ணு மின்சாரத்திற்கு மாற்றாக சூரிய ஒளி மின்சாரம் பேசப்பட்டுவரும் தருணத்தில், அதனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களில் முன்னணித் தொழில் நுட்பமாக இருக்கும் ஒன்றில் கேட்மியம் டெல்லுரைடு என்ற வேதிப் பொருளால் ஏற்படும் நோய்கள் (இடாய் இடாய் நோய்) பற்றியும், அதனால் எற்படும் சூழல் சீர்கேட்டையும் நிச்சயம் “சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு” பேசும்.

… அணுசக்திக்கு எதிராக சூரிய ஒளி மின்சாரம் பிரபலமாகப் பேசப்படும் வேளையில், எப்படி நாம் பெறப்போகும் (?) மெல்லிய ஃபிலிம் தொழில் நுட்பத்தின் சூரிய ஒளி மின்சாரம் என்பது வெளிநாடுகளில் நட்டத்தை சந்தித்து வருகிறது; குறைந்த மின்மாற்றுத் திறன் கொண்டது; சுற்றுச்சூழல்/சுகாதார சீர்கேட்டை அதிகம் ஏற்படுத்துவது; அதிக நிலப்பரப்பு தேவைப்படுவது; அதிக அளவில் பாழ்படுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு உபகரணங்களுக்கான சந்தையை இங்கே ஏற்படுத்தி அவர்களுக்கு அதிக இலாபமும், இங்குள்ள தொழில் முனைவோர்க்கு பாதிப்பும் ஏற்படுத்துவதாக இருப்பதைக் கணக்கில் கொண்டால், மாற்றுத் திட்டங்கள் (Alternate) கூட பன்னாடு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் சாதகமாக இருப்பதைக் கணக்கில் கொண்டு, எந்தத் தொழில் நுட்பத்தை நம் நாட்டில் கொண்டு வந்தாலும் அதன் முழு சாதக பாதகங்களை மக்களுக்கு முழுமையாகத் தெரியப்படுத்தி, அதன்படி விரிவான விவாதம் மேற்கொண்டு, மக்களைக் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே மக்களுக்கு (குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு) சாதகமாக அமையும். அந்த வகையில் இந்த நூலின் பங்கு அளவிடற்கரியது. (நூலின் முன்னுரையிலிருந்து…)

… வால்மார்ட்டும், மான்சான்டோவும்தான் 60 சத சூரிய மின் தகடு விற்பனையில் இருக்கின்றனர் என்றபோது ஆய்வுக்குப் புதிதாக ஆர்வம் பிறந்தது. தமிழக அரசு, மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு எப்படி மேற்குலக வணிக “அரசர்களுக்குத் ” தமிழக மக்களின் வளத்தை விற்கின்றது என்பதும், இதில் தமிழகத்தின் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களைப் பிழிந்து, உலகச் சந்தையில் தடுமாறிக் கொண்டிருக்கும் மேற்குலக அந்நிய முதலாளிகளைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதும் புரிந்தது..

தமிழகத்தின் நிலத்தை மட்டுமல்ல. நீரையும், மக்கள் நல்வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் மான்சான்டோவும், வால்மார்ட்டும் காலூன்றிக் கடை விரிக்க வழி திறந்திருக்கும் அரசின் கொள்கைதான் தமிழக அரசின் சூரிய மின்சக்திக் கொள்கை என்பதனை மக்களின் ஆய்வுக்கு வைப்பது எங்கள் கடமை. அதனை நிறைவேற்றுகிறது இந்த நூல். (நூலாசிரியரின் உரையிலிருந்து…)

தமிழக சூரிய ஒளி மின் கொள்கை நாம் கண்டறிய வேண்டியவை :

♦ சூரிய ஒளி மின் கொள்கையின் காரணமாகக் தமிழகத்தின் தொழில் மற்றும் வணிகத் துறையும், மின்சார வாரியமும், தமிழகத்தின் நிலப்பயன்பாட்டு முறையும், சுற்றுச் சூழலும் பெரும் மாற்றங்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசின் இன்றைய மின் பகிர்மான நடைமுறையானது தமிழகத்தை இரண்டு வகை சமூகங்களாகப் பிரித்துள்ளது. மின்சார வளம் கொண்ட சமூகமாக சென்னைப் பகுதியையும், மின்சாரப் பற்றாக்குறை மிகுந்த பகுதிகளாக மாநிலத்தின் பிற பகுதிகளையும் அது வகைப்படுத்தியுள்ளது. இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ள இரண்டு வகை சமூகங்களை அரசின் சூரிய ஒளி மின் கொள்கையானது எவ்வகையில் பாதிக்கும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

படிக்க:
இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?

இந்தியாவிலேயே அதிக நட்டத்திற்குள்ளான மின் வாரியம் என்ற பெயரைத் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது. அதன் மின் பகிர்மானக் கட்டமைப்புகளைத் தனியாரிடம் விற்பதனை வழிவகை செய்யும் மத்திய அரசின் கடன் மறு சீரமைப்பு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் கையொப்பமிட்டுள்ளது. 2013 டிசம்பருக்குள் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களின் மின் பகிர்மானக் கட்டமைப்புகளைத் தனியாரிடம் விற்பதைச் சாத்தியப்படுத்தும் முன் வரைவு ஆய்வுகளை மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பது இந்த உடன்பாட்டிற்கான அடிப்படை நிர்ப்பந்தகளில் ஒன்றாகும். எனவே, தனியார்மயமாக்கப்படும் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் மின்சாரவாரியத்தின் மீது சூரிய ஒளி மின் கொள்கையானது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனை நாம் கண்டறிய வேண்டியுள்ளது.

♦ சூரிய ஒளி மின் கொள்கையால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 3000 மெகாவாட் நிறுவுதிறனை அடைய 15,000 – 20,000 ஏக்கர் நிலங்கள் அவசியமாகும். நிதி நிலையில் பின் தங்கியுள்ள தென் தமிழகத்தின் இந்த நிலங்கள் சூரிய மின் நிலையங்களை அமைக்கப்போகும் நிறுவனங்களின் கைகளில் செல்லவிருக்கிறது. இதனால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளையும் நாம் கண்டறிய வேண்டும்.

♦ சூரிய ஒளி மின் கொள்கையினை நிறைவேற்றிடத் தேவைப்படும் மின் உற்பத்தி உபகரணங்களால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனை உலகின் பிற நாடுகளில் இது குறித்து நடந்துவரும் விவாதங்களில் இருந்து அறிகிறோம். இந்த பாதிப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டியுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் வலையக் கட்டமைப்பு (Grid) தோராயமாக 11,000 மெகாவாட்டை அதிகபட்சமாகக் கையாளுகிறது.இது காற்றாலையின் நிலையற்ற மின்சாரத்தையும் உள்ளடக்கியதாகும். அத்துடன் சூரிய மின்சாரம் என்ற 3000 மெகாவாட் நிலையற்ற மின்சாரமும் சேர்ந்து கொண்டால், மின்வலைக் கட்டமைப்பில் நிலையான மின்சாரத்தின் அளவைவிட நிலையற்ற மின்சாரத்தின் அளவு கூடிப்போகும்; அல்லது சமமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தொழில்நுட்ப ரீதியாகக் கையாள முடியுமா என்பது குறித்தும் அறிந்தாக வேண்டும்.

♦ பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தில் இன்று நிலவும் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை. எனவே, இந்தக் கொள்கையினால் ஏற்படப் போகும் பிற மாற்றங்களை ஆய்வது தேவையாகிறது. (நூலிலிருந்து பக்.48-50)

நூல் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு
ஆசிரியர் : சா. காந்தி

வெளியீடு : சமூக விழிப்புணர்வு பதிப்பகம்,
68, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 94885 76166

பக்கங்கள்: 138
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.