தள்ளுபடியா தள்ளிவைப்பா ?

கார்ப்பரேட்டுகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த செய்தி வெளியானதிலிருந்து, அது தள்ளுபடி இல்லை. தள்ளிவைப்புதான் என்று பொருளாதார வள்ளுநர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள் தொடரும் என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதம். உண்மையில் அப்படித் திரும்பக் கிடைத்துள்ளதா? கடந்த காலத்தின் வரலாறு என்ன? ஒரு பொருளாதார வல்லுநரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (இது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

(write-off மற்றும் waiver இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துத்தான் பொருளாதார வள்ளுநர்கள் கம்பு சுத்துவார்கள். எனவேதான் write-offம் தள்ளுபடிதான் என்று இந்தப் பதிவு நிரூபித்தாலும், write-offக்கு ரத்து என்ற சொல்லையே இங்கே பயன்படுத்துகிறேன். write-offக்கு ஆங்கிலத்தில் பொருள் – Cancel (a debt) ரத்து செய்தல்; Concede the loss நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்; reduction in the book value of an asset ஒரு சொத்தின் புத்தக மதிப்பைக் குறைத்தல்; The act of cancelling from an account a bad debt. ஆக, write-offக்கு தள்ளிவைப்பு என்ற பொருள் கிடையவே கிடையாது.)

***

பொதுத்துறை வங்கிகள் ‘தள்ளி வைத்த’ கடன்களில் 89% வசூலிக்கப்படவே இல்லை.

என் நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் கேட்டார் – “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்து எழுதி எழுதி உனக்கு சலிப்பே வரவில்லையா?”

இல்லை என்ற உண்மையைச் சொன்னேன். காரணம், புதிய புதிய விவரங்கள் வந்து கொண்டே இருக்கும்போது, நாமும் புதிது புதிதாய் எழுத வேண்டியிருக்கிறது. அத்துடன், இந்தப் புதிய விவரங்கள் வாராக்கடன் விவகாரம் எத்தனை குழப்படியாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.

வாராக் கடன் (Bad loans) என்பது என்ன? 90 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக திருப்பிச் செலுத்தப்படாத தொகை வாராக் கடன் ஆகும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிகள் அதை ரத்து (write-off) செய்து விடும். அதாவது, வங்கிகள் எப்பாடு பட்டாலும் திரும்பப் பெற முடியாத கடன்கள் இவை.

வங்கிகள் இப்படி வாராக்கடன்களை ரத்து செய்யும்போது, அந்த வங்கியின் வாராக்கடன் மொத்தத் தொகை குறைவாகும். அதே நேரத்தில், வங்கிகளின் லாபத்திலிருந்துதான் இந்த வாராக்கடன்கள் கழிக்கப்படும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த வாராக் கடன்களின் விவரங்களை அரசு அளித்தது. அட்டவணை 1 காண்க.

அட்டவணை 1:

ஆண்டு ரத்து செய்த கடன் (கோடி)
2014-2015 49,018.00
2015-2016 57,585.00
2016-2017 81,683.00
2017-2018* 84,272.00
மொத்தம் 2,72,558.00

* 2017 டிசம்பர் 31 வரை.
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதிலளிக்கிற தேதி 27 மார்ச், 2018

2014 ஏப்ரல் 1 முதல் 2017 டிசம்பர் 31 வரை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த கடன்களின் தொகை ரூ. 2,72,558 கோடி (இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் கோடி). எனவே, அந்த வங்கிகளின் லாபத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அதன் விளைவாக ஆண்டுதோறும் வங்கிகள் அரசுக்குத் தரும் லாபப் பங்கும் (டிவிடெண்ட்) குறையும். (அதாவது, அரசுக்கு, பங்குதாரர்களுக்கு வருவாய் குறையும்.)

படிக்க:
பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு பலிகடா ஆகிறவர்கள் சாமானிய மக்கள்தான் என்ற தலைப்பில் நான் இதற்கு முன்பே எழுதிய கட்டுரையிலும் இதைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விஷயத்தைப் பார்ப்போம்.

ரத்து செய்யப்பட்ட கடன்கள் என்பவை வசூலிக்க முடியாத கடன்கள் என்று பார்த்தோம். ஆனாலும், (கடனுக்கு ஈடாக ஜாமீன் சொத்துகளை வைத்திருந்தால்) வங்கிகள் இந்தக் கடனை வசூலிக்கக் கூடிய சாத்தியமும் கொஞ்சம் உண்டு. அப்படியானால், இப்படி எவ்வளவு வசூலானது என்று பார்ப்போமா? கீழே உள்ள அட்டவணை 2 பாருங்கள்.

அட்டவணை 2:

ஆண்டு வசூலான கடன் (கோடிகள்)
2014-2015 5,461.00
2015-2016 8,096.00
2016-2017 8,680.00
2017-2018* 7,106.00
மொத்தம் 29,343.00

* 2017 டிசம்பர் 31 வரை
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதில் அளிக்கிற தேதி 27 மார்ச், 2018

இந்த இரண்டு அட்டவணைகளையும் கொண்டு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் – கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் ரத்து செய்யப்பட்ட கடன் தொகை 2,72,558 கோடி. அதில் வசூலிக்கப்பட்ட தொகை 29,343 கோடி. அதாவது, வசூலானது வெறும் 10.8%. வசூலிக்க முடியாமல் ஊத்திக்கொண்டு போன தொகை 89.2%.

ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

வாராக் கடன்களில் பெரும்பாலானதை வசூலிக்க முடியாதது ஏன் என்றால், கார்ப்பரேட்டுகளால் மிகச்சிறந்த வழக்குரைஞர்களை வைத்துக் கொள்ள முடிகிறது; அரசியல்வாதிகளின் அணுக்கம் இருக்கிறது. இந்தக் கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்று கடனை திருப்பி வசூலிக்க முடிவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 2,72,558 கோடி கடன்களை தள்ளுபடி (ரத்து) செய்தன என்றால், 2017 டிசம்பர் 31 உடன் உண்மையில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களின் தொகை 7,77,280 கோடி. ஆக, வங்கிகள் முழுவதையும் இன்னும் தள்ளுபடி செய்துவிடவில்லை. இன்னும் நிறையவே தள்ளுபடி செய்வார்கள்.

குறிப்பு : இந்தக் கட்டுரையை எழுதிய விவேக் கவுல்,. விவேக் கவுல் டயரி என்ற தலைப்பில் தெளிவான, ஆதாரபூர்வமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். மோடி சொல்லாத 25 விஷயங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய மற்றொரு கட்டுரையை ஓராண்டு முன் தமிழில் தந்திருக்கிறேன்.

மூலக்கட்டுரைக்கான இணைப்பு : 

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்