உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 03

சூரியன் இன்னும் உதிக்கவில்லை. குறுகிய கோடை இரவின் மிக இருண்ட நேரம். ஆனால் போர்க்கள விமான நிலையத்தில் விமான எஞ்சின்களை சூடுபடுத்துவதற்காக அதற்குள் அவை இயக்கப்பட்டு இரைந்து கொண்டிருந்தன. காப்டன் செஸ்லோவ் பனித்துளிப் படிந்த புல் மீது வரைபடத்தைப் பரப்பி, புதிய தளத்தின் செல் வழியையும் இடத்தையும் ஸ்குவாட்ரன் விமானிகளுக்குக் காட்டினார்.

“விழிப்புடன் இருங்கள். பார்வைக்கு ஏற்பச் செயல்படுவதை விட்டுவிடாதீர்கள் நமது விமான நிலையம் மிக முன்னணியில் உள்ளவற்றில் ஒன்று” என்றார்.

ஆதவனின் முதல் கதிர்கள் வீசத் தொடங்கின. அலைபடிந்த ரோஜா நிற மூடுபனித் திடலில் இன்னும் பரவியிருந்தது. அந்த வேளையில் இரண்டாவது ஸ்குவாட்ரான் தன் கமாண்டரின் பின்னே வானில் கிளம்பிப் பறந்தது. விமானங்கள் ஒன்றையொன்று பார்வையிலிருந்து தப்பவிடாமல் தெற்கு நோக்கிச் சென்றன.

மெரேஸ்யெவும் பெத்ரோவும் தங்கள் முதலாவது சேர்ந்த பறப்பில் நெருங்கிய இணையாகச் சென்றார்கள். தன் முன்னோடியின் தயக்கமற்ற தேர்ச்சி மிக்க பறப்புத் திறமையைத் தாங்கள் பறந்த சில நிமிடங்களுக்குள் பெத்ரோவ் கண்டு கொண்டான். மெரேஸ்யெவோ வழியில் சில செங்குத்தான, திடீர் வளையங்களை வேண்டுமென்றே இட்டான். தன் பின்னோடி கூர்மையான பார்வையும் சமயோசித புத்தியும் நரம்பு உறுதியும் கொண்டிருப்பதையும் அவன் கவனித்தான்.

பெத்ரோவுக்கு ஓரளவு தயக்கமுள்ளதாயினும் நல்ல பறப்புத் திறமை இருந்தது மெரேஸ்யெவுக்கு எல்லாவற்றிலும் முக்கியமாகப்பட்டது.

புதிய விமான நிலையம் பகைவரின் துப்பாக்கி ரெஜிமென்டின் பின்புல வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்குவாட்ரன்கள் ஆயத்த நிலை இரண்டில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால் விமானிகள் தங்கள் விமான அறையிலேயே இருக்க வேண்டும், முதல் வானம் ஒளிர்ந்ததுமே வானில் கிளம்பி விட வேண்டும் என்பதாகும். விமானங்கள் பிர்ச் மரக் காட்டோரத்திற்குக் கொண்டுவரப்பட்டுக் கிளைகளால் உரு மறைக்கப்பட்டன. காளான்களின் ஈரிப்பு மணம் கமழ்ந்த குளிர் காற்று காட்டிலிருந்து வீசியது. சண்டை ஆரவாரம் காரணமாகக் கொசுக்களின் நொய்யென்ற ஒலி காதில் படவில்லை. அவை விமானிகளின் முகங்களையும் கைகளையும் கழுத்துக்களையும் உக்கிரமாகத் தாக்கின.

மெரேஸ்யெவ் தலைக் காப்பைக் கழற்றி விட்டு, சோம்பலுடன் கொசுக்களை விரட்டியவாறு, காலைக் காற்றின் நறிய செழு மணத்தை அனுபவித்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பக்கத்தில் அவனது பின்னோடியின் விமானம் இருந்தது. பெத்ரோவ் அடிக்கொருதரம் இருக்கையிலிருந்து எம்பி அதன் மேல் நின்று கொண்டு, சண்டை நடக்கும் பக்கத்தைப் பார்த்தான் அல்லது வெடி விமானங்களைப் பார்வையால் பின் தொடர்ந்தான்.

படிக்க :
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு

தன் பின்னோடி அலைபாய்வதையும் கிளர்ச்சி அடைவதையும் கண்ணுற்று மெரேஸ்யெவ் சிந்திக்கலானான்: வயதில் அவர்கள் இருவரும் அநேகமாகச் சமமானவர்கள். அவனுக்குப் பத்தொன்பது வயது, மெரேஸ்யெவுக்கு இருபத்து மூன்று. மூன்று நான்கு ஆண்டுகள் வித்தியாசம் ஆண்களுக்குள் ஒரு பொருட்டாகுமா? எனினும் தன் பின்னோடியுடன் ஒப்பிடுகையில் தான் முதியவன், அனுபவசாலி, அமைதியான போக்குள்ளவன், அலுப்புற்றவன் என்று மெரேஸ்யெவுக்குப்பட்டது. அவன் விமானத்தின் தோலுறையிட்ட இருக்கையில் செளகரியமாகச் சாய்ந்து கொண்டான். அவன் நிம்மதியாக இருந்தான். அவனுக்குக் கால்கள் இல்லை, விமானம் ஓட்டுவது அவனுக்கு உலகில் எந்த விமானியையும் காட்டிலும் அளவிட முடியாதவாறு கடினமாக இருந்தது. ஆனால் இது கூட அவனுக்குப் பதற்றம் உண்டாக்கவில்லை. தனது திறமை அவனுக்குத் திண்ணமாகத் தெரிந்தது. எனது வெட்டுண்ட கால்கள் மேல் அவன் நம்பிக்கை கொண்டிருந்தான்.

ரெஜிமென்ட் மாலை வரையில் இரண்டாவது ஆயத்த நிலையில் இருந்தது. எதனாலோ அது சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதன் இருப்பிடத்தை உரிய நேரத்துக்கு முன்பே வெளிப்படுத்தத் தலைமை அதிகாரிகள் விரும்பவில்லை போலும்.

இரவு தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன சிறு நிலவறைகள். ஒரு சமயத்தில் இங்கே இருந்த ஜெர்மானியரால் கட்டப்பட்டவை இவை. இவற்றில் வசித்தார்கள். சுவர்ப் பலகைகள் மேல் அட்டைகளும் மஞ்சள் நிறச் சுவற்றுத் தாள்களும் ஒட்டப் பட்டிருந்தன. காமவேட்கை வெறிததும்பும் பெரிய வாயினரான சில சினிமா நடிகைகளின் படங்கள் கூடச் சுவர்கள் மேல் அப்படியே இருந்தன. கூர்முனைக்கட்டிடங்கள் கொண்ட ஜெர்மானிய நகரங்களின் காட்சிகள் அடங்கிய பலவர்ணப் படங்களும் காணப்பட்டன.

பீரங்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. தரை அதிர்ந்தது. உலர் மணல் காகிதத்தின் மேல் பொலபொல வென்று உதிர்ந்தது. நிலவறை முழுவதும் பூச்சிகள் மொய்த்தது போல அருவருப்பூட்டும் வகையில் சரசரத்தது.

வெட்ட வெளியில் மழைக்கோட்டுக்களை விரித்துப்படுப்பது என்று மெரேஸ்யெவும் பெத்ரோவும் தீர்மானித்தார்கள். உடுப்பைக் களையாமலே படுத்துறங்கும் படிக் கட்டளை இடப்பட்டிருந்தது. மெரேஸ்யெவ் பொய்க்கால்களின் இறுக்கு வார்களை மட்டும் நெகிழ்த்திக் கொண்டு நிமிர்ந்து படுத்து வானத்தை நோக்கினான். குண்டு வெடிப்புக்களின் சிவந்த மினுக்கொளியில் நடுங்கியது வானம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க