பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் இன்று அன்றாட செய்தியாகி விட்ட நிலையில் நாம் அனைவரும் அவற்றை எளிமையாக கடந்து செல்ல நம்மை நாமே பழக்கப்படுத்தி கொண்டு வருகின்றோம். இது பெண்களை  மேலும், மேலும் பாதுகாப்பற்ற அபாயகரமான சூழ்நிலைக்கு நெட்டித் தள்ளுகின்றது.

அதன் அடிப்படையில் தான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆசிஃபாவின் படுகொலையும் நடந்தது. அந்த 8 வயது  சிறுமியை கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசினர்கள். கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக வெளியுலகிற்கு சொன்ன காரணத்தால் அவரையே ஒழுக்க கேடனவராக சித்தரித்தது பணியை விட்டு நீக்கியதோடு அவரை மனநோயாளி என்றது திருச்சபை.

தமிழகத்தில்  அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கிகள் பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து  வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துவிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்தார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்  அயனாவரத்தில் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை ஏழு மாதமாக 13  பேர் கொண்ட  கும்பல் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இப்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது அரங்கேறியுள்ள நாகர்கோயில் காசியின் பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் நமது நெஞ்சை உலுக்கி எடுப்பவை மட்டுமல்ல இது ஒரு சில எடுத்துகாட்டுகள் மட்டுமே.

இன்னும் வெளியுலகிற்கு வராதது எண்ணில் அடங்காதவை. அந்த வரிசையில் மேலும் ஒரு கொடுரமான வன்முறை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது பெண்களை மேலும் நிலைகுலைய செய்துள்ளது.

விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை ;  

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ (10 ஆம் வகுப்பு படித்து வந்தார்) இவரை அதே ஊரை சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் ஞாயிறு (10.05.2020) அன்று காலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்பு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளிப்புறம் தாழிட்டு இருந்த கதவை திறந்து உள்ளே சென்று தீயை அனைத்ததாக கூறப்படுகின்றது.

90% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஒருநாள் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டில் மீட்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் இருந்தவரை பலமுறை தான் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு மறுநாள் உயிரிழந்தார். அதில் தான் வீட்டில் தனியாக இருந்த போது யாசகனும், முருகையனும் வீட்டிற்கு வந்து என் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வாயில் துணியை திணித்து முகத்திலேயே குத்தினார்கள் பிறகு பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை வெளியில் தாழிட்டு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கொலைக்கான பின்னணி ;

கொலையாளியான கலியபெருமாள் வீட்டருகே சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். ஏற்கனவே ஜெயபாலின் தம்பி கையை வெட்டியது தொடர்பாக இவர்களுக்கு முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இந்த முன் விரோதம் காரணமாக ஜெயபாலை நீ அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது எனவும் அந்த நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்து அடிக்கடி தகராறு செய்து ஜெயபாலை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த முதல்நாள் ஜெயபால் நடத்திவரும் பெட்டிகடை இரவு 10.30 மணிக்கு மேல் பூட்டப்பட்ட பிறகு அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கதவை தட்டி ஏன் அதற்குள் கடையை அடைத்தாய் தனக்கு பீடி வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டி தகராறு செய்ததோடு இல்லாமல் ஜெயபாலின் மூத்த மகனை தாக்கியுள்ளார். அதில் அவரின் காதில் ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் காலையில் வீடு திரும்பிவிட்டு மீண்டும் பிரவீன்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக தந்தையும், மகனும் சென்றுவிட்டனர். தாய் மற்றும் தங்கை இருவரும் நிலத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு கொலைகாரர்களின் குடும்பத்தின் மீது ஊர் மக்களுக்கு உள்ள அச்சம் காரணமாக அந்த சிறுமியின் குடும்பத்தை பாதுகாக்க நினைத்த பகுதி இளைஞர்கள் 10 ஆம் தேதி இரவு பொது இடத்தில் கூடி கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஜெயபாலின் தம்பி.

அப்போது காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு அங்கு வந்த கலியபெருமாளின் மகன் வீரன் என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துவீர்கள். ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் குடும்பத்தோடு கொளுத்திவிடுவேன், என்னோட அப்பாவை கைது செய்துட்டாங்கன்னு நினைக்குறீங்களா? நாளைக்கே வெளியில் கொண்டுவரேன் பாக்குறீங்களா? என்று சினிமாபட பாணியில் ‘வீர வசனம்’ பேசியுள்ளான். பின்பு வீரனோடு அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் இரண்டு அடி கொடுத்து உன்னிடம் காவல்நிலையத்தில் என்ன சொல்லி அனுப்பினார்கள் நீ என்ன செய்யுற என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். என்று இளைஞர்கள் கூறுகின்றனர். சிறுமி இறந்த பின்பும் கொலை செய்தவர்களின் குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் அப்போதுதான் நங்கள் நிம்மதியாக வாழ முடியும் அதுவரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி அப்பகுதி இளைஞர்கள் 50 கும் மேற் பட்டோர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

கொலையாளிகளை வளர்த்தெடுத்த அதிகார வர்க்கம் :

கொலையாளிகளான யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி அப்பகுதியில் பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஊருக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவர்களை எதிர்த்து கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆளும் கட்சியின் ஆதரவோடும், காவல்துறையின் துணையோடும் எவ்வித வழக்குமின்றி தாதாக்களை போன்று செயல்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் இவர்களை கண்டு தற்போது வரை அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2013 –ல் சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பாவை இவர்களின் ஒட்டுமொத்த உறவினர்களும் சேர்ந்து ஊரே பார்க்க கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து உதைத்து அவரது கையை வெட்டியுள்ளனர். இந்த வழக்கு தற்போதுவரை கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வெளியில் வரவே அது சம்பந்தமான ஆவணங்களை தேடும்போது காவல்துறையிடம் இருந்த வழக்கு குறித்த ஆவணங்கள், நீதிமன்றத்தில் இருந்த வழக்கு சார்ந்த கோப்புகள் அனைத்தும் காணமல்போனது தெரியவந்துள்ளது.

அந்த ஆவணங்கள் இவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி காவலர்களின் உதவியோடு திருடப்பட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரத்திலேயே பேசப்படுகின்றது. இப்படி காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தான் இன்று அவர்கள் கொலையே செய்தாலும் நாம் காவல்துறை மற்றும் கட்சியின் ஆதரவோடு எளிமையாக தப்பித்துவிடலாம் என கருதி இந்த கொலையை செய்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய பின்பே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

ஒரு சாதாரண கீழ்மட்ட பதவியில் இருப்பவர்களுக்கே காவல்துறை இவ்வளவு ஆதரவாக செயல்படுகின்றது என்றால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள். 5 பேர் கொண்ட கும்பல் 200 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அதை செல்போனில் பதிவு செய்து அவர்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது அனைத்தும் வீடியோ ஆதாரத்தோடு செய்திகள் வெளிவந்தும், இதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் ஈடுபட்டு இருப்பதாலும், மற்றவர்களும் அதிமுக வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், குற்றவாளிகளை பாதுகாக்கவே துடித்தது காவல்துறை. இவர்களே பல வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த பிரச்சனைக்கு எதிராக அன்று மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதால் தான் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பிணையில் விடுதலையாகி சுகந்திரமாக உலாவருகின்றனர்.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

“ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த மாற்று திறனாளியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உள்ள பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பல ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.” ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலிலும் பொள்ளாச்சி  குற்றவாளிகளை போலவே நமக்கும் எளிமையாக பிணை கிடைத்துவிடும் என்ற தைரியத்தின்  விளைவாகவே இன்று நாகர்கோயில் காசியும் உருவாகி உள்ளார். இவர் நூற்றுக்கணக்கான விஐபி வீட்டு பெண்களிடம் நெருங்கி பழகி அதனை செல்போனில் வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் அம்மாவிடம் காண்பித்து அவர்களையும் மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இவனுக்கு காவல்துறையில் பலர் நெருக்கமானவர்கள் என்பதால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பேச மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவனை கைது செய்த பின்பு காவல்நிலையத்தில் காவலர்களின் முன்னிலையில் மேசையில் அமர்ந்தவரே பத்திரிக்கையாளர்களுக்கு தனது கையால் ஆர்ட்டின் சிம்பில் காண்பிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவன் காவல் துறையினரை எதற்கு சமமாக நினைக்கின்றான் என்பதை சொல்லித்தான் புரிய வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதைவிட, பாலியல் சித்தரவதைகளும், படுகொலைகளும் ஒரு பெரிய குற்றமில்லை என்று ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் கருதுகிறார்கள். இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஊட்டி வளர்த்த  ஆணாதிக்கமும் தான். பெண்களை அனுபவிக்க கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தியுள்ளது. அது இன்று மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் நுகர்வுவெறியும், இணையதள ஆபாச வீடியோக்களும், அரசே முன்னின்று நடத்தும் டாஸ்மாக் உள்ளிட்ட போதை பொருட்களாலும் கடந்த 15 ஆண்டுகளில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை தற்போது அதிகரித்து வருகின்றது.

இவை அனைத்தும் நமது சாதி, மதம் சார்ந்த நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்திலும் பெண்ணடிமைதனமும், ஆணாதிக்கமும் செல்வாக்குச் செலுத்தி இவ்வன்முறைகளை நிலைத்திருக்க செய்கின்றன. இந்த அனைத்து சமூக விழுமியங்களையும் பாதுகாப்பதே பார்ப்பனியமும், ஆளும் அதிகாரவர்க்கமும், அரசு கட்டமைப்புகளும் தான் இவற்றை தகர்த்து எறியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. இனி இதை உணர்ந்த சமூக முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான பிரச்சாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் நாம் நமது பிரச்சனையை தீர்க்க முடியும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

1 மறுமொழி

  1. இன்னும் பத்து வருடம் கழித்தும் இவ்வாறே எழுதும் வண்ணம் வாழக்கூடிய நிலையிருக்கும் என்றால் நான் மனிதனாக வாழ விரும்பவில்லை.பலபேர் எண்ணும் அந்த கடவுள் இருப்பானென்றால் இந்த சமூகம் மாறும் வல்லமையைத் தரட்டும்.இல்லையெனில் நல்ல மனிதன் கடவுளாக மாறியே ஆக வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க