லகின் கொடூர உயிர்க்கொல்லி பிராணி ஒன்று கூறு என்று கேட்டால் நீங்கள் எதைக்கூறுவீர்கள்?

  • புலி
  • சிங்கம்
  • முதலை
  • காட்டு எருமை
  • நீலத்திமிங்கலம்
    – இதில் எதாவது ஒன்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

உலகின் மிகக்கொடூரமான உயிர்கொல்லும் பிராணி – கொசு தான்.

எதிரிகளை அடிக்கும் போது ஹீரோ உச்சரிக்கும் வார்த்தை :

“எனக்கு கொசுமாதிரிடா நீ”

“உன்ன கொசு அடிக்கிற மாதிரி அடிச்சுருவேன்” என்பார்.

ஆனால் இந்த அற்பக்கொசுவால் உயிர் இழக்கும் மனிதர்கள் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு நான்கு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் பேர்.

Most-Dangerous-Animals-in-the-worldசிங்கத்திடம் சிக்கி உயிர் விடும் மனிதர்கள் வருடத்திற்கு 250 பேர் மட்டுமே. புலியிடம் சிக்கி உயிரிழப்பவர்கள் 85 பேர் மட்டுமே.

ஆகவே, உலக வரலாற்றில் மனிதனுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாக உயிர்க்கொல்லியாக உருவெடுத்து நிற்பது இந்த “கொசு” எனும் உயிரினம் தான்.

நம்ம தமிழ்நாட்டுல கொசுவால் பரப்பப்படும் நோய்கள் ஐந்து

1. மலேரியா.
2. டெங்கி(கு).
3. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.
4. சிக்கன்குனியா.
5. யானைக்கால் வியாதி.

முதல் வியாதியான மலேரியா பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு வரை கூட கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த நோயை உண்டாக்கும் ப்லாஸ்மோடியம் வைவாக்ஸ் எனும் நுண்ணியிரியை கொல்லும் மருந்துகளை நாம் கண்டறிந்ததால் அதன் கொட்டம் அடங்கியிருக்கிறது.

ஆனால் இன்னும் இந்த நோய் சென்னை பெருநகரம் மற்றும் ராமநாதபுரத்தில் பரவலாக காணப்படுகிறது. அனாபிலஸ் வகை கொசுவின் பெண்ணினம் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. எனக்குக்கூட ஒரு முறை இந்த நோய் வந்து சென்றிருக்கிறது. க்ளோரோகுயின் மாத்திரை தான் என்னைக்காப்பாற்றியது.

படிக்க:
அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

அடுத்த நோய் டெங்கு இதைப்பற்றி கூறவும் வேண்டுமா?

ஏடிஸ் எனும் புலிக்கொசு (கால்களில் புலி போன்று வரிகள் இருப்பதால் இந்த காரணப்பெயர்) பரப்பும் நோய் இது. இந்த நோய்க்கான காரணி ஒரு வைரஸ். இந்த நோயின் முற்றிய நிலை டெங்கு ரத்தக் கசிவு நோயாக மாறி உயிரைப் பறிக்கும்.

2017-ம் வருடம் மழைக்காலத்தில் டெங்கு தமிழ்நாடு முழுவதும் வந்து படாதபாடு படுத்தியது. இந்த கொசு நல்ல நீரில் மட்டுமே உயிர் வாழும். ஆகவே நம் வீட்டைச்சுற்றி நல்ல நீர் சிறிது அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிரட்டை, ப்ளாஸ்டிக் பாட்டில், டயர்கள் போன்றவை இந்த கொசுக்களின் உற்பத்தி ஆலைகள்.

அடுத்த நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.

உத்தரபிரதேசத்தில் நிறைய குழந்தைகள் இறக்கக்காரணமாய் இருந்த அதே நோய் தான். இந்த நோயை பரப்புவது க்யூலக்ஸ் எனும் கொசு இனம். தமிழகத்தில் இந்த நோய் பரப்பும் கொசு பின்வரும் மாவட்டங்களில் பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :

1. பெரம்பலூர்
2. விழுப்புரம்
3. கடலூர்
4. திருவண்ணாமலை
5. விருதுநகர்
6. திருச்சி
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. புதுக்கோட்டை
10. கரூர்
11. திருவள்ளூர்
12. திருவாரூர்

இந்த மாவட்டங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒன்பது மாதம் மற்றும் ஒன்றரை வயதில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது.

mosquito-types-and-their-diseases-1
கொசுவின் வகைகள் மற்றும் அவற்றால் பரவும் நோய்கள்.

அடுத்த நோய் யானைக்கால் நோய்.

இந்த நோய் பரப்பும் கிருமி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

அந்த மாவட்டங்கள் பின்வருமாறு :

1. காஞ்சிபுரம்
2. திருவள்ளூர்
3. வேலூர்
4. கடலூர்
5. திருவாரூர்
6. கன்னியாகுமரி
7. நாகை
8. விழுப்புரம்
9. திருச்சி
10. பெரம்பலூர்
11. புதுக்கோட்டை
12. திருவண்ணாமலை
13. தஞ்சாவூர்
14. அரியலூர்

இந்த நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் மாத்திரை நம்மிடம் இருக்கிறது அதற்குப்பெயர் “Di Ethyl Carbamazine” சுருக்கமாக DEC என்று அழைக்கப்படும்.

ஒரே மாத்திரை தான் கிருமி குளோஸ். இந்த மாத்திரையை நோய் பரவும் மாவட்டங்கள், கிராமங்களில் ஒருமுறை அனைவருக்கும் உண்ணக்கொடுப்பார்கள்.
இந்த மாத்திரையால் தான் இப்போது யானைக்கால் வியாதி அரிதிலும் அரிதாகிவிட்டது

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

கடைசி வியாதி “சிக்கன் குனியா”

சிக்கன் சாப்பிடுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடுமையான மூட்டு வலியை உருவாக்கும் இந்த நோயை; 2006 -ல் தமிழகம் முழுவதும் வந்த சிக்கன் குனியாவை யாராலும் எளிதில் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

இதுவும் டெங்குவும் ஒரே வகையான ஏடிஸ் கொசுவால் பரப்பப்படுபவை. மேற்சொன்ன நோய்கள் அனைத்தும் கொசுவால் பரப்பப்படும் நோய்கள்.

***

மிழகத்தில் கொசு கடிக்காமல் யாரேனும் இருக்கிறீர்களா? கொசு கடி வாங்குபவர்கள் அனைவரும் அலர்ட்டாக இருக்க வேண்டும்.

மலேரியா வந்தால் கடும் குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் வரும். சென்னை அல்லது ராம்நாடு சென்று வந்தீர்களா? கவனம் தேவை.

டெங்குவில் முதல் மூன்று நாள் கடும் காய்ச்சல் இருக்கும் அடுத்த மூன்று நாட்கள் உடல் குளிர்ந்து விடும். பகலில் கொசு கடிக்கிறதா? உசாரய்யா உசார்.

வயல்வெளிகள் / மலை காடுகள் போன்றவற்றில் தான் அதிகம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரப்பும் க்யூலக்ஸ் இருக்கும்.

எது எப்படியோ காய்ச்சல் / உடல் வலி / அசதி என்று வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருந்தகங்களில் நேரடியாக மருந்து வாங்கி உண்பது தவறு.

கொசுக்கடி வாங்காமல் இருக்க வீடு முழுவதும் ஜன்னல்களில் வலை அடிக்கலாம். குழந்தைகளை முழு ஆடை போட்டு மூடி வைக்கலாம். வலைக்குள் குழந்தைகளை உறங்க வைக்கலாம். கொசுக்கடியை முடிந்த வரை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய்களை தவிர்க்க முடியும்.

டெங்கு நோய் பரவாமல் இருக்க நம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேவும் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு தனது நோய் தடுப்புத்துறை மூலம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கொசுக்களை ஒழிப்போம் !
ஆரோக்கியமாக வாழ்வோம் !!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க