வேகமாக மாறிவரும் இவ்வுலகில் அனைத்துமே துரிதகதியில் இயங்கிவருகின்றன. எங்கும் வேகம், எதிலும் வேகம். இன்று புதிது என நாம் காண்பது நாளை நடைமுறைக்கொவ்வாத பழம் பொருளாகிவிடுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவு முற்றிலும் புதிதானவை முளைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இவற்றுக் கான காரணம் என்ன என்று கூறவும் வேண்டுமோ? ஆம், நாளுக்கு நாள் நாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் அடைந்துவரும் அசுர வளர்ச்சியே மனித இனத்தை இத்துணை சிறப்பான நிலைக்கு உயர்த்தி வருகிறது.

சமூக விலங்குகளாகிய நாம், மாறிவரும் உலகின் புதுப் புது சூழ்நிலைகளின் சவால்களை வெற்றிகரமாகச் சந்திக்க, அவற்றுக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டாக வேண்டும். அதற்குரிய திறமைகளை முயன்று அடைந்து சமாளித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லாவிடில் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டவனைப் போன்று வாழ்க்கையையே இழக்க நேரிடும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனிதாப உணர்வுடன் கூடிய சமுதாய வளர்ச்சிக்கான பாதையை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இப்பாதை சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயின் சமீபகாலங்களில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் ஆதார அம்சமாகிய மனிதாபம் என்பது புறக்கணிக்கப் படுவதைக் காண்கிறோம். இந்த அபாயகரமான உண்மைநிலை நம்மைத் தொடர்ந்த கவலைக்குள்ளாக்கிவருகிறது.

1854-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ் சிவப்பிந்தியச் சமுதாயத்தினரைத் தாங்கள் நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுமாறு உத்தர விட்டார். இது தொடர்பாகச் சிவப்பிந்தியர்களின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு: “எங்களுக்குத் தெரியும் … இந்தப் பூமி மனிதர்களுடையதல்ல. ஆயின் மனிதர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள். இரத்தமானது எவ்வாறு ஒரு குடும்பம் முழுவதையும் இணைக்கிறதோ அவ்வாறே இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. நறுமணமுள்ள பூக்கள் நமது சகோதரிகள் . . . மான்கள், குதிரைகள், பருந்துகள் எல்லாமே நமது சகோதரர்கள் மனித இனம் எல்லாமே மலையுச்சிகள், பசுமையான புல்தரைகள், அடர்ந்த காடுகள் மற்றும் மனித இனம் எல்லாமே ஒரே குடும்பத்தின் பல்வேறு அங்கங்கள், ஊற்றுகளிலும் நதிகளிலும் பாயும் நீர் வெறும் தண்ணீரல்ல …. அது எங்கள் முன்னோர்களின் இரத்தமே. இந்த நிலத்தை ஒப்படைக்கும் படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் நினைவில் கொள்ளுங்கள் இப்பூமி புனிதமானது. அது தனது தூய்மை பற்றி உங்கள் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும்….”

Amazon Rainforest fire… அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்க உயர்வுகளை மேன்மேலும் கண்டுகொண்டிருக்கையில் பாமர மக்களிடையே, ஏன் படித்தவர்களிடையேயும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் இன்னமும் இருப்பது வருந்தத்தக்கன. சகுனங்கள், வாஸ்து, வண்ணக்கற்களை அணிகலன்களில் பொருத்துவது, பெயரின் எழுத்துக்களை கூட்டுவது / குறைப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது என இந்தப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும் ஒன்று. இத்தகையவற்றை மக்கள் மனதிலிருந்து நீக்கி, மனிதர்கள் மனிதர்களாக மனித நேயத்துடன் வாழ்வதற்கு எங்களது வெளியீடுகள் பெரிதும் உதவுபவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)

பெருவெடிப்பு (பிக் பாங்க்) கோட்பாடு :

அகிலத்தின் தொடக்கத்திற்குக் காரணம் பெரு வெடிப்பு நிகழ்வே என்பது பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு அறிவியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, இந்நிகழ்விற்கு முன்னால் அகிலம் ஒரு மிக மிக அடர்த்தியான குறுக்கப்பட்ட நிலையில் மிகவும் வெப்பமான நிலையில் இருந்ததாக அறிகிறோம். சுமார் 15 பில்லியன் (1500 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர், இந்த அகிலம் தொடர்ந்து விரிவடைந்தும் குளிர்ந்து கொண்டும் வருகிறது. 1927-ல் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜியார்ஜிஸ் லெமைடர் இந்த அகிலம் “தொன்மையான ஒரு அணு” வெடித்ததால் உருவானதாகக் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த எட்வின் ஹப்பின் எனும் வானவியலாளர் மேற்கூறிய கருத்தை ஆதரிக்கும் ஆதாரங்களை 1929-ல் கண்டுபிடித்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பின்படி, நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன. அகிலம் ஒரே சீராக விரிவடைந்து கொண்டிருக்கிறது; அதாவது காலக்ஸிகள் அவை உள்ள தொலை தூரத்திற் கேற்பக் கூடுதல் வேகத்தில் விலகிச் சென்றுகொண்டுள்ளன.

அறிவியலும் மதமும் !

உண்மையிலேயே பெரு வெடிப்பு நிகழ்ந்திருந்த அச்சமயம் ஏற்பட்ட கதிர் வீச்சின் சுவடு கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றன. இந்தப் “பெருவெடிப்புக் கதிர்வீச்சின் மிச்சம்” பற்றிய கண்டுபிடிப்பை 1965-ம் ஆண்டு ஆர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் எனும் விஞ்ஞானிகள் செய்தனர். இதற்காக இவர்களுக்கு 1978-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெருவெடிப்பு நிகழ்வு பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அகிலம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விஞ்ஞானிகளால் இன்றுவரை சரிவர விளக்க முடியவில்லை. அவை விளக்கப்படாமலேயே போகக் கூடும். இதனால் விடையளிக்கப்படாத பல கடினமான கேள்விகள் அப்படியே இருந்துவிடலாம். (நூலிலிருந்து பக்.11-12)

க்வான்டம் கோட்பாடு (Quantum Theory) :

கதிரியக்க ஆற்றல் அலைவீச்சுக் கோட்பாடு : பொருளினால் சக்தி வெளிப்படுதல், சக்தி உள் வாங்கப்படுதல் மற்றும் துகள்களின் இயக்கம் பற்றிய நவீன இயற்பியல் கோட்பாடு “க்வான்டம் கோட்பாடு” எனப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, மிகமிகச் சிறிய அளவுடைய அணு மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் ஆதாரத்துகள்கள் போன்றவை சம்பந்தப்பட்டவற்றை அறிய மிக முக்கியமானது. இந்தக் கோட்பாடு மூன்று அடிப்படை உந்துவிசைகளைப் பற்றி விளக்குகிறது – மின்காந்த விசை, பலவீனமான விசை மற்றும் பலமிக்க விசை, இது புவி ஈர்ப்பு விசை பற்றி விளக்காது. க்வான்டம் கோட்பாட்டினால் அணுக்கள் பற்றியும், வேதியல் மற்றும் வேதியல் இணைப்புகள் பற்றியும் அறிய முடிகிறது. கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் க்வாண்டம் கோட்பாட்டின் அடிப்படையிலானவை.

படிக்க:
உ.பி : பிரியாணியை வைத்து பிரச்சினை கிளப்பிய பிரியாணி அண்டா திருடர்கள் !
காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

க்வான்டம் கோட்பாடு வித்தியாசமானது. வழக்கமான கோட்பாட்டின்படி சக்தி என்பது ஒரு தொடர் நிகழ்வாகக் கருதப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, பொருள் மற்றும் சக்தியை “க்வான்டா” என அழைக்கப்படும் தனித்தனியான, கண்ணுக்குத் தெரியாத சிறு பெட்டகங்களாக (Packets) விளக்குகிறது. ஒரு அணு உட்கிரகிக்கும் அல்லது வெளியிடும் கதிர்வீச்சின் அதிர்வெண், ஒளி க்வான்டா அல்லது ஃபோட்டான்களின் சக்தியைப் பொறுத்தது என க்வான்டம் கோட்பாடு விளக்குகிறது. (நூலிலிருந்து பக். 84-85)

நூல் : இயற்பியல் உலகம்
ஆசிரியர் : முனைவர் தினேஷ் சந்திர கோஸ்வாமி
தமிழில் : சி.எஸ். வெங்கடேஸ்வரன்

வெளியீடு : அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2811 3630.

பக்கங்கள்: 104
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க