கடலூர் டவுன்ஹாலில் ரஷ்ய புரட்சியின் 102 – ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ”சோசலிசப் புரட்சியா மனிதகுல அழிவா” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்க பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. அரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமை உரையாற்றிய தோழர் பால்ராஜ், தனது உரையில் ”இன்று சமூக சூழல் என்பது சுயநலம் மிக்க சமூகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக கடைகளிலே குடிநீரை பெரும்பாலும் வைத்திருப்பார்கள். ஆனால் இன்றோ அந்த சேவை மனப்பான்மை அற்று போய் குடிநீர் குடிப்பதற்குக் கூட குடம் இல்லாத நிலை உருவாகி வருகிறது. கல்வி பயிலக் கூடிய மாணவர்கள் தாங்கள் தன் குடும்பம், தன் வேலை மட்டும் போதும் என்ற சுயநல மன நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. படித்த மாணவர்களுக்கான வேலை என்பது இல்லாத சூழல் உள்ளது. கிடைக்கும் வேலையை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த அரசின் அவலமாக இருக்கிறது. இதற்கு அடிப்படையான காரணம் முதலாளித்துவம் தான். அதை பாதுகாக்கக்கூடிய அரசு தான். அதை வீழ்த்தாமல் நமக்கான தீர்வு என்பது கிடையாது” என்ற வகையில் பேசினார்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராமலிங்கம் பேசுகையில், ”இன்று எடப்பாடி மோடி அரசு மக்களுக்கு எதிரான கொள்கைகளை தினசரி அமுல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும்பான்மையான சிறு, குறு வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடியின் காவி கொள்கையால் நாடு முழுக்க சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் பாசிச ஹிட்லர் போல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹிட்லர் தனக்கு எதிரானவர்களை யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கொன்றுவிட வேண்டும். அவர்கள் இறப்பதை நின்று ரசித்து அனுபவிக்கக் கூடிய ஒரு கொடூர பாசிஸ்ட்தான் ஹிட்லர்.

அந்த ஹிட்லருக்கு முடிவு கட்டியது யார் என்றால் ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் தலைமையில் செம்படை அவனது மாளிகையில் முடிவு கட்டியது.  ரஷ்ய சோசலிச புரட்சியின் விளைவாக உலக மக்கள் நன்மையாக அந்த செயல் இருந்தது. அது போன்ற ஒரு புரட்சியை முன்னெடுத்தால் தான் இந்தியாவிலேயே மோடி எடப்பாடி எடுக்கும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து நின்று போராடி முறியடிக்க முடியும்” என்று பேசினார்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் வெங்கடேசன் உரையாற்றும் பொழுது, ” இன்றைக்கு உலக முதலாளித்துவம் மீளமுடியாத ஒரு பொருளாதார நெருக்கடிக்கு வந்து இருக்கிறது. உலகத்திலுள்ள 99 சதவீத சொத்துக்களை 1 சதவீத  பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 99% மக்கள் நடுவீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆக இந்த நெருக்கடியை சமாளிக்க முதலாளித்துவ அரசு கட்டமைப்பு முன்வைக்கக்கூடிய தீர்வு முதலாளிகளை பாதுகாக்கக்கூடிய வகையில் உள்ளது.

பாசிசம் உலகம் முழுவதும் இன்று வளர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் இன்று பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மூன்று ரூபாய் பார்லேஜி பிஸ்கட் வாங்க ஆளில்லாமல் அந்நிறுவனமே இழுத்து மூடப்பட்டுள்ளது. அரசினுடைய கவலைகள் எல்லாம் கார் விற்பனை ஆகவில்லை, ஆடம்பர செல்போன், விலைமதிப்புள்ள பொருட்கள், விற்பனை ஆகவில்லை என்பதுதான். அந்த வகையில் கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் கோடி வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பதவி ஏற்று 3 ஆண்டில் 2.48 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராடினால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் மக்கள் பிரச்சனைகளை பேசக்கூடிய சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

முற்போக்கு எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், அல்லது கைது செய்யப்படுகிறார்கள். தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாது. புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு. புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலங்களை விவசாயிகளிடம் பகிர்ந்தளித்து உழுபவனுக்கே நிலம் சொந்தம் உழைப்பவனுக்கு அதிகாரம் என்ற கோட்பாட்டை உருவாக்கும் போதுதான் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும். இதனை நூறு ஆண்டுக்கு முன் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் நடந்த புரட்சியின் மூலம் இதைத்தான் செய்து காட்டினார்கள். இதன் பிறகுதான் அங்கே ஏற்றத்தாழ்வு சரி செய்யப்பட்டது. உலகமே கண்டு நடுங்கிய ஹிட்லரை அவனிடத்தில் சென்று சமாதி கட்டியது. சோசலிச ரஷ்யாவின் மக்கள் செம்படை  இன்றைக்கும் அதே சூழல் இந்தியாவில் நிலவுகிறது. ஆக நாம் இப்படிப்பட்ட தியாக உணர்வோடு நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்போடு இறுதிவரை போராட வேண்டும்.  இதனை தேர்தல் அரசியல் கட்சிகள் பின்சென்று போராடுவது தீர்வல்ல. ஒரு புரட்சிகர அமைப்பின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடித்து சோசலிசப் புரட்சிக்கு நாம் முன்னேறி செல்லும்போது தான் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுகட்ட முடியும் ஒரு சுதந்திரமான, சமத்துவமான, ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.” என்றார்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலர், தோழர் மணியரசன், ”சோசலிச புரட்சி நடந்தால் எத்தகைய நன்மைகள் விளையும் என்ற அடிப்படையில் பேசினார். இந்தியாவில் ஏற்றத்தாழ்வான சமூகம் உள்ளது குறிப்பாக ஒரு ஏழை வீட்டில் இரண்டு அல்லது மூன்று இலட்சத்தில் தங்களுக்கான திருமணத்தை நடத்தி முடிக்க முடியும் இன்னொரு வர்க்கம் ஐந்து லட்சத்தில் கார் வாங்கி அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க முடிகிறது.

இந்தியாவில் விவசாய நிலங்களை கோவில்கள், மடங்கள், மத நிறுவனங்களிடம் இலட்சக்கணக்கான ஏக்கர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு நிலம் இல்லாமல் கூலி அடிமைகளாக இருக்கும் சூழல் உள்ளது. தரமான தண்ணீர், மருத்துவம், கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியாரிடம் உள்ளது. காசிருந்தால் தான் வாழ முடியும் என மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடியை இந்திய மக்களின் வாழ்நிலையாக இன்றையசூழல்இருக்கிறது.

இதனை மாற்றியமைக்க சோசலிச புரட்சி தான் தீர்வு. ஆனால் ரஷ்யாவில் சோசலிச புரட்சியின் மூலமாக விளைந்த நன்மைகளாக, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தரமான இலவசக் கல்வியை உறுதிப்படுத்தியது. எழுத்தறிவின்மையை முற்றிலுமாக ஒழித்தது. மருத்துவம் நகரங்கள் கிராமங்கள் எந்தவித வேறுபாடு இன்றி தரமான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்தியது.

பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் அனைவருடைய நிலங்கள், நிறுவனங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்டது. சிறு தொழில், குறுந்தொழில், தேசிய தொழில் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.

விவசாயம் கூட்டுப்பண்ணை அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டு இலாபகரமான விவசாய முறையை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அறிவியல் விஞ்ஞானம் என்ற அடிப்படையில் விவசாயிகளும் விஞ்ஞான ரீதியில் விவசாயத்தை வளர்த்தெடுக்க முன்னெடுக்கப்பட்டன.

பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம ஊதியம், சம உரிமை, பேறுகால விடுமுறை, ஆடைத் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகரான முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்கள், பொது சமையலறைகள், பொது போக்குவரத்து நிறுவனங்கள் பாட்டாளி வர்க்கம் இயக்கக்கூடிய தன்மையை வடிவமைத்தார்கள். முதலாளிகள் இல்லாத ஒரு நிலையை உருவாக்கியதான் ரஷ்ய சோசலிச புரட்சி. அதனை நடைமுறை சாத்தியமாக்கியது சோவியத்து அரசாங்கம்.

படிக்க:
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !

இது போன்ற செயலை இந்தியாவில் ஆளும் வர்க்க முதலாளிகளின் மீறி தேர்தல் அரசியல் கட்சிகளால் செயல்பட முடியுமா என்ற கேள்வியை தான் நாம் அனைவரும் கேட்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சொல்லக்கூடிய  ஜனநாயகம் என்பது ஒழிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறையில் நாம் வாழ்வது என்பது சாத்தியமில்லை. ஆகையால் ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சியை போன்று இந்தியாவிற்கு தேவையான ஒரு புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு. அதனை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள், புரட்சிகர கட்சிகளோடு பெரும்பான்மையான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி செய்தால் ஒழிய முதலாளித்துவத்தை அழித்து மனித குலத்தை பாதுகாக்க முடியும் என்று கூறி முடித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக காவி கும்பல் இன்றைய சூழலில் திருக்குறளை, திருவள்ளுவரை காவிமயப்படுத்துவதற்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கும், பு.மா.இ.மு. தோழர்களுக்கும் திருக்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

நன்றியுரையாற்றிய, பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் பூங்குழலி, ”முதலாளித்துவம் அதன் நெருக்கடியால் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நாம் சவக்குழிக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் நாம்  ஒவ்வொருவரும் உள்ளோம். அதற்கான பணிகளில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஒன்றுபட வேண்டும். அதுதான் இந்த இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் மக்கள் மத்தியில் சென்று பேச வேண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான புதிய மாற்றத்தை புதிய ஜனநாயக சமூகத்தை படைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்” என்று கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

புமாஇமு

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.


வம்பர் 7 சோசலிச புரட்சி, 102-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் பூவனூரில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் ஜ. கணேஷ் பாபு தலைமை உரையை நிகழ்த்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் தோழர் ச. மணிவாசகம் இன்றைய இளைய தலைமுறை கலாச்சார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதையும், தொழில்நுட்ப ரீதியில் மாணவர்கள் சீரழிந்து கொண்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்கினார். குறிப்பாக கல்வி, மருத்துவம், சேவை துறையில் அனைத்தும் தனியார் துறையிடம் சென்று கொண்டிருப்பதை விளக்கிப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மக்கள் அதிகாரம், விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் கு. முருகானந்தம் அவர்கள் பேசுகையில்: “இந்த அரசு நம்மை ஆள தகுதி இழந்து இருப்பதை மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் வெளியிடும் அறிக்கைகளே சான்றாக உள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது பொருளாதார நிலையில் அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி வேலை இல்லாத் திண்டாட்டம் பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்….” என்றும் “இதற்கு ஒரே தீர்வு மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து மக்களுக்கான அரசை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும்” என்றார்.

படிக்க :
சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !
♦ சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை உறுப்பினர் தோழர் வல்லரசு நன்றி உரை ஆற்றினார்.

இதில் சிறப்பு நிகழ்ச்சியாக புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இதை தோழர் ஞானமணி, தோழர் ஷகீலா, தோழர் சத்தியா ஆகியோர் பாடல்கள் பாடினர். இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புமாஇமு

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
விருத்தாசலம், தொடர்புக்கு : 97888 08110


வேலூரில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பாக நவம்பர் இறுதி நிகழ்ச்சி கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

கிளை சங்க இணைச் செயலாளர் தோழர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை சங்க பொருளாளர் தோழர் குமார் கொடியேற்றினார். பு.ஜ.தொ.மு. மாவட்ட தலைவர் தோழர் சரவணன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினர் தோழர் ஆல்வின் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் மன்னாரு மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உரையாற்றினர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தகவல்: பு.ஜ.தொ.மு., வேலூர்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

 1. தோழரே
  வணக்கம். நான் பன்னாட்களாக வினவு இதழைப் படித்துவருகிறேன்.இதிலிருந்து கட்டுரைகளை எடுத்து யான் வெளியிடும் “துமிழர் எழுச்சி” இதழில் மறுவெளியீடு செய்கிறேன். முகவரி தெரியாததால் உங்களுக்கு அனுப்பவில்லை. மிக அரிய கட்டுரைகளை வெளியிடுகறீர்கள் பாராட்டுக்கள்.

  நான் 19 ஆண்டுகாலம் சி.பி.எம்.மில் இருந்தவன்.
  எனது தொ.பே. எண் 9443524166.
  நவம்பர் -7 புரட்சி நாள் கொண்டாட்டத்தில் “ நீடுடி” என்று poster- இல் உள்ளது. “நீடூழி” என்றிருக்கவேண்டும்

 2. தோழரே
  வணக்கம். நான் பன்னாட்களாக வினவு இதழைப் படித்துவருகிறேன்.இதிலிருந்து கட்டுரைகளை எடுத்து யான் வெளியிடும் “துமிழர் எழுச்சி” இதழில் மறுவெளியீடு செய்கிறேன். முகவரி தெரியாததால் உங்களுக்கு அனுப்பவில்லை. மிக அரிய கட்டுரைகளை வெளியிடுகறீர்கள் பாராட்டுக்கள்.

  நான் 19 ஆண்டுகாலம் சி.பி.எம்.மில் இருந்தவன்.
  எனது தொ.பே. எண் 9443524166.
  நவம்பர் -7 புரட்சி நாள் கொண்டாட்டத்தில் “ நீடுடி” என்று poster- இல் உள்ளது. “நீடூழி” என்றிருக்கவேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க