செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 8

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மனித குலம் “வரலாற்றின் முடிவுக்கு” வந்து விட்டதாக குதூகலித்தார் ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா.

முதலாளித்துவ சமூக அமைப்பே நிரந்தரமானதும் இறுதியானதுமாக தன்னை நிரூபித்துக் கொண்டதென முதலாளித்துவ அறிஞர்களின் உலகம் கொண்டாடியது. ஆனால் தனது வெற்றியை நீண்ட நாட்களுக்கு கொண்டாட முடியாதபடிக்கு தொடர்ந்து ஏகாதிபத்திய கழுத்தறுப்புப் போட்டிகளிலும், பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கித் திணறி வருகின்றது ஏகாதிபத்திய உலகம்.

இந்தப் போக்கில் உலகளாவிய அளவில் ஏகாதிபத்தியங்களின் போர் வெறியும் புதுப் புது நோய்களும் பட்டினிச் சாவுகளும் வேலையிழப்புகளும் மிக வீரியமாக மக்களைத் தாக்கி துன்ப துயரங்களுக்கு ஆளாக்கி வருகின்றன.

முதலாளிய தொழிற்புரட்சிக் கட்டங்கள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகள் அடைந்த ஒரு புதிய வளர்ச்சி மட்டத்தை விளக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்கவியலாதபடி உற்பத்தி உறவுகளில் மாற்றத்தைக் கோருகின்றது. அதாவது மூலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி கூர்மைப்படுத்துகின்றது.

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஒவ்வொன்றும் உற்பத்தி சக்திகளின் இமாலய வளர்ச்சியையே குறிக்கின்றன. இந்த வளர்ச்சிப் போக்கு சமூகத்தில் பராமரிக்கப்படும் சமன்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. அதே சமயத்தில், இந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்ள ஆளும் வர்க்கம் முனைகின்றது.

ஒருபுறம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலதனத்திற்கு இருந்த தடைகளைத் தகர்த்துள்ளது. நிதிமூலதன சூதாடிகளுக்கு இருந்த ‘தேச எல்லைகள்’ என்கிற தடையரண் நொறுங்கியுள்ளது. உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு மூலதனத்தைக் கடத்திச் செல்வதை நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியமாக்கியுள்ளது.

பல்வேறு தொழில்களின் அன்றாட இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் ஆற்றலையும், உற்பத்தியின் போக்கு, சந்தையின் போக்கு, மக்களின் நுகர்வுத் திறன், நுகர்வின் போக்கு மற்றும் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி, தொழிற்பிரிவுகளின் குறுகியகால மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு போன்றவற்றை வேர்மட்ட அளவில் இருந்து கிடைக்கும் மின் தரவுகளை மேல்மட்ட அளவில் வைத்துப் பகுத்தாயவும் அதனடிப்படையில் தொழில்களுக்கு இடையிலான நிதிமூலதனத்தின் சுழற்சியைத் திட்டமிட்டுச் சூதாடுவதற்கான வாய்ப்பையும் நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ளது.

இன்னொருபுறம், அதே தொழில்நுட்பம் மக்களுக்கு கலாச்சாரங்களையும் எல்லைகளையும் கடந்த பார்வையை வழங்கியுள்ளது. செய்திகள், தகவல்கள் மற்றும் தரவுகள் மக்கள் எளிதில் பெறத்தக்கவையாக மாறியுள்ளன. பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் உலகமயமான போக்கில் அதன் உற்பத்தியிலும், நுகர்விலும் ஈடுபட்ட மக்கள் திரளும் உலகளவில் திரட்டப்படுகின்றனர்.

இந்தப் போக்கு ஆளும் வர்க்கத்துக்கு மக்கள் தொகுதிகளின் ஒட்டுமொத்தம் குறித்த பார்வையை வழங்கின்றது. அதே சமயம் ஆளும் வர்க்கத்தின் தோல்விகளையும் போலித்தனங்களையும் உடனுக்குடன் மக்களின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கின்றது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மோடியின் தோல்விகளை அதே சமூக வலைத்தளங்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

எனினும் சமூகத்தை மின்னணுவியல் முறையில் ஒன்றிணைப்பது, அதன் போக்கில் ஒவ்வொரு தனிமனிதனின் மீதான கண்காணிப்பையும் பலப்படுத்துவது, அதன் போக்கில் சமூகத்தின் மீதான கட்டுப்படுத்தலை மேலும் மேலும் ஆழமாகவும் நுட்பமான முறைகளுக்கும் விரிவுபடுத்துவது, இறுதியில் சமூகத்தில் நிலவும் சமன்பாட்டை உத்திரவாதப்படுத்திக் கொண்டு முதலாளிய சுரண்டலை நீடித்துச் செல்வது என்பதே ஆளும் வர்க்கங்களின் சித்தமாக உள்ளது.

சமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியை கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் நான்காம் தொழிற்புரட்சிக் காலகட்டத்தின் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் ஆளும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு ஏதுவான சமூக நிலைமைகளை அப்படியே நீடிக்கச் செய்ய முயற்சித்துக் கொண்டே தான் இருந்தது.

அம்முயற்சிகளுக்கு அந்தந்த காலகட்டத்தில் தோன்றும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியும் வந்தது. அந்த வகையில் தான் தற்போது எழுந்து வரும் செயற்கை நுண்ணறித் திறன் மற்றும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பங்களையும் தனக்கான அடக்குமுறைக் கருவிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சியில் ஆளும் வர்க்கம் வெற்றியடையுமா?

அது மெரினா எழுச்சியின் இரண்டாவது நாள். போராட்டத் திருவிழாவின் நடுவே கரைந்து போயிருந்தோம். தோழர்களோடு லட்சக்கணக்கான அந்த மக்கள் திரளைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது சூழலுக்குப் பொருந்தாத சில கதாபாத்திரங்களைக் காண நேர்ந்தது.

தார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி, நீண்ட ஜிப்பா, குறுக்காக போடப்பட்டிருந்த ஜோல்னா பை, தலை முழுக்க மழித்து விட்டு பின் மேல் மண்டையின் சுழிப் பகுதியில் மட்டும் அரையடிக்கு நீண்ட மெல்லிய குடுமி, பார்ப்பனத் தோற்றத்தோடு சில இஸ்கான் தொண்டர்கள் கையில் துண்டு நோட்டீஸ்களோடு வளைய வந்து கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு அருகிலேயே நாலு முழ வேட்டியும் மங்கிய கலர் சட்டைகளோடும் திராவிட முகங்களோடு சிலர். இவர்கள் நெற்றியில் செந்தூரத் தீற்றல்; ஆர்.எஸ்.எஸ் காரர்களாக இருக்க வேண்டும். முகங்களில் மிட்டாய் பிடுங்கப்பட்ட குழந்தைகளின் உணர்ச்சி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கென்று இந்துத்துவ கும்பல் வடிவமைக்க முயன்ற திரைக்கதை திசைமாறிச் சென்றிருந்ததை அவர்களால் விழுங்கிக் கொள்ளவே இயலவில்லை என்பதைக் காண முடிந்தது.

ஜல்லிக்கட்டு – தமிழரின் மாட்டுப் பண்பாடு, வீரம், இத்யாதி – நாட்டு மாடு – மாட்டின் மேண்மை – கோமாதா என்று அவாள்கள் பின்ன முயற்சித்த சங்கிலியின் கண்ணிகள் மொத்தமாக நொறுங்கி மெரினாவின் கரையெங்கும் இந்துத்துவ எதிர்ப்பு பேரலையாய் எழுந்திருந்தது. பின்னர் மாட்டிறைச்சி தடை விவகாரத்தின் போது “அப்போது மாட்டுப் பாதுகாப்புக்காக வந்தவர்கள் இப்போது மாட்டிறைச்சி உரிமை கோருகின்றனரே” என்று பக்தாளின் புலம்பல்கள் நம் செவிப் பாறைகளில் இனிமையாய் மோதின.

மாடு தின்னாத இடைநிலைச் சாதிகளின் தலையில் கோமாதாவின் “புனித மூத்திரத்தைத்” தெளித்து தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பீப் வருவலும், திராவிட நாடு கோரிக்கையுமே அவர்களுக்கான எதிர்வினையாக எழுந்து வந்தது.

அதே போல் வியட்நாம் போரில் அமெரிக்கா வெல்லும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்து, வியட்நாம் வென்றது. அதுவும், உலகிலேயே ஆற்றல் வாய்ந்த இராணுவத்தைக் கொண்ட, இராணுவத்துக்காக மூன்றாம் உலக நாடுகள் செய்யும் மொத்த செலவையும் விட அதிகமாக வருடா வருடம் கொட்டிக் கொடுத்த, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்த அமெரிக்காவை போரில் சின்னஞ்சிறிய வியட்நாம் முறியடித்தது.

உலகளாவிய அளவில் ஒவ்வொரு தொழிலின் வேர்மட்ட இயக்கத்தையும், சந்தையின் நுட்பமான போக்குகளையும் கணிக்கும் ஆற்றலையும் மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்ந்து கண்டுபிடிக்கும் திறனையும் கொண்டிருந்த அமெரிக்க வங்கித் துறை இரண்டாயிரங்களின் இறுதியில் நொறுங்கிச் சரிந்தது. அதன் தொடர் விளைவாக முதலாளித்துவ கட்டமைவே பெரும் நெருக்கடிக்கு ஆளானது.

தொழில்நுட்பங்களின் உதவியால் தமக்கே ஏற்படவிருந்த பேரிடரை முதலாளித்துவ உலகத்தால் முன்கூட்டியே அறியவோ தடுக்கவோ முடியவில்லை. முதலாளிய உலக ஒழுங்கு தனக்குத் தானே வகுத்துக் கொண்ட ஆட்ட விதிகளை தானே மீறிச் சென்றதும், அதன் விளைவாக உலகப் பொருளாதார இயக்கத்தையே சீர்குலைவிற்குள் இழுத்து விட்டதும் நம் கண்முன்னே நடந்தேறியது.

முடிவில் தனது நெருக்கடிகளை மக்களின் தலையில் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தது நிதிமூலதனச் சூதாட்ட கும்பல். தமது ஓய்வூதியங்களையும் சேமிப்புகளையும் இழந்த மக்கள் தெருவில் இறங்கினர். தனது எல்லைகளுக்குள் இருக்கும் மக்களை மேலிருந்து ஒட்டு மொத்தமாகக் கண்காணிக்கும் வல்லமை பொருந்திய அமெரிக்காவில், அனைத்து விதமான கண்காணிப்பு முறைகளையும் மக்களின் எழுச்சி முறியடித்தது.

பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாச்சாரம், என சகல துறைகளின் வழியாகவும் பிறப்பிலிருந்தே மூளையில் முதலாளித்துவம் திணிக்கப்பட்ட அமெரிக்கர்கள், முதலாளித்துவத்தின் கருவறையான வால் வீதியை முற்றுகையிட்டனர். “முதலாளித்துவம் ஒழிக” என்று முழக்கமிட்டனர்.

occupy-wall-streetமுதலாளித்துவத்தின் கருவறையிலேயே முதலாளித்துவ எதிர்ப்புக் கோரிக்கைகள் எழச்செய்த பெருமை முதலாளித்துவ உலகையே சாரும். தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்திருந்த போதும், முதலாளித்துவ உலகம் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளை மீறுவதை எந்த தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியவில்லை. சப் பிரைம் நெருக்கடியின் இறுதி விளைவு மக்களின் பொருளாதய வாழ்வின் மீது பேரிடியாக இறங்கியது. மக்கள் வால்வீதியில் குவிந்தனர்.

ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பரப்புரைச் சாதனங்களின் மூலம் மக்களின் கருத்துக்களை வடிவமைப்பது, எதிர்க் கருத்துக்களையும் அதிருப்திகளையும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் உற்பத்தி செய்து அவற்றை நிறுவனமயமாக்குவது என்கிற உத்தியை ஆளும் வர்க்கம் தீவிரமாக கையாள்கிறது. சமூக வலைத்தளங்களில் மக்களுடைய பங்கேற்பை மின் தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்வதும், அதனடிப்படையில் சமூகத்தின் சித்த்ததை கட்டுப்படுத்துவதும் சாத்தியமென்பதால் அம்முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன ஆளும் வர்க்கங்கள்.

இந்த மெய்நிகர் உலகை பொய்களில் மூழ்கடிக்க ஆளும் வர்க்கங்கள் எத்தனைதான் முயன்றாலும், மெய் உலகப் பொருளாதார வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பதிலிருந்து அதனை விடுவிக்க ஆளும் வர்க்கத்தால் முடியாது. சமூகத்தின் பொருளாதார நிலைமைகள், வாழும் சூழல் போன்றவை அச்சமூகத்தில் வாழும் மக்களுடைய சித்தத்தின் மேல் அறுதியான தாக்கத்தைச் செலுத்துகின்றன.

எனவே தான், மூன்றாண்டுகளுக்கு முன் இந்துத்துவ கும்பல் மோடியைக் குறித்து இணையத்திலும் சமூகவலைத்தளங்களிலும் செய்த மோசடிப் பிரச்சாரங்களை நம்பிய அதே மக்கள், மூன்றே ஆண்டுகளில் மோடியை எள்ளி நகையாடுகின்றனர். சமூக வலைத்தளங்கள் நேர்மறையிலோ எதிர்மறையிலோ சமூகத்தில் ஏற்படுத்தும் எழுச்சி அல்லது பொதுக்கருத்து என்பவற்றுக்கு அதே சமூகத்தில் ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும்.

காங்கிரசின் ஊழல்கள் மக்களிடம் உருவாக்கிய வெறுப்பும், மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்த கோபமும் போட்டுக்கொடுத்த அடித்தளத்தின் மீது நின்றதனால்தான் மோடியின் பிம்பம் மக்களை ஏமாற்ற முடிந்தது.

எனவே தான், தானியங்கல் தொழில்நுட்பத்தின் விளைவாகவும், உற்பத்தி மற்றும் மூலதனத்தின் உலகமயமாக்கல் போக்கின் விளைவாகவும் வேலையிழந்து சேமிப்புகளை இழந்து வீட்டையும் இழந்து வால்வீதியில் திரண்ட அமெரிக்கர்களும், இந்துத்துவ அரசியலால் வஞ்சிக்கப்பட்டு மெரினாவில் திரண்ட தமிழர்களும், இந்துத்துவத்தின் நுகத்தடியின் கீழேயே போலீசின் துப்பாக்கிகளுக்கு மார்பைத் திறந்து காட்டிய மத்திய பிரதேச விவசாயிகளும் அரசுகள் உருவாக்க நினைத்த மோசடியான பொதுக் கருத்துக்களை மறுதலித்து ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றனர்.

சில பத்தாண்டுகளாக பார்ப்பனியக் கம்பளியால் போர்த்தப்பட்டு, இந்துத்துவ இருளிலேயே பழக்கப்படுத்தப்பட்டிருந்த மத்திய பிரதேச மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சியும், இந்துத்துவத்தின் கருவறையான குஜராத்திலேயே செத்த மாடுகளை அரசு அலுவலகங்களில் வீசியெறிந்த ஊனா தலித் மக்களின் எழுச்சியும் நிரூபிப்பது இதைத் தான். கருத்துக்கள் எந்த ஆதாரமும் இன்றி மந்திரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல – அவற்றுக்கு ஒரு சமூகப் பொருளாதார அடிப்படை இருந்தாக வேண்டும்.

மக்களுடைய பொருளாயத வாழ்வு எத்தனைக்கெத்தனை நெருக்கடிக்கு உள்ளாகின்றதோ அத்தனைக்கத்தனை சுரண்டலை உத்திரவாதப்படுத்தும் சமூகச் சமன்பாட்டிற்கு எதிராக மக்கள் தள்ளப்படுவர். இது தவிர்க்கவியலாதபடிக்கு சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டினை தீவிரப்படுத்தும். சமூகம் தனது அடுத்த கட்ட வளர்ச்சி நிலை நோக்கி முன்னேறுவதைத் தாமதப்படுத்துவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றியடையலாம். ஆனால் அதனைத் தவிர்க்கவியலாது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைக் குறிக்கும் நான்காம் தொழிற்புரட்சி காலகட்டத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு உள்ளேயே போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன.

மீப்பெரும் மின் தரவு, செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம், பொருட்களின் இணையம் போன்ற தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கான போட்டியும், நாய்ச் சண்டைகளும் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளிடையே தீவிரமடைந்து வருகின்றது. அதே சமயத்தில் மேல்நிலை வல்லரசுகளிடையே நடக்கும் ஆதிக்கத்திற்கான போட்டி தற்போது இணையம் மற்றும் மின் தரவுகளின் தளத்திற்கு நகர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரசிய எதிர்ப்பு நிலையை எடுத்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் நன்மதிப்பைக் குலைக்கும் நடவடிக்கையை ரசிய ஹேக்கர்கள் மேற்கொண்டனர். ஹிலாரியின் மின்னஞ்சல் தகவல்களை ரசிய ஹேக்கர்கள் அம்பலப்படுத்தியது பின்னர் தேர்தல் முடிகளில் டிரம்புக்கான ஆதரவாக பிரதிபலித்தது.

தனிப்பட்ட முகமிலி நபர்கள் (Anonymous) ஹேக்கர்களாக செயலாற்றி வந்த நிலையில் தற்போது மேல்நிலை வல்லரசுகளே தொழில்நுட்ப ரீதியில் ஹேக்கர்களைப் பராமரிப்பதும், போட்டி வல்லரசு நாடுகளின் இரகசியங்களை உளவு பார்ப்பதும் நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய தலைவர்களின் மின்னஞ்சல்களையும் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்கா கண்காணிப்புக்கு உட்படுத்திய விவகாரம் அம்பலமாகி, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியது.

*****

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும், தானியங்கல் தொழில்நுட்பத்தையும் பல்வேறு தொழில்களில் அமல்படுத்தி வரும் பன்னாட்டு முதலாளி வர்க்கம், இதன் விளைவாக ஏற்படும் வேலையிழப்புகள் தோற்றுவிக்கும் சமூக அமைதியின்மையையும் மக்கள் எழுச்சிகளையும் அதே தொழில்நுட்பங்களைக் கொண்டு தடுத்து நிறுத்த முனைகின்றனர்.

எனினும் ஒரு ஆயுதம் என்கிற வகையில் இத்தொழில்நுட்பம் இருபுறமும் கூர்மையானதாகவே உள்ளது. நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினாலும், இத்தொழில்நுட்பங்களின் சாத்தியங்கள் ஒரே நேரத்தில் ஆளும் வர்க்கத்தின் கரங்களில் அடக்குமுறைக்கான ஆயுதங்களையும், மக்களின் கரங்களில் எதிர்ப்புக்கான கேடயங்களையும் வழங்குகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகள் தற்போது தொழிற்நுட்பம் சார்ந்தும் உருவாகின்றன. அமெரிக்காவின் என்.எஸ்.ஏ திட்டப்படி இணையம், தகவல் தொடர்பு கருவிகளில் பல நேசநாடுகள் உளவு பார்க்கப்பட்டன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவ்வுளவு வேலைகளை கடுமையாக எதிர்த்திருப்பதோடு தத்தமது இணைய பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவு ஹேக்கர்கள் மூலம் ரசியா தலையிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. வடகொரியாவோ தனது அதிபரை இழிவுபடுத்தும் சோனி நிறுவனத்தின் ஹாலிவுட் படம் வெளியாவதற்கு முன்னரே ஹேக் செய்து உலகெங்கும் வினியோகித்தது.

ஏகாதிபத்திய நாடுகளிலேயே கூட இவ்வகை தொழில்நுட்பங்கள் தனிமனித உரிமைளைப் பறிப்பதாக பலர் எதிர்க்கின்றனர். அப்படித்தான்
ஸ்னோடன்
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ உளவுத் திட்டத்தை வெளியே கொண்டு வந்தார். ஜூலியன் அசாஞ்சேவின் விக்கி லீக்ஸ் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகள், உளவுவேலைகள் தொடர்ந்து வெளியிடிப்படுகின்றன.

முதலாளித்துவ ஒழுங்கில் மையப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டுப்பாட்டுக் கேந்திரங்களின் மீது அதிருப்தியுற்ற ஹேக்கர்கள் அவ்வப் போது அந்தக் கட்டமைப்பின் மீதே கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டு ஏகாதிபத்திய உலகைத் திகைப்படையச் செய்கின்றனர். பல நாடுகளில் நடக்கும் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சமூகவலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.

எனவே தான் காஷ்மீரில் மட்டுமின்றி, மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இணையம் தடை செய்யப்படுகின்றது. கண்காணிக்க வேண்டுமானால், மக்களைச் ”சுதந்திரமாகச்” கருத்துப் பரிமாற அனுமதிக்க வேண்டும்.

இணையத்தை முடக்கியபின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எதனைக் கண்காணிப்பது? இணையம் எனும் அலங்காரமான வாளை உறையிலிருந்து உருவும் வாய்ப்பையே மக்களின் எழுச்சிகள் ஆளும் வர்க்கத்துக்கு வழங்கவில்லை. இணைய முடக்கத்தையும் தொலைபேசி முடக்கத்தையும் தாண்டியே காஷ்மீரிலும், மத்தியப் பிரதேசத்திலும் மக்கள் தெருக்களில் குவிந்து வருகின்றனர்.

இணையத் தொழில்நுட்பம் என்கிற சீப்பை ஒளித்தாலும் மக்கள் எழுச்சி என்கிற திருமணத்தை நிறுத்த முடியவில்லை. நான்காம் தொழிற் புரட்சியும் அதன் தொழில்நுட்ப சாத்தியங்களும் தலையை சீவும் வாளைப் போலத்தான் தோற்றமளிக்கின்றன. ஆனால் அவை முடியைச் சீவும் சீப்புகள்தான் என்று நிரூபிக்கின்றன இணையத்தடையை மீறி நடக்கும் மக்கள் போராட்டங்கள்.

சர்வ வல்லமை பொருந்திய ஜாரின் இராணுவத்தை வீழ்த்தியது ரொட்டிகளைக் கனவில் தேடிக் கொண்டிருந்த, வயிறு காய்ந்த ரசிய உழைக்கும் மக்கள் படை தான். சமூக மாற்றங்களை அடக்குமுறை ஆயுதங்கள் தீர்மானிப்பதில்லை; மக்களே தீர்மானிக்கிறார்கள், தீர்மானிப்பார்கள்.

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க