உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 2அ

கிழவி கமறிக்கொண்டும் சிடுசிடுப்புடன் ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டும் பரணிலிருந்து இறங்கி வந்தாள். அந்தக் கணமே இறைச்சிப் பணியாரத்தை ஒரு கை பார்க்க ஆயத்தமாகி விட்டாள். சமாதான காலத்தில் இறைச்சிப் பணியாரத்தின் மேல் அவளுக்குக் கொள்ளை ஆசையாம், சொல்லிக் கொண்டாள்.

நால்வரும் மேஜையைச் சுற்றி அமர்ந்து, உறங்குவோரின் பல்வகைக் குறட்டை ஒலிகளுக்கும் நடுவே பசியுடன் நன்கு சுவைத்துச் சாப்பிட்டார்கள். அலெக்ஸேய் வாய் ஓயாமல் பேசினான், கிழவியைச் சீண்டினான், மரீனாவுக்குச் சிரிப்பூட்டினான். தனக்குப் பழக்கமான படையினர் வாழ்க்கைச் சூழ்நிலையில் இருந்தமையால் சுற்றித் திரிந்த பின் சொந்த வீடு திரும்பியவன் போல உணர்ந்தான் அவன்.

சாப்பாடு முடிவதற்குள் நண்பர்கள் பல விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள்: ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் ஜெர்மன் படை அலுவலகம் இருந்தது. அதனால் தான் இது அழியாமல் தப்பியது. சோவியத் சேனை தாக்கத் தொடங்கியதும் பகைவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள். அந்த அவசரத்தில் கிராமத்தை அழிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. கிழவியின் மூத்த மகளை ஜெர்மானியர்கள் பலவந்தமாகக் கற்பழித்துவிட்டார்கள். அப்புறம் அந்தப் பெண் குளத்தில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டாள். அதன் பிறகு கிழவிக்கு மூளை பிசகிவிட்டது.

ஜெர்மானியர் இந்த வட்டாரங்களில் இருந்த எட்டு மாதங்களையும் மரீனா வீட்டுப் புறக் கடையில் வெற்றுக் களஞ்சியத்துக்கு உள்ளே பதுங்கி, வெளியிலேயே வராமல் வைத்தாள். களஞ்சியத்தின் வாயில் வைக்கோலாலும் தட்டு முட்டுச் சமான்களாலும் மறைக்கப்பட்டது. ஒவ்வோர் இரவிலும் தாயார் சாப்பாடும் தண்ணீரும் கொண்டுபோய்ச் சிறு ஜன்னல் வழியே அவளுக்குக் கொடுத்து வந்தாள். மரீனாவுடன் அலெக்ஸெய் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப் பேசினானோ அவ்வளவுக்கவ்வளவு அவள் பெத்ரோவைப் பார்த்தாள். மகிழ்வும் கூச்சமும் கொண்ட அவளது பார்வையில் பாராட்டு மறைக்க முடியாதவாறு புலப்பட்டது.

எப்படிச் சாப்பிட்டோம் என்று கவனிக்காமலே எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள். மிஞ்சிய உணவுப் பண்டங்களை மரீனா செட்டாகக் காகிதத்தில் சுற்றி, படைவீரனுக்கு எல்லாம் பயன்படும் என்று சொல்லியவாறு மெரேஸ்யெவின் சாமான் பைக்குள் வைத்தாள். அப்புறம் கிழவியிடம் ஏதோ கிசுகிசுத்துவிட்டுத் தீர்மானமாகக் கூறினாள் :

“கேளுங்கள். உங்களை அதிகாரி எப்போது இங்கே தங்க வைத்து விட்டாரோ நீங்கள் இங்கேயே தங்குங்கள், நீங்கள் அடுப்பு பரணில் படுத்துக்கொள்ளுங்கள். அம்மாவும் நானும் சாமான் உள்ளில் படுக்கை போட்டுக் கொள்கிறோம். பிரயாணக் களைப்பு தீரப் படுத்து உறங்குங்கள். நாளை உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்வோம்.”

முன்போலவே தூங்குபவர்களுக்கு இடையே வெறுங்கால்களால் அனாயசமாக நடந்து முற்றத்திலிருந்து பனிக்காலக் கோதுமை வைக்கோல் கட்டு ஒன்றை எடுத்து வந்து அகன்ற பரண் மேல் தாராளமாகப் பரப்பினாள். எவையோ துணிகளைச் சுருட்டித் தலைக்குயரமாக வைத்தாள். இவை எல்லாவற்றையும் மளமளவென்று, லாவகமாக, சந்தடி செய்யாமல், பூனை போன்ற நயப்பாட்டுடனும் செய்தாள்.

மூட்டுகள் சுடக்கு விடும்படி வைக்கோல் மீது அப்பாடா வென்று உடம்பை நீட்டிப் படுத்து, “இந்தப் பெண் நல்ல அழகி, தம்பி!” என்றான் மெரேஸ்யெவ்.

“மோசமில்லை” என்று அலட்சிய பாவநடிப்புடன் சொன்னான் பெத்ரோவ்.

“உன்னைத்தான் எப்படி விழுங்கிவிடுபவள் போலப் பார்த்தாள்!…”

“பார்த்தாள் என்று நன்றாய் சொன்னீர்கள்! ஓயாமல் உங்களுடன் தானே பேசிக் கொண்டிருந்தாள்…..”

ஏதோ பயங்கரமான உணர்ச்சியுடன் விழித்துக் கொண்டான் அலெக்ஸேய். என்ன நேர்ந்தது என்று அவனுக்கு உடனே விளங்கவில்லை. எனினும் இராணுவ வழக்கத்தால் உந்தப்பட்டு அக்கணமே துள்ளி எழுந்து ரிவால்வரை எடுத்துக்கொண்டான். எங்கே இருக்கிறோம், தனக்கு என்ன ஆயிற்று என்பது அவனுக்கு ஒன்றும் நினைவில்லை. காந்தும் புகை எங்கும் கவிந்து குமைந்தது. குப்பென்று வீசிய காற்று புகைப் படலத்தை விலக்கியதும் தலைக்கு மேலே விந்தையான, பளிச்சென மினுமினுக்கும் பிரமாண்டமான விண்மீன்களை அலெக்ஸேய் கண்டான். பகல் போல வெளிச்சமாயிருந்தது. வீட்டின் கட்டைகள் நெருப்புக் குச்சிகள் போலச் சிதறிக் கிடந்தன. கூரை ஒரு பக்கம் சரிந்து விழுந்திருந்தது. உத்தரங்கள் இளித்த பற்கள் போலத் தெரிந்தன. சற்றுத் தொலைவில் உருவமற்ற ஏதோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முனகல்களும் தலைக்கு மேலே அலைகள் போன்ற முழக்கமும் விழும் வெடிகுண்டுகளின் பழக்கமான, அருவருப் பூட்டுகிற, எலும்புகள் வரை துளைக்கும் ஊளையொலிகளும் அவனுக்குக் கேட்டன.

இடிபாடுகளின் நடுவே நின்ற பரண் மீது முழந்தாள்களை ஊன்றி எழுந்து பேந்தப்பேந்த விழித்தவாறு சுற்றிலும் பார்த்தான் பெத்ரோவ். “படு!” என்று அவனை அதட்டினான் அலெக்ஸேய்.

அவர்கள் பரணில் செங்கல் தளத்தில் விழுந்து அதோடு ஒண்டிக்கொண்டார்கள். அந்தச் சமயத்தில் பெரிய வெடிகுண்டுச் சிதர்த் துண்டு ஒன்று அடுப்புப் புகைபோக்கியைத் தாக்கி வீழ்த்தி இருவர் மீதும் செம்புழுதியைக் கொட்டியது. அவர்கள் உலர் களிமண் மணத்தை உணர்ந்தார்கள்.

துள்ளி எழுந்து ஓட வேண்டும் – எங்கேயோ தெரியாது எனினும் இயங்கிக் கொண்டிருக்கவாவது முடியுமே – என்ற அடக்க முடியாத ஆசை அலெக்ஸேய்க்கு உண்டாயிற்று. இரவு விமானத் தாக்குக்களின் போது மனிதனுக்கு எப்போதுமே உண்டாவது இந்த ஆசை. ஆனால் இந்த ஆசையை அடக்கிக் கொண்டு, “இடத்திலிருந்து அசையாதே, படுத்துக்கிட!” என்று உத்தரவிட்டான் அலெக்ஸேய்.

வெடி விமானங்கள் புலப்படவில்லை. அவை தாம் வீசிய ஒளி வாணங்களுக்கு மேலே இருளில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் வெட்டி வெட்டி மின்னிய வெள்ளொளியில் கருந்துளிகள் போன்ற வெடிகுண்டுகள் வெளிச்சப் பகுதிக்குள் பாய்ந்து வர வர அளவில் பெருத்தவாறு கீழே விழுந்ததும், செந்தழல்கள் கோடைகால இருளில் குபீரென்று மூண்டு பரவியதும் தெட்டத் தெளிவாகப் புலனாயின. தரை பல பகுதிகளாகப் பிளந்து “ர்-ர்-ர்ஹ்! ர்-ர்-ர்ஹ்!” என நீண்ட இடி முழக்கம் செய்வது போலத் தோன்றியது.

விமானிகள் இருவரும் ஒவ்வொரு வெடியதிர்ச்சிக்கும் அசைந்து தூக்கிப் போட்ட பரண் மேல் உடல்களைப் பரப்பியவாறு கிடந்தார்கள். அதற்குள் புதைந்து அதன் பகுதியாக – ஒன்றாகிவிட இயல்பூக்கம் காரணமாக முயன்றவாறு உடலையும் கன்னத்தையும் கால்களையும் அதன் மேல் அழுத்திக் கொண்டார்கள் அவர்கள். பிறகு விமான என்சின்களின் கடகடப்பு தொலைவில் அகன்றது. பாராசூட்களில் தொங்கியவாறு தாழ இறங்கிவிட்ட ஒளி வாணங்கள் சீறலுடன் எரியும் ஓசையும், தெருவின் மறுபுறம் இடிபாடுகள் மீது பற்றிக் கொண்ட நெருப்புச் சுவாலைகள் சடசடப்பதும் கேட்டன.

படிக்க:
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அமைதியுள்ளவன் போன்ற நடிப்புத் தோற்றத்துடன் உடுப்பிலும் காற்சட்டைகளிலுமிருந்தும் வைக்கோலையும் களிமண் புழுதியையும் தட்டிப் போக்கியவாறு, “இந்தப் பயல்கள் நமக்குச் சுறுசுறுப்பு ஊட்டிவிட்டார்கள்” என்றான்.

“அவர்கள், இங்கே உறங்கியவர்கள் என்ன ஆனார்கள்? மரீனா என்ன ஆனாள்?” என்று அச்சத்துடன் கூச்சலிட்டான் பெத்ரோவ். நரம்புக் கிளர்ச்சியால் வலிப்புக் கண்டு கோணிய தாடையை நேராக வைத்திருக்கவும் தன்வசமின்றி உண்டான விக்கல்களை அடக்கவும் அரும்பாடுபட்டான் அவன்.

பரணிலிருந்து இறங்கினார்கள். மெரேஸ்யெவிடம் டார்ச் லைட் இருந்தது. தகர்த்து சிதறிய குடிலின் தரைமேல் பலகைகளுடன் கட்டைகளும் குவியல்களாகக் கிடந்தன. டார்ச் வெளிச்சத்தில் அவற்றின் ஊடாக பார்த்தார்கள். அங்கே ஒருவரையும் காணோம். விமானத் தாக்கு அபாயச் சங்கொலியைக் கேட்டு விமானிகள் வெளியே ஓடிக் காப்பிடங்களில் பதுங்கிக் கொண்டார்கள் என்ற விவரம் அப்புறம் தெரியவந்தது.

பெத்ரோவும் மெரேஸ்யெவும் இடிபாடுகளைத் துருவி ஆராய்ந்தார்கள். மரீனாவும் கிழவியும் எங்குமே தட்டுப்படவில்லை. விமானிகள் கூவி அழைத்தார்கள், பதிலே இல்லை. தாயும் மகளும் எங்குதான் போய்விட்டார்கள்? ஓடிவிட்டார்களா? அவர்களால் தப்ப முடிந்ததா?

ரோந்துப்பணிக் காவலர்கள் வீதிகளில் நடந்து ஒழுங்கை நிலை நாட்டத் தொடங்கி விட்டார்கள். சேப்பர்கள் நெருப்புகளை அணைத்து, இடிபாடுகளில் குடைந்து தேடிப் பிணங்களை அப்புறப்படுத்தினார்கள், காயமுற்றவர்களை வெளியே எடுத்தார்கள். அஞ்சல்காரர்கள் விமானிகளைப் பெயரிட்டுக் கூவி அழைத்தவாறு இருளில் ஓடிச் சாடினார்கள். ரெஜிமென்ட் விரைவாகப் புது இடத்துக்கு மாற்றப்பட்டது. விமானிகள் விடியற்காலையில் தங்கள் விமானங்களை ஓட்டிச் செல்ல ஆயத்தமாக விமான நிலையத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டார்கள். பணியினருக்கு ஏற்பட்ட இழப்பு மொத்தத்தில் அதிகமல்ல என்று ஆரம்பத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. ஒரு விமானி காயமடைந்தான், இரண்டு டெக்னீஷியன்களும் விமானத் தாக்கின் போது காவல் பணி ஆற்றிய சில பாராக்காரர்களும் கொல்லப்பட்டார்கள். கிராமவாசிகள் நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என அனுமானிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேர் என்பதை இருட்டிலும் அமளி குமளியிலும் திட்டவட்டமாகக் கணக்கிட முடியவில்லை.

விடியும் தருவாயில் விமான நிலையத்துக்குப் போகும் வழியில் மெரேஸ்யெவும் பெத்ரோவும் தாங்கள் இராத்தங்கிய வீட்டின் இடிபாடுகளின் அருகே தம் வசமின்றியே தயங்கி நின்றார்கள். கட்டைகள், பலகைகளின் குழப்பக்குவியலிருந்து சேப்பர்கள் ஒரு ஸ்டிரைச்சரை எடுத்து வந்தார்கள். இரத்தக் கறை படிந்த துப்பட்டியால் போர்த்தப்பட்ட ஏதோ ஒன்று ஸ்டிரெச்சரில் கிடந்தது..

“யாரை எடுத்துப் போகிறீர்கள்?” என்று துயர் நிறைந்த முன்னுணர்வால் முகம் வெளிற விசாரித்தான் பெத்ரோவ்.

“நிலவறையில் தோண்டிப் பார்த்த பொழுது ஒரு கிழவியும் இளம் பெண்ணும் கிடந்தார்கள். கற்கள் சரிந்து விழுந்து கொன்று விட்டன. உடன் மரணம். பெண் சிறுமியா அல்லது மங்கையா என்று கண்டுகொள்ள முடியவில்லை. சின்னப் பெண். அழகாக இருந்திருப்பாள் என்று தோன்றியது. மார்பில் கல் விழுந்து சிதைத்து விட்டது. ரொம்ப அழகான பெண், சின்னக் குழந்தைப் போல” என்று முதிய மீசைக்கார சேப்பர் பதில் அளித்தார்.

…அன்று இரவு ஜெர்மன் சேனை தனது கடைசிப் பெருந்தாக்கைத் தொடங்கியது. சோவியத் படைகளின் அரண் அமைப்புகளைத் தாக்கி, கூர்ஸ்க் பிரதேசப் போரை ஆரம்பித்தது அது. ஜெர்மன் சேனையின் இறுதி அழிவுக்கு வித்திட்டது இந்தப் போர்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை