குடியுரிமை திருத்த சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு – தேசிய மக்கள் பதிவேடு என இந்திய இறையாண்மையை குழித் தோண்டி புதைக்கும் மத்திய பாசிச பாஜகவுக்கு எதிராக நாடெங்கிலும் தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டங்கள் பெருந்திரள் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜனவரி-30)  மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி, U.C திடலில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும்  ஒன்று கூடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளை முன்னிட்டு ”இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்! காந்திக்கு தொடர் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி”யாக ஜனவரி 30 அன்று  இரவு 7.00 மணிக்கு தொடங்கியது இப்போராட்டம், நள்ளிரவு வரை நீடித்தது. இரவையும் பல்வேறுவிதமான அசவுகரியங்களையும் பாராமல் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என குடும்பமாக திரண்டிருப்பதை கண்டு அரண்ட போலீசார், அவர்களை எச்சரித்து திடலைவிட்டு வெளியேறுமாறு மிரட்டினர்.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !

சமூக ஊடகங்களின் வாயிலாக இப்போராட்டம் குறித்த செய்தியறிந்து தாமும் பங்கேற்க திரண்டு வந்த மாணவர்களையும் பொதுமக்களையும் திடலின் உள்ளே நுழைய விடாமல் கயிறு கட்டி தடுத்து நிறுத்தியதோடு, அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட கீழ்த்தரமான வழிமுறைகளையும் கையாண்டனர் போலீசார்.

போலீசாரின் தொடர் மிரட்டல் காரணமாக, மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்தது கல்லூரி நிர்வாகம். இதன் காரணமாக, நள்ளிரவு 12 மணி அளவில், தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னர் தேதி அறிவித்து தொடர் போராட்டமாக நடத்தப்படும் என்று அறிவித்து அவர்கள் கலைந்து சென்றபிறகும், ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!” என்று அவர்கள் எழுப்பிய முழக்கம் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க