பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08a

“நன்றி, சீனியர் லெப்டினன்ட்! அற்புதமான தாக்கு, பாராட்டுகிறேன். என்னைக் காப்பாற்றினாய். ஆமாம், தரை வரையில் அந்த விமானத்தைப் பின்பற்றிச் சென்றேன். அது தரையில் மோதிச் சிதறியதைப் பார்த்தேன்…. நீ வோத்கா குடிப்பது உண்டா? என் இருப்பிடத்துக்கு வா. ஒரு லிட்டர் உனக்காக வைத்திருப்பேன். நல்லது, நன்றி. உன் கையைப் பற்றிக் குலுக்குகிறேன். கட்டாயம் வா!” என்றது அந்தக் குரல்.

மெரேஸ்யெவ் டெலிபோன் குழாயை வைத்தான். அன்று அனுபவித்தவற்றால் அவன் ஒரேயடியாகக் களைத்துப் போயிருந்தான். நிற்பதே அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கூடிய விரைவில் தன் நிலவறையை அடைந்து, பொய்க்கால்களைக் கழற்றி எறிந்து விட்டு கட்டிலில் உடலைக் கிடத்துவது பற்றியே எண்ணமிட்டது அவன் மனம். டெலிபோன் அருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்று விட்டு அவன் வாயில் பக்கம் மெதுவாக நகர்ந்தான்.

“எங்கே போகின்றீர்கள்?” என்று வழி மறித்தார் கமாண்டர். மெரேஸ்யெவின் கையைப் பற்றி, தமது வறண்ட சிறு கையால் வலி உண்டாகும் படி பலமாக இறுக்கிக் குலுக்கினார். “ஊம், உங்களுக்கு என்ன சொல்வது? சபாஷ்! என் ரெஜிமென்டில் இப்பேர்ப்பட்ட ஆட்கள் இருப்பது குறித்துப் பெருமை கொள்கிறேன்…… இன்னும் என்ன சொல்வது? நன்றி… உங்கள் நண்பன் பெத்ரோவ் மட்டும் என்ன, மோசமானவனா? மற்றவர்களுந்தாம்… ஆகா, இம்மாதிரி மக்கள் இருக்கும் போது தோல்வி அடைய மாட்டோம்!”

இவ்வாறு கூறி இன்னும் ஒரு முறை மெரேஸ்யெவின் கையை வலிக்கும் படி இறுகப் பிடித்துக் குலுக்கினார்.

மெரேஸ்யெவ் நிலவறையை அடைந்தபோது இரவாகி விட்டது. ஆனால் அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தலையணையை திருப்பி வைத்துக் கொண்டான். ஆயிரம் வரை எண்ணிவிட்டுத் தலைகீழாக ஒன்று வரை எண்ணினான். தனது நண்பர்களில் ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் குலப் பெயர் உள்ளவர்களை நினைவுப்படுத்திக் கொண்டான், பிறகு ருஷ்ய நெடுங்கணக்குப் படி வரிசையாக ஒவ்வோர் எழுத்திலும் ஆரம்பிக்கும் குலப்பெயர் உள்ளவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டான். புகைவிளக்கின் மங்கிய சுவாலையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டான். தூக்கம் வருவதற்காகக் கையாளப்படும் இந்த யுக்திகள் எத்தனையோ தடவை சோதித்து அறியப்பட்டவை. எனினும் இன்று அவனிடம் அவை பயன் விளைவிக்கவில்லை.

அவன் கண்களை மூட வேண்டியதுதான் தாமதம், அறிமுகமான உருவங்கள் ஒருபோது துலக்கமாகவும் மறுபோது மங்கிய மூட்டத்திலிருந்து பிரித்தறிய கடினமாயிருக்கும் படி தெளிவின்றியும் அவன் முன் தோன்றி மறையலாயின: வெள்ளிக் கேசம் பிடறி போல் இலங்க, கவலையுடன் பார்த்தார் மிஹாய்லா தாத்தா. “பசுவினுடையது போன்ற” இமை மயிர் கொண்ட அந்திரேய் தெக்தியாரென்கோ நல்லியல்புடன் கண் ஜாடை காட்டினான். வஸீலிய் வஸீலியெவிச் யாருக்கோ சூடாகக் கொடுத்தவாறு, நரையயோடிய தலையைக் கோபத்துடன் அசைத்தார். முகச் சுருக்கங்கள் எல்லாம் களி துலங்கும் படி குறுநகை செய்தார் முதிய ஸ்னைப்பர். கமிஸார் வரபியோவின் மெழுகு முகம் தலையணையின் வெள்ளைப் பின்னணியிலிருந்து அறிவு சுடரும் விழிகளால் அலெக்ஸேயை நோக்கியது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கும், நகைச்சுவை விழிகள் அவை, எல்லாவற்றையும் புரிந்து கொள்பவை அவை. ஸீனாவின் தழல்நிறக் கூந்தல் காற்றில் பறந்தவாறு தோன்றி மறைந்தது. துடியான சிறு மேனியான பயிற்சி ஆசிரியன் நவூமவ், புன்னகைத்தான், அனுதாபமும் பரிவும் தோன்ற கண் சிமிட்டினான். நட்பு நிறைந்த எத்தனையோ இனிய முகங்கள் இருளிலிருந்து புன்னகையுடன் அவனை நோக்கின, நினைவுகளை எழுப்பின, ஏற்கனவே தளும்பத் தளும்ப நிறைந்திருந்த இதயத்தை இதமான அன்பால் நிறைத்தன. நட்பார்ந்த இந்த முகங்கள் நடுவே உதித்து, உடனே அவற்றை மறைத்து விட்டது ஒல்காவின் முகம். இராணுவ உடுப்பு அணிந்த இளநங்கையின் தசை பிடிப்பு அற்ற முகம். களைத்த, பெரிய விழிகளால் நோக்கியது அது. தான் ஒரு போதும் கண்டிராத கோலத்தில் தன் முன்னே ஓல்கா நிற்பது போன்று அவ்வளவு தெளிவாக அந்த முகத்தைப் பார்த்தான் அலெக்ஸேய். இந்தத் தோற்றம் மெய்யானதே போல இருந்ததால் அலெக்ஸேய் சிறிது எழுந்திருக்கக் கூடச் செய்தான்.

அப்புறம் துக்கமாவது வருவதாவது! இன்பம் ததும்பும் ஆற்றல் அவனுக்குள் ஊற்றெடுத்துப் பெருகியது. அலெக்ஸேய் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, விளக்கைப் பொருத்தினான். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தை கிழித்தான். பென்சில் நுனியைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டு எழுதத் தொடங்கினான்.

மளமளவென்று பெருகிய எண்ணங்களை அதே விரைவில் எழுத்தில் வடிக்க இயலாதவனாய், கிறுக்கித் தள்ளினான் அவன்: “என் அன்பே! இன்று நான் மூன்று ஜெர்மன் விமானங்களை சுட்டு வீழ்த்தினேன். ஆனால் முக்கியமான விஷயம் இது அல்ல. என்னுடைய சில தோழர்கள் அனேகமாக நாள் தோறும் இவ்வாறு செய்கிறார்கள். உன்னிடம் இதைப் பற்றி நான் பெருமையடித்துக் கொள்ள மாட்டேன்…… தூரத்தில் இருந்து கொண்டு என் நெஞ்சினில் வாழும் இனியவளே! பதினெட்டு மாதங்களுக்கு எனக்கு நேர்ந்ததை எல்லாம் உனக்கு விவரிக்க இன்று நான் விரும்புகின்றேன், இன்று அதற்கு நான் உரிமை பெற்று விட்டேன். இந்தச் சேதியை நான் உன்னிடமிருந்து இதுவரை மறைத்து வைத்திருந்தேன். அதற்காகப் பச்சாதாபப்படுகிறேன், மிகவும் வருந்துகின்றேன். இன்று தான் சொல்லி விடுவதென்று முடிவாகத் தீர்மானித்துவிட்டேன்…..”

« நாவல் முடிவுற்றது »

நாவலாசிரியரின் பின்னுரை தொடரும் …

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க