ச்சிறு நூல் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானது. மதவாத அரசியல் நம் நாட்டில் வலுப்பெற்றுவரும்பொழுது அதுபற்றிய விமர்சனங்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இந்த நூலில் இதன் ஆசிரியர்கள் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். இந்த நூலில் இந்து மதத்தின் வரலாறு. இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை மறுத்துவிட்டு இதனை இந்துத்துவா என்ற ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை இதன் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். (முன்னுரையிலிருந்து…)

நம்மில் பெரும்பாலோர் வேதங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு காயத்ரி மந்திரம் போன்றவற்றைத் தெரியும் அல்லது பாராயணம் செய்யமுடியும். வேதகாலக் கணிதம் பற்றி நாம் கற்றிருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். வரலாற்றில் வேதகாலம் என்று அழைக்கப்படுவது பற்றி நமக்கு ஒரு தெளிவற்ற கருத்து நமக்கு இருக்கலாம். அந்தக் காலகட்டம் எவ்வாறு இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டால் நாம் பல்வேறு விடைகளை அளிக்கும் நிலையில் உள்ளோம். எனவே, மிகப் பழங்காலத்தின் ஒரு பகுதியாக அதைக் காண்கிறோம். நம்மில் ஒரு சிலர் அதனை பெண்களுக்கான பொற்காலம் என்று கருதுகிறோம். அதாவது பெண்கள் கவிதை புனைந்தனர். சடங்குகளில் பங்கு பெற்றனர். ஊர் சபையில் பங்குபெற்றனர் என்று கருதுகிறோம். வேறு சிலர், வேதகாலம் என்பது ஒரு வகையான ஜனநாயகம் இருந்த காலம் என்று எண்ணுகிறார்கள்.

அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக, வேத காலத்துடன் வேறு சில பண்புகள் இணைக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். பத்திரிகைகளிலும், வார ஏடுகளிலும், வேத கால மக்கள் தாம் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்று கூறுவதையும் காண்கிறோம். வேத இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறும் ஹரப்பா நாகரிகம் அமைந்திருந்த இடத்தில் உள்ள ஆறும் ஒன்றுதான் என்ற கருத்தில் எழுந்த கூற்று இது. மிகவும் சுருக்கமாகக் கூறினால், ஹரப்பா நாகரிகமும், வேதங்களும், ஒரே இன மக்களால் உருவாக்கப்பட்டவை என்ற முடிவு இதில் இடம் பெறுகிறது. பெரிய நகரங்களில் வசித்தவர்களும், தூர தேசங்களுடன் வாணிபம் செய்தவர்களுமான உயர்ந்த நாகரிகம் உள்ள மக்களால்தான் வேத மந்திரங்கள் உருவாக்கப்பட்டன என்பது இதன் பொருள் ஆகிறது.

… எல்லா அறிவும் வேத சம்பந்தமானதா? உண்மையில் அவ்வாறு இல்லை. இது ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும் இது ஒரு குறிப்பிட்ட வகை நூல்களைச் சுட்டுவதாகவே உள்ளது. இவற்றை சடங்குகள் தொடர்பான படைப்புகள் என்று தாம் வரையறுக்கலாம்.

… மந்திரங்களே அதிகமாக உள்ள மூன்று அல்லது நான்கு வேதங்கள் தவிர, பிந்திய வேதங்கள் என்று அழைக்கப்படும் ஏராளமான இலக்கியங்கள் உள்ளன. இற்றிற்கு உள்ளாக நாம் மூன்று அல்லது நான்கு வகையைக் காணமுடியும். மேலும் சூத்திரங்கள் போன்றவற்றில் இன்னும் உட்பிரிவுகள் உண்டு. இந்த நூல்களுக்கு இடையே சில பொதுப்பண்புகள் உள்ளன. முதலாவது, இவற்றில் பெரும்பாலானவை உரைநடையில் உள்ளன. மந்திரங்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. இரண்டாவது இவையாவும் மனிதனால் படைக்கப்பட்டவை எனப்படுகின்றன. இவை நான்கு வேதங்களைப் போன்று ஸ்ருதிகள் அல்ல. வேதங்கள் தெய்வீகமானவை அவை கேட்கப்பட்டவை அல்லது உள்ளுணர்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டவை. காலப்போக்கில் சில நூல்களை ஸ்ருதிகள் என்று வகைப்படுத்தும் போக்கு உருவாயிற்று.

படிக்க:
பகவத் கீதை பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

… பிராமணர் என்பது ஒரு சமூகப் பிரிவு என்பது நம்மில் பலருக்குத் தெரியும். பிரம்மாணங்கள் என்பதை பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும். இவை மிகவும் நீளமானவை. உதாரணமாக பிரபலமான சத்பத பிரம்மாணம் என்பது நூற்றுக்கணக்கான பக்கங்களுக்குச் செல்கிறது. சடங்குகள் மிகவும் சிக்கலான போது, இந்த நூல்கள் இயற்றப்பட்டன. சிலவற்றில் சடங்குகள் செய்யப்பட வேண்டிய வரிசை விளக்கப்படுகிறது. வேறு சில, குறிப்பிட்ட மந்திரங்களின் அர்த்தம் பற்றி விவாதிக்கின்றன. அரசர்கள், குருமார்கள் ஆகியோர் பற்றி கதைகள் இவற்றில் இடம் பெறுகின்றன. அஸ்வமேதம், ராஜசூயம் போன்ற யாகங்களை எவ்வாறு செய்வது என்பது பற்றி நீண்ட விவாதங்கள் சிலவற்றில் இடம்பெறுகின்றன. மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை அறிந்தவர்கள், சடங்குகளுக்கு இவற்றில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது பற்றி அறிந்திருப்பார்கள். ராமாயணத்தில், வீரர்களின் பிறப்பிற்காக அஸ்வமேதயாகம் செய்யப்படுகிறது. ராவணனை வெற்றிக் கொண்ட பின்னர் ராமர் இந்த யாகத்தை செய்ததாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் யுதிர்ஷ்டிரர் ராஜசூய யாகம் செய்வது முக்கியமாகக் கூறப்படுகிறது. இது கதையில் திருப்பு முனையாகக்கூட அமைந்துள்ளது.

பிரம்மாணங்கள், பலிகள் பற்றிய நூல்கள் ஆகும். ஆனால், ஆரண்யகங்கள் (காடுகளுக்குரியவை : தனிமையில் இருந்து கற்க வேண்டியவை என்பது இதன் பொருள்) உபநிடதங்கள் (குருவின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டியவை) ஆகியன புதிய பாரம்பரியத்தைச் – அதாவது தத்துவ விசாரம்- சார்ந்தவை. சடங்குகளை இயந்திர கதியில் செய்தால் அவற்றின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள இயலாது என்பது இவற்றில் கூறப்படுகிறது. வாழ்வு, சாவு, படைப்பு ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. கர்மத்தின் அடிப்படையில் மறுபிறவி உண்டு என்ற முக்கியமான கருத்துக்கள் இவற்றில் முதன் முறையாக இடம் பெறுகின்றன. இவை செல்வாக்குள்ளவையாக இடம் பெற்றன. பிந்தியக் காலக்கட்டத்தில் வேதாந்தச் சிந்தனையாக இவை வளர்ச்சி பெற்றன. (வேதாந்தம் என்ற சொல் வேதங்களின் முடிவு அல்லது இறுதி லட்சியம் என்று பொருள்படும்). (நூலிலிருந்து பக்.1-7)

பிந்தியகால வேத நூல்களில் – குறிப்பாக சூத்திரங்களில் – பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் மந்திர உச்சாடனம் செய்யும் உரிமை இல்லை என்று கூறப்பட்டது. எனவே மக்கள் தொகையில் பெரும்பாலோருக்கு இவற்றை உச்சரிக்கவும், கற்றுக்கொள்ளவும் வழி இல்லாமல் போயிற்று. பல கதைகள் மூலம் இந்தக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது ராமாயணத்தில் இடம் பெறும் சம்புகன் கதை நமக்குத் தெரியும் சம்புகன் என்ற சூத்திரன் தவம் செய்தான். இது பிராமணர்களுக்கு அச்சத்தை தந்தது. அவர்கள் ராமனிடம் சென்று முறையிட்டனர். சம்புகனைக் கொன்று இதனைச் சரி செய்ய ராமர் தீர்மானித்தார். இது உண்மையில்லை என்று கருதினாலும், இந்த தடையைப் புறக்கணிக்கும் சூத்திரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை ஆகும். (நூலிலிருந்து பக். 11 -12)

இந்து மதத்தின் புனித நூல்களுக்குரிய மற்றொரு பண்பினை நாம் குறிப்பிட வேண்டும். கொள்கையளவில் வேதங்கள் மட்டும்தான் புனைக் கருத்தளவில் இந்துக்களின் மிகவும் புனிதமான நூல்கள் என்று நாம் ஏற்கெனவே கண்டோம். ஆனால் அந்நூல்கள் இந்துக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு ஏன் மத வாழ்க்கைக்குக்கூட இயல்பானதாக இல்லை. மத நடவடிக்கைகளுக்கும் தொடர்பு அதிகம் இல்லை. அவ்வாறாயின் இந்துக்களுக்கு வழிகாட்டியாக உள்ள பிரபலமான புனித நூல் எதுவும் கிடையாதா? உண்மையில் இந்துக்களுக்கு நிறையவே புனித நூல்கள் உள்ளன. ஆனால் வரையறுக்கும் தன்மையுள்ள ஒரே நூல் இல்லை.

இந்து மதத்தின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு அவர்களுக்குரிய சில நூல்கள் உள்ளன. அவற்றை அவர்கள் புனிதமாகக் கொள்கின்றனர். உதாரணம் வைணவர்களின் பாகவத புராணம்; சாக்தர்களின் தேவி-மகாத்மியம்-இதுவும்கூட, இடத்தைப் பொறுத்தும், உட்பிரிவுகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றது. உதாரணமாக சைத்தன்ய சரிதாமிர்தம் என்பது வங்காள வைணவர்களுக்கு மிக முக்கியமானது. இந்து மதத்தின் அநுசரிக்கும் தன்மையைக் கணக்கிலெடுத்தால் இது இயல்பானதே. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நூல் என்று ஒன்றைக் கூற வேண்டுமானால், நமது மனதுக்கு உடனே வருவது ஸ்ரீமத் பகவத்கீதை ஆகும். இது குருஷேத்திப் போர்களத்தில், யுத்தம் துவங்குவதற்கு முன்னர் தனது உறவினர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த அர்ஜூனன் சஞ்சலமுற்றபொழுது, கிருஷ்ணர் அர்ஜூனனுக்குச் செய்த, நீண்ட உபதேசம் இதில் உள்ளது. கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டளவில் இது எழுதப்பட்டது. இதில் இதுவரை உருவாக்கப்பட்ட இந்து மத தத்துவங்களின் நடைமுறை சார்ந்த கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், சிந்தனை உலகில் கீதை இரண்டு முக்கியமான பங்கினை பூர்த்தி செய்துள்ளது.

♦ முக்திக்கான வழிகளான ஞானம், செயல், பக்தி ஆகியவற்றில் பெரும்பான்மையோருக்கு ஏற்றது பக்தி என்பது.

♦ பற்றுக்களை உதறி, பலனை எதிர்பாராமல் ஒருவன் அவனது கடமையைச்  செய்ய வேண்டும். ஏனென்றால் செயல்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டன; தவிர்க்க முடியாதவை. இந்த உலக நிகழ்ச்சிகளில் ஒருவன் கருவி மட்டுமே ஆவான்.

படிக்க:
பகவத் கீதையை தடை செய் !
நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

இந்த எளிமையான, சற்று சுய முரண்பாடு உள்ள தத்துவமானது தனிநபர் முயற்சிக்கு தடையாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் காலங்காமாக இந்திய மனதின் மீது இந்த நூல் பெரும் செல்வாக்கைப் பெற்று வந்துள்ளது. அத்வைத தத்துவவாதி சங்கராச்சாரியாரிடத்தில் துவங்கி பக்தி மார்க்கக் கவிஞர் ஞானேஸ்வரர் இந்திய தேசிய இயக்கத்தின் தலைவர் மகாத்மா காந்தி வரையுள்ள பல இந்திய சிந்தனையாளர்கள் அவரவர்கள் புரிதல், விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப கீதைக்கு விளக்கம் எழுதியுள்ளனர். புரட்சியாளர்கள், அகிம்சை மார்க்க சத்யாகிரகிகள் ஆகிய இருவருமே, பற்றற்ற செயல் என்ற கீதையின் லட்சியத்துடன் தங்களை உயிரையே அப்பணிக்கச் சித்தமாயிருந்தனர். இதனால்தான் கீதையானது இந்துக்களின் மத நூல்களில் ஒரு சிறப்பான இடத்தைப்பெற்றுள்ளது. இது கிருஷ்ணரின் வாய்மொழியாக இருந்த போதிலும், இந்து மதத்தின் பல்வேறு பிரிவினரும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இருப்பினும் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர் இந்துக்களின் பக்திக்கு உரியவர் அல்லர்; வெண்ணெய் திருடும் சிறு குழந்தையான கிருஷ்ணரைத்தான் அவர்கள் அதிகம் வணங்குகின்றனர். இந்துயிசத்தில் புரிந்து கொள்ள முடியாத பண்புகளில் இதுவும் ஒன்று. (நூலிலிருந்து பக்.76-78)

நூல் : வேதங்கள் இந்துயிசம் இந்துத்துவா
ஆசிரியர்கள் : கும்கும்ராய், குணாள் சக்கரவர்த்தி, தனிகாசர்க்கார்
தமிழில்: எஸ். தோதாத்ரி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 26359906 , 26251968

பக்கங்கள்: 112
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagamnannool

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க