சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? “காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன கூட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரிக்கு அருகில் உள்ள கஜாமலை பேருந்து நிறுத்தத்தில் 26.11.2019 அன்று பு.மா.இ.மு மாவட்ட பொருளாளர் தோழர் சுரேஷ் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அவரது தலைமை உரையில் “இது தற்கொலை அல்ல கொலை எனவும் இதற்கு காரணமானவர்களை அரசு தண்டிக்காது நாம் தான் வீதியில் தண்டிக்க வேண்டும்” எனவும் கூறினார்.

தோழர் தமிழ் அருண்

மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாநில துணை செயலாளர் தோழர் தமிழ் அருண் பேசுகையில் “ஐ.ஐ.டி இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக மாறியுள்ளது. RSS, BJP இன்று எல்லா துறைகளிலும்; எல்லா கல்லூரிகளிலும் ஆட்டம் போடுகிறது. மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக பு.மா.இ.மு நடத்தும் போராட்டத்திற்கு எமது அமைப்பு துணை நிற்கும்” என்றார்.

தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர் தோழர் கபிலன் பேசுகையில் “பார்ப்பனர்களின் சதியினால்தான் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி நமக்கு தெரியபடுத்துவது என்னவென்றால் ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் படுகொலை… என எல்லாமே முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், சிறுபான்மையினர் யாரும் படிக்க கூடாது; அவ்வாறு படிக்க வந்தால் கொலை செய்யப்படுவார்கள் என்பதுதான்.

தோழர் கபிலன்

ஐ.ஐ.டி.-யில் மாட்டுகறி சாப்பிட்டதால் சூரஜ் என்கிற மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். அன்று “பார்ப்பனர்களை தவிர பிற சாதியினர் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்” எனும் மனுநீதி; இன்று அது நவீன முறையில் நடைமுறையாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையும் பார்ப்பன மனுநீதியைத்தான் அமல்படுத்துகிறது. இந்த மனுநீதிதான் மாணவர்களை படுகொலை செய்கிறது. இதனை எதிர்த்து நிற்கும் பு.மா.இ.மு அமைப்புடன் தமிழ் புலிகள் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என்றார்.

படிக்க:
♦ காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

இறுதியாக கண்டன உறையாற்றிய பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் “இந்தியாவிலேயே மிக பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் ஐ.ஐ.டி. அங்கு படிப்பவர்களுக்கு அரசு அதிக செலவு செய்கிறது. நமது கல்லூரிகளில் இல்லாத, நாம் பார்க்காத வசதிகள் பலவும் அங்கு உண்டு. படிப்பதற்கு உதவிதொகை உண்டு. அப்படிப்பட்ட ஐ.ஐ.டியில் படிப்பது, ஆசிரியர்களாக வேலைபார்ப்பது பார்ப்பனர்களே. இட ஒதுக்கீட்டை தாண்டி இன்று அங்கு 96% பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். நீண்ட காலமாக அதை அக்கிரகாரமாக, அவர்கள் மாற்றியுள்ள நிலையில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் உள்ளே சென்றால் வெறுப்பாக பார்க்கின்றனர்.

ஆனால் அங்கு படிக்கும் பார்ப்பனர்கள் பெரிய அறிவு படைத்தவர்கள் அல்ல. அவர்களை தவிர யாறு அங்கு சென்றாலும் தற்கொலை செய்வார்கள் என்று முன்னால் பேராசிரியர் வசந்தா கந்தசாமி சொல்கிறார். இந்த பார்ப்பன கூடாரத்தில் நுழைந்த பாத்திமாவை டார்ச்சர் பன்னி சாவடித்துள்ளனர். அவரது தாய், வட மாநிலங்களை விட தமிழகம்தான் பாதுகாப்பானது என்று எண்ணித்தான் சேர்த்தோம் என்கிறார். அந்த தாய்க்கு நாம் என்ன பதில் சொல்ல போகிறோம்.

ஹைதராபத்தில் ரோகித் வெமுலா, மும்பையிலே மருத்துவர் பாயல், டெல்லியிலே முத்துகிருஷ்ணன் என இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை நடந்துள்ளது. இதில் ஒரு பார்ப்பன மாணவர் கூட கிடையாது. உயர் கல்வி நிலையங்களை பார்ப்பன அக்கிரகாரமாக இந்தியா முழுவதும் மாற்றியுள்ளனர். அதன் வடிவம்தான் இன்று மோடி அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என ஏழை மாணவர்களை படிக்க விடாமல் செய்யப் போகிறது. நீட் தேர்வு அதைத்தான் உருவாக்கியுள்ளது. முழுக்க அரசு பள்ளிகளை அழித்து, தனியார் பள்ளிகளை உருவாக்கி கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி வகுக்கிறது. ஒரு பக்கம் கார்ப்பரேட் கொள்ளை. மற்றொரு பக்கம் திருவள்ளுவருக்கு காவி, பொறியியல் படிப்பில் பகவத்கீதை, கல்லூரியிலேயே சாகா பயிற்சி என காவிகளின் பிடி இருகுறுகிறது.

இன்று வரை பத்மநாபனை கைது செய்யாதது ஏன்? பார்ப்பான் என்பதை தவிர வேறென்ன. இந்த பார்ப்பன பாசிசத்தை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது. வாழ முடியாத சூழலில் நமக்கு ஏது வாழ்க்கை. போராட்டத்தினால்தான் இதனை மாற்றி அமைக்க முடியும். “4 மாடு தனித்தனியாக செல்லும்போது சிங்கம் மிரட்டும். ஒருநாள் 4 மாடு ஒன்றாய் சேரும். அன்று சிங்கத்தை விரட்டும்…” அமைப்பாய் திரண்டு போராடுவோம்” என்றார்.

படிக்க:
♦ மாணவி ஃபாத்திமா மரணம் : கண்டனக் கூட்டம் நடத்த தடை !
♦ தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !

இந்த கூட்டத்தில் தோழர் சுரேஷ், ம.க.இ.க கலைகுழு தோழர் லதா கல்வி, இடஒதுக்கீடு சம்மந்தமான பாடல்கள் பாடினர். இறுதியாக கல்லூரி மாணவர் தமிழ் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க