத்! செய்தி அறிக்கையில் இந்தச் சொல் இன்னும் குறிக்கப்படவில்லை. ஆயினும் எல்லோருடைய வாய்களிலும் ஒலித்தது. 1942-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்தப் பெயர் கலவரத்துடனும் வேதனையுடனும் கூறப்பட்டது. நகரைப் பற்றி அல்ல, மரண ஆபத்தில் இருந்த நெருங்கிய நண்பனைப் பற்றி பேசுவது போல அதைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த நகரின் அருகே ஸ்தெப்பியில் எங்கோ இருந்தாள் ஓல்கா. எத்தகைய துன்பங்களை அவள் அனுபவிக்க நேரிடுமோ, யார் கண்டது? இந்தக் காரணத்தினால் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த கலவரம் மெரேஸ்யேவுக்கு இன்னும் அதிகமாக உண்டாயிற்று. ஓல்காவுக்கு அவன் இப்போது தினந்தோறும் கடிதம் எழுதினான். ஏதோ ஒரு போர்க்களத் தபால் நிலையத்துக்கு விலாசம் இடப்பட்டிருந்த அவனது கடிதங்களுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? பின்வாங்கலின் அமளி குமளியில், வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளில் தொடங்கியிருந்த அரக்கப் போரின் நரக நெருப்பில் இந்தக் கடிதங்கள் அவளுக்குப் போய்ச் சேருமா?

விமானிகளின் ஆரோக்கிய நிலையம் மிதிபட்ட எறும்பு புற்றுப் போலப் பதற்றமும் பரபரப்பும் அடைந்தது. ஒன்றுமே அறிவுக்கு எட்டவில்லை. வழக்கமாகப் படுக்கைவிட்டெழும் நேரத்துக்கு ஒரு மணி முன்னதாக, காலை ஏழு மணிக்கு வானொலிச் செய்தியைக் கேட்க மிக மிகச் சோம்பல் உள்ளவர்கள் கூடச் சென்று குழுமினார்கள். செய்தி விவரங்களில் விமானிகளின் சாகசச் செயல்களை குறிப்பிடுகையில் எல்லோர் முகங்களிலும் ஏக்கம் குடிகொண்டது. மனத்தாங்கல்களுடன் அவர்கள் மருத்துவத் தாதியிடம் குற்றம் பிடித்தார்கள், சிகிச்சை முறையையும் சாப்பாட்டையும் குறைக் கூறிச் சிடுசிடுத்தார்கள். போர் இவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் தாங்கள் ஸ்தாலின் கிராத் ஸ்தெப்பி வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதற்கு ஆரோக்கிய நிலைய நிர்வாகிகளே பொறுப்பாளிகள் என்பது போலிருந்தது விமானிகள் நடந்து கொண்ட விதம். முடிவில் இளைப்பாறுபவர்கள் தங்களுக்கு ஓய்வு தெவிட்டிவிட்டது என்று அறிவித்து, தங்களை உரிய காலத்துக்கு முன்பே போரிடும் படைப்பிரிவுகளுக்கு அனுப்பும்படி கோரினார்கள்.

விமானப் படைக்கு ஆட்கள் திரட்டும் குழுவினர் மாலைத் தறுவாயில் வந்தனர். இராணுவ மருத்துவச் சேவைப் பிரிவைச் சேர்ந்த சில கமாண்டர்கள் புழுதிபடிந்த மோட்டாரிலிருந்து இறங்கினார்கள். விமானப்படையில் பிரசித்தி பெற்றிருந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் முன் சீட்டிலிருந்து அதன் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு சிரமத்துடன் எழுந்தார். பாரியான பருத்த சரீரமுள்ள இந்த மருத்துவர், விமானிகள் பால் தகப்பனார் போன்று பரிவு காட்டி வந்தமையால் அவர்களுடைய அன்புக்கு உரியவராக இருந்தார். விடுமுறையை நடுவில் நிறுத்திவிட்டு உடனே படைப்பிரிவு திரும்ப விருப்பம் உள்ள உடல் நலம் பெற்ற விமானிகளை தெரிந்தெடுக்கப்படுவது மறுநாள் காலையில் தொடங்கும் என்று இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அறிவிக்கப்பட்டது.

அன்று மெரேஸ்யேவ் பளபளவென்று விடியும்போதே எழுந்து, வழக்கமான உடற்பயிற்சி செய்யாமல் காட்டுக்குப் போய், காலை சிற்றுண்டி நேரம் வரை அங்கே சுற்றிக் கொண்டிருந்தான். சிற்றுண்டி வேளையில் அவன் எதையுமே சாப்பிடவில்லை. தட்டுக்களில் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டதற்காக உணவு பரிமாறுபவள் அவனைக் கடிந்து கொண்டாள். அதற்காக அலெக்ஸேய் அவளிடம் துடுக்காகப் பேசினான். அந்தப் பெண் அவனுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்றும் அவளிடம் அவமரியாதையாகப் பேசுவது முறையல்ல வென்றும் ஸ்த்ருச்கோவ் கூறவே, அலெக்ஸேய் சடக்கென்று எழுந்து சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான். வழக்கத்தைவிட அதிகமாக நொண்டி நடந்தவாறு தன் அறைக்குப் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டான்.

தேர்வுக் குழுவினர் ஹாலில் உட்கார்ந்து கொண்டார்கள். நுரையீரல் கொள்ளளவுமானி, வலிமைமானி, பார்வைச் சோதனைக்கான எழுத்துப் பட்டியல் முதலிய எல்லாவகைச் சாதனங்களும் அங்கே கொண்டுவரப்பட்டன. அடுத்த அறையில் ஆரோக்கிய நிலையத்தினர் எல்லோரும் குழுமியிருந்தார்கள். விடுமுறை முடிவதற்குமுன் படைப்பிரிவுகளுக்குத் திரும்ப விரும்பியவர்கள், அதாவது அநேகமாக இளைப்பாறுவோர் எல்லாருமே, மிக நீண்ட வரிசையாக அங்கே நின்றிருந்தார்கள். ஆனால் ஸீனா ஒவ்வொருவரது பெயரையும் தேர்வுக் குழுவிடம் போக வேண்டிய நேரத்தையும் குறித்த சீட்டுக்களை எல்லோருக்கும் வினியோகித்து அவர்களைக் கலைந்து போகும் படி கேட்டுக்கொண்டாள். முதல் நபர்கள் தேர்வுக் குழுவிடம் போய் வந்ததும், குழுவினர் பரிவுடனேயே பார்வையிடுவதாகவும் மட்டுமீறிக் குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்னும் வதந்தி பரவியது. வோல்கா பிரதேசத்தில் தீவிரமாகியிருந்த பிரமாண்டமான போருக்கு மேலும் மேலும் பிரயாசை தேவைப்பட்ட போது தேர்வுக் குழுவினர் எப்படிக் குற்றம் கண்டுபிடிப்பார்கள்? முன்வாயிலுக்கு எதிரே செங்கல் கைப்பிடிச் சுவர் மேல் கால்களை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அலெக்ஸேய். எவனாவது வாயிலிருந்து வெளியே வந்ததும் விசேஷ அக்கறையும் இல்லாதவன் போன்ற பாவனையுடன் “என்ன ஆயிற்று?” என்று கேட்பான்.

“சண்டை போடுவோம்!” என்று போகிற போக்கில் சட்டைப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டோ, இடுப்பு வாரை இறுக்கிக் கொண்டோ சந்தோஷமாகப் பதிலளிப்பான் அவன்.

படிக்க:
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

மெரேஸ்யெவுக்கு முன்பு தேர்வுக் குழுவிடம் போனான் புர்நாஸியான். கதவருகே கைத்தடியை வைத்துவிட்டு, இடமும் வலப்புறமுமாகத் தள்ளாடாமலும் குட்டைக் காலை அருத்திச் சாயாமலும் இருக்க முயன்றவாறு, உற்சாகத் தோற்றத்துடன் உள்ளே சென்றான். வெகுநேரம் அங்கே இருந்தான். முடிவில் கோபச் சொற்கள் திறந்த ஜன்னல் வழியே அலெக்ஸேயின் காதுகளுக்கு எட்டின. அப்புறம் எரிச்சலுடன் புடைச்சலுமாக வெளியே பாய்ந்து வந்தான் புர்ஸியான். கொடிய பார்வையால் அலெக்ஸேயை உறுத்து நோக்கிவிட்டு, அவன் பக்கம் திரும்பாமலே கெந்திக் கெந்தி நடந்து பூங்காவுக்கும் சென்றான்.

“சடங்கு பாராட்டும் அலுவலர்கள், பின்புலப் பெருச்சாளிகள்! விமானங்களைப் பற்றி இவர்கள் என்னத்தைக் கண்டார்கள்? இதென்ன, பாலே நடனம் என்று எண்ணி விட்டார்களோ? ஒரு கால் குட்டையாம்…… பாழாய்ப் போகிற எனிமாக் குழாய்கள், இன்ஷெக்ஷன் ஊசிகள்!” என்று அவன் வாய் பொரிந்து கொட்டியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க