அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 41

அத்தியாயம் எட்டு | டாக்டர் கெனேயும் அவரது குழுவும்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்

வ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் புகழ்வாய்க்கிறது. பிரான்சுவா கெனே மருத்துவராகவும் இயற்கை விஞ்ஞானியாகவும் இருந்தார். அறுபது வயதை நெருங்கும் வரையிலும் அவர் அரசியல் பொருளாதாரத்தைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் மருத்துவத் துறையில் பல டஜன் நூல்களை எழுதியிருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களை நண்பர்கள், மாணவர்கள், தன்னைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைக் கொண்ட நெருக்கமான வட்டத்துக்குள் கழித்தார்.

லரோஷ் ஃபுகோ “வயோதிகராகும் கலையை நன்றாக அறிந்தவர்கள் வெகு சிலரே” என்று சொன்னதுண்டு. அந்தக் கலையை நன்கு அறிந்திருந்த வெகு சிலரில் கெனேயும் ஒருவர். அவருடைய உடலுக்கு எண்பது வயது, அவருடைய தலைக்கு முப்பது வயது மட்டுமே என்று அவரது நண்பர்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறினார். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தில் மிகச் சிறந்து விளங்கிய பொருளியலாளர் கெனே என்று கூறலாம்.

அறிவியக்க சகாப்தம்

“பிரான்சில் வரப்போகின்ற புரட்சிக்கு மனிதர்களின் உள்ளங்களைத் தயாரித்த மாபெரும் மனிதர்கள் தாங்களும் தீவிரமான புரட்சிக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட அந்நியக் கட்டுப்பாட்டையும் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமூகம், அரசியல் முறை – இவை ஒவ்வொன்றும் அதிகக் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டன. பகுத்தறிவு என்ற நீதிபதியின் ஆசனத்துக்கு முன்பு ஒவ்வொன்றும் தான் இருப்பதற்குரிய நியாயத்தை எடுத்துக் கூற வேண்டும்; அவ்வாறு கூற முடியவில்லையென்றால் அழிந்து விட வேண்டும்.(1)

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

18-ம் நூற்றாண்டின் சிறப்பு மிக்க சிந்தனையாளர்கள் வரிசையில் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கியவர்களான கெனே, டியுர்கோ ஆகிய இருவருக்கும் மிக மேன்மையான இடம் உண்டு.

கதிரவனின் பிரகாசமான கதிர்கள், விடுதலையடைந்த மனித அறிவின் கதிர்கள் பட்டு நிலப்பிரபுத்துவப் பனி படிப்படியாக உருக ஆரம்பிக்கும் என்று அறிவியக்கத்தினர் நம்பினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உறைந்து போயிருக்கும் பனியை உடைப்பதற்குப் புரட்சியைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மென்மேலும் அதிகரித்தது. பிஸியோகிராட் பொருளியலாளர்கள் உட்பட அறிவியக்கத்தின் இளைய தலைமுறையினர் தங்களுடைய நீண்ட வாழ்க்கையில் இதைப் பார்த்து அஞ்சினர்; மக்களின் ஆவேசம் என்ற பூதம் வாயைப் பிளந்து கொண்டு தயாராவதைப் பார்த்துப் பின்வாங்கினார்கள்.

18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கெனே தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடங்கிய பொழுது பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் நிலை எப்படியிருந்தது?

அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதைப் பற்றி புவாகில்பேர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந்ததோ அந்த நிலையிலிருந்து அதிகமாக மாறாதபடி இருந்தது. பிரான்ஸ் இன்னும் விவசாய நாடாகவே இருந்தது. கடந்த ஐம்பது வருடங்களில் விவசாயிகளின் நிலையில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டிருந்தது. புவாகில்பேரைப் போல, கெனேயும் பிரெஞ்சு விவசாயத்தின் சீர்கேடடைந்த நிலையைப் பற்றிய வர்ணனையோடு தமது பொருளாதார நூல்களை எழுதத் தொடங்கினார்.

படிக்க:
‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?
♦ புவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22

கடந்த ஐம்பது வருடங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பது உண்மையே. சொந்தமாக நிலம் வைத்திருந்த அல்லது நிலவுடைமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு நிலம் வாங்கிய முதலாளித்துவ விவசாயிகள் வர்க்கம் தோன்றியிருந்தது; அது குறிப்பாக பிரான்சின் வடபகுதியில் வளர்ச்சி அடைந்திருந்தது. கெனே விவசாய முன்னேற்றத்தைப் பற்றிய தனது நம்பிக்கைகளை இந்த வர்க்கத்தின் மீதே வைத்தார்; அத்தகைய முன்னேற்றமே சமூகமுழுவதிலும் ஆரோக்கியமான பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படை என்று அவர் சரியாகவே கருதினார்.

பிரான்ஸ் முட்டாள்தனமான, நாசப்படுத்தும் யுத்தங்களை நடத்திக் களைத்துப் போயிருந்தது. இந்த யுத்தங்களின் விளைவாகக் கடல் கடந்த பகுதிகளில் அதன் பிரதேசங்களையும் அவற்றோடு செய்து வந்த லாபகரமான வர்த்தகத்தையும் அது இழந்திருந்தது. ஐரோப்பாவிலும் அதன் நிலை பலவீனமடைந்திருந்தது. அரசவையினர், மேல்வர்க்கங்கள் ஆகியோருடைய ஊதாரித்தனத்துக்கும் வளமான வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களையே தொழிற்சாலைகள் பிரதானமாக உற்பத்தி செய்தன; விவசாயிகள் அநேகமாகக் கைத்தொழிற் பொருள்களையே பயன்படுத்தி வந்தார்கள்.

லோவின் திட்டங்கள் பரபரப்பைத் தூண்டும் வகையில் தோல்வியடைந்ததன் விளைவாகக் கடன், வங்கித் தொழிலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் பொதுமக்களது எண்ணங்களைப் பிரதிபலித்த பலருடைய கருத்தில் தொழில்துறை, வர்த்தகம், நிதி ஆகியவை எப்படியோ பலவிதமான சந்தேகங்களுக்கு ஆளாகியிருந்தன. சமாதானம், வளப்பெருக்கம், இயற்கையான தன்மை ஆகியவற்றின் கடைசிப் புகலிடமாக விவசாயம் தோன்றியது.

misisipi bubble political economy
லோ-வின் திட்டங்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் அமைந்திருந்த் மிசிசிப்பி பங்குசந்தை வீதியை சுட்டிக்காட்டும் ஓவியம்.

லோ கடன் வசதிகளைப் பற்றி புத்தார்வக் கற்பனைகளைக் கொண்டிருந்தாரென்றால், கெனே விவசாயத்தைப் பற்றி அத்தகைய கற்பனைகளை வைத்திருந்தார். இத்தனைக்கும் அவருடைய ஆளுமையிலும் குணத்திலும் புத்தார்வக் கற்பனையாக ஒன்றுமே கிடையாது. ஆசிரியரிடம் இந்த குணம் இல்லையே தவிர அவருடைய மாணவர்களிடம் குறிப்பாக மார்கீஸ் மிராபோவிடம் – அளவுக்கு மீறிய உற்சாகம் ஏற்பட்டு ஆசிரியரிடம் இல்லாததையும் ஈடு செய்தது.

பிரெஞ்சு நாடு முழுவதுமே விவசாயத்தால் ஈர்க்கப்பட்டிருந்தது; ஆனால் வித்தியாசமான வெவ்வேறு வழிகளில் ஈர்க்கப்பட்டிருந்தது. அரசவையில் அதைப் பற்றிப் பேசுவது நாகரிகமான பொழுது போக்காக இருந்தது; வெர்சேய் அரண்மனைத் தோட்டத்தில் மாதிரிப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கென்று சில சங்கங்கள் அமைக்கப்பட்டன; அவை “ஆங்கில முறைகளை”, அதாவது அதிக உற்பத்தியைக் கொடுக்கின்ற விவசாய முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி செய்தன. வேளாண்மையியல் சம்பந்தமான கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.

படிக்க:
மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !
♦ பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?

இத்தகைய நிலைமைகளில் கெனேயின் கருத்துக்கள் – விவசாயத்தில் அவர் கொண்டிருந்த அக்கறை வேறு வகையானது என்ற போதிலும் – சிலரிடம் ஆர்வத்தைத் தூண்டின. கெனேயும் அவருடைய மரபினரும் பொருளாதாரத்தில் பயனுள்ள ஒரே துறை விவசாயமே என்ற கருத்தைத் தமக்கு அடிப்படையாகக் கொண்டனர்; நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மையைக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பட்டியலைத் தயாரித்தனர். பிற்காலத்தில் டியுர்கோ இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முயற்சி செய்தார். புரட்சி அவற்றில் பெரும்பாலானவற்றை அமுலாக்கியது.

டியுர்கோ

டிட்ரோவின் தலைமையிலிருந்த அறிவியக்கவாதிகளின் முக்கியமான உள்மையப் பகுதியாக இருந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது அடிப்படையாகவே கெனேயும் அவரைப் பின்பற்றியவர்களும் புரட்சி உணர்வு, ஜனநாயகத்தன்மை ஆகியவற்றில் குறைந்தவர்களே; எனவே பிற்காலத்தில் கற்பனா சோஷலிஸ்டுகளைத் தோற்றுவித்த அதன் இடது சாரி அணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு வரலாற்றாசிரியரான டெ டாக்குவில் எழுதியிருப்பது போல, அவர்கள் ”அமைதியான, நிதானமான மனோபாவம் கொண்டவர்கள், வசதியானவர்கள், நேர்மையான அதிகாரிகள், திறமைமிக்க நிர்வாகிகள்…..”(2)  அந்தக் காலத்தில் பிரான்சில் பேச்சுக்கலை என்பது பாஸ்டிலிக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் எல்லாவற்றையும் சொல்லத் தெரிந்திருப்பது என்று ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார். அதிகத் தீவிரமான உற்சாகத்தைக் கொண்டிருந்த மிராபோ கூட இந்த மூதுரையைப் பின்பற்றினார். அவர் கைது செய்யப்பட்டுச் சில நாட்கள் சிறை வாசம் செய்ய நேர்ந்தது உண்மைதான். ஆனால் செல்வாக் குள்ளவரான டாக்டர் கெனே அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். அந்தக் குறுகிய சிறைவாசத்தின் பலனாக அவருடைய புகழ் அதிகரித்தது; அதன் பிறகு அவர் கவனமாக நடந்து கொண்டார்.

ஆனால் பிஸியோகிராட்டுகளின் நடவடிக்கைகள் யதார்த்த ரீதியில் அதிகப் புரட்சிகரமாகவே இருந்தபடியால் “பழைய அமைப்பின்” அடிப்படைகளைத் தகர்த்தன. உதாரணமாக, “பிரெஞ்சுப் புரட்சியின் உடனடித் தந்தையர்களில் ஒருவராக டியுர்கோ இருந்தார்” (3) என்று மார்க்ஸ் உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கங்கள் 31-32 பார்க்க.

(2) A. de Tocqueville, L’ancien regime et la revolution, Paris, 1856, p. 265.

(3) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 344

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க