அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 56

உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு 

அ.அனிக்கின்

ஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது.

ஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை பின்பற்றப்பட்டது; இயற்கையாகவே அவருடைய மதிப்புத் தத்துவம் அதற்கு முதல் பலியாயிற்று. ஆனால் இது உடனே நடந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் பாதியில் பிரபலமான முதலாளித்துவப் பொருளியலாளராக இருந்த அ. மார்ஷல் ரிக்கார்டோவின் போதனையுடன் ஒரு இணைப்பை நீடித்து வைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் புதிய அகநிலைக் கருத்துக்களோடு சமரசப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளைச் செய்த வராவார். அவர் ஸ்மித்தைப் பற்றி, “மதிப்பைப் பற்றி அவருடைய சமகாலத்தவர்களான பிரெஞ்சு, ஆங்கில சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் ஊகங்களை இணைத்தும் வளர்த்தும் கொண்டு சென்றதே அவர் செய்த முக்கியமான பணி”(1) என்று எழுதினார்.

இதற்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல அமெரிக்கப் பொருளியலாளரான பால் டக்ளஸ் வேறுவிதமாக எழுதினார். ஸ்மித்துக்கு முன்பிருந்தவர்களின் எழுத்துக்களில் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருந்தவற்றை அவர் நிராகரித்துவிட்டாரென்றும் தம்முடைய மதிப்புத் தத்துவத்தின் மூலம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் செலுத்திவிட்டாரென்றும் அதிலிருந்து அது வெளியே வருவதற்கு முழுமையாக ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டதென்றும் குற்றம் சாட்டினார். ஷம்பீட்டர் தம்முடைய பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்ற புத்தகத்தில் ஸ்மித்தைப் பற்றி வெளிப்பார்வைக்கு மரியாதையும் ஆனால் அடிப்படையில் அதிகமான அவநம்பிக்கையும் கொண்ட அணுகுமுறையை வலுப்படுத்துகிறார்.

ஷம்பீட்டர்

ஸ்மித் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதரிப்பதாகச் சொல்ல முடியுமா என்று கூட அவர் உண்மையிலேயே சந்தேகப்படுகிறார். கடைசியாக, பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சாதாரணமான புத்தகத்தில் (ஜே. பெல் என்பவர் எழுதிய புத்தகம்) பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: “மதிப்புத் தத்துவம் சம்பந்தமாக ஸ்மித்தின் கருத்துரைகள் அறிவை வளர்ப்பதைக் காட்டிலும் குழப்பத்தையே அதிகமாக ஏற்படுத்துகின்றன. அவருடைய எழுத்தில் பிழைகள், தவறுகள், முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன.”(2)

இவற்றிலிருந்து ஒரு விஷயம் சந்தேகத்துக்கு இடமில் லாதபடி நிச்சயமாகத் தெரிகிறது. ஸ்மித்தின் மதிப்புத் தத்துவத்தில் மோசமான குறைகள் உள்ளன என்பதே அது. ஆனால் மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல, இந்தத் தவறுகளும் முரண்பாடுகளும் தர்க்க ரீதியானவையாகவும் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்குத் தமக்கே உரிய வழியில் பயனுள்ளவையாகவும் இருந்தன.

உழைப்பளவை மதிப்புத் தத்துவம் பற்றிய தொடக்க நிலையான, மிகச் சாதாரணமான விதிமுறையிலிருந்து (அது வெறுமே பொருளற்ற வழக்காக மட்டுமே அந்த நிலையில் தோன்றுகிறது) முதலாளித்துவத்தின் கீழ் சுதந்திரமான போட்டி நிலைமைகளில் பண்ட – பணப் பரிவர்த்தனை மற்றும் விலையின் உருவாக்கம் என்ற உண்மையான அமைப்பை நோக்கி முன்னேறுவதற்கு ஸ்மித் முயற்சி செய்தார். இந்த ஆராய்ச்சியின்போது சில தீர்க்க முடியாத முரண்பாடுகளை அவர் சந்தித்தார். இதன் கடைசிக் காரணம் ஸ்மித்திடம் (மற்றும் ரிக்கார்டோவிடமும்) முதலாளித்துவத்தைப் பற்றிய வரலாற்று ரீதியான கருத்து இல்லாததும் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்கும் இடையிலுள்ள உறவுகளை அவர்கள் சாத்தியமான ஒரே உறவுகளாக, எக்காலத்துக்கும் உரிய உறவுகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதே என்று மார்க்ஸ் கருதினார். இவைகளைத் தவிர ”சமூகத்தின் பூர்விக நிலை” மட்டுமே ஸ்மித்துக்குத் தெரிந்திருந்தது, அவர் அதை ஒரு கட்டுக்கதை என்றே கருதினார். எனினும் அவர் மதிப்புப் பிரச்சினையை அதிகமான விஞ்ஞானச் செறிவோடு அணுகினார்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்
♦ ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !

ஸ்மித் நுகர்வு மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற கருதுகோள்களை தனக்கு முன்பிருந்த வேறு எவரையும் காட்டிலும் அதிகமான துல்லியத்தோடு வரையறுத்து விளக்கினார். பிஸியோகிராட்டுகளின் வறட்டுத்தனமான கோட்பாட்டுவாதத்தைக் கைவிட்டு உழைப்புப் பிரிவினை பற்றிய தமது சொந்தத் தத்துவத்தை தமது வாதத்துக்கு ஆதாரமாக வைத்து மதிப்பைப் படைப்பதென்ற கருத்து நிலையில் பார்க்கும் பொழுது பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமதிப்புடையவை என்பதை அவர் அங்கீகரித்தார். அவ்வாறு செய்யும் பொழுது, பரிவர்த்தனை மதிப்பு என்பது (மார்க்சின் மேற்கோளில் கூறுகிறபடி) மதிப்பின் உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது, அதாவது எல்லாவிதமான மனித நடவடிக்கையுமான உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர் அறிந்து கொண்டார்.

டேவிட் ரிக்கார்டோ.

உழைப்பு என்பது சூக்கும், ஸ்தூலமான உழைப்பு என்ற இரண்டு தன்மையைக் கொண்டிருக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்புக்கு இது இட்டுச் சென்றது. நுட்பமில்லாத, சாதாரண உழைப்பைக் காட்டிலும் நுட்பமுள்ள, சிக்கலான உழைப்பு ஒவ்வொரு கால அளவுக்கும் அதிகமான மதிப்பைப் படைக்கிறது, சில குணங்களை உதவியாகக் கொண்டு அதை முதலில் சொல்லப்பட்டதாக வகைப்படுத்த முடியும் என்பதை ஸ்மித் உணர்ந்து கொண்டார். ஒரு பண்டத்தின் மதிப்பின் அளவு ஒரு தனிப்பட்ட உற்பத்தியாளர் அதில் செலவிட்ட உழைப்பைக் கொண்டு உண்மையில் நிர்ணயிக்கப்படுவதில்லை, எடுத்துக் கொள்ளப்பட்ட சமூகத்தின் நிலையில் சராசரியாக அவசியமான உழைப்புச் செலவைக் கொண்டு தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை அவர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்.

ஒரு பண்டத்தின் இயற்கையான விலையையும் சந்தை விலையையும் ஸ்மித் வேறுபடுத்திக் காட்டியது பயனுள்ளதாக இருந்தது. இயற்கையான விலை என்பது அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பின் பணத் தோற்றம் என்று அவர் புரிந்து கொண்டார்; நெடுங்கால அளவில் சந்தை விலைகள் அதை நோக்கி ஒரு வகையான ஊசலாட்ட மையத்தைப் போல ஈர்க்கப்படுகின்றன என்று நம்பினார். சுதந்திரமான போட்டியில் தேவையும் அளிப்பும் சமநிலையில் இருக்கு மானால், சந்தை விலைகள் இயற்கையான விலைகளோடு பொருந்தி வருகின்றன. மேலும் நீண்ட காலப் பகுதியில் விலைகள் மதிப்பிலிருந்து வேற்றுமைப்படுவதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் அடித்தளம் அமைத்தார்; ஏகபோகமே மிக முக்கியமானதென்று அவர் கருதினார்.

வரப்போகின்ற நூற்றாண்டு முழுவதிலும் மதிப்பு மற்றும் விலை உருவாக்கத் தத்துவத்தின் மையத்தில் இருந்த பிரச்சினையை முன்வைத்திருப்பதில் ஸ்மித்தின் ஆழமான நுண்ணறிவைக் காண முடியும். மார்க்சிய இனங்களில் இதை மதிப்பு உற்பத்தியின் விலையாக உருமாற்றமடைவதென்று சொல்கிறோம். லாபம் மூலதனத்துக்கு விகிதாச்சார அளவில் இருக்க முற்படும் என்பதையும் லாபத்தின் சராசரி விகிதத்தின் தன்மையையும் ஸ்மித் புரிந்து கொண்டிருந்தார். தன்னுடைய இயற்கையான விலைக்கு அதை ஆதாரமாகக் கொண்டார். இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துடன் அவரால் தொடர்புபடுத்த முடியவில்லை, இணைக்க முடியவில்லை என்பதில் அவருடைய பலவீனம் அடங்கியிருக்கிறது.

எங்கெல்ஸ் எழுதியது போல, ஸ்மித்திடம் ”மதிப்பு பற்றி இரண்டு மட்டுமல்ல, மூன்று அபிப்பிராயங்கள் கூட இருக்கின்றன; இன்னும் சரியாகச் சொல்வதென்றால் கூர்மையான வேறுபாடுகளைக் கொண்ட நான்கு அபிப்பிராயங்கள் இருக்கின்றன. இவை அதிகமான குதூகலத்தோடு பக்கத்தில் போவது மட்டுமல்ல ஒன்றோடொன்று இணைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன.”(3)  அந்தக் காலத்தில் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்டு ஸ்மித்தினால் பதிவு செய்யப்பட்ட உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை கொண்ட, ஸ்தூலமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இடையே போதுமான அளவுக்கு விஞ்ஞான, தர்க்கரீதியான இணைப்புகளைக் கண்டுபிடிக்க அவரால் முடியவில்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் என்பது தெளிவு. எனவே அவர் தனது ஆரம்பக் கருதுகோளைத் திருத்தி வகைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

படிக்க:
♦ ’தேஷ துரோக’ பயணியை ‘போட்டுக்கொடுத்த’ உபேர் ஓட்டுநருக்கு விழிப்புணர்வு குடிமகன் விருது !
♦ பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்

முதலாவதாக, ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் அவசியமான உழைப்பின் அளவின் மூலமாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது (இது தான் முதலாவது கருத்து, முக்கியமானதும் கூட). இதனோடு அந்தக் குறிப்பிட்ட பண்டத்துக்கு வாங்கக் கூடிய உழைப்பின் அளவினால் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்ற இரண்டாவது கருதுகோளை நுழைத்தார். சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில், கூலி உழைப்பு என்பது இல்லாமலும் பண்ட உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு பாடுபடுகின்ற பொருளாதாரத்தில் இது அளவைப் பொறுத்த வரையிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு நெசவாளி துணியைக் கொடுத்து ஒரு ஜோடி காலணிகளை வாங்குகிறார். அந்தத் துணி ஒரு ஜோடி காலணிகளின் மதிப்புக்குச் சமம் என்று சொல்லலாம். அல்லது காலணிகள் தயாரிப்பாளர் ஒரு ஜோடி காலணிகளைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்திலுள்ள உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால் அளவு ரீதியான பொருத்தம் அதன் முற்றொருமைக்கு நிரூபணம் அல்ல; ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் மதிப்பை அளவு ரீதியாக ஒரே ஒரு வழியைக் கொண்டு அடுத்த பண்டத்தின் தெரிந்த அளவைக் கொண்டு – மட்டுமே நிர்ணயிக்கலாம்.

ஆடம் ஸ்மித்

இந்தக் கருத்தை, மதிப்பைப் பற்றிய தமது இரண்டாவது பொருள் விளக்கத்தை முதலாளித்துவ உற்பத்திக்குப் பயன்படுத்த முயற்சித்த பொழுது ஸ்மித் முற்றிலும் கீழே விழுந்தார். காலணிகள் தயாரிக்கும் தொழிலாளி ஒரு முதலாளியிடம் வேலை செய்கின்றாரென்றால் அவரால் தயாரிக்கப்பட்ட காலணிகளின் மதிப்பும் அவருடைய “உழைப்பின் மதிப்பும்”, அதாவது அவருடைய உழைப்புக்காக அவர் பெறுகின்றதும் முற்றிலும் வெவ்வேறானவையாகும். தொழிலாளியின் உழைப்பை வாங்குகின்ற முதலாளி (அவர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை, உழைப்பதற்கான ஆற்றலை வாங்குகிறார் என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்) அந்த உழைப்புக்குத் தான் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெறுகிறார் என்பதே இதன் பொருள்.

இந்த நிகழ்வை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதற்கு ஸ்மித்தினால் முடியவில்லை. எனவே “பூர்வீக சமுதாய நிலையில்”, முதலாளிகளும் கூலி உழைப்பாளிகளும் இல்லாத சமுதாயத்தில், அதாவது மார்க்சிய வர்ணனைப்படி சாதாரணமான பண்டப் பொருளாதாரத்தில் மட்டுமே மதிப்பு உழைப்பினால் நிர்ண யிக்கப்படுகிறது என்று தவறாக முடிவு செய்தார்.

முதலாளித்துவ நிலைமைகளுக்கென்று ஸ்மித் மதிப்புத் தத்துவத்தின் மூன்றாவது பதிப்புருவத்தை அமைத்தார். ஒரு பண்டத்தின் மதிப்பு தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் முதலாளியின் லாபம் (சில துறைகளில் நில வாரம் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய செலவுகளைக் கொண்டிருக்கிறது என்று முடிவு செய்தார். மதிப்பைப் பற்றிய இந்தத் தத்துவம் மூலதனத்தின் சராசரி லாபம் அல்லது அவர் எழுதியது போல “லாபத்தின் இயற்கையான விகிதம்” என்ற நிகழ்வை விளக்குவதாகத் தோன்றியது அவருடைய நம்பிக்கையை மறுபடியும் உறுதி செய்தது. ஸ்மித் மதிப்பை உற்பத்தி விலைக்குச் சாதாரணமாகச் சமப்படுத்திவிட்டார்; அவற்றுக்கு இடையேயிருந்த சிக்கலான இடைநிலை இணைப்புக்களை அவர் கவனிக்கவில்லை.

அடுத்த வரப்போகும் நூற்றாண்டில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போகின்ற “உற்பத்திச் செலவுகளின் தத்துவம்” இதுவே. தன்னுடைய பண்டத்தின் விலை பிரதானமாக செலவுகள் மற்றும் சராசரியான லாபத்தைக் கொண்டும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உள்ள தேவை, அளிப்பைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகிறது என்று நினைக்கின்ற முதலாளியின் செய்முறையான கருத்து நிலையை ஸ்மித் மேற்கொண்டார். உழைப்பு, மூலதனம், நிலவுடைமை ஆகியவை மதிப்பை உருவாக்கும் சமமதிப்புக்கள் என்று காட்டுவதற்கு மதிப்பைப் பற்றிய இந்தக் கருத்து அதிகமான இடமளித்தது. முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பொருளாதாரத்தை உபயோகிக்க முயற்சி செய்த ஸேயும் இதர பொருளியலாளர்களும் வெகு சீக்கிரத்தில் இதை ஸ்மித்திடமிருந்து அறிந்து கொண்டார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  J. Schumpeter, History of Economic Analysis (p. 307) என்ற புத்தகத்தில் தரப்படுகிற மேற்கோள்.  

(2)  J. Bell, A History of Economic Thought, p. 188.

(3)  பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 402 பார்க்க .

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க