குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி சென்ற ஜாமியா மாணவர்களை கடுமையாக தாக்கிய டெல்லி போலீஸ் !

ஜாமியா நகரவாசிகள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் அடங்கிய நூற்றுக்கணக்கானவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணி மீது டெல்லி போலீசார் வன்முறையை ஏவி விட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மீது முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் அவர்களது ஆடைகளை பிடித்திழுத்தும் அந்தரங்க இடங்களில் அடித்தும் கொடூரமாக நடந்துகொண்டது போலீசு.

“என்னுடைய அந்தரங்க பகுதிகளை போலீஸார் பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள் மேலும் ஒரு பெண் போலீஸ் என்னுடைய புர்க்காவை இழுத்து என்னுடைய அந்தரங்க பகுதிகளை லத்தியால் அடித்தார்” என்று ஒரு மாணவப் போராட்டக்காரார் கூறினார். மேலும் குறைந்தது 40 பேர்களாவது போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்காக அன்சாரி சுகாதார மையம், புனித குடும்பம் மருத்துவமனை மற்றும் அல் ஷிஃபா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள கூறுகின்றன.

டெல்லி காவல்துறை மீண்டும் ஜாமியா மாணவர்கள் மீது கொடூரங்களை கட்டவிழ்த்து விடுகிறது. CAA, NRC, NPR -க்கு எதிராக போராடுவதற்கான எங்கள் உறுதியை உங்கள் தடிகளால் உடைக்க முடியாது – என்று உமர் காலித் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

காயமடைந்த / மயக்கமடைந்த நூற்றுக்கணக்கான ஜாமியா மாணவர்கள் அன்சாரி சுகாதார மையம் மற்றும் புனித குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் இப்போது அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஜாமியா மாணவர்களுக்கு உதவி தேவை. அவர்களுக்கு உதவ வேண்டிய நேரமிது என்று புஷ்ரா கானும் பகிர்ந்திருந்தார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56

ஜாமியா முன்னாள் மாணவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜே.சி.சி) தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் வரவிருக்கும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த அவர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தெரிவித்தது. பல்கலையை சுற்றிலும் பலமாக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதாக ராஜ் சேகர் ஜா டிவிட்டரில் பதிந்துள்ளார்.

‘நாங்கள் ஆவணங்களைக் காட்ட மாட்டோம்’, ‘நாங்கள் ஆங்கிலேயர்களுக்கே அஞ்சாதபோது, மற்றவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும்’ போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். பெண்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆண்கள் சாலை இருபுறத்திலும் மனித சங்கிலி அமைத்து பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வழி செய்தனர்.

டெல்லி போலீசின் அராஜகம்.

“இரண்டு மாதங்களாக நாங்கள் போராடுகிறோம். அரசாங்கத்திலிருந்து யாரும் வந்து எங்களிடம் பேசவில்லை. எனவே நாங்கள் அவர்களிடம் சென்று பேசுவோம்” என்று போராட்டத்தில் கலந்து கொண்ட செபா அன்ஹாத் கூறினார்.

போலீஸ் தடியடியினால் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுடன் நிற்போம் என்று ஆல்வின் அபி டுவிட்டரில் பகிர்ந்தார்.

டெல்லியில் மற்றுமொரு போராட்டமும் நடந்தது. ஜாமியா மாணவர்களை போலவே முழக்கங்களை எழுப்பிக்கொண்டு குடிமை சமூக உறுப்பினர்கள் மத்திய டெல்லியின் தெருக்களில் நடந்து சென்றனர்.

போராட்டக்காரர்கள், பல்வேறு அளவிலும் வண்ணங்களிலும் பலகைகள் மற்றும் பதாகைகளை ஏந்தி காலை 11 மணியளவில் மண்டி மாளிகையில் ஒன்றுகூடி பின்னர் ஜந்தர் மந்தரை நோக்கி அணிவகுத்து சென்றனர். அங்கேயும் போலீஸ் மற்றும் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு அனுமதி வாங்கியிருப்பதாக கூறிய போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்வோம் என்று கூறினார்கள். இந்த போராட்டத்திற்கு இந்திய வெல்ஃபேர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

நமாஸ் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது தன்னுடைய மகன் முஹமத் ரியாஸ் (30) போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறிய முஹமத் ஷரீஃப் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டார். அவர் கான்பூரிலிருந்து போராட்டத்திற்கு வந்திருந்தார்.

“அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னுடைய மகனை என் வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். நான் உடனே அவனை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஒரு நபர் கூட என் வீட்டிற்கு வந்து நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்கவில்லை. போலீசார் எங்களுடன் தவறாக நடந்து கொண்டனர். திருமண விழாவில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது ரியாஸ் போலீசாரால் கொல்லப்பட்டார்” என்றார் ஷரீஃப்.

போராட்டக்காரர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் மற்றும் சந்திர சேகர் ஆசாத் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு அரசாங்கம் “கறுப்புச் சட்டத்தை” நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


சுகுமார்
நன்றி :  தி வயர்.