பத்திரிகைச் செய்தி

நாள் : 04-04-2020

பீமாகோரேகான் கலவரத்தின் போது புனையப்பட்ட பொய் வழக்கில் பேராசிரியர் ஆன்ந்த் தெல்தும்டே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரை ஏப்ரல் 6-ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சூழலிலும் மோடி அரசு தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது. மக்களுக்காகச் சிந்திக்கும் அறிவுத்துறை சார்ந்த ஜனநாயகவாதிகளை பழிவாங்கும் மோடி அரசை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சமூக மதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் பிணையை மறுத்து சரணடைய உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.

பேராசிரியர் ஆன்ந்த் தெல்தும்டே (இடது), உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா

மராட்டிய பேஷ்வாக்களுக்கும் ஆங்கிலேயருக்கும் எதிராக 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பீமா கோரேகானில் நடைபெற்ற போரில், மகர் படைப் பிரிவு ஆங்கிலேயப் படையுடன் ஒன்று சேர்ந்து போராடி பார்ப்பன பேஷ்வாக்களை வீழ்த்தினர். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் லட்சக் கணக்கில் மகர் மக்கள் ஒன்றுகூடுவது வழக்கம். தங்களுக்கு எதிரான இந்த நிகழ்வை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பேஷ்வாப் பார்ப்பனர்கள், பட்நவீஸ் தலைமையிலான மராட்டிய பாரதிய ஜனதா அரசு உதவியுடன் உயர்சாதி இந்துக்களைத் தூண்டிவிட்டு, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 200-ம் ஆண்டு விழா நிகழ்வை மகர்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றிவிட்டனர்.

இந்த வன்முறையைக் காரணம் காட்டி, ஆனந்த் தெல்தும்டே, கவுதம் நவ்லக்கா, வரவரராவ், சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஸ் ராவத், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட இவர்கள்தான் வன்முறையைத் தூண்டினார்கள் எனவும், இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறி “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்” (UAPA) கீழ் பொய் வழக்குப் புனைந்தது பட்நவீஸ் அரசு. இவர்களில் சிலரைக் கைது செய்து ஓர் ஆண்டுக்கும் மேலாகச் சிறையிலும் அடைத்துள்ளது. இப்போது மாநில அரசிடமிருந்து இந்த வழக்கை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது. ஆனந்த் தெல்தும்டே, கவுதம் நவ்லக்கா உள்ளிட்டோரை “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்” கீழ் கைது செய்ய முயற்சி செய்து வருகிறது மோடி அரசு. இதையொட்டி அவர்கள் இருவரும் முன்பிணை கேட்டு கீழமை நீதிமன்றத்தில் முறையிட்ட போது அது நிராகரிக்கப்பட்டது.

படிக்க:
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா விடுதலை !
♦ முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை !

அதன் பிறகு இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். அருண் மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16.03.2020 அன்று இவர்களது முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் அவர்கள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சமகாலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத்துவாக் கொள்கைகளை சமரசமின்றி எதிர்த்து வருபவர்கள் ஆனந்த் தெல்தும்டேயும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் நவ்லக்காவும்.

தெல்தும்டே அம்பேத்கரின் குடும்ப உறுப்பினர், IIM அகமதாபாத்தின் முன்னாள் மாணவர், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு அதிகாரி (ED), பெட்ரோநெட் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO), IIT காரக்பூர் மற்றும் கோவா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் பேராசிரியர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சமூக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் 28 நூல்கள் எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்ற சமூகச் செயற்பாட்டாளர் என்கிற பன்முகத்தன்மை கொண்ட ஆனந்த் தெல்தும்டே சிறையில் அடைக்கப்படவுள்ளார். அம்பேத்கரை உரிமை கொண்டாடும் இந்துத்துவா சக்திகள் இன்னொருபுறம் அவர் வழித்தோன்றலைக்  கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

ஏப்ரல் 6 அன்று ஆனந்த் தெல்தும்டே, கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏற்ப, தற்போதைக்கு அவர்கள் மீதான கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் 2018 ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த சம்பவத்தைக் காரணம் காட்டி, சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது பாரதிய ஜனதா அரசு புனைந்திருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.சிறையில் இருப்பவர்களை  உடனே விடுதலை செய்யவேண்டும்.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்